வண்ணத்திரையில் மலர்ந்தது தமிழ் ஈழம்!



கவிஞர் காசி ஆனந்தன், தேனிசை செல்லப்பா, கவிஞர் மற்றும் நடிகர் ஜெயபாலன், நடிகர் மற்றும் ஓவியர் இலங்கை நாதன், இயக்குநர் மற்றும் நடிகர் தேவர் என  ஈழத்துக் கலைஞர்களின் உணர்வுபூர்வ உரைவீச்சு -   இயக்குநர்கள்  சீமான்,  பேரரசு, பவித்ரன், கௌதமன், ரவிமரியா, புகழேந்தி தங்கராஜ்,  அன்பு தென்னரசு,  ஐந்து கோவிலான், தயாரிப்பாளர்கள் பி.எல்.தேனப்பன், பட்டியல் சேகர், பேரறிவாளன் தாயார் அற்புதம் அம்மாள்,  தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் தி.வேல்முருகன் ஆகியோரின் தமிழ்ப்பாசம் என அந்த விழா மேடையெங்கும் தமிழ்வாசம். தமிழ் உணர்வாளர்கள் புடைசூழ ஈழம் குறித்த ‘கூட்டாளி’ படத்தின் திரையிடல் நிகழ்வு அது.

தமிழ் ஈழம் மலர்ந்தால் அந்த மண்ணும் மனிதர்களும் எப்படியிருப்பார்கள் என்பது தான் படத்தின் உள்ளடக்கம். கதை. திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி, இயக்கி, கதாநாயகனாக நடித்திருக்கிறார் சி.நிரோஜன். இவர் மணிவண்ணன், சீனுராசாமி, சுப்ரமணியசிவா, அரவிந்தன், ‘சிவப்பு மழை’ வி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோரிடம் உதவி இயக்குநராக இருந்தவர்.

யுத்த பூமியில் நடந்த ரத்த கோரங்களை மையப்படுத்தி இயக்கிய ‘மண்ணும் சிவந்தது’ மற்றும் ‘ஏன்’ ஆகிய குறும்படங்களுக்காக, காட்சித் தொடர்பியல் படிப்பின் போது பல விருதுகளை வென்றெடுத்தவர் இவர். ஐ.ஏ.எஸ் அதிகாரி உ.சகாயம் ஏற்பாட்டில் இவர் இயக்கிய கோ-ஆப்டெக்ஸ் பற்றிய ‘வேட்டி தினம்’ மற்றும் நெசவாளர்களின் வாழ்வியல் குறித்த ‘நெசவுக்குப் பின்னால்’ ஆவணப்படங்கள் திரைப்பட ஆர்வலர்கள் மத்தியில் பெரும் பாராட்டுகளைப் பெற்றன.

‘‘தமிழனைப்பற்றிப் படமெடுத்து, தமிழகத்தில் திரையிடமுடியவில்லையே என்பதைவிட, இந்தப்படத்தை தணிக்கைக்கு ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை நினைத்து வேதனைப்படுகிறேன்’’ என்கிறார் நிரோஜன். செப்டம்பர் 25ஆம் தேதியில் நார்வேயில் திரையிடப்படும் ‘கூட்டாளி’ படம், தமிழ் உணர்வாளர்களின் ஆதரவில், தமிழர் வாழும்  நாடுகளில் அடுத்தடுத்து திரைகாண உள்ளது.

- நெல்பா