2019 தீபாவளியை கொண்டாட ஜேம் ஸ்பாண்ட் ரெடி?



‘திருப்பதிக்கே லட்டு’, ‘திருநெல்வேலிக்கே அல்வா’, ‘ரஜினிக்கே ஸ்டைலு’, ‘மோடிக்கே ஃபாரின் டூர்’ மாதிரியான க்ளிஷேவான விஷயம்தான் வாசகர்களுக்கு ஜேம்ஸ்பாண்டை அறிமுகப்படுத்துவதும். நீங்களெல்லாம் சாதா வாசகர்களா என்ன, உலக வாசகர்கள் இல்லையா. உங்களுக்குத் தெரியாத எதை நாங்கள் புதியதாக எழுதிவிட முடியும்?

விதவிதமான துப்பாக்கிகள், எல்லா ‘சைஸிலும்’ பேரழகிகள், நவீனரக கார்கள், மிடுக்கான கோட் ஸூட், கொடூரமான வில்லன்கள், கொலை நடுக்கம் ஏற்படுத்தும் ஆக்‌ஷன் காட்சிகள், ரத்த அழுத்தத்தை எகிறவைக்கும் சேஸிங் சீன்... இதெல்லாம் இல்லாமல் என்ன ஜேம்ஸ்பாண்ட் படம்?ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தலைமுறை தலைமுறையாக உலகம் ஜேம்ஸ்பாண்டை ரசித்துக் கொண்டேதான் இருக்கிறது.

நம் தாத்தாவும் ஜேம்ஸ்பாண்ட் ரசிகராக இருந்தார். நம் அப்பாவும் 007க்கு வெறியராக இருந்தார். நமக்கும் அந்த பிரிட்டிஷ் உளவாளி மீது அத்தனை மோகம். தலைமுறைகளைக் கடந்த ரசனை இது. ஒவ்வொரு படம் வெளிவரும்போதும், அந்தந்த காலகட்டத்தின் விருப்பு வெறுப்புகளை கருத்தில் கொண்டு ஜேம்ஸ்பாண்ட் தன்னை சாஃப்ட்வேர் மாதிரி அப்டேட் செய்துகொள்கிறார் என்பதே அவரது நிஜமான வெற்றி.

நியாயத்தின் பக்கம் மட்டுமே நிற்பார். உயரிய லட்சியங்களுக்காக உயிரை பணயம் வைப்பார். தீயவர்களுக்கு தீ, அதிவேகமாக காரை ஓட்டும் அதே அனாயாசமான ஸ்டைலை, அழகிகளை ஓட்டும்போதும் காட்டுவார். நவீன ஆயுதங்களைக் கையாளுவதில் ராட்சஸன். உலகம் சுற்றும் வாலிபன். இனம், மொழி, நாடு, அரசியல் எல்லைகளுக்கு அப்பாற்பட்டவர். இத்தகைய கல்யாண குணங்கள் கொண்ட மாப்பிள்ளையை யாருக்குத்தான் பிடிக்காது?

உலக வரலாற்றை கிமு, கிபி என்று பிரிப்பதைக் காட்டிலும் இ.உ.போ.மு, இ.உ.போ.பி என்று வகைப்படுத்துவதுதான் நியாயம். (குழம்பாதீர்கள். இரண்டாம் உலகப்போருக்கு முன், பின் என்பதின் சுருக்கம்தான்). உலகம் அதுவரை சந்தித்திராத வகையில் ஹிட்லர் என்கிற மாபெரும் வில்லன் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா என்று வகைதொகை இல்லாமல் வல்லரசு நாடுகளின் வலிமையை அசைத்துப் பார்த்தான்.

அயலுறவு, உள்நாட்டுப் பாதுகாப்பு என்று உலகநாடுகள் பல விஷயங்களை கவலையோடு மீள்பரிசோதனை செய்தது அந்த சந்தர்ப்பத்தில்தான். எதிர்காலம் குறித்த அச்சம் அரசுகளுக்கு மட்டுமின்றி, சாதாரண சிவிலியன்களையும் பாடாய் படுத்தியது. அர்த்தமில்லா அச்சம், பனிமூட்டமாய் உலகை சூழ்ந்திருந்த காலகட்டம் அது.

“எங்களையெல்லாம் காப்பாத்த ஒரு வேலாயுதம் வரமாட்டானா?” என்று யாரோ ஓர் அபலை கூக்குரலிட்டிருக்க வேண்டும். ‘வேலாயுதம்’ சற்று தாமதமாக 2011ல்தான் இளைய தளபதி விஜய் மூலமாக வந்தார்.

ஆனால் 1953லேயே சூப்பர் ஹீரோ ஜேம்ஸ்பாண்ட் வந்துவிட்டார். ஜேம்ஸ் மட்டுமல்ல. இன்று (சினிமாவிலும் நாவல்களிலும்) உலகை காக்கும் ஏராளமான சூப்பர் ஹீரோக்கள் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகே பிறந்தார்கள். ‘தீயவர்களால் பிரச்சினையா? எங்க கிட்டே வாங்க’ என்று நம்பிக்கை கொடுத்தார்கள்.

ஜேம்ஸை பிரசவித்தவர் பிரபல நாவலாசிரியர் இயான் ஃப்ளெமிங். அந்தக் காலத்தில் ராபர்ட் ஃப்ளெமிங் & கோ என்கிற வங்கி, ஐரோப்பாவில் ரொம்ப பிரபலம். அந்த வங்கியின் உரிமையாளர் குடும்பத்தில்தான் ஃப்ளெமிங் பிறந்தார். இவர், மூனிச் மற்றும் ஜெனீவா பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்று வங்கித் தொழிலை கவனிக்க தயாரான நிலையில்தான் இரண்டாம் உலகப் போர் வந்தது.

நாட்டைக் காக்க ஒவ்வொரு குடும்பத்திலும் இருந்து ஒருவராவது இராணுவசேவைக்குப் போவது அப்போது கடமையாக இருந்தது. ஃப்ளெமிங் அச்சந்தர்ப்பத்தில் பிரிட்டிஷ் கடற்படையில் உளவுத்துறை அதிகாரியாகப் பணியாற்றினார். தன்னுடைய பணியில் மகத்தான சாகஸங்களை நிகழ்த்தி, இங்கிலாந்தின் ஹீரோவாக வேண்டும் என்று தினம் தினம் கனவு கண்டார்.

அதற்கான சந்தர்ப்பங்கள் சரியாக வாய்க்காத நிலையில் தன் கனவுகளை கதைகளாக மூளைக்குள் அடுக்கத் தொடங்கினார். தன்னுடைய சகபணியாளர்களிடம் போர் முடிந்தபிறகு ஓர் உளவாளியை நாயகனாக்கி நாவல் எழுதப்போவதாக சொல்லுவார். கதையின் சம்பவங்களாக தன்னுடைய கனவுகளை விவரிப்பார்.

போர் முடிந்தது. அட்வெஞ்சரான பணிகள் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை என்கிற சலிப்பில் கடற்படைப் பணியில் இருந்து ஃப்ளெமிங்கும் விலகினார். சாகஸமான பணியைத் தேடி பத்திரிகையாளர் ஆனார். சில ஆண்டுகளில் அதுவும் வெறுத்துப் போக, போர்க்கால கனவுகளைத் தூசுதட்டி நாவல் எழுத உட்கார்ந்தார்.

என்ன எழுதுவது என்று திட்டவட்டமான ஐடியாவே இல்லை. என்னதான் சிந்தித்தாலும் மப்பாகவே இருந்தது. தன்னையே ஹீரோவாகக் கருதி எழுத ஆரம்பித்தார். இயல்பிலேயே மந்தமானவராக அமைந்துவிட்ட ஃப்ளெமிங், தன்னுடைய ஹீரோவையும் மிஸ்டர் மந்தமாக உருவாக்க விரும்பினார். அவனுக்கு என்ன பெயர் சூட்டுவது என்றும் தெரியவில்லை.

தன் பெயரைச் சூட்டி, தன் குடும்பப் பாரம்பரியத்தையே கேவலப்படுத்தவும் மனமில்லை; மொக்கையான வேலையை செய்பவருக்கு மொக்கையான பெயர்தான் இருக்கும். அதுமாதிரி எந்த சுவாரஸ்யமுமில்லாத வேலையைச் செய்து கொண்டிருப்பவர் ஒருவரின் பெயரைச் சூட்டலாம் என்கிற முடிவுக்கு வந்தார். அக்காலத்தில் அமெரிக்காவில் பறவையியல்

ஆராய்ச்சியாளர் ஒருவர் இருந்தார். நாள் கணக்கில் ஆடாமல், அசையாமல் ஒரே இடத்தில் அமர்ந்து செய்யும் அந்த வேலைதான் இருப்பதிலேயே மொக்கையான வேலை என்று முடிவு கட்டிய ஃப்ளெமிங், அவரது பெயரையே தன்னுடைய ஹீரோவுக்கு நாமகரணம் செய்தார். இந்தப் பெயரைக் கேட்டாலே, கேட்பவருக்கு மந்தமான ஃபீலிங் உருவாகும் என்று நம்பவும் செய்தார். அந்தப் பெயர்தான் ஜேம்ஸ்பாண்ட்.

‘எம்.ஐ-6’ என்கிற ரகசிய பிரிட்டிஷ் உளவு ஸ்தாபனத்தை தன் புனைவில் சிருஷ்டித்தார். 007 என்பது அதன் உளவாளியான ஜேம்ஸ்பாண்டின் ரகசியக் குறியீட்டு எண். தான் விரும்பி உண்ணும் உணவு, லிமிட்டாக சிப்பும் ‘சரக்கு’, ஸ்டைலாக ஊதும் சிகரெட்டு, நாகரிகமாக அணியும் உடை அனைத்தையுமே ஜேம்ஸுக்கு சொந்தமாக்கினார். ஆனால், ஃப்ளெமிங் திட்டமிட்டது மாதிரியாக இல்லாமல் ஜேம்ஸ்பாண்ட் சுவாரஸ்யமாக உருவானான். ஃப்ளெமிங்தான் ஜேம்ஸ். ஜேம்ஸ்தான் ஃப்ளெமிங்.

1953ல் ஜேம்ஸ்பாண்ட் நாவல் நாயகனாகப் பிறந்து, சரியாக பதினோரு ஆண்டுகள் கழித்து 1964ல் ஜேம்ஸை உருவாக்கிய ஃப்ளெமிங் மறைந்தார். அவர் உயிரோடு இருக்கும்போதே அவர் உருவாக்கிய ஹீரோவை வெள்ளித்திரையில் கிடைக்கும் பாக்கியம் அவருக்கு கிடைத்தது. 1962ல் ‘டாக்டர் நோ’ படம் மூலமாக, நாவலில் சாகஸங்கள் செய்துகொண்டிருந்த ஜேம்ஸ், சினிமாவுக்கும் தாவினார்.

ஃப்ளெமிங்கின் காலத்துக்குப் பிறகு ஜான் காட்னர், ரேமண்ட் பென்ஸன், கிங்ஸ்லி அமிஸ், செபஸ்டியன் ஃபாக், ஜெஃப்ரி டேவர் என்று ஏராளமான எழுத்தாளர்கள் ஜேம்ஸ்பாண்ட் நாவல்களையும், சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார்கள். காமிக்ஸ், டிவி சீரியல், வீடியோ கேம்ஸ், சினிமா, மொபைல் அப்ளிகேஷன்கள் என்று ஜேம்ஸ் இடம்பெறாத வடிவமே கிடையாது.

ஹாலிவுட்டில் மட்டுமல்ல, உலகம் முழுக்க இருக்கும் எல்லா வுட்டு மாஸ் ஹீரோக்களும் ஜேம்ஸ்பாண்ட் தாக்கத்தில் இருந்து தப்பவே முடியாது. சினிமாக்களில் மட்டுமல்ல, நம்மூர் சுஜாதா, ராஜேஷ்குமார், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் போன்ற எழுத்தாளர்களின் கதைகளில் வரும் துப்பறியும் ஹீரோக்களும் ஜேம்ஸ்பாண்டின் பரம்பரைதானே? அந்தக்கால ஜெய்சங்கர் படங்கள்தான் ஜேம்ஸ்பாண்டின் நேரடி உல்டா என்று நினைக்காதீர்கள். லேட்டஸ்ட் ‘வேதாளம்’, ‘தூங்காவனம்’ வரைக்கும்கூட ஜேம்ஸின் பாதிப்பு ஹீரோவுக்கு இல்லாமலா இருக்கிறது? லேடி ஜேம்ஸ்பாண்டு கூட உண்டு தெரியுமா? விஜயசாந்தி வேறு யார்?

ஜேம்ஸ்பாண்ட் படங்களை 1962ல் தொடங்கி இன்றுவரை தொடர்ச்சியாக தயாரித்து வரும் நிறுவனம் EON productions. இதுவரை இந்நிறுவனம் மொத்தம் 24 ஜேம்ஸ்பாண்ட் படங்களைத் தயாரித்திருக்கிறது. இது தவிர்த்து வேறு நிறுவனத்தால் இரண்டு படங்களும் தயாரிக்கப்பட்டிருக்கின்றன.

எனினும் EON தயாரிக்கும் படங்களைத்தான் ஜேம்ஸ் வரிசை படங்களாக ரசிகர்கள் கருதுகிறார்கள். சீன் கானரி, டேவிட் நிவென், ஜார்ஜ் லேசன்பை, டிமோதி டால்டன், பியர்ஸ் பிராஸ்னன், டேனியல் கிரேக் ஆகியோர் இதுவரை ஜேம்ஸ்பாண்ட்களாக நடித்திருக்கிறார்கள். ஜேம்ஸ்பாண்டாக நடிப்பது என்பது ஒரு ஹீரோவுக்கு உலக சினிமா அரங்கில் கிடைக்கக்கூடிய மிகப்பெரிய கவுரவம்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘Spectre’தான் கடைசியாக வெளியான ஜேம்ஸ் வரிசை படம். அடுத்து வெளியாக இருப்பது 25வது படம் என்பதால், மிகவும் கவனமாக பெரும் பொருட்செலவில் தயாரிக்க EON நிறுவனம் முடிவெடுத்திருக்கிறது.

எனவேதான் இன்றுவரை அந்தப் படம் குறித்த எந்த தகவலும் இல்லை. பொதுவாகவே ஒரு ஜேம்ஸ் படம் ரிலீஸ் ஆகும்போது, அடுத்த படத்தின் டைட்டிலும் ரசிகர்களுக்கு தெரிவிக்கப்பட்டு விடும். வழக்கத்துக்கு மாறாக 25வது படம் குறித்து எந்தவொரு ஐடியாவும் யாருக்குமில்லை.

‘Slumdog Millionaire’ படத்தை இயக்கிய டேனி பாய்ல்தான் ‘ஜேம்ஸ்-25’ படத்தை இயக்கப் போகிறார் என்று கடந்த இருவாரங்களாக ஹாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. 2012ல் லண்டனில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்தபோது தற்போதைய ஜேம்ஸ்பாண்டாக நடிக்கும் ஹீரோ டேனியல் கிரேக்கை ஒரு குறும்படத்துக்காக இயக்கியபோதே, இருவருக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க்கவுட் ஆகிவிட்டதாக பேச்சு. ஆனால், தயாரிப்பாளர்கள் தரப்பில் இதுவரை எதுவும் சொல்லப்படவில்லை.

2019 நவம்பர் மாதம் ‘ஜேம்ஸ்-25’ நிச்சயம் வெளியாகும் என்கிறார்கள். ஆசிய நாடுகளில் தீபாவளி ரிலீஸ் படங்களுக்கு பெரிய வரவேற்பு இருக்கும். அதை மனதில் வைத்தே தயாரிப்பாளர்கள் இந்த தேதியை முடிவெடுத்திருக்கிறார்கள். இன்னும் ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே இருக்கும் நிலையில் அப்படம் குறித்து வாய் திறக்க மறுக்கிறது தயாரிப்பு தரப்பு. உலகமெங்கும் இருக்கும் ஜேம்ஸ் ரசிகர்கள், அடுத்த படத்தின் டைட்டில் சொல்லப்படுவதையே திருவிழா மாதிரி கோலாகலமாகக் கொண்டாடக் காத்திருக்கிறார்கள்.

யுவகிருஷ்ணா