நான் சிங்கிள்தான்! : க்ரீன் சிக்னல் காட்டுகிறார் ராஷ்மிகா



சாண்டல்வுட்தான் பூர்வீகம். இருந்தாலும் ராஷ்மிகாவின் கொடி உயரப் பறப்பது டோலிவுட்டில். ‘டியர் காம்ரேட்’ படம் தமிழிலும் ரிலீஸ் ஆகியிருப்பதால் இப்போது கோலிவுட்டிலும் அம்மணிக்கு டிமாண்ட். அடுத்த கார்த்தி பட ஹீரோயின் என்பது நிச்சயம். தவிர்த்து பிகிலுக்குப் பிறகு விஜய் நடிக்கப் போகும் படத்திற்கும் இவரோடு ரகசிய பேச்சுவார்த்தை நடக்கிறது என்று உறுதிப்படுத்தப்படாத தகவல் ஒன்று கோடம்பாக்கத்தில் உலவிக் கொண்டிருக்கிறது.

“நல்லா தமிழ் பேசுறீங்களே?”

‘‘தமிழ் ஓரளவு கத்துக்கிட்டிருக்கேன். உண்மையை சொல்லணும்னா கன்னடமும், இங்கிலீஷும் கூட தமிழ் அளவுக்கு எனக்கு ஃப்ளோவா பேச வராது. எப்பவும் எனக்கு சென்னை ரொம்பவும் ஸ்பெஷல். ஏன்னா, நான் பிறந்தது கர்னாடகாவின் கூர்க் பக்கம் ஒரு கிராமம்னாலும் நான் ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் இங்கே சென்னையில் தான் படிச்சேன். நான் குழந்தையா இருக்கும் போது, எங்க அப்பா இங்கே தான் ஒர்க்ல இருந்தாங்க. மூணு வருஷம் இருந்திருப்போம். அந்த நாட்கள் இனிமையானது. அப்புறம், கூர்க்ல ஸ்கூல் படிப்பு, டிகிரி முடிச்சேன். சைக்காலஜி, ஜர்னலிசம் படிச்சிருக்கேன். நான் செகண்ட் இயர் படிக்கும் போது மாடலிங் பண்ணினேன். அப்புறம், ‘க்ளீன் அண்ட் க்ளீயர்’ போட்டியில் பங்கேற்கும் போதுதான் சினிமா வாய்ப்பு வந்தது.”

“நடிப்பு ரொம்ப இயல்பா இருக்கே? நீங்க தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டா?”


“என்னைப் பார்க்குற எல்லாருமே இந்தக் கேள்வியைத்தான் முதல்லே கேட்கிறாங்க. எனக்கு தியேட்டர் பேக்கிரவுண்ட் கிடையாது. ஸ்கூல்லேயும் ஆக்டிங்ல பெயர் வாங்கினதில்ல. ஆனா,கன்னட ‘கிரிக் பார்ட்டி’ படத்துலதான் அறிமுகமானதும் ‘நல்லா நடிச்சிருக்கீங்க’னு பலரும் பாராட்டினாங்க. எனக்கே ஆச்சரிமாகிடுச்சு. அடுத்து புனீத் ராஜ்குமார் சார் படம் பண்ணிட்டிருக்கும் போதே, டோலிவுட் ‘சலோ’ ஆஃபர் வந்துச்சு. அப்படியே தெலுங்கிலும் இன்ட்ரோ ஆனேன். இப்ப ‘டியர் காம்ரேட்’ மூலம் தமிழுக்கும் வர்றதுல ராஷ்மி செம ஹேப்பி.’’

“தமிழ்ப் படங்கள் பார்க்குறீங்களா?”

“என்ன அப்படி கேட்டுட்டீங்க. நிறைய பார்க்க ஆரம்பிச்சிருக்கேன். விஜய் சாரோட ‘மெர்சல்’ பார்த்தாச்சு. ‘அருவி’ பார்த்ததும் எமோஷனலா கனெக்ட் ஆகிட்டேன். விஜய்சேதுபதியின் ‘சூப்பர் டீலக்ஸ்’ ரொம்ப பிடிச்சிருந்தது. இன்னும் பார்க்க வேண்டிய படங்களின் லிஸ்ட் கைவசம் இருக்கு. ஹீரோயின்கள்ல சமந்தா மேம், த்ரிஷா, சாய்பல்லவி எல்லோரின் ஆக்டிங்கும் பிடிக்கும்.”

“உங்களைப் பார்த்ததுமே லவ் பண்ணணும்னு தோணுதே? ஏற்கனவே கமிட் ஆயிட்டீங்களா?”

“ரெண்டு வருஷமா நான் சிங்கிள்தாங்க. அப்ப இதுக்கு முன்னே யாரை லவ் பண்ணுனீங்கனு கேட்டுடாதீங்க. நிறைய லவ் ஸ்டோரீஸ் இருக்கு. அந்த லவ்ஸ் எல்லாமே ஒன்சைட் லவ்வாகிடுச்சு. யாரும் என்னை விரும்பல போல. பொதுவா ஒரு பையன்கிட்ட நான் நிறைய குவாலிட்டீஸ் எதிர்பார்ப்பேன். அவன் என்னை மாதிரி இல்லாமல் ரொம்பவே நைஸ் பர்சனா இருக்கணும். சிரிச்ச முகமா இருக்கணும். தைரியசாலியா.. ஸ்மார்ட்டா.. நகைச்சுவை உணர்வு ஜாஸ்தியா.. இப்படி சொல்லிட்டே போகலாம்.”

“தமிழில் நடிக்கிற படம் பற்றி...”

 “கார்த்தி சார் படம் இன்னும் ஷூட் தொடங்கல. ‘ரெமோ’ பாக்யராஜ் கண்ணன் சார் இயக்குறார். அதோட ஷூட் இன்னும் ஆரம்பிக்கல. ஆகஸ்ட்ல இருந்து டேக் ஆஃப் ஆகும். முதன்முதல்ல ஸ்டிரைட் தமிழ், அழகான ஒரு கேரக்டர்னால நான் ரொம்பவும் எக்ஸைட்டிங்கா இருக்கேன்.”

- மை.பாரதிராஜா
படங்கள்: அருண்.