அறம் இயக்குநர் கோபி நயினார்



டைட்டில்ஸ் டாக் 59

ஒரு சிலராவது இன்றும் அறத்தோடு இருப்பதால்தான், இன்று நீங்கள் அறிந்தவனாக இந்த கோபி நயினார் இருக்கிறான். என்னுடைய இந்த இடத்தை எட்ட, நான் மட்டுமல்ல, அறமுள்ள அந்த நண்பர்களும் சேர்ந்து போராடியிருக்கிறார்கள்.

நம் சமூகக் கட்டமைப்பில் ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொரு நிறுவனம். குடும்பத்தாரின் அடிப்படைத் தேவைகள், எதிர்காலத்துக்கு உருவாக்க வேண்டிய கட்டமைப்பு போன்றவற்றுக்கு குடும்பத் தலைவன் பொறுப்பேற்க வேண்டும். அதன் பொருட்டு மிகக் கடுமையாக உழைக்க வேண்டும்.

நம் குடும்ப மரபு காரணமாக தலைவன் ஆகிவிடக்கூடியவனுக்கு தனிப்பட்ட லட்சியங்கள் இருக்கும் பட்சத்தில், குடும்பக் கடமைகள் பின்னுக்கு தள்ளப்பட்டு அவனுடைய பொறுப்பு கேள்விக்குரியதாகி விடும். குறிப்பாக, என்னைப் போன்ற படைப்பாளிகள், குடும்பத் தலைவனாக சிறந்து விளங்குவது மிகவும் சிரமம்.

லட்சியத்தை குறிக்கோளாக வைத்து அவன் வாழும்போது, ஒரு குடும்பத் தலைவனுக்கு சமூகம் விதித்திருக்கும் வரையறைகளை உடைக்க வேண்டியிருக்கிறது. புரிகிற மாதிரி சொன்னால், லட்சியவாதிக்கு வருமானம் குறைவு. அவன் வருமானத்துக்காக உழைக்க மாட்டான். எனவே, குடும்பத்தின் பொருளியல் தேவைகளை அவனால் நிறைவு செய்ய இயலாது.

இது எனக்கு மட்டுமல்ல, லட்சிய நோக்குள்ள எந்த படைப்பாளிக்கும் எழக்கூடிய லௌகீகப் பிரச்சினை.ஆசான் மார்க்ஸ் அவர்களேகூட ‘பொதுவுடமை’ எழுத ஏங்கல்ஸ் என்கிற நண்பர்தான் பொருளியல்ரீதியாக உதவுகிறார்.

ஏங்கல்ஸின் உதவி இல்லையென்றால் தன்னுடைய குடும்பத் தேவைகளுக்காக தன்னுடய லட்சியப் பாதையை விட்டு விலகியிருக்க வேண்டிய நிர்ப்பந்தம்கூட அவருக்கு ஏற்பட்டிருக்கலாம். ஏங்கல்ஸ் என்கிற நண்பரின் அறவுணர்வுதான், மனிதகுலத்துக்கான மகத்தான சிந்தனைக் களஞ்சியம் நமக்கு கிடைக்க காரணமாக இருந்திருக்கிறது.

நான் இன்று ஓர் இயக்குநராக ஜெயித்திருப்பதற்கும் அதுபோன்ற நண்பர்கள்தான் காரணம். எனக்கு பொருளியல் பிரச்சினைகள் ஏற்பட்ட போதெல்லாம் அவர்கள்தான் உதவினார்கள். இரண்டாயிரம் கேட்டால் நான்காயிரம் கொடுப்பார்கள்.

இன்று ஓர் இயக்குநராக நான் ஜெயிக்கவில்லை, அவர்கள்தான் ஜெயிக்க வைத்தார்கள். இந்த வெற்றி, அவர்களுடையது. நான் கருவிதான். நந்தா, முனிவேல், ‘அறம்’ படத்தில் நடித்த தமிழ் போன்ற எண்ணற்ற நண்பர்கள்.

பேச்சுவாக்கில், “அடுத்த வாரம் வாடகை கொடுக்கணும்” என்று சொல்லியிருப்பேன். எனக்குத் தெரியாமலே வீட்டுக்காரரிடம் எனக்காக வாடகை செலுத்திவிட்டுப் போயிருப்பார்கள். நான் ஜெயிக்கிறவரை இதுபோல கொடுத்துக் கொண்டே இருந்த வள்ளல்கள் என்னுடைய நண்பர்கள். “எனக்காக நீங்க எதுக்கு கஷ்டப்படணும்?” என்று சிலமுறை வேதனையாக கேட்டிருக்கிறேன். ஆறுதலாக தோளைத் தொட்டு, “அதுதான் நம்ம நட்புக்கான ‘அறம்’ நண்பா!” என்பார்கள்.

உதவி இயக்குநராக நான் எவரிடமும் வேலை செய்ததில்லை. உதவி இயக்குநர்களாக இருப்பவர்கள் அன்றாட உணவுக்கே கஷ்டப்படக் கூடியவர்களாகத்தான் பெரும்பாலும் இருக்கிறார்கள். உதவி இயக்குநர்களுக்கே அப்படியென்றால், யாரிடமும் வேலை செய்யாமல் நேரடியாக சினிமா இயக்குநராக இருபது வருடங்களாக போராடிக் கொண்டிருந்த என்னுடைய வாழ்க்கை நிலை எப்படி இருந்திருக்கும்?

ஆனால் -எனக்கு அம்மாதிரி எந்த கஷ்டமும் ஏற்படாமல் நண்பர்கள் பார்த்துக் கொண்டார்கள்.எனினும், நான் பட்ட சிரமங்கள் வேறு மாதிரி.நான் உழைத்து சிந்தித்து உருவாக்கிய கதை, கண்ணுக்கு நேரே திருடப்படுகிறது.

எளியவனின் குரல் யார் காதையும் எட்டாதே என்று நான் நொந்து போயிருந்த நேரம் அது. அப்போது மீடியா நண்பர்கள், சமூகவலைத்தளங்களில் உலவுபவர்கள், முகம் தெரியாதவர்கள் என்று அனைவரும் பொதுவான ‘அறம்’ அடிப்படையில் என் பக்கமாக நின்றார்கள். என் பக்கமாக என்று சொல்ல வேண்டியதில்லை. நியாயத்தின் பக்கமாக நின்றார்கள்.

குறிப்பாக அச்சமயத்தில் இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார் என்னோடு தோள்நின்றார். நான் சோர்ந்துவிடாமல், என் பாதையில் விரைவதற்கான ஊக்கத்தைத் தந்தார். அநீதியை எதிர்ப்பதே ‘அறம்’. அவ்வாறு எதிர்த்ததன் வாயிலாக கோபிநயினார் என்கிற படைப்பாளியை நீங்கள் அனைவரும்தான் உருவாக்கினீர்கள் நண்பர்களே!

எல்லாவற்றுக்கும் மேலாக என் மனைவியின் ‘அறம்’ பற்றியும் பேசவேண்டும். ரேஷன் கார்டில்தான் நான் குடும்பத் தலைவன். எங்கள் வீட்டில் தலைவிதான் குடும்பத்தை பார்த்துக் கொள்கிறார். அவர் பெயர் அலமேலு. எங்களுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள். மூன்று குழந்தைகளை வைத்துக் கொண்டு எவ்வித வருமானமும் இல்லாமல் இத்தனை ஆண்டுகள் சமாளித்து, இந்த நிலைக்கு வந்திருக்கிறேன் என்றால் அதற்கு அலமேலு எவ்வளவு பாடுபட்டிருப்பார்?

அடிப்படையில் நான் வசதியான குடும்பத்தில் பிறந்தவன். ‘அறம்’ செலுத்திய வழியில் அரசியல் பேசினேன். ஒரு படைப்பாளியாக கலையுலகில் வெற்றி பெற விரும்பினேன். நான் சொத்தை அழித்துவிடுவேன் என்று சொந்தங்கள் என்னைத் துரத்தினார்கள். அதனால் வறுமைக்குத் தள்ளப்பட்டேன்.

என்னுடைய லட்சியத்தைப் புரிந்துகொண்ட அலமேலு, சராசரிப் பெண்ணாகத் திகழாமல் ஆசான் மார்க்ஸின் மனைவி ஜென்னியைப் போன்று என் மீது குடும்ப சுமை அழுத்தாமல் பார்த்துக் கொண்டார். என்னால் எது முடியுமோ அதைத்தான் குடும்பத்துக்கு செய்தேன்.

ஒரு தினமும் அலமேலு என்னை குறை சொன்னதில்லை. அவருடைய தேவைகளைக் குறைத்துக்கொண்டு, சூழ்நிலைகளை அனுசரித்து குடும்பத்தைப் பார்த்துக் கொண்டார். குழந்தைகளிடமும் எங்கள் நிலையை எடுத்துச் சொல்லி, புரிய வைத்தார்.

ஒரு கட்டத்தில் நான் இயக்குநராகவே ஆகமாட்டேனோ என்று இடிந்துபோயிருந்தேன். அப்போது அலமேலுதான் ஆறுதல் கொடுத்து என்னை குறும்படம் இயக்க வைத்தார். “நீங்க ஒரு டைரக்டர்னு எனக்குத் தெரியும். உலகத்துக்கு தெரியப்படுத்துங்க” என்று சொன்னார்.
குறும்படத்துக்கான முயற்சிகள் எடுத்த சமயத்தில்தான் படம் எடுக்க வாய்ப்பு கிடைத்தது.

‘அறம்’தான் என்னை வாழவைத்துக் கொண்டிருக்கிறது என்பதால் ‘அறம்’ என்று டைட்டில் வைத்து படமெடுத்தேன். நயன்தாரா மேடம் என்னுடைய பின்னணியைக் கேள்விப்பட்டு உதவினார். ஒரு ஹீரோயினாக எனக்கு அறிமுகமாகி, இன்று உடன்பிறவா சகோதரியாக பழகுகிறார். போலவே தயாரிப்பாளர் ராஜேஷ் சார்.

அறவுணர்வுள்ள நல்ல மனங்களுக்கு இடையே நிம்மதியாக வாழ்ந்துகொண்டிருக்கிறேன். நேற்று நானிருந்த நிலையில் இன்று இருப்பவர்களை நாளை கைதூக்கிவிட வேண்டும் என்பதே எனக்காக விதிக்கப்பட்டிருக்கும் ‘அறம்’. நிச்சயம் செய்வேன்.

தொகுப்பு: சுரேஷ்ராஜா

(தொடரும்)