குருபார்வை மனோஜ்குமார்



(சென்ற இதழ் தொடர்ச்சி)

டைட்டில் ஸ்டாக் 27


என்னுடைய குரு பாரதிராஜாவை கோபக்காரர் என்று குறிப்பிடுவார்கள். வேலையை சரியாக செய்யாவிட்டால் அறைந்துவிடுவார் என்றெல்லாம் அவரைப் பற்றி சொல்வார்கள். அதே நேரம் அவருடைய பொறுமையைப் பற்றியும் சொல்ல மறந்துவிடுகிறார்கள். சினிமாவில் இயக்குநராவதற்கு முதல் படி கிளாப் போர்டு அடிக்கக் கற்றுக் கொள்வது.

பாரதிராஜா அளவுக்கு வேறு யாரும் இதை சொல்லித் தர முடியாது. எவ்வளவு வேகத்தில் அடிக்க வேண்டும், கிளாப் அடித்தவுடன் எப்படி நகரவேண்டும். கிளாப் போர்டின் சவுண்டு எவ்வளவு முக்கியம் என்பதையெல்லாம் கிளிப்பிள்ளைக்கு சொல்லிக் கொடுப்பது மாதிரி தன்னுடைய உதவியாளர்களுக்கு சொல்லிக் கொடுப்பார்.

அவர் ஒரு சினிமா பல்கலைக்கழகம் என்று சொன்னால் அது மிகையல்ல. டிராலி தள்ளுவதற்கு அவுட்டோர் யூனிட்டிலேயே ஆட்கள் இருப்பார்கள். ஆனால், உதவி இயக்குநர்கள்தான் டிராலி தள்ள வேண்டும் என்பார். ஏனெனில் எதற்கெல்லாம் டிராலி ஷாட் வைக்க வேண்டும் என்பதை அனுபவபூர்வமாக தன்னுடைய உதவியாளர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது அவர் நோக்கம்.

டிஸ்கஷனில் முதலில் கேரக்டர்தான் ஃபிக்ஸ் செய்வார். அந்தக் கேரக்டருக்கு என்ன புரொஃபஷன் என்பதை டீடெயிலாக சொல்லிக் கொடுப்பார். கேரக்டரின் வேலை டிரைவர் என்றால் அந்த டிரைவரின் மேனரிஸம், டயலாக் டெலிவரி இதையெல்லாம் துல்லியமாக ஆர்ட்டிஸ்டிடம் வேலை வாங்க வேண்டுமென்று திட்டமிடுவார்.

படப்பிடிப்பு ஆரம்பித்த ஏழாவது நாள் கிளைமேக்ஸ் காட்சியை எடுக்கத் தொடங்கவேண்டும் என்பது அவர் சொன்ன பாடம். ஏனெனில் ஒரு வாரத்திலேயே அனைவரும் கதையில் இன்வால்வ் ஆகிவிடுவார்கள். ஏழாவது நாள் கிளைமேக்ஸ் காட்சியை எடுக்கும்போது தயாரிப்பாளரும் தாராளமாக செலவு செய்வார். கிளைமேக்ஸை சிறப்பாக எடுத்துவிட்டால், மற்ற காட்சிகளை பின்னர் எடுக்கும்போது ஆர்ட்டிஸ்டும் உற்சாகமாக இருப்பார், தயாரிப்பாளரும் நிறைவாக ஃபீல் செய்வார்.

எடிட்டிங்கில் அவர் அசகாய சூரர். நாங்கள் ஸ்கிரிப்டின்போது பேசிய ஆர்டரை அப்படியே தலைகீழாக மாற்றியும்கூட எடிட் செய்வார். அவர் எடிட்டிங் சூட்டில் அமர்ந்திருக்கும்போது படப்பிடிப்பில் நடந்த ஒவ்வொரு ஷாட்டையும் மனதில்வைத்து எங்களிடம் கேட்பார். நாங்கள் எடுத்துக் கொடுக்கும் ஷாட்டுகளை அவ்வளவு அழகாக ஃபிக்ஸ் செய்வார்.

அந்த பல்கலைக்கழகத்தில் பயின்ற அனுபவத்தில் தனியாக படமெடுக்கப் போகிறேன் என்று அவரிடம் சொன்னபோது, வாழ்த்தியதோடு முக்கியமான ஆலோசனை ஒன்றும் சொல்லி அனுப்பினார். “படப்பிடிப்புக்கு முதல் ஆளாக என்றுமே டைரக்டர்தான் வரவேண்டும். டைரக்டர் வந்துவிட்டார் என்று தெரிந்தால்தான் வேலை நடக்கும்.

அதுபோல படப்பிடிப்பில் இருந்து கடைசி ஆளாகத்தான் டைரக்டர் வெளியேற வேண்டும். எக்காரணம் கொண்டும் தேவைக்கு அதிகமாக ஒரு பைசாகூட செலவழியக்கூடாது” என்றார். இன்றுவரை பாரதிராஜா பல்கலைக்கழகத்தில் இருந்து உருவாகிய ஒவ்வொரு இயக்குநரும் தவறாமல் கடைப்பிடிக்கும் ஆலோசனை இது.

நான் முதன்முதலாக இயக்கிய ‘மண்ணுக்குள் வைரம்’ படத்தில் நடிகர் திலகம் நடித்தார். பாரதிராஜாவின் சிஷ்யன் என்பதால்தான் சிவாஜி நம்பிக்கையோடு புதுமுக இயக்குநரான என் படத்தில் நடித்தார். ‘முதல் மரியாதை’யில் வேலை பார்த்ததால் எனக்கு திரையுலகில் கிடைத்த மரியாதை இது.

சொந்தமாக படம் தயாரிக்க நினைத்தபோது என் குருநாதரை கவுரவப்படுத்தும் விதமாக குருவின் பார்வை என் மீது எப்போதுமே படவேண்டும் என்கிற எண்ணத்தில் ‘குரு பிலிம்ஸ்’ என்று என் நிறுவனத்துக்கு பெயர் சூட்டினேன். கம்பெனியின் லோகோவில் கூட என் குரு பாரதிராஜாவின் படம்தான் இருக்கும். ‘குரு பார்வை கோடி நன்மை’ என்பார்கள். என் குரு என்னை எப்போதும் பார்த்துக் கொண்டேதான் இருக்கிறார். அதனால்தான் எனக்கு எந்தச் சோதனையிலும் நன்மை நடக்கிறது.

இயக்குநர், தயாரிப்பாளர் என்று ஆகிவிட்ட நிலையில் என் குருவேதான் என்னை ‘அன்னக்கொடியும் கொடிவீரனும்’ படம் மூலமாக நடிகனாகவும் ஆக்கினார். அதைத் தொடர்ந்து ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ என்றெல்லாம் வரிசையாக நடிக்கவும் ஆரம்பித்திருக்கிறேன்.அல்லி நகரத்தில் காலில் செருப்பில்லாமல் மஞ்சப்பையோடு பள்ளிக்கூடம் போன மனோஜ்குமாரின் மகள் இன்று டாக்டர், மகன் என்ஜினியர்.

இதற்கெல்லாம் காரணம் என் மீது எப்போதும் குருபார்வை விழுந்துகொண்டிருப்பதுதான். ஜானகி டீச்சர், கணபதி வாத்தியார், சொக்கலிங்கம் சார், இயக்குநர் இமயம் என்று எனக்கு வாய்த்த குருக்களின் ஆசிதான் என்னை நல்ல நிலையில் வைத்திருக்கிறது.

மீண்டும் என்னுடைய குரு பாரதிராஜா, ‘படம் பண்ணலாம் வாடா’ என்று அழைத்தால் கிளாப் போர்டோடு அவருடைய அசிஸ்டென்டாக அவர் முன்பாக நிற்பேன். இந்த வயதிலும் அவருடைய மாணவனாக, அவருடைய கண்டிப்பில் வாழவேண்டும் என்று ஏக்கமாக இருக்கிறது.

தொகுப்பு : சுரேஷ்ராஜா

(தொடரும்)