தைரியமான டைரக்டர்!



மின்னுவதெல்லாம் பொன்தான்!! 43

●பைம்பொழில் மீரான்


இன்றைக்கு அரசை விமர்சித்து படம் எடுக்க நம் படைப்பாளிகள் அவ்வளவு தயங்குகிறார்கள். 30 வருடங்களுக்கு முன்பு அதை துணிச்சலாக செய்தவர் கோமல் சாமிநாதன். 1983ம் ஆண்டு வெளிவந்த படம் ‘ஒரு இந்தியக் கனவு’. ராஜீவ், சுஹாசினி, பூர்ணம் விசுவநாதன், வாத்தியார் ராமன் நடித்திருந்தார்கள்.  படத்தின் கதை இதுதான்.நன்கு படித்த பட்டம் பெற்ற பெண்ணான சுஹாசினி, ஜவ்வாது மலையில் வாழும் பழங்குடி இன மக்களின் வாழ்க்கை பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக செல்கிறார். அங்கேயே சில காலம் தங்கி இருக்கிறார். அப்போது அவருக்கு கங்கம்மா என்ற மலைவாழ் பெண் அறிமுக மாகிறார்.
தன் ஆய்வை முடித்துக் கொண்டு திரும்பும் சுஹாசினி. அடிப்படை வசதிகூட இல்லாமல் தவிக்கும் அந்த மக்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறார். அரசின் கவனத்தை அவர்களை நோக்கி திருப்ப நினைக்கிறார். இதற்காக மீண்டும் அங்கே சென்றபோது அவளது தோழி கங்கம்மா  கொல்லப்பட்டிருக்கிறார்.அமைச்சர் ஒருவரின் மகனால் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டிருக்கிறார்.

கங்கம்மாவுக்கு நீதி கேட்டு போராடுகிறார் சுஹாசினி. அரசு அவரை  தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கிறது. முடிவில் கங்கம்மாவின் சாவுக்கு நீதி கிடைத்ததா என்பது படத்தின் கதை. இந்தக் கதையின் வழியாக அன்றைய அரசியலையும்,  சமூகத்தையும் காரசாரமாக விமர்சித்தது படம். இன்றைக்கு வெளிவந்தாலும் பொருந்துகிற மாதிரியான கதை. 
ஆனால், அப்போது படம் வெளியாகி பெரிதாக ஓடவில்லை. எனினும், அந்த ஆண்டிற்கான சிறந்த தமிழ் படமாக தேசிய விருது பெற்றதும் படம் கவனம் பெற்றது. விமர் சகர்கள் கொண்டாடினார்கள்.தமிழ் சினிமாவின் மிக முக்கிய படங்களில்  ஒன்றானது ‘ஒரு இந்தியக் கனவு’.  கோமல் சாமிநாதன் அதன் பிறகு ‘அனல்காற்று’, ‘ யுத்த காண்டம் என இரு படங்களை இயக்கினாலும் ‘ஒரு இந்தியக் கனவு’தான் அவரது அடையாளமாக  இப்போதும்  இருக்கிறது.கோமல் சாமிநாதன் பற்றி ஒரு சின்ன பிளாஷ்பேக். செட்டி நாட்டில் உள்ள கோமல் என்ற கிராமத்தில் பிறந்தவர். காமராஜரின் தலைமையை ஏற்று காங்கிரஸ் பேச்சாளராக நாடெங்கும் முழங்கியவர்.

காங்கிரஸ் இரண்டாகப் பிளந்தபோது, அப்போது காங்கிரசை விமர்சித்து காரசாரமாக ஒரு பிரச்சார நாடகம் போட்டார். அது பரபரப்பானது.இந்திய அரசியலில் காமராஜரின் பங்கு குறைந்த நிலையில் அரசியல் பணியைக் குறைத்துக் கொண்டு நாடகத்தில் இறங்கினார். காமெடி நாடகங்களும், புராண நாடகங்களுமே பிரதானமாக  நடந்துகொண்டிருந்த நேரத்தில், மேற்கு வங்க நாடக பாணியில் யதார்த்த நாடகங்களை அரங்கேற்றினார். 33 நாடகங்களை அவர் எழுதி இயக்கினார்.  அதில் பல திரைப்படங்களாக தயாராயின. அதில் முக்கியமானது கே.பாலச்சந்தர் இயக்கிய ‘தண்ணீர் தண்ணீர்’. நாடகத்தில் நிலைத்து நின்ற அளவிற்கு அவரால் சினிமாவில் நிலைத்து நிற்க முடியவில்லை. என்றாலும் ‘ஒரு இந்தியக் கனவு’ அவரது பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கும். கோமல் சாமிநாதன், 1995ம் ஆண்டு தனது 60வது வயதில் காலமானார்.

(மின்னும்)