பாறைக்கும், பழத்துக்கும் லவ்வு!



பாசில், சித்திக், ஷாஜி கைலாஷ் வரிசையில் ‘இமை’ படத்தின் மூலம் தமிழில் அடியெடுத்து வைத்திருக்கிறார் இயக்குநர் விஜய் கே. மோகன். இவர்  மலையாளத்தில் ‘நளசரிதம் நாலாம் திவசம்’, ‘வேனல் மரம்’ உட்பட ஏராளமான படங்களை இயக்கியுள்ளார்.

‘இமை’யில் நாயகனாக சரிஷ் அறிமுகமாகிறார். நாயகியாக அட்சய பிரியா நடித்துள்ளார். இவர் ஏற்கெனவே தமிழில் நடித்து இரண்டு படங்கள் வெளியாகவுள்ளன. பிரகாஷ்ராஜின் மைத்துனரும் டிஸ்கோ சாந்தியின் சகோதரருமான அருண் திருமொழி வர்மன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். படத்தைப் பற்றி இயக்குநரிடம் கேட்ட போது....

‘‘தமிழில் படம் இயக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவு. திறமைகளுக்கும் புதுமைகளுக்கும்  என்றும் தமிழில் வரவேற்பு கிடைக்கும்  என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு. அந்த தைரியத்தில்தான் தமிழில் படம் இயக்கியுள்ளேன். அதற்கு முதலாவதாக என்னுடைய தயாரிப்பாளர் ஹார்பிக் வி. டோரிக்கு நன்றி சொல்ல வேண்டும்.

இது அக்மார்க் லவ் ஸ்டோரி. கரடு முரடான பாறை போன்ற வாலிபனுக்கும், பலாப்பழம் போன்ற அப்பாவிப் பெண்ணுக்கும் இடையில் மலரும் காதலைப் பற்றித்தான் படம் பேசுகிறது. சமீபத்தில் சென்னையிலிருந்து திருவனந்தபுரத்துக்கு ரயிலில் சென்றேன். அப்போது என்னுடைய சக பயணியிடம் பேச்சுக் கொடுத்தபோது அவர் சொன்ன விஷயம் இன்ட்ரஸ்டிங்காக இருந்தது. அவர் சொன்ன விஷயத்தை ‘நாட்’டாக வைத்து இந்தப் படத்துக்கு திரைக்கதை எழுதி முடித்தேன்.

 சென்னை, பாண்டிச்சேரி, பொள்ளாச்சி, ஊட்டி, கேரளாவிலுள்ள கோவிந்தபுரம் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. ஒரே ஷெட்யூலில் ஐம்பது நாட்கள் பம்பரமாகச் சுழன்று படத்தை முடித்திருக்கிறேன். விறுவிறுன்னு நகரும் ஸ்கிரீன்ப்ளே தான் படத்தோட ஹைலைட்.

ஒளிப்பதிவு வி.கே.பிரதீப் விஷுவல் ட்ரீட்டில் மிரட்டியிருப்பார். இசையமைப்பாளர்கள் மிக்கு காவில், ஆதிஃப் என இருவர் இசையமைத்துள்ளனர். கதையைக் கேட்ட உடன் ஆன் தி ஸ்பாட்  ட்யூன் போட்டுக் கொடுத்தார்கள்.

அதேபோல்தான் பாடலாசிரியர் யுகபாரதியும், ட்யூன் கேட்டு முடித்ததும் ஒரே நாளில் எல்லா பாடல்களையும் எழுதிக் கொடுத்தார். தமிழ் சினிமாவில் பணி செய்த அனுபவம் என் வாழ்நாளில் மறக்க முடியாதது. இதில் வேலை பார்த்த அனைவரும் அர்ப்பணிப்பு உணர்வோடு  வேலை பார்த்தார்கள். அவர்களுடன் பணிபுரிந்தது மறக்க முடியாத அனுபவம். அந்த அனுபவம் ‘இமை’க்கு பெரிய பலம்.’’

- எஸ்