“நான், பாரதிராஜா செலக்ட் செய்த ஹீரோயின்!”



லிவிங்ஸ்டன் மகள் உற்சாகம்

கமல், சரத்குமார், அர்ஜுன் மகள்களைத் தொடர்ந்து லிவிங்ஸ்டனின் மகள் ஜோவிடாவும் ‘கலாசல்’ படத்தின் மூலம் ஹீரோயின் ஆகியிருக்கிறார். பேட்டிக்காக அவரைத் தொடர்பு கொண்டதுமே, “அப்பாவைத்தான் எல்லாரும் பேட்டியெடுப்பாங்க. முதன்முறையா ‘வண்ணத்திரை’தான் என்னைப் பேட்டியெடுக்க தொடர்பு கொள்ளுறீங்க...” என்று நெகிழ்ச்சியாக ஆரம்பித்தார்.

“ஹீரோயின் ஆகணும்னு அப்பாவை ரொம்ப தொந்தரவு கொடுத்தீங்களா?”

“அப்படியெல்லாம் இல்லை. சின்ன வயசுலே இருந்தே நடிப்பு மீது ஈர்ப்பு. நானும், தங்கச்சியும் வீட்டிலே இருக்கிற ஹேண்டி கேமராவை வெச்சு நாங்களே நடிச்சு குறும்படங்கள் எடுப்போம். அம்மாவும், அப்பாவும் பார்த்துட்டு என்கரேஜ் பண்ணுவாங்க. நான் படிப்புலே கொஞ்சம் ஆவரேஜ்தான். இப்போ பி.ஏ செகண்ட் இயர் டூரிஸம் படிக்கிறேன்.

பாரதிராஜா சார்தான் யதேச்சையா என் போட்டோ பார்த்திருக்காரு. அவர்தான் அப்பாகிட்டே, ‘உன் பொண்ணு நடிக்கலாமேப்பா’ன்னு சொல்லியிருக்காரு. அப்பா என்னைக் கூப்பிட்டுக்கிட்டு போயி அவர்கிட்டே ஆசீர்வாதம் வாங்க வெச்சாரு. அவர் என்னை ஆடிஷன் பண்ணி, ‘லிவிங்ஸ்டன், இவகிட்டே திறமையிருக்கு.

வேஸ்ட் பண்ணிடாதே. நல்லா வருவா’ன்னு சொல்லியிருக்காரு. அதுக்கப்புறம்தான் சினிமாவில் நடிக்க முடிவெடுத்தேன். ‘கலாசல்’ வாய்ப்பு கிடைச்சுது. பாரதிராஜா சாரால் ஏராளமான திறமையுள்ள ஹீரோயின்கள் தமிழ் சினிமாவுக்கு கிடைச்சிருக்காங்க. நான் அவர் இயக்கத்தில் அறிமுகமாகலேன்னாலும், அவர் தேர்ந்தெடுத்த ஹீரோயின்தான்!”

“உங்களுக்கு ஹீரோவா அம்பிகாவோட மகன் நடிக்கிறாரே?”

“ஆமாம். அது யதேச்சையா அமைஞ்சது. அம்பிகா ஆன்ட்டியோட மகன் ராம்கேசவுக்கும் இதுதான் முதல் படம். எனக்கும், ராமுக்கும் டைரக்டர் அஸ்வின் மாதவன், பயிற்சி வகுப்புகள் எடுத்து நடிப்பு சொல்லிக் கொடுத்தாரு. எங்கப்பா சினிமாவில் பெரிய ஆளுதான்னாலும் இதுவரை நாங்க ஷூட்டிங்கே பார்த்ததில்லை. கேமரா எப்படியிருக்கும், லொகேஷனில் டீம் எப்படி நடந்துப்பாங்க எதுவுமே தெரியாது. பயிற்சி வகுப்பினால்தான் பயமில்லாமே நடிக்க முடிஞ்சது.

நான் நல்லா நடிச்சிருக்கேன்னு நாலு பேரு சொன்னா, அதுக்கான கிரெடிட் டைரக்டருக்குத்தான். அவர் சுந்தர்.சி, பத்ரி போன்ற கமர்ஷியல் இயக்குநர்களிடம் டிரெய்னிங் எடுத்தவர். யார்கிட்டே எப்படி வேலை வாங்கணும்னு நல்லா தெரியும். என்னையும், ராம்கேசவையும் மிகச்சரியாக பயன்படுத்தி இருக்கிறார்.”

“படத்துலே நடிக்கிற மத்தவங்களோட ஒத்துழைப்பு?”

“ராதாரவி, மனோபாலா, மயில்சாமி, அம்பிகான்னு நட்சத்திரப் பட்டாளம். திரைக்குடும்பம் என்பதால் இவங்களோட ஏற்கனவே எனக்கு பரிச்சயம் உண்டு. இவங்க எல்லாருமே தங்கள் மகள் மாதிரி என்னை பார்த்துக்கிட்டாங்க. தயாரிப்பாளர் பி.சி.பாலு சார் பற்றியும் சொல்லியே ஆக வேண்டும். புதுமுகங்கள் நடிக்கிற படம் தானே என்று பட்ஜெட்டை இழுத்துப் பிடிக்காமல் தாராளமாக செலவு பண்ணியிருக்கிறார்.”

“சினிமாவில் நடிக்க வீட்டில் உடனே ஒத்துக்கிட்டாங்களா?”

“அப்பா, அம்மா ரெண்டு பேருமே ஆர்த்தோடக்ஸ் ஃபேமிலி. அப்பா, சினிமாவுக்கு வந்ததுக்கே அவருக்கு ஆரம்பத்தில் எதிர்ப்பு வந்திருக்கு. அப்படியிருக்க நானும் நடிக்க வந்துட்டா சொந்தக்காரங்க என்ன பேசுவாங்களோன்னு அவர் தயங்கி இருக்காரு. பாரதிராஜா சார் சொன்னதுமே அந்த தயக்கம் விலகியிருக்கு. இருந்தும் பி.சி.ராம் சாரிடமும் ஆலோசனை கேட்டிருக்காரு. பி.சி. சார் என்னை அவரே போட்டோ எடுத்து, ‘நல்ல போட்டோஜெனிக் ஃபேஸ். ஹீரோயினா சக்சஸ் ஆயிடுவா. தயங்காதே’ன்னு சொன்னதுக்கு அப்புறம்தான் என்னை சினிமாவில் நடிக்க வைக்க முடிவெடுத்தார்.”

“விஜய் வாழ்த்து தெரிவிச்சாராமே?”

“உங்களுக்கும் தெரிஞ்சிடிச்சா? நான் தளபதியோட வெறித்தனமான ஃபேன். இப்போ அவர் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்திலே நடிக்கிறார். அதிலே அப்பாவுக்கும் நல்ல ரோல். ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி கிட்டே அப்பா சொல்லியிருப்பாரு போல. உடனே அப்பாவோட செல்லில் அவரே லைனுக்கு வந்தார். அப்பாதான் பேசுறாருன்னு கால் எடுத்தேன்.

‘நான் விஜய் பேசுறேன்’னு சொன்னப்போ நம்பவே முடியலை. அப்பாவே நல்லா மிமிக்ரி பண்ணுவாரு என்பதால், அவர்தான் கலாய்க்கிறாருன்னு நெனைச்சேன். அப்புறம் அது விஜய் சார்தான்னு தெரிஞ்சதுமே வீடே ரெண்டு படுற அளவுக்கு ‘ஹூர்ரே’ன்னு கத்தினேன். அம்மா, தங்கச்சியெல்லாம் அரண்டுட்டாங்க.

தளபதியை எனக்கு சின்ன வயசுலே இருந்தே தெரியும். அவரை நேரில் பார்த்ததில்லைன்னாலும் என்னோட பிறந்தநாளுக்கு எல்லாம் போன் பண்ணி வாழ்த்து தெரிவிப்பார். என்னை ‘ஜோ’ன்னு செல்லமா கூப்பிடுவார். சமீபத்தில் என்னோட போட்டோவை பத்திரிகைகளில் பார்த்துட்டு, ‘இவ்வளவு பெரியவளா வளர்ந்துட்டாளா?’ன்னு அப்பாகிட்டே ஆச்சரியப்பட்டிருக்காரு.”

“படத்துலே உங்களுக்கு திமிர் பிடிச்ச பொண்ணு கேரக்டர்னு கேள்விப்பட்டோம். நிஜத்துலே?”

“படத்துலே அந்த மாதிரி கேரக்டரான்னு படம் வந்தப்புறம் பார்த்துட்டு சொல்லுங்க. நிஜத்தில் நான் ரொம்ப சாஃப்ட் நேச்சர் கொண்டவள். ஆனாலும், என்னோட நடை உடை பாவனைகளைப் பார்க்கிறவங்க பந்தா பார்ட்டின்னு நெனைப்பாங்க.”

“நல்லா பாடுவீங்கன்னு சொல்றாங்களே?”

“அப்படின்னு அப்பா சொல்லிக்கிட்டு இருப்பாரு. எனக்கு பாடப் பிடிக்கும். வாய்ப்பாட்டு, ரெண்டு கிரேடு முடிச்சிருக்கேன். என் குரலை கேட்டுட்டு ‘கலாசல்’ மியூசிக் டைரக்டர், ‘நீங்க என் மியூசிக்கில் பாடணும்’னு சொல்லியிருக்காரு. எனக்கு பாடத் தெரியுமே தவிர சினிமா ஹீரோயினுக்கு தேவையான நடனம் தெரியாது. இப்போதான் கத்துக்கறேன். அதுக்கப்புறம் ஆக்‌ஷன் கத்துக்கணும்னு ஆசை. படிப்புலே கொஞ்சம் சுமார்னாலும் மத்த விஷயங்களை கத்துக்கறதுலே கற்பூரம்.”

“பிடிச்ச ஹீரோ?”

“சூப்பர் ஸ்டார், உலக நாயகன், தல, தளபதியெல்லாம் கோச்சுக்கக்கூடாது. என்னோட ஆல்டைம் ஃபேவரைட் சூர்யா சார்தான்.”

- சுரேஷ்ராஜா
அட்டை மற்றும் படங்கள்: ஆர்.சந்திரசேகர்