காசுக்குத்தான் நடிக்கி றேன்.. ஆனா, கவர்ச்சியா நடிக்க மாட்டேன்!



‘‘எனக்கு வந்த வாய்ப்பு எல்லாமே என்னுடைய  அழகைப் பார்த்து அல்ல... என் கண்ணைப் பார்த்து வந்த வாய்ப்புகள். அந்தவகையில் நான் சினிமாவுக்கு வருவதற்கு காரணமாக இருந்த கான்டாக்ட் லென்ஸுக்குத்தான் நன்றி சொல்லணும்’’ என்கிறார் ராதிகா ப்ரீத்தி. இவர் சாண்டல்வுட்டிலிருந்து இம்போர்ட்டான லேட்டஸ்ட் வரவு. சமீபத்தில் வெளியான ‘எம்பிரான்’ படத்தில் நாயகியாக நடித்தவர். அவரிடம் பேசினோம்.

“நல்லா தமிழ் பேசுறீங்களே?”

‘‘சொந்த ஊர் பெங்களூர். அப்பா கன்னடம். அம்மா தமிழ். இரண்டும் சேர்ந்த கலவை என்பதால் எனக்கு தமிழும் நல்லாத் தெரியும். என்னுடைய முதல் படமான ‘எம்பிரான்’ படத்தில் சொந்தக் குரலில்தான் பேசினேன்.”

“நீங்க ஸ்போர்ட்ஸ் பேக்கிரவுண்டாமே?”

“ஆமாம் சார். அடிப்படையில் நான் த்ரோபால் ப்ளேயர். த்ரோபால் விளையாட்டுக்கு என்று ஏராளமான ரூல்ஸ் இருக்கு. குறைந்தது ஏழு பேர் விளையாடலாம். தோளுக்கு மேல்தான்  பந்து வீசணும். பந்து வீசும்போது சத்தம் வரக்கூடாது. ஹேண்ட் பால், வாலிபால் இரண்டையும் மிக்ஸ் பண்ணிய விளையாட்டுதான் த்ரோபால்.இந்தியஅளவில் ஏராளமான போட்டிகளில் விளையாடி பரிசு வென்றுள்ளேன். ஒருமுறை விளையாடும்போது தற்செயலாக நண்பர் ஒருவர் ஃபோட்டோ எடுத்தார். அந்த ஃபோட்டோ எப்படியோ சினிமாக்காரர்களிடம் கிடைத்துள்ளது. அப்படித்தான் நான் நடிகையானேன். கன்னடத்தில் மூன்று படங்களில் நடித்துள்ளேன்.”

“சின்ன வயசுலேயே சினிமா ஆசை வந்துடிச்சா?”

“சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது சின்ன வயது ஆசை என்று சொல்லமாட்டேன். ஏன்னா அப்போது எனக்கு சினிமா ஆசை இருந்ததில்லை. பத்தாம் வகுப்பு படிக்கும்போது,  ‘பிற்காலத்தில் என்னவாகப் போகிறீர்கள்?’  என்று கேட்டார்கள். ‘ஹீரோயின்’என்று சொல்லிவைத்தேன். ஆனால் நான் நடிகையாவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை.”

“சினிமாவில் நடிக்க குடும்பத்தில் எதிர்ப்பு கிளம்பியிருக்குமே?”

“கிளம்பியிருக்கா விட்டால்தான் ஆச்சரியம். படிப்பு முடிந்ததும் நடிக்க முடிவு செய்தேன். அப்பா கண்டிப்பாக ‘நோ’ சொன்னார். அப்பா ஆர்மிக்காரர் என்பதால் அப்பாவிடம் எனக்கு கொஞ்சம் பயம் உண்டு. ஆனால் நான் நடிக்கும் முடிவில் உறுதியாக இருந்தேன். எமோஷனலாக ப்ளாக்மெயில் பண்ணிப்பார்த்தார்கள். நான் என்னுடைய முடிவில் ஸ்ட்ராங்காக இருந்தேன். பல நாள் சாப்பிடாமல் என்னுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினேன். அம்மாவும், அண்ணனும் எனக்காக சப்போர்ட் பண்ணினார்கள். பெரிய போராட்டத்துக்குப் பிறகுதான் என்னால் நடிக்க முடிந்தது.”

“சினிமா இண்டஸ்ட்ரி பற்றி இன்னும்கூட பொதுக்கருத்து கொஞ்சம் மோசமாதான் இருக்கு இல்லையா?”

“முன்பு ரொம்ப மோசமா இருந்திருக்கும். இப்போ பரவாயில்லைன்னுதான் நினைக்கிறேன். சமீபத்திய படங்களில் நாயகிக்கான முக்கியத்துவம் என்பது மிகவும் குறைவு. ஆனால் எனக்கு முதல் படத்திலேயே நடிப்புக்கு ஸ்கோப் உள்ள கேரக்டர் கிடைத்தது. அந்தவகையில் நான் ரொம்ப லக்கி.சினிமா நடிகை என்பதால் மீ டூ பற்றி கேட்கிறார்கள். ஒரு கம்பெனியில் உங்களிடம் தவறாகப் பேசினால் அல்லது தவறாக நடத்தினால் அங்கிருந்து வெளியேறுங்கள் என்பதுதான் என்னுடைய கருத்து.

ஆரம்பத்தில் தலை அசைத்துவிட்டு அதன்பிறகு பழிசுமத்துவது ஏற்புடையதல்ல. வருமானத்துக்கு என்று நிறைய பிசினஸ் இருக்கு. அதைச் செய்யலாம். என்னைப் பொறுத்தவரை சினிமா இண்டஸ்ட்ரி மோசம் கிடையாது. சினிமா என்றில்லை... எங்கும் சம்மதம் இருந்தால்தான் எதுவும் நடக்கும். யாரும் பலவந்தப்படுத்தப்போவதில்லை. நான் சினிமாவுக்கு வந்தபோது தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்று எனக்கு அட்வைஸ் பண்ணாதவர்களே இல்லை. ஆனால் நான் எதையும் காதில் போட்டுக்கொள்ளவில்லை.”

“நீங்க நடிப்பது பணத்துக்காகவா, புகழுக்காகவா?”

“எனக்கு சினிமாவில் சாதிக்கணும் என்ற வெறி இருந்தது. ஆனா, நான் நடிக்க வந்ததன் காரணம் சம்பாதிக்க மட்டுமே. என் அண்ணன் கிரிக்கெட் ப்ளேயர். அப்பா தன்னால் முடிந்தளவுக்கு அண்ணனுக்கு உதவி செய்தார். அதன்பிறகு அவரால் முடியவில்லை. அண்ணனுக்கு ஒரு தங்கையாக சப்போர்ட் பண்ணணும். மற்றபடி எனக்கு பெரிய நடிகையாக வேண்டும் என்றெல்லாம் கனவுகள் இல்லை.”

“கன்னடம், தமிழ்.. இருமொழிகளிலும் நடிப்பதால் பிரச்சினை ஏதாவது வருகிறதா?”

“கன்னடம், தமிழ் இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை. நான் தமிழ்ப் பெண் என்று அங்கிருப்பவர்களுக்கும் தெரியும்.  காவிரி பிரச்சனை வரும்போதுதான் கொஞ்சம் கலக்கமாக இருக்கும். மற்றபடி இரண்டு மொழிகளிலும் நடிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம்.”

“பிடித்த ஹீரோ?”

“நான் விஜய்சேதுபதியின் பெரிய ஃபேன். விஜய் சாருடன் ஒரு படத்திலாவது நடிக்கணும். ரஜினி சார் படத்தில் எந்த கேரக்டர் கொடுத்தாலும் ரெடி.”

“கிளாமர்?”

“பணம் வருகிறது என்பதற்காக கவர்ச்சியாக நடிப்பேன் என்று எதிர்பார்க்கவேண்டாம். அதில் எனக்கு உடன்பாடு இல்லை. கடைசிவரை ஹோம்லி யாகத்தான் நடிப்பேன். எதிர்காலத்துல என்னுடைய குடும்பம் என்னுடைய படத்தைப் பார்க்கும்போது அசெளகரியமாக ஃபீல் பண்ணக்கூடாது.  அந்த வகையில் ஃபேமிலி படங்களுக்கே முக்கியத்துவம் கொடுப்பேன்.”

“ரோல் மாடல் யார்?”

“எனக்கு இன்ஸ்பிரேஷனாக நிறையப் பேர் இருக்கிறார்கள். சினிமாவில் சாதித்த அனைவரும் எனக்கு ரோல் மாடல்கள். நடிப்பை எங்கும் கற்றுக் கொள்ளவில்லை. சினிமாவைப் பார்த்து தான் சினிமா கற்றுக்கொண்டேன்.”

“காதல், கத்தரிக்காய்?”


“கவனம் முழுவதும் சினிமா மீது இருப்பதால் லவ் பற்றி யோசிக்கவில்லை. ஏழாவது படிக்கும்போது ஒருவர் மீது க்ரஷ் இருந்தது. என்னுடைய திருமணம் காதல் திருமணமாகவும் இருக்கலாம் அல்லது அப்பா, அம்மா கை நீட்டும் மாப்பிள்ளையாகவும் இருக்கலாம்.  கடைசி காலத்தில் அப்பா அம்மாவை நல்லபடியாக வாழவைக்கணும் என்பதுதான் என்னுடைய லட்சியம்.”

- சுரேஷ்ராஜா