தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே!



பக்தித் தமிழ் 40

அருண்மொழித் தேவர்! மன்னன் பெயர்போல் இருக்கிறதல்லவா?

இவரும் மன்னர்தான். ஆனால், தேசத்துக்கு அல்ல, பக்தி ததும்பும் தமிழை ஆட்சி செய்தவர். ‘சேக்கிழார்’ என்றால் சட்டென்று புரியும்.‘சேக்கிழார்’ என்ற சொல்லே அழகானது. ‘சே’ என்றால் ‘காளை’ என்று பொருள். ‘கிழார்’ என்றால் உரிமையானவர் என்று பொருள். ‘சேக்கிழார்’ என்றால், காளையை உரிமையாகக் கொண்டவர்,

அதாவது, விவசாயம் செய்து பிழைக்கிறவர் என்று அர்த்தம்.அன்றைய தமிழகத்தில் விவசாயக் குடும்பங்கள் நிறைய இருந்தன. அவற்றில் ஒன்று ‘சேக்கிழார் குடி’. அதில் பிறந்தவர்தான் இந்த அருண்மொழித் தேவர். பின்னர் அந்தக் குலத்துக்கே பெருமை தருகிற ஒருவராக வளர்ந்ததால், அவரையே ‘சேக்கிழார்’ என்று அழைக்கத் தொடங்கிவிட்டார்கள்.

சேக்கிழாரின் குடும்பத்துக்கு விவசாயம் ஒரு கண் என்றால், சிவனை வணங்குதல் இன்னொரு கண். இறைவனுக்கு சேவை செய்வதைத் தங்களுடைய முக்கிய கடமையாகக் கருதினார்கள்.
தொண்டை நாட்டில், புலியூர்க் கோட்டத்தில் உள்ள குன்றத்தூர் என்ற ஊரில் இருந்த சேக்கிழார் குலத்தில் அருண்மொழித் தேவர் பிறந்தார். சிறுவயதிலிருந்தே அவருக்கு பக்தி அதிகம், சிரத்தை அதிகம், ஞானம் அதிகம்.

இறைவன் மீது அவர் வைத்திருந்த அன்பும் அவரது திறமையும் பல திசைகளிலும் பரவியிருந்தன.இந்த விஷயம் அந்நாட்டின் அரசன் காதுகளை எட்டியது. இப்படிப்பட்ட சிறந்த மனிதர் தன்னுடைய அரசவையில் இருக்கவேண்டும் என்று அவன் நினைத்தான். அருண்மொழித் தேவரைத் தன்னு டைய அமைச்சராகப் பணியாற்றும் படி கேட்டுக்கொண்டான்.

அரசாங்கப் பணிகளில் ஈடுபட்டாலும், அருண்மொழித் தேவர் தன் சிவத்தொண்டை மறக்கவில்லை. திருநாகேஸ்வரத்தில் எழுந்தருளி யிருக்கும் இறைவனிடம் மிகுந்த பக்தி கொண்ட அவர், தன்னுடைய சொந்த ஊரான குன்றத்தூரில் அதேபோன்ற கோயில் ஒன்றைக் கட்டினார்.

அன்றைய சோழ மன்னனின் சபையில் காவியம் ஒன்று விவாதிக்கப்பட்டு வந்தது. மன்னனும் அதைக் கேட்டு மகிழ்ந்து கொண்டிருந்தான்.சேக்கிழாருக்குக் காவியச் சுவை பிடித்தமானது தான். ஆனால், அதேசமயம், அது இம்மைக்கும் மறுமைக்கும் நன்மை தருமா? சிவன் பெயரைச் சொல்வதல்லவா நமக்குச் சிறப்பு என்று கருதினார். இதை அவர் அரசனிடம் நேரடியாகவே சொன்னார். சிவன் பெருமையைக் கூறும் நூல்களை, சிவனடியார்களின் தொண்டை விவரிக்கும் நூல்களை வாசிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

மன்னன் மகிழ்ந்தான். ‘சிவபெருமானின் மகிமையைப்பற்றி மேலும் கேட்க விரும்புகிறேன்’என்றான். ‘சிவனைப் பற்றிப் பாடும் சிறந்த நூல்களை, சிவத்தொண்டர்களின் பக்தியைநீங்களே விவரித்துச் சொல்லுங்கள்’ என்று வேண்டிக்கொண்டான்.‘அரசே, சுந்தரர் இயற்றிய திருத்தொண்டத்தொகை என்ற ஓர் அற்புதமான நூல் உள்ளது’ என்று விளக்கத் தொடங்கினார் சேக்கிழார். அந்த நூல் எழுதப்பட்ட கதையை விவரித்தார்:ஒருநாள் சுந்தரர் சிவபெருமானை தரிசிப்பதற்காக திருவாரூர் கோயிலுக்குச் சென்றிருந்தார். அங்கே சிவனடியார்கள் பலர் குழுமியிருந்தார்கள். அவர்களைப் பார்த்ததும், சுந்தரருக்குள் நெகிழ்ச்சி பொங்கியது. சிவனுக்கு அடியவர்களாகத் திகழும் அவர்களுக்குத் தான் அடியவனாக வேண்டும் என்று நினைத்தார்.

இறைவனுக்கு சேவை செய்வது எந்த அளவு சிறப்பானதோ, அதே அளவு, சொல்லப்போனால் அதைவிடச் சிறப்பானது அடியார்களுக்கு செய்யும் சேவை. தன் பக்தர்கள் போற்றப்படும்போது அந்தப் பரமனே மகிழ்வான். அந்தப் பணிவிடைகளெல்லாம் அவன் பாதத்தையே சென்றடையும்!இதை எண்ணிய சுந்தரர் மனத்துக்குள் சிவபெருமானை நினைத்துக் கொண்டார், ‘உங்கள் அடியவர்களுக்கு அடியவனாகப் பணிபுரிய எனக்கு வரம் தாருங்கள்’ என்று கேட்டார்.அப்போது, சிவபெருமான் அவருக்குத் தரிசனம் கொடுத்தார். சிவனடியார்களின் பெருமையைப் பாடும்படி கேட்டுக் கொண்டார். அதற்கு அவரே அடியெடுத்துக் கொடுத்தார், ‘தில்லைவாழ் அந்தணர்!’

சுந்தரர் பாடத் தொடங்கினார்:
தில்லைவாழ் அந்தணர்தம்
அடியார்க்கும் அடியேன்,
திருநீல கண்டத்துக் குயவனார்க்கு
அடியேன்,

இல்லையே என்னாத
இயற்பகைக்கும் அடியேன்,
இளையான்தன் குடிமாறன்
அடியார்க்கும் அடியேன்,
வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக்கு அடியேன்,

விரிபொழில் சூழ் குன்றையார் விறல்மிண்டர்க்கு அடியேன்,
அல்லி மெல் முல்லை அம் தார் அமர்நீதிக்கு அடியேன்,
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே!
தில்லைவாழ் அந்தணர்களின் அடியார்களுக்கு நான் அடியவனாவேன்!
குயவரான திருநீலகண்டர், அவருக்கும் அடியவனாவேன்!

யார் எதைக் கேட்டாலும் ‘இல்லை‘ என்று சொல்லாத இயற்பகையாருக்கும் நான் அடியவனாவேன்! இளையான்குடி மாறனாருக்கும் அடியவனாவேன்! வெற்றி நிறைந்த மெய்ப்பொருளாருக்கும் நான் அடியவனாவேன்! பொழில்கள் சூழ்ந்த செங்குன்றூரைச் சேர்ந்த விறல்மிண்டருக்கும் நான் அடியவனாவேன்! அல்லி, மென்மையான முல்லை ஆகியவை கலந்த அழகிய மாலை அணிந்த அமர்நீதியாருக்கும் நான் அடியவனாவேன்! இவர்கள் எல்லாரும் திருவாரூரில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானின் தொண்டர்கள்.

ஆகவே, அவர்களுக்கு நான் தொண்டனாவேன்!
சேக்கிழார் விளக்க விளக்க, அரசனுக்குப்
பரவசமானது. ‘இந்தப் பாட்டில் வரும் திருநீலகண்டர், இயற்பகையார்,
 இளையான்குடி மாறனார், மெய்ப்பொருளார், விறல்மிண்டர், அமர்நீதியார்...
 இவர்களெல்லாம் யார்? அவர்கள் செய்த சிவத்தொண்டு என்ன?’ என்று கேட்டான்.
‘அரசே, இந்தக் கேள்வி நமக்கு வரும் என்று முன்பே தெரிந்துகொண்டு,
விநாயகப் பெருமானே இவற்றை விளக்கியிருக்கிறார்!’ என்றார் சேக்கிழார்.

‘விநாயகப் பெருமான் விளக்கினாரா? எங்கே? எப்போது? எப்படி?’
‘சுந்தரர் பாடிய திருத்தொண்டத்தொகையில் அறுபத்து மூன்று அடியவர்கள் இடம்பெற்றார்கள்.
 ஆனால், அவர்கள் ஒவ்வொருவருடைய தொண்டும் அதில் விரிவாக இடம் பெறவில்லை.’
‘ஆகவே, திருநாரையூர் விநாயகர் அவற்றை விவரித்துச் சொன்னார்,
அதைக் கேட்டு ஒவ்வோர் அடியாருக்கும் ஒரு பாடலாக விவரித்தார்

நம்பியாண்டார் நம்பி. அந்த நூலின் பெயர் திருத்தொண்டர் திருவந்தாதி!’
இதை விளக்கிய சேக்கிழார் அந்த நூலையும் அரசனுக்கு விவரித்தார்:
செப்பத் தகு புகழ்த் தில்லைப்பதியில் செழுமறையோர்
ஒப்பப் புவனங்கள் மூன்றினும் உம்பரின் ஊர் எரித்த
அப்பர்க்கு, அமுதத் திருநடர்க்கு, அந்திப் பிறை அணிந்த
துப்பர்க்கு உரிமைத்தொழில் புரிவோர்தமைச்சொல்லுதுமே!

சிறப்பாகச் சொல்லத்தக்க புகழைக் கொண்ட தில்லையிலே வாழும் அந்தணர்கள், மூன்று உலகங்களைப்போல்  திரிபுரங்களை அமைத்துக்கொண்டிருந்த தீயவர்களின் ஊரை எரித்த அப்பன், அமுதம்போல் திருநடனம் புரிபவன், பிறை நிலவைத் தலையில் அணிந்த தூயவனுக்கு உரிமைத்தொழில் செய்பவர்கள் அவர்கள். அவர்களுடைய பெருமையை நாம் பேசுவோம்!

இப்படி ஒவ்வோர் அடியாரின் கதையையும் விரிவாகக் கேட்டு மகிழ்ந்தான் அரசன். இதனால் அவனுடைய மனம் மாறியது. சிவன்மீதும் சிவனடியார்கள் மீதும் மிகுந்த பக்தியும் பணிவும் கொண்ட வனாக அவன் மாறினான்.

அது போதுமா? நாட்டிலுள்ள மற்ற மக்களெல்லாம் சிவனை வணங்குதலின் மகிமையை, சிவனடியார்களின் பெருமையை உணரவேண்டாமா? அதற்கும் சேக்கிழாரே வழி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டான் அரசன்.

‘நான் என்ன செய்யவேண்டும் அரசே?’‘நீங்கள் விவரித்துச் சொன்ன கதைகள் அனைத்தும் கேட்கச் சுவையாக இருந்தன, அதேசமயம் அதனால் பக்தியின் பெருமை புரிந்தது. சிவன்மீதும் அடியவர்கள்மீதும் பாசம் பெருகியது’ என்றான் அரசன். ‘இந்த அடியவர்களின் வரலாறுகளை எல்லாரும் தெரிந்து கொள்ளும்படி நீங்களே ஒரு காவியமாகப் பாடித் தரவேண்டும்!’இதுவும் இறைவனின் திருவருள் என்று எண்ணினார் சேக்கிழார்.

சிவனடியார்களைப் பற்றிப் பாடுவதற்காக சிதம்பரம் வந்தார். திருக்குளத்தில் நீராடி நடராசரை வணங்கினார். தொண்டர் பெருமை சொல்லும் காப்பியத்திற்கு அடியெடுத்துக் கொடுக்குமாறு வேண்டினார்.

தொண்டர்களின் புகழைக் கேட்க சிவனுக்கும் விருப்பமே. ‘உலகெலாம்’ என்று முதலடியெடுத்துக் கொடுத்தான்.சேக்கிழார் சிவனை வணங்கிப் பாடத் தொடங்கினார்:உலகு எலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்,நிலவு உலாவிய நீர் மலி வேணியன்,அலகு இல் சோதியன், அம்பலத்து ஆடுவான்,மலர் சிலம்பு அடி வாழ்த்தி வணங்குவாம்!

உலகமெல்லாம் அவனுடைய மகிமையை முழுமையாக உணர்ந்து பாடுவது எளிதல்ல, அவன் சொற்களில் அகப்படாத பெருமை கொண்டவன், அரியவன்! அவனுடைய சடாமுடியில் பிறை நிலவும் கங்கையும் சிறந்து விளங்குகின்றன. அவனுடைய ஜோதி வடிவான உருவத்தை அளவிடவே இயலாது! அம்பலத்தில் ஆடுகிற அந்தச் சிவபெருமானின் மலர் போன்ற, சிலம்பு அணிந்த காலடிகளை வாழ்த்தி வணங்குவோம்!

தில்லையிலேயே தங்கி சிவனடியார்கள் அறுபத்து மூவரின் வாழ்க்கையையும் அற்புதமாகப் பாடினார் சேக்கிழார். இதை அறிந்த மன்னன் மகிழ்ச்சியுடன் தில்லைக்கு வந்தான். சேக்கிழாரைப் போற்றிப் பாராட்டினான்.

அப்போது, வானில் இருந்து ஓர் ஒலி கேட்டது, ‘சேக்கிழார் செய்த அடியார் வரலாற்றை நீ கேட்பாயாக!’இறைவனின் கருணையைப் போற்றிய அரசன் மக்களை அழைத்தான், சிவனடியார்களை அழைத்தான், பிற அரசர்களை அழைத்தான், அறிஞர்களை அழைத்தான், எல்லாரும் சேக்கிழார் சொல்லும் தொண்டர் புராணத்தைக் கேட்கத் தொடங்கினார்கள்.

அடுத்த ஓராண்டுக்குச் சேக்கிழார் அந்தக் காவியத்தை விவரித்தார். ஒவ்வொரு பாடலிலும் உள்ள தமிழ்ச்சுவை, பக்திச்சுவை ஆகியவற்றை விஞ்சி நிற்கும் தொண்டர்களின் பெருமையை மக்கள் எண்ணிப் போற்றினார்கள். அதனைப் ‘பெரிய புராணம்’ என்று சிறப்புப் பெயரிட்டு அழைத்தார்கள்.மன்னன் பெரிய புராணத்தை யானைமீது ஏற்றிப் பெருமையோடு அழைத்து வந்தான். இறைவன்முன் அக்காவியத்தை வைத்து வணங்கினான்.

சேக்கிழாரைத் ‘தொண்டர் சீர் பரவுவார்’, அதாவது சிவனடியார்களின் பெருமையைச் சொல்லி மகிழ்பவர் என்று சிறப்புப் பெயர் சூட்டினான்.சேக்கிழாரின் ‘பெரிய புராணம்’ பின்னர் பன்னிரு திருமுறைகளில் ஒன்றாக இணைக்கப்பட்டது. இன்றும் பக்தியுணர்வோடு வாசித்துப் போற்றப்படுகிறது!

ஓவியங்கள்: வேத கணபதி

(தொடரும்)

என்.சொக்கன்