கண்ணை தொடச்சுக்கங்க!



சினிமாவுக்கு கதை எழுத கத்துக்கலாம்!

மாணவன் 12


‘பராசக்தி’ படத்தின் சரித்திர வெற்றிக்கு என்ன காரணம்? ஒரே வார்த்தையில் சொல்லுங்கள் பார்க்கலாம்.ரொம்ப யோசிக்காதீங்க. ‘சோகம்’ என்பதுதான் அந்த ஒரே வார்த்தை.இரண்டாம் உலகப் போரின் விளைவாக ஒரு குடும்பம் சிதைகிறது. அந்த குடும்ப உறுப்பினர்களின் பிரிவுதான் படத்தின் அடிப்படை கதையே.

இந்த சோகத்துக்கு வலுவூட்டியது கலைஞரின் பேனாவும், நடிகர் திலகத்தின் மிகச்சிறப்பான நடிப்பும். இறுதிக்காட்சியில் “ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்” என்று கோர்ட்டில் தன் தங்கை கல்யாணிக்காக, அண்ணன் குணசேகரனாக சிவாஜி முழங்கியபோது கலங்காத கண்களே இல்லை.

‘சோகம்’, நாம் வாழ்க்கையில் சந்திக்க விரும்பாத உணர்வாக இருக்கலாம். ஆனால் சோகப்படங்கள் வசூலில் சக்கைப்போடு போட்டு, வரலாற்றில் கல்வெட்டாகப் பதிகின்றன என்பதே கடந்த ஓர் நூற்றாண்டு சினிமா அனுபவம். இந்தியாவின் முதல் திரைப்படமான ‘ராஜா ஹரிச்சந்திரா’வும் கூட அரிச்சந்திரன் தன் மனைவியையும், குழந்தையையும் பிரியும் காவிய சோகத்தை அடிப்படையாகக் கொண்டதுதானே?

பெரும்பாலும் குடும்பக் கதைகளை யோசிக்கும்போது சோகமான காட்சிகளைச் சேர்ப்பதே நல்லது. ஓர் ஊரின் சோகம், ஒரு நாட்டின் சோகம் என்று பரந்த மனதோடு யோசித்தீர்களேயானால், அது நாட்டுக்கு நல்லதுதான். ஆனால், உங்கள் கதையை படமாக எடுக்க உத்தேசிக்கும் தயாரிப்பாளர்தான் பாவம்.

மேலும், சோகக்கதைகளைக் கையாளும்போது இறுதிக்காட்சியில் எல்லாமே சுபமாக முடிந்தால்தான், படம் பார்க்கும் ரசிகனின் ஈகோ திருப்தியடையும். இயக்குநர் பீம்சிங்கின் சீக்ரட் ஃபார்முலா இதுதான்.மாறாக யதார்த்தமாக படமெடுக்கிறோம் என்று படம் முடிந்தபிறகும், பாத்திரங்களின் சோகம் தொடர்கிறது என்று சித்தரித்தால் படத்தின் வெற்றி கேள்விக்குறிதான். ஆனால், அப்படியும் படம் எடுத்து வென்றவர்கள் உண்டு. உதாரணத்துக்கு சொல்ல வேண்டுமானால், பாலா இயக்கிய ‘சேது’.

இணையப் பரிச்சயம் உள்ளவர்களுக்கு, குறிப்பாக இணையத்தில் சினிமா செய்திகளைத் தேடி வாசிப்பவர்களுக்கு  நன்கு பரிச்சயமான ஒரு தளம் உண்டு. IMDB (Internet Movie DataBase) என்கிற அந்தத் தளம் உலகத் திரைப்படங்கள் குறித்த தகவல்களையும், பரிந்துரைகளையும் தருவதில் முன்னணியில் இருக்கிறது.

இந்தத் தளத்தில் ‘பார்த்தே ஆகவேண்டிய தமிழ்த் திரைப்படங்கள்’ என்று டாப்-50 படங்களைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.‘அன்பே சிவம்’, ‘சர்வர் சுந்தரம்’, ‘கன்னத்தில் முத்தமிட்டால்’, ‘குணா’, ‘எதிர்நீச்சல்’, ‘ரோஜா’, ‘ரத்தக் கண்ணீர்’, ‘ராஜபார்வை’, ‘சுமைதாங்கி’,

‘மூன்றாம்பிறை’, ‘மகாநதி’, ‘பராசக்தி’, ‘அஞ்சலி’, ‘சேது’, ‘இதயம்’, ‘7ஜி ரெயின்போ காலனி’, ‘பிதாமகன்’, ‘கௌரவம்’, ‘அங்காடித்தெரு’, ‘வறுமையின் நிறம் சிகப்பு’ என்று அப்பட்டியலில் சேர்த்திருக்கும் பெரும்பாலான படங்கள் சோக சுவை கொண்டவையாகவே பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் படங்கள் அத்தனையும் விமர்சனரீதியாக மட்டுமின்றி, வணிகரீதியாகவும் வெற்றி பெற்றவை என்பது இங்கே அடிக்கோடிடப்பட்டு சொல்லப்பட வேண்டியது.

சோகப்படமெல்லாம் பழைய டிரெண்டு என்பவர்கள், தயவுசெய்து தமிழ் சினிமாவில் அவ்வப்போது ‘டிரெண்ட் செட்டர்’ என்று சொல்லக்கூடிய சினிமாவின் போக்கையே மாற்றக்கூடிய மிகப்பெரிய வெற்றிப் படங்களின் பட்டியலை எடுத்துப் பாருங்கள். சரியான விகிதத்தில் சோகம் அந்தப் படங்கள் அத்தனையிலுமே அமைந்திருக்கும்.ஏன் கதைகளுக்கு சோகம் தேவை?ஏனெனில், காமெடியோ/காதலோ... அதை நாம் ரசிக்கிறோம். சோகத்தில் மட்டும்தான் பங்குபெறுகிறோம்.

(கதை விடுவோம்)