விக்ரம் வேதா



ஆடு புலி ஆட்டம்!

தாதா வேதாவுக்கும், என்கவுன்டர் ஆபீசர் விக்ரம் டீமுக்கும் இடையே நடக்கும் மோதல்தான் கதை. படம் ஆரம்பித்து சில மணித் துளிகள்வரை முகம் காட்டாமலே இருக்கிறார் விஜய சேதுபதி. இந்தப்படத்தில் அவர் இருக்கிறாரா என்கிற சந்தேகம் ரசிகர்களுக்கு வருகிறது.ஆனால்-வந்து நின்ற அடுத்த நொடியிலிருந்து அவர் ஆடும் ஆட்டம் படுசுவாரஸ்யமாக இருக்கிறது.

வயதான தோற்றத்தில், அளவான காஸ்ட்யூமில், துணைக்கொரு நாயகி இல்லாமல், தனியாளாக நின்று அதகளம் செய்கிறார். தன்னிடம் விசாரணை செய்யும் மாதவனிடம் ஒரு கதையைச் சொல்லி விடை கேட்பது சுவாரஸ்ய நடிப்பு. காச்மூச் என்று கத்தாமல், பெயர் தெரியாத ஆயுதங்களை வைத்துக்கொண்டு அகோரமாக ஆக்ஷன் காட்டாமல், வெகு எளிமையான பாவனைகளால் தாதா கதாபாத்திரத்தை விஸ்வரூபமெடுக்க வைத்து விளையாடுகிறார் விஜயசேதுபதி.

சாக்லெட் பாய் என்று பெயரெடுத்த மாதவன், இந்தப்படத்தில் துப்பாக்கி இல்லாமல் வரும் காட்சிகள் மிகக்குறைவு. தேர்ந்த என்கவுன்டர் காவல்துறையினரே பொறாமைப்படும் அளவுக்கு திட்டமிடல், செயலாற்றுதல் என அசத்துகிறார். வக்கீல் மனைவியுடன் ரொமான்ஸ், மோதல் என்கிற களத்திலும் நடிப்பில் மெருகு காட்டுகிறார்.

மாதவனின் காதல் மனைவியாக வரும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கணவர், யாரை என்கவுன்டர் செய்யத் துடிக்கிறாரோ, அவரை ஜாமீனில் எடுக்கும் கதாபாத்திரம். கதிர் மற்றும் வரலட்சுமி கதாபாத்திரங்கள் சிறிது நேரமே வந்தாலும் ரொம்ப நேரத்திற்கு மனதில் நிற்கிறார்கள்.  என்கவுன்டர் ஆபீசராக வரும் பிரேம், கிடைத்த நல்ல வாய்ப்பை நழுவவிடாமல் பாதுகாத்திருக்கிறார்.

பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவு, ஒரு கிரைம் படத்துக்கான சரியான உழைப்பு.  சில கிளைக்கதைகள் கொண்ட திரைக்கதை, கொட்டாவி விடவைத்துவிடாமல் காப்பாற்றுகிறது ரிச்சர்ட் கெவின் செய்திருக்கும் படத்தொகுப்பு. திலிப் சுப்பராயனின் சண்டை அமைப்பு சாகசம் கலந்தது. அளவான வசனங்களால் நிறைவு தருகிறார் மணிகண்டன்.

‘டசக்கு டசக்கு...’ ‘போகாதே என்னைவிட்டு...’ பாடல்களில் அடையாளம் காணப்படுகிறார் பாடலாசிரியர் முத்தமிழ். இசையமைத்துள்ள சாம். சி.எஸ், மிரட்டல்களை பதிவு செய்கிறார்.போலீஸ் கதைகள் எவ்வளவோ படமாக பதிவுசெய்யப்பட்டாலும், சில மட்டுமே நினைவில் நிற்கின்றன. அப்படியொரு  நினைவில் நிற்கும் படமாக ‘விக்ரம் வேதா’வை படைத்திருக்கிறார்கள் வாழ்க்கை இணையர்களான இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி.