நான் விஜய் ரசிகன்!: நாசர் மகன் சொல்கிறார்



நாசருக்கு மூன்று மகன்கள். மூத்தமகன், விஜய்யின் தீவிர ரசிகர். இவருடைய பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்து இன்ப அதிர்ச்சி கொடுப்பது விஜய்யின் வாடிக்கை.இரண்டாவது மகன் ‘சைவம்’ படத்தில் நடிகராக என்ட்ரி கொடுத்தார். அதன்பிறகு நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் வந்தாலும், டைரக்‌ஷனில் ஆர்வம் காட்டி வருகிறார்.மூன்றாவது மகன் அபிஹசன் கமல் தயாரிப்பில் வெளியான ‘கடாரம் கொண்டான்’ படத்தில் விக்ரம், அக்‌ஷராஹாசனுடன் நடித்தார். ‘‘நாசர் மகன் என்பதற்காக ‘கடாரம் கொண்டான்’ பட வாய்ப்பு கிடைக்கவில்லை’’ என்கிறார் அபிஹசன்.

“அப்படியா?”

“ஆமாம்.. வாய்ப்பு கிடைத்த விஷயமே அப்பாவுக்குத் தெரியாது. அவர் பெயரை எங்கேயும் யூஸ் பண்ணி வாய்ப்பு கேட்டதில்லை. ராஜ்கமல் பிலிம்ஸில் நடந்த ஆடிஷனில் எல்லோரையும்போல்தான் நானும் கலந்துக்கிட்டேன். என்னை கன்ஃபார்ம் பண்ணுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. ஏன்னா, என் கேரக்டருக்கு என் முன்னேதான் ஆடிஷன் நடந்தது. நீண்ட காத்திருப்புக்குப் பிறகே கன்ஃபார்ம் பண்ணினார்கள். செலக்டானபிறகு அப்பாவிடம்  தெரிவித்தபோது, ‘எனக்கு இப்படியொரு வாய்ப்பு கிடைக்கவில்லை. கரெக்ட்டா பயன்படுத்து.  கத்துக்க முயற்சி செய்’ என்றார்.”

“குடும்பப் பின்னணி காரணமாகத்தானே உங்களுக்கு சினிமா ஆர்வம்?”

“எனக்கு படிப்பு அவ்வளவாக வராது. சின்ன வயதில் அப்பாவுடன் படப்பிடிப்புக்கு போகும்போதுதான் சினிமா ஆர்வம் வந்தது. அதன் பிறகு ஒரு தனியார் கல்லூரியில் சேர்ந்தேன். அப்போது நான் ஸ்கூல் முடித்த நேரம். அப்பா அங்கு நடிப்புத் துறைக்கு தலைவராக இருந்து நடிப்பு சொல்லிக் கொடுத்தார். அப்போது நடிக்க சில வாய்ப்பு வந்தது. ஆனால் எதுவும் க்ளிக் ஆகவில்லை. சினிமாவில் எதாவது ஒரு துறையில் அங்கம் வகிக்கலாம் என்ற முடிவோடு டைரக்‌ஷன் பக்கம் கவனம் செலுத்தினேன்.

இயக்குநர் அட்லீ சாரிடம் இரண்டு படங்கள் வேலை செய்தேன். ஆனால் கற்றல் வேறு, நடைமுறை சினிமா வேறு. ஒரு நடிகருக்கு பல விஷயங்கள் தெரிந்திருந்தாலும் இயக்குநருக்கு தேவையானதை தரணும். நடிப்பு பயின்றதன் மூலமாக இயக்குநரின் 100 சதவீத எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யலாம். நடிப்பு பயிலவில்லை என்றால் இயக்குநர் எதிர்பார்க்கும் விஷயத்தில்  பாதி அவுட்புட்தான் கொடுக்க முடியும். டாக்டருக்கு எப்படி பயிற்சி அவசியமோ அதுபோல் நடிப்புக்கும் பயிற்சி மிக அவசியம்.”

“மறக்க முடியாத பாராட்டு?”


“படம் பார்த்த நிறையப் பேர் படத்தில் என்னிடம் தனித்துவமான நடிப்பை பார்க்க முடிந்தது என்றார்கள். சிலர் முதல் படம் மாதிரி தெரியவில்லை என்றார்கள். படப்பிடிப்பிலும் டேக் ஓக்கே ஆனதும் யூனிட்ல உள்ளவங்க பாராட்டியிருக்கிறார்கள். இந்த பாராட்டு தொடர்ந்து பெட்டராக பண்ணணும் என்ற உந்துதலைக் கொடுத்துள்ளது.  ஏன்னா,  படம் பார்த்த அனைவரும் விக்ரம் சாரைத்தான் திரையில் தேடுவார்கள். அவருடைய ரசிகர்களும் அவருக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஆனால் படம் முடிந்து வெளியே வந்தபோது என்னையும் பாராட்டினார்கள். நிறையப் பேர் அப்பா பெயரைக் காப்பாற்றி இருப்பதாகச் சொன்னார்கள்.”

“அப்பா என்ன சொன்னார்?”

“படம் பார்த்துவிட்டு அப்பாவுக்கு வார்த்தை வரவில்லை. தேம்பித் தேம்பி அழுதார். கட்டிப்பிடித்து பாராட்டினார். அப்பாவை நான் அப்படி பார்த்ததில்லை. ஏன்னா, அவர் படத்துல அழுவதைத்தான் பார்த்துள்ளேன். அப்பாவின் அழுகை கரெக்ட்டா பண்ணியிருக்கோம் என்ற சிக்னலைக் கொடுத்தது. அண்ணன் சில படங்கள் பண்ணியிருக்கிறார். அப்பாவின் பெயரைக் காப்பாற்ற வேண்டும் என்ற ப்ரெஷர் எனக்கும் இருந்தது.”

“விக்ரம்?”


“ஆரம்பத்தில் அவருடன் சேர்ந்து நடிக்கப் போகிறோம் என்று எண்ணியபோது பயமாக இருந்தது. அவர் வெர்சடைல் ஆக்டர் என்று பெயர் வாங்கியவர். கடினமான காட்சியையும் சிங்கிள் டேக்கில் ஓக்கே பண்ணக்கூடியவர். எனக்குத் தெரிந்து அவர் மாதிரி ஒரு ஆர்ட்டிஸ்ட்டை பார்த்தது இல்லை. ஏராளமான படங்கள் பண்ணியிருந்தாலும் முதல் படம்போல் அவருடைய இன்வால்வ்மென்ட் இருக்கும். சில சமயம் ‘இவ்வளவு கடின உழைப்பு தேவையா என்று கேட்டிருக்கிறேன்.

அதற்கு அவருடைய பதில்... ‘ஆசையோடுதானே நடிக்க வந்தேன். அதில் கஷ்டத்தைப் பார்க்கக்கூடாது’ என்பார்.அவருக்கு குழந்தை மனசு. எங்கள் இருவருக்குமான உரையாடல் இருக்கும்போது செட்டுக்கு முன்கூட்டியே வந்துவிடுவார். ‘நாம் இப்படி பண்ணலாமா? நான் இந்த இடத்துல இப்படி பேசறேன், நீங்க அதுக்கு இப்படி கவுண்டர் கொடுங்க’ என்று சொல்வார். அவர் காட்சி முடிந்தபிறகும் செட்லதான் இருப்பார். கேரவன் பக்கம் போகவேமாட்டார். அவர் செட்ல இருந்தால் எனர்ஜி வேற லெவலில் இருக்கும்.  படப்பிடிப்பில் அவர் மகன் மாதிரி பார்த்துக்கொண்டார்.படம் முடிந்த பிறகும் அவருடனான நட்பு தொடர்கிறது.

வேறு நடிகர்களிடம் இத்தகைய நட்பையும் அன்பையும் எதிர்பார்க்க முடியுமா என்று தெரியாது. சமீபத்தில் பேசும்போது நான் வெளியூர் போவதாக கேஷுவலாக தெரிவித்தேன். உடனே அந்த ஊரில் நான் என்ன சாப்பிடணும், எந்த உணவு சாப்பிடக்கூடாது என்று ஒரு பட்டியலைக் கொடுத்துவிட்டார். அவருடைய உயரத்துக்கு இப்படியெல்லாம் பண்ணணும்னு அவசியம் இல்லை.ஏன் பிறரிடம் இவ்வளவு கேர் எடுக்கிறீர்கள் என்றால்,  ‘பல கஷ்டங்களை கடந்துதான் இந்த இடத்துக்கு வந்திருக்கிறேன். ஆரம்பக் காலங்களில் என்னிடம் ஒரு சட்டைதான் இருக்கும். மாற்று உடை இருக்காது’ என்பது உட்பட பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். விக்ரம் சாருக்கு புகழ்ச்சி பிடிக்காது. இருந்தாலும் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். அவருடன் நடித்தது என் பாக்கியம்.”

“அக்‌ஷராஹாசன் உங்களுக்கு குழந்தைப் பருவத்திலிருந்தே நண்பர்தானே?”

“ஆமாம். கமல் சார் குடும்பம் எங்கள் குடும்பத்துக்கு நெருங்கிய பழக்கம் என்பதால் அக்‌ஷரா
வுடன் சின்ன வயதிலிருந்து பழகியுள்ளேன். சமீபமாகத்தான் அவரோடு அவ்வளவாக தொடர்பு இல்லை. ‘கடாரம் கொண்டான்’ படத்தில் அவர்தான் நாயகி என்பது லேட்டாகத்தான் தெரியும். அவர் எப்போதும் பெரிய ஷர்ட் அணிந்தவராக ஒரு பாய் லுக்லதான் இருப்பார். முதல் முறையாக ஒர்க்‌ஷாப்புக்கு அவர் நம்மூர் பெண்கள்போல் உடை யணிந்து வந்தபோது ஷாக்காக இருந்தது. அவங்களால் இப்படி இருக்க முடியுமா  என்று ஆச்சர்யப்படாமல் இருக்க முடியவில்லை. அக்‌ஷரா நடிப்பில் என்னைவிட சீனியர். இருந்தாலும் ஈகோ பார்க்காமல் டயலாக் போர்ஷனை டிஸ்கஸ் பண்ணுவார்.

படத்துலே தம்பதியரின் எமோஷன் முக்கியமாக இருந்தது. தம்பதியரின் எமோஷன் ஒர்க் அவுட்டானால்தான் கதையின் மீது நம்பகத்தன்மை ஏற்படும். அந்த நிஜத்தன்மையைக் கொண்டுவரவும், படப்பிடிப்பில் கூச்சமில்லாமல் நடிக்கவும் ஒர்க் ஷாப் உதவியாக இருந்தது. மற்றபடி பெரிய நடிகரின் மகள் என்ற அலட்டல் இருக்காது. படப்பிடிப்பில் ஒரு நடிகையாக மட்டும்தான் தன்னை வெளிப்படுத்தினார். கமல் சார் தயாரிப்பாளராக இருந்தாலும் டைரக்‌ஷன் சைட்ல தலையிடமாட்டார். அதே மாதிரிதான் அக்‌ஷரா.”

“முதல் படத்தில் சோலோவாக வரமுடியாமல் டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டில் நடிக்கிறோமே என்ற ஃபீல் இருந்ததா?”


“எனக்குத் தெரிந்து இப்படியொரு பெரிய அறிமுகம் நான் தனி ஹீரோவாக பண்ணியிருந்தால் கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே. அது பெரிய பேனராக இருந்தாலும் சரி, பெரிய பட்ஜெட்டாக இருந்தாலும் சரி, மக்களைப் பொறுத்தவரை நான் ஒரு புதுமுகமாகத்தான் தெரிந்திருப்பேன். இல்லையென்றால் நாசர் மகன் என்ற அடையாளம் கிடைத்திருக்கும். ஆனால் ரீச் குறைவாக இருந்திருக்கும். ‘கடாரம் கொண்டான்’ படத்தில் விக்ரம் சார் இருந்ததால் பெரிய ரீச் கிடைத்தது. அதுமட்டுமில்ல, அக்‌ஷரா, இயக்குநர் ராஜேஷ், ராஜ்கமல் பிலிம்ஸ் என்று பெரிய டீம் அமைந்திருக்காது.”

“இனிமே டைரக்‌ஷன் பண்ணப் போறீங்களா... நடிக்கப் போறீங்களா?”

“நடிக்கப் போறேன். இப்போ சினிமாவுல நிறைய மாற்றங்கள். நடிக்கிறவங்க டைரக்‌ஷன் பண்றாங்க. மியூசிக் பண்றவங்க நடிக்கிறாங்க. அந்தவகையில் என்னுடைய முழு கவனமும் நடிப்பில்தான். தற்போது நிறைய வாய்ப்புகள் வந்துள்ளன.  ”

“மறைக்காமல் உண்மையை சொல்லணும். நீங்க யாருக்கு ரசிகர்?”

“அப்பா சிறந்த நடிகர் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். அண்ணனைப் போல் நானும் விஜய் ரசிகன்.  ‘கடாரம் கொண்டான்’ படத்தில் நான் நடித்துள்ளதைப்பற்றி விஜய் அண்ணாவிடம் தெரிவித்தார். அவர் ‘பிகில்’ படத்தில் பிஸியாக இருப்பதால் பார்க்க முடியாத சூழ்நிலை இருந்தது.”

“உதவி இயக்குநர் வேலை பார்த்துள்ளீர்கள். அந்த அனுபவம் நடிப்புக்கு உதவியாக இருந்ததா?”

“கண்டிப்பாக. நடிகராக இருக்கும்போது ஒரு ஷாட் தாமதமானால் அதன் காரணங்கள் தெரியாது. ஆனால் ஒரு உதவி இயக்குநராக நடிக்கும்போது ஷாட் ஏன் தாமதமாகிறது என்பதற்கு விடை தெரியும். இது உதவி இயக்குநராக இருக்கும்போது கற்ற விஷயங்கள். குறிப்பாக கடைசி உதவி இயக்குநராக வேலை செய்யும்போது சினிமா நுட்பங்களை நிறைய கற்றுக்கொள்ளமுடியும். ‘கடாரம் கொண்டான்’ படத்துல கன்டினியூட்டி மிஸ்ஸாகி இருந்தால் என்னிடம் அதை சொல்லச் சொல்லியிருக்கிறார்கள். என்னுடைய தனிப்பட்ட கருத்தாக சொல்வதாக இருந்தால், ஒரு படத்தில் உதவி இயக்குநராக வேலை பார்க்கும்போது அவர்களால் சினிமாவை தொலைநோக்குப் பார்வையுடன் பார்க்கமுடியும்.”

“அப்பா படங்களில் உங்களுக்குப் பிடித்த படம்?”

“அப்பாவின் அனைத்துப் படங்களும் பார்த்துள்ளேன். அப்பாவின் நடிப்புக்கு பொதுவாக ‘தேவர் மகன்’ படத்தை சொல்வார்கள். எனக்கு ‘டேவிட்’ என்ற படம் பிடித்திருந்தது.”

“எந்த மாதிரி படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறீர்கள்?”


“கதைக்கு முக்கியத்துவம் இருக்கிற படங்கள் செய்யணும். அவ்வளவுதான்.”

- சுரேஷ்ராஜா