ஒவ்வொரு திசைக்கும் ஒரு தோற்றம் காட்டும் குன்று



தமிழ்நாட்டில் ஒரு சிவகங்கை இருப்பதுபோல் கர்நாடகாவிலும் உள்ளது - பெங்களூரிலிருந்து 50 கி.மீ. தொலைவில். இந்த சிவகங்கை கடல் மட்டத்திலிருந்து 4000 அடி உயரத்தில் குன்றுடன் கூடிய ரம்யமான ஊர். இந்த குன்றின் இருகோயில்கள் உள்ளன - கங்காதீஸ்வரர் ஆலயம், வீரபத்ரர் கோயில்.இந்த குன்றுக்கே ஒரு தனிச்சிறப்பு உண்டு.

ஒரு பக்கத்திலிருந்து பார்த்தால் சிவலிங்கமாகவும், மேற்கு பக்கத்திலிருந்து பார்த்தால் பிள்ளையார் அமர்ந்திருப்பதுபோலவும், அடுத்த பக்கத்தில் நந்தியாகவும், இன்னொரு பக்கத்தில் நாகப்பாம்பு படமெடுத்து நிற்பதுபோலவும் தோன்றும்.

இந்த குன்றில் மகர சங்கராந்தியின்போது ஒரு அதிசயம் நடக்கிறது. அன்றைய தினம் பகலில் கடுமையான வெயில் அடித்தாலும், மாலையில் திடீரென வானம் கறுத்து அங்குள்ள பள்ளத்தில் மழை கொட்டுமாம். இப்படி தேங்கிய தண்ணீரை கங்கை என கருதி எடுத்துத் தலையில் தெளித்துக்கொள்கிறார்கள்.

கங்காதீஸ்வரர் கோயிலுக்கு இரண்டு கோபுரங்கள். ஒன்று ஹொய்சால  பாணிகோபுரம் மற்றொன்று விஜயநகர பாணி கோபுரம். ஆக வெவ்வேறு காலகட்டங்களில், பல மன்னர்களால் இங்கு நற்பணிகள் நடந்துள்ளது தெரிகிறது. நவரங்கம், நந்தி மண்டபங்களைக் கடந்து குகைக்குள் சென்று லிங்கரூபமாய் கங்காதேஸ்வரரை தரிசிக்கிறோம்.

 இந்த லிங்கத்தின் மீது நெய் அபிஷேகம் செய்யும்போது அது வெண்ணெயாக மாறிவிடுகிறதாம். இந்த வெண்ணெய் பல நோய்களை குணப்படுத்தும் அருமருந்தாக பயன்படுகிறது. கங்காதேஸ்வரருக்கு வெள்ளிக்கவசம் சாற்றி அலங்காரம் செய்கிறார்கள்.

இந்த லிங்கத்துக்கு வெள்ளி நாகம் குடை பிடிப்பது தனி அழகு. அருகிலேயே அம்பிகை சுவர்ணாம்பிகையின் சந்நதி. எட்டுக்கரங்களுடன் அன்னை காட்சி தருகிறாள். இந்த அம்பிகை பற்றி ஒரு கதை கூறப்படுகிறது.

இந்த ஊரில் இருந்த ஒரு பெண்ணிற்கு பிரசவ காலம். கணவனோ காசி சென்றிருந்தான். உற்றார், உறவினர் யாரும் உதவிக்கு இல்லை. ‘அம்மா  நீதான் தாயாக இருந்து காத்தருள வேண்டும்’ என கோரிக்கை வைக்க, அம்பிகையே, தாயாக வந்து உரிய நேரத்தில் பிரசவம் பார்த்து அந்த பெண்ணையும் குழந்தையையும் காப்பாற்றினாளாம்.

அம்பிகையின் பின்னால் ஆதிசங்கரர் நிறுவிய சக்கரம் உள்ளது. இதற்கு தேவி உபாசகர்கள் வழிபாடு செய்கிறார்கள். நவரங்க மற்றும் நந்தி மண்டபங்களின் தூண்களில் அழகிய சிற்பங்களை தரிசிக்கலாம். கோயிலின் அருகே  சிருங்கேரி மடத்தின் கிளை உள்ளது. அங்கு சாரதாம்பாள், சிவலிங்கம் உட்பட பல சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. மலையில் உள்ள தீர்த்தங்களில் விசேஷமானது என கமண்டல தீர்த்தத்தை காட்டுகின்றனர்.

ஏன்? இங்கு ஏராளமான துறவிகள் அமர்ந்து தியானம் செய்வது வழக்கமாம். இங்கு சங்கர் குகை என ஒரு பகுதி உள்ளது. அதில் ஆதிசங்கரரின் பாதம் உள்ளது.பெங்களுர் - பூனே ரயில் மார்க்கத்தில் டாப்ஸ் பெட் என்ற ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து ஆட்டோவில் 6 கி.மீ. பயணித்து இக்கோயிலை அடையலாம். பெங்களூரிலிருந்து தரை மார்க்கமாகவும் செல்லலாம்.

அன்னமளித்து ஆதரவளிக்கும் அன்னபூரணி

கர்நாடகாவின் சிக்மங்களூர் மாநிலத்தில் ஒரு ஓரத்தில் ஹொரநாடு என்ற புண்ணியஸ்தலம் உள்ளது. மங்களுரிலிருந்து உடுப்பி வழியாக சிருங்கேரி செல்பவர்கள் அங்கிருந்து இரண்டரை மணி நேர பயணத்தில் ஹொரநாட்டை அடைந்து விடலாம். பெங்களூரிலிருந்து ஹொரநாட்டிற்கு நேரடி பஸ் வசதி உண்டு.

பயண நேரம் 8 மணி.இத்தலத்தில் ஸ்ரீஅன்னபூர்னேஸ்வரியை அகத்தியர் முதன் முதலில் பிரதிஷ்டை செய்து வழிபட்டாராம். பிறகு பலகாலம் கவனிப்பாரற்று கடந்து, 400 வருடங்களுக்கு முன், ஒரு பக்தரின் கனவில் அம்மன் வந்து தன் இருப்பிடத்தைக் கூறி, தனக்கு அங்கு கோயில் கட்டி வழிபட உத்தரவிட்டதாக தல புராணம் கூறுகிறது. இன்றும் அவருடைய பரம்பரையினர்தான் இந்தக் கோயிலில் அர்ச்சகர்களாக உள்ளனர்.

 1973ம் ஆண்டு இந்தக் கோயில் புதுப்பிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் உருவான புதிய அம்மன் சிலை இக்கோயிலில் பிரதிஷ்டை செய்து கோயிலையும் விரிவுபடுத்தினர். 6 அடி உயரம் கொண்ட அன்னபூரணி இன்று தங்க அன்னபூரணியாக ஜொலிக்கிறாள்.

சங்கு, சக்கரம், ஸ்ரீசக்கரம், காயத்ரி மந்திரம் ஆகியவற்றை கையில் கொண்டு சர்வாலங்கார பூஷிதையாக காட்சி தருகிறாள். இங்கு அன்னதானம் மிகவும் பிரபலம். போட்டி போட்டுக்கொண்டு அன்னதானம் நடக்கிறது. கோயில் சார்பாகவும் மூன்று வேளையும் பக்தர்களுக்கு அன்னதானம் உண்டு. இங்கு அம்மன் சார்பாக அன்னதானம் செய்பவர்களுக்கு, பிறகு வாழ்நாள் முழுவதும் அன்னத்திற்கு பிரச்னையே வராதாம்!

தினமும் 3 வேளை - காலை 9 மணி, பிற்பகல் 2 மணி, இரவு 9மணி - இங்கு ஆரத்தி நடத்துகிறார்கள். கோயில் காலை முதல் இரவு வரை தொடர்ந்து திறந்துள்ளது. கோயில் சார்பாக இலவச சத்திரங்கள் உள்ளன. தனியார் தங்கு விடுதிகளும் உண்டு. கோயில் சார்பாக வருடா வருடம் 30 ஜோடியினருக்கு இலவச திருமணம் நடக்கிறது. துணிமணிகள், தாலி உட்பட அனைத்தையும் கோயில் சார்பாக மண மக்களுக்கு தரப்படுகிறது.

வருடா வருடம் பிராம்மண சிறுவர்களுக்கு இலவச உபநயனமும் உண்டு. கோயில் டிரஸ்ட் மூலம் ஏழைகளுக்கு மருத்துவ உதவி, பண உதவிகள் செய்யப்படுகின்றன. வெளியூர்காரர்கள் மாலை ஐந்தரை மணிக்குள் ஸ்ரீஅன்னபூரணியை தரிசித்துச் சென்று விடுவது நல்லது. மலைப்பிரதேசம் இரவு பயணத்தைத் தவிர்ப்பது உசிதம்.

- ராஜிராதா