மாருகோ மாருகோ மாருகயீ...



அதிரடி மினி தொடர் 2 கோவை சரளா

இப்பவெல்லாம் சினிமாவில் சிபாரிசு ரொம்ப முக்கியமானதா ஆயிடிச்சி. இங்கே தொழில்நுட்பம் வளர்ந்துடிச்சி. சினிமா எடுக்குற முறையே மொத்தமா மாறிடிச்சி. ஆனாலும், சிபாரிசு இல்லைன்னா வாய்ப்பு கிடைக்கிறது ரொம்ப கஷ்டமா இருக்கு. முன்னாடியெல்லாம் சிபாரிசே வேலைக்கு ஆகாது.என்னோட அனுபவத்துலே இருந்தே சொல்றேனே!

‘சதிலீலாவதி’ படம் எடுக்கறப்போ, கமல் சாரோட ஜோடியா ‘பழனி’ங்கிற கேரக்டருக்கு யாரை நடிக்க வைக்கிறதுன்னு டிஸ்கஷன் ஓடியிருக்கு. அது கொங்கு பாணி தமிழை அழுத்தமா பேசவேண்டிய ரோல். கமல் சார் உடனே என்னோட பேரை சிபாரிசு பண்ணியிருக்காரு.

கமலுக்கு ஜோடியா கோவை சரளாவான்னு நிறைய பேரு கொதிச்சிப் போயிட்டாங்களாம். ஏன்னா, உங்களுக்கே தெரியும். அதுலே ‘மாருகோ மாருகோ மாருகயீ.....’ன்னு ரொம்ப நெருக்கமான டூயட் கூட ஒண்ணு இருக்கு. காமெடி நடிகை, காதல் இளவரசனுக்கு மனைவியான்னு அந்த ஐடியாவைக் கேட்டதுமே நிறைய பேரு நெகட்டிவா சொல்லியிருக்காங்க.

ஆனா, கமல் சார் மட்டும் எனக்கு இந்தப் படத்துலே சரளா தான் செட் ஆகும்னு திரும்பத் திரும்பச் சொல்லியிருக்காரு. ‘பழனி’ ரோலை சரளாவால்தான் நல்லா பண்ண முடியும்னு அவருக்கு நம்பிக்கையும் இருந்திருக்கு.பாலுமகேந்திரா சார் கூட இந்த ஐடியாவை நிராகரிச்சிருக்காரு. அவரு அமைதியா படம் எடுக்க விரும்புறவரு.

அவரோட ஆர்ட்டிஸ்டெல்லாம் கிளாஸா நடந்துக்கணும்னு விரும்புவாரு. நாமளோ மாஸு. நான் ஷூட்டிங்கில் இருந்தாலே கலகலன்னு சிரிப்பு சத்தம் காதைக் கிழிக்கும். ஷூட்டிங் டீமுலே எல்லாம் ஜாலியா என்னோட வம்படிச்சிக்கிட்டிருப்பாங்க. இதெல்லாம் பாலுமகேந்திரா சாருக்கு புடிக்காது.

ஆனா, கமல் சார் மட்டும் “பழனின்னா அது கோவை சரளாதான்”னு அடம் பிடிச்சிக்கிட்டு இருந்திருக்காரு. இதனாலேயே ஷூட்டிங் போவுறது கூட தாமதமாயிருக்கு. கிட்டத்தட்ட ஆறு மாசம் சண்டை போட்டு, எல்லாரையும் ஒப்புக்க வெச்சி என்னோட ஜோடி சேர்ந்து நடிச்சாரு கமல் சார். இத்தனைக்கும் அது அவரோட சொந்தப் படம்தான். ஆனா, தன் கருத்தை இயக்குநர் ஒப்புக்கற வரைக்கும் சத்தியாக்கிரகம் மாதிரி போராட்டம் பண்ணி, என்னை ‘சதிலீலாவதி’க்குள்ளாறே கொண்டு வந்தாரு. இதெல்லாம் எனக்கு அப்போ தெரியவே தெரியாது.

‘கமலுக்கு ஹீரோயின் கோவை சரளா’ன்னு பத்திரிகைகள்லாம் எழுத, படம் ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னாடியே பரபரப்பு பத்திக்கிச்சு. போதாதுக்கு ‘மாருகோ’ பாட்டு வேற செம ஹிட்டு. படம் ரிலீஸ் ஆகி பரபரன்னு ஓடுது. எனக்கு பாராட்டுகள் குவியுது.

பாலுமகேந்திரா சார் என்னைக் கூப்பிட்டு இந்த விஷயத்தை எல்லாம் சொன்னாரு. “உன்னோட திறமையில் எனக்கு அப்போ சந்தேகம் இருந்ததுக்காக இப்போ வருத்தப்படறேன்”னு சொன்னாரு. அய்யோ. அவ்வளவு பெரிய டைரக்டரு, நமக்காக வருத்தப்படறதான்னு ஆயிடிச்சி. அதே நேரம் கமல் சாரோட பெருந்தன்மை எவ்வளவு உயர்வானதுன்னு அவர் மேலே மரியாதையும் கூடிடிச்சி.

உண்மையை சொல்லணும்னா கமல் -  கோவை சரளா மாதிரி காம்பினேஷன் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் கொடுக்கிறது மத்தவங்களுக்குதான். என்னைப் பொறுத்தவரைக்கும் நான் யார் கூட நடிக்கிறேன்னாலும் அவங்களை கமல்ஹாசனா நினைச்சித்தான் நடிப்பேன். அதனாலதான் என்னோட இத்தனை ஆண்டு சினிமா அனுபவத்தில் அவங்களோட நடிக்கலையே, இவங்களோட நடிக்கலையேங்கிற வருத்தம் எனக்கு எப்பவுமே வந்தது கிடையாது.

சந்திப்பு : தேவராஜ்

(தொடரும்)