கவர்ச்சிக்கு முக்கியத்துவம் தருகிறேனா? பிரணீதா சீற்றம்



தமிழில் ‘உதயன்’, ‘சகுனி’, ‘மாசு’, ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’, ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’ ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்தவர், பெங்களூரு வரவு பிரணீதா சுபாஷ். தமிழில் சரளமாகப் பேசும் அவரிடம் செல்போனில் பேசினோம்.“தமிழ்ல ரொம்ப தெளிவா பேசுறீங்களே. ஆச்சரியமா இருக்கு...”

“நான் பெங்களூரு பொண்ணு. இங்க இருக்கிறவங்களுக்கு ஓரளவு தமிழ் தெரியும். தமிழ்ல நான் பல படங்கள்ல நடிச்சிட்டேன். ஷூட்டிங் ஸ்பாட்ல எல்லாரும் தமிழ்லதான் பேசுவாங்க. அவங்க பேசறதைக் கேட்டு நானும் தமிழ்ல பேச கத்துக்கிட்டேன். ஆனா, நானே டப்பிங் பேசற அளவுக்கு தமிழ்ல சரளமா பேச முடியலை.”“நிறைய படங்கள்ல பார்க்க முடியறதில்லையே, என்ன காரணம்?”

“அதுக்கு என் பாலிசிதான் காரணம். நிறைய படங்கள்ல நடிக்கணும், வருஷம் முழுக்க பிஸியா இருக்கணும்ங்கிற ஆசை கிடையாது. சினிமாவுல நடிச்சு சம்பாதிக்கணும்ங்கிற கட்டாயமும் கிடையாது. என் அப்பா, அம்மா ரெண்டுபேருமே டாக்டர்கள். அவங்க கனவையும், லட்சியத்தையும் நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கு. ஒரே நேரத்துல எல்லா லாங்குவேஜுலயும் நடிக்க முடியாது.

தெலுங்குலயும், கன்னடத்துலயும் எனக்கு நல்ல வரவேற்பு இருக்கு. அங்கே நான் கமிட்டாகி இருக்கிற படங்களை முடிக்கவே நேரம் சரியா இருக்கு. ஆனா, தமிழ்ல நிறைய படம் பண்ணணும்ங்கிற ஆசையும், ஆர்வமும் இருக்கு. இப்ப ரிலீசான ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’ படம் எனக்கு நல்ல பேர் கொடுத்திருக்கு.”“மற்ற துறைகளை விட, சினிமா துறையிலதான் போட்டியும், பொறாமையும் ஜாஸ்தி. எப்படி அதை சமாளிக்கிறீங்க?”

“தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி, தெலுங்கு லாங்குவேஜுல தயாராகிற படங்கள்ல, தினமும் நிறைய புதுமுகங்கள் வாய்ப்பு கேட்டு நடிக்க வர்றாங்க. யாருக்கு என்ன கிடைக்கணும்னு விதி இருக்கோ, அது அவங்களுக்கு கிடைச்சுக்கிட்டிருக்கு. சினிமாவுல திறமையுள்ள யார் வேணும்னாலும் ஜெயிக்கலாம். எனக்கு என்ன விதியோ அதுதான் நடக்கும்.

நான் யாரையும் போட்டியா நினைக்க மாட்டேன். காரணம், நான் சினிமாவுல நடிக்க வந்தப்ப, யாரும் என்னை போட்டியா நினைக்கலை. எனக்கு வந்த வாய்ப்பை ஏத்துக்கிட்டு நடிச்சேன். மத்தவங்க வளர்ச்சியை பார்த்து பொறாமைப்படற ஆள் நான் கிடையாது. யார் நல்லா நடிச்சாலும், அவங்களை தட்டிக்கொடுத்து பாராட்டுவேன்.”

“சில படங்களைப் பார்த்தா, கவர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் தர்ற மாதிரி தெரியுதே?”
“நீங்கதான் அப்படி சொல்றீங்க. ஆடியன்ஸ் யாரும் இப்படி சொன்னதில்லை. தெலுங்குப் படங்கள்ல ஓவர் கவர்ச்சி காட்டச் சொல்வாங்கன்னு கேள்விப்பட்டேன். ஆனா, தெலுங்குல நான் நடிச்ச படங்களைப் பார்த்தீங்கன்னா அப்படி இருக்காது. டோலிவுட்ல எனக்கு ஹோம்லி இமேஜ் இருக்கு. கவர்ச்சியா நடிக்கணும்னு யாரும் என்னை கட்டாயப்படுத்தலை.

கதைக்கும், கேரக்டருக்கும் தகுந்த மாதிரி நடிச்சுக்கிட்டிருக்கேன். ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’ படத்தை பார்த்தீங்கன்னா, நான் சொன்ன விஷயம் உங்களுக்கு புரியும். அதர்வா கூட நடிச்ச ஒரு பாட்டுல, ரொம்ப நாகரீகமா டிரெஸ் போட்டுக்கிட்டிருந்தேன். அதைப் பார்த்த ஆடியன்ஸ், நான் ரொம்ப அழகா இருந்ததா பாராட்டினாங்க.”

“பாலிவுட்டுக்கு போக ஆசையில்லையா? இன்னும் எத்தனை வருஷம் சினிமாவுல இருப்பீங்க?”
“பாலிவுட்டுக்கு போகணும்னு கனவுல கூட நினைச்சுப் பார்த்ததில்லை. இன்னும் சொல்லணும்னா, அதுக்காக முயற்சி பண்ணது கூட கிடையாது. வாழ்க்கையில நிறைய எதிர்பார்க்கக் கூடாது. நாம நினைச்ச விஷயம் சரியா நடக்கலேன்னு வெச்சிக்குங்க. பிறகு அது மிகப் பெரிய ஏமாற்றமா மாறிடும். என்னைத் தேடி வர்ற வாய்ப்புகள்ல, எது எனக்கு பொருத்தமா இருக்கும்னு தோணுதோ அதை ஒத்துக்கிட்டு நடிக்கிறேன்.

இன்னும் எத்தனை வருஷம் சினிமாவுல நடிப்பேன்னு தெரியாது. அது என் கையில இல்லை. நடிப்பு எனக்கு பேஷன். யார் வாய்ப்பையும் தட்டிப்பறிக்காம, என்னைத் தேடி என்ன வருதோ அதை வெச்சு சந்தோஷப்படுவேன். எதிர்காலத் திட்டம் எதுவும் கிடையாது.”
“நடிப்புக்காக அவார்டு வாங்க ஆசையிருக்கா?”

“ஆடியன்ஸ் கைதட்டி பாராட்டினா போதும். மத்தபடி அவார்டு வாங்கறதுக்காக நடிக்க மாட்டேன். அதுவா தேடி வந்தா சந்தோஷம். ‘பாகுபலி’ மாதிரி படங்கள்ல நடிக்க ஆசை. ‘பாஜிராவ் மஸ்தானி’ இந்திப் படத்துல தீபிகா படுகோன் நடிப்பு ரொம்ப பிடிக்கும். அந்த மாதிரி கேரக்டர்ல நடிக்க ஆசை.”“சினிமா சம்பந்தமான எந்த பார்ட்டியிலும் கலந்துக்க மாட்டீங்கன்னு சொல்றாங்களே, உண்மையா?”

“உண்மைதான். சினிமாவுல எனக்கு ஃபிரெண்ட்ஸ் கிடையாது. அதனால, வெளியே நடக்கிற எந்த பார்ட்டியிலும் கலந்துக்கமாட்டேன். காலேஜ் ஃபிரெண்ட்ஸ் இருக்காங்க. அதுல பெஸ்ட் ஃபிரெண்டுகளை மட்டும் செலக்ட் பண்ணி பழகுவேன்.”
“உங்களைப் பற்றி கிசுகிசுக்களே வர்றதில்லையே?”

“வராம இருக்கிறது நல்லதுதானே. அதுக்கு ஏன் ஃபீல் பண்றீங்க? இதுவரை யாரையும் நான் காதலிச்சதில்லை. ஃபியூச்சர்ல என் அப்பா, அம்மா செலக்ட் பண்ற மாப்பிள்ளையோட என் கல்யாணம் நடக்கும்.”“ஓட்டல் பிசினஸ்ல ஈடுபடறதா நியூஸ் வருதே?”“அதுபற்றியும் யோசிச்சுக்கிட்டிருக்கேன். அப்பா, அம்மா ரெண்டு பேருமே டாக்டர்கள். பெங்களூருல சொந்தமா ஹாஸ்பிட்டல் இருக்கு. சினிமாவுல நடிச்சது போக, மீதியுள்ள நேரத்துல மருத்துவமனை நிர்வாகத்தை கவனிச்சுக்கிறேன்.”

- தேவராஜ்