காவடி தூக்கி குமரன் அருள் பெறுவோம்!



காவடியின் தோற்றமும் பயன்பாடும் காலத்தால் அறியமுடியாத தொல்பழமை வாய்ந்தவைகளாகும். ஆதியில் மனிதர்கள் உணவுத் தேவைக்காகவும், தண்ணீர் முதலான அடிப்படைத் தேவைகளுக்காகவும் அடிக்கடி இடப்பெயர்ச்சி செய்யவேண்டி இருந்தது. அவ்வேளையில் வாழ்வின் அடிப்படைத் தேவைகளுக்கு ஏற்பவையாகச் சேர்த்து வைத்துள்ள பொருட்களைத் தாங்கள் புதிதாகக் குடியேறும் இடத்திற்கு இடம் பெயர்க்க வேண்டியதாயிற்று.

 இத்தகைய இடப்பெயர்ச்சிக்காக முதலில் மனிதன் சுமைகளைத் தோளில் சுமந்து சென்றான். அந்தச் சுமை கொஞ்சம் கூடிய போது தலையில் ஏற்றிச் சுமந்தான். பின்னர் சுமைகளை இடம் பெயர்க்க கழுதை, குதிரை முதலிய விலங்குகளைப் பயன்படுத்தினான்.

சில சமயங்களில் விலங்குகளையும், வண்டிகளையும் பயன்படுத்த முடியாத மலைமுகடு கள், மண்மேடுகள் போன்ற உயரமான பகுதிகளுக்குப் பொருட்களை சுமந்து செல்லவும் வேண்டி யிருந்தது. அந்நிலையில் சுமைகளைத் தோளில் சுமப்பதோ, தலையில் சுமந்து செல்வதோ எளிதாக இல்லை. அதனால் சுமையை இரண்டாகப் பிரித்து அவற்றை நீண்ட வலிமை மிக்க தடியின் இருமுனைகளிலும் கட்டித் தொங்கவிட்டு அந்தத் தடியைத் தோளில் சுமந்தவாறு சென்றான்.

இம்முறையில் சுமையின் பாரம் தெரியாதது மட்டுமன்றி தலையில் சுமப்பதை விட அதிக அளவு சுமையையும் எடுத்துச் செல்ல முடிந்தது. தோளில் தாங்கும் நீண்ட தடியை முன்னும் பின்னும் நகர்த்தி வைப்பதன்  மூலம் பாரத்தைக் குறைத்து உணரவும், எளிதில் மலையில் ஏறவும், இறங்கவும் முடிந்தது. அதனால் இம்முறையை சுமை தூக்குவோர் அனைவருமே கடைப்பிடித்தனர். சுமைகளை இருபிரிவுகளாக்கி கவடு செய்து பயன்படுத்துவதால் இம்முறைக்குக் காவடி எனப் பெயர் கொடுக்கப்பட்டதாகக் கூறுகின்றனர்.

மாபெரும் இதிகாசமான ராமாயணத்தில் சிரவணன் என்பவன் கண்களை இழந்த தன் தாய் தந்தையரைக் காவடியில் அமர்த்திக்கொண்டு பயணம் செய்தது பற்றி குறிக்கப்பட்டுள்ளது. பழந்தமிழ் இலக்கியங்களில் ‘‘கா’’ என்னும் சொல் தோளில் தாங்கிச் செல்லும் சுமையைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. புறநானூற்றுக்கு உரை வரைந்த நச்சினார்க்கினியனார், ‘‘கா’’ என்ற சொல்லினால் காவடியைக் குறிக்கின்றார். அதிசயமான நெடுமான் அஞ்சி என்ற வள்ளலைப் புகழும் பாடலில் ஒரு பாணன் தனது கா(வடி)வின் ஒரு பக்கத்தில் முழவையும், மற்றோர் பக்கத்தில் உண்கலங்களையும் கட்டித் தூக்கி வரும் காட்சியை அவர் குறிக்கின்றார்.

இலங்கையில் ‘‘கா’’ என்ற சொல் இப்போதும் வழக்கத்தில் உள்ளது. சுமைகளைத் தூக்குதலை அவர்கள் காவுதல் என்ற சொல்லால் குறிக்கின்றனர். எடுத்துக்காட்டாக, சுவாமியைத் தோளில் சுமந்து வீதிவலம் வருவதைச் சுவாமி காவுதல் என்கின்றனர். ‘‘கா’’ என்ற பெரும் சுமையைக் குறிப்பதால் அந்த சுமையைச் சுமக்கத் துணை செய்யும் தடிக்கு காவு தடி என்னும் பெயர் வழங்கியதாகவும், இது கால ஓட்டத்தில் காவடி ஆனதென்பதாகவும் கூறுவர்.

திருக்குறளில் காவடி இலக்கியங்களில் காவு என்ற சொல் சுமை என்னும் பொருளில் ஆளப்படுகிறது. அந்த அடிப்படையில் காவடி என்பது சுமை தூக்க உதவும் தடியாக உள்ளதை அறிய முடிகிறது.

திருக்குறளில் காவடி என்ற சொல் இல்லாவிட்டாலும், கா எனும் சொல் சுமையைக் குறிக்கவும், காவடியைக் குறிக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளது: காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும் என்நோனா உடம்பின் அகத்து குறள் 1163என்னும் குறளில் தலைவி வலிமையற்ற என் உடலில் உயிரைக் காவடியாகக் கொண்டு காமமும், நாணமும் தொங்குகின்றன. காமத்தை வெளியிட நாணம் தடுக்கிறது. நாணும் நிலையால் காதலை வெளிப்படுத்தவில்லை என்கிறாள்.

மேலும்,ஒருதலையான் இன்னாது காமம்காப்போலஇருதலையானும் இனிது  - குறள் 1196காதல் ஒரு தலையாக இருப்பது துன்பத்தைத் தருகிறது. காவடிச் சுமை இருபுறமும் சமமாக இருக்கும்போது தூக்குபவனுக்கு எளிதாக  இருப்பது போல் அன்பு கொண்டுள்ள இரண்டு பேரிடத்தும் காதல் இருப்பதே இனிமையானது என்கிறாள் தலைவி.

புராணங்களின்படி பழநிமலை ஆண்டவனுக்கே முதன்முதலாகக் காவடி எடுக்கப்பட்டது. அப்படி காவடி ஏந்தி வந்தவன் இடும்பன். இடும்பனே காவடி எடுப்பவர்களுக்குத் தலைவனாக இருந்து வருகின்றான். காவடி எடுக்கும் வழக்கம் ஆதியில் பழநி முருகனுக்கு மட்டுமே உரியதாக இருந்து பின்னாளில் அனைத்து முருகன் ஆலயங்களுக்கும் உரியதாகிவிட்டது என்கின்றனர்.

பைரவருக்குப் பன்னீர் காவடிகள், திருமாலுக்குத் தண்ணீர் காவடி, காளிக்கு அக்னி காவடி என மக்கள் பலவிதமான காவடிகளை எடுக்கின்றனர். ஆதியில் மலை தெய்வங்களுக்கு எடுக்கப்பட்ட காவடி சம தரையில் உள்ள கோயில்களுக்கும் செய்யும் பிரார்த்தனை ஆகிவிட்டது. உள்ளூர் கோயிலில் உள்ள முருகப்பெருமானுக்கு அன்பர்கள் வேண்டுதலின் பேரில் காவடி எடுக்கின்றனர். ஆடிக்கிருத்திகை, பங்குனி உத்திரம், சித்திரை, கார்த்திகை முதலிய நாட்களில் காவடி எடுக்கும் விழாக்கள் சிறப்புடன் கொண்டாடப்படுகின்றன.

முருகனுக்காக காவடிகளைத் தாங்கி வரும் அன்பர்கள் கூட்டத்திற்கு இடும்பனே தலைவன். முருகன் ஆலயங்களில் அவனும் பரிவார தெய்வமாக விளங்குகிறான். குறிப்பாக, பழநி
ஆண்டவனாக முருகன் வீற்றிருக்கும் தலங்களுள் அவனுக்குத் தனிச் சந்நதி அமைத்துள்ளனர். அவனுக்கு நாட்பூஜையும் சிறப்பு வழிபாடுகளும் நடத்தப்படுகின்றன. காவடி எடுக்கும் வழக்கம் இவனிடம் இருந்தே தோன்றியதென்று புராணங்கள் கூறுகின்றன.

காசியபனுக்குத் திதி தேவியிடம் தோன்றியவர்கள் அசுரர்கள். இவர்களில் முதன்மை பெற்றவர்கள் சூரபத்மன், தாரகன், சிங்கமுகன், அஜமுகி ஆகிய நால்வராவர். இவர்கள் குலகுருவான சுக்கிராச்சாரியாரை அடைந்து பல நல்லுரைகளைப் பெற்றனர். அவரது ஆணைப்படி கடலிடை தீவில் வாழும் இடும்பனை அடைந்து அஸ்திர சஸ்திர வித்தை களை கற்றுக் கொண்டனர். இடும்பன் வலிமை மிக்கவன். நுண்ணறிவு படைத்தவன். அசுரர்களுக்கும் ராட்சதர்களுக்கும் ஆயுதப் பயிற்சி அளித்தவன்.

தன்னிடம் வித்தைகளைப் பயின்ற சூரபத்மன் பிரம்மதேவனைக் குறித்துப் பெரும் தவம் இயற்றி, 1008 அண்டங்களை 208 சதுர்யுகங்கள் திறம்பட ஆளும் வரம் பெற்றதை எண்ணி மகிழ்ந்தான். பெருமையுடன் வாழ்ந்த சூரபத்மன் இறுதியில் விதிவசத்தால் தேவர்களுக்குத் துன்பமிழைத்து முருகப்பெருமானால் அழிக்கப்பட்ட நிகழ்ச்சியைக் கண்டு மனம் நொந்தான்.அவனது அழிவைக் கண்டு வருந்திய இடும்பன் தன் மனைவி இடும்பியுடன் மகேந்திரபுரியை விடுத்து வனங்களில் திரிந்து வந்தான். அவ்வனங்களில் முனிவர்கள் சிவபூஜை செய்வதைக் கண்டும் அவர்கள் கூறும் மெய்யுரைகளால் கவரப்பட்டும் தானும் சிவபூஜை செய்து வரலானான்,

அவனது பூஜையால் மகிழ்ந்த சிவபெருமான் அவன் முன்னே தோன்றி ‘‘இடும்பனே! நீ விரைவில் அகத்தியரைக் காண்பாய். அவரிடம் குமார மந்திரத்தை உபதேசம் பெற்று பூஜை செய்து வருக. அதனால் குமரக்கடவுள் உனக்கு அருள் புரிந்து ஏற்றுக் கொள்வார்’’ என்றார். அதைக் கேட்டு இடும்பன் மனம் மகிழ்ந்தான்.அவனும் அவனது மனைவியும் ஒரு முறை பொதிகை மலைக் காடுகளில் தங்கியிருந்த போது அகத்தியரைக் கண்டனர். சிவனுக்கு இணையாக போற்றப்படும் அவரை வணங்கி பூஜித்தனர்.

அவரிடம் அரக்கர்களுக்கு வித்தை கற்பித்து வந்ததையும் சூரனும் அவன் தம்பியரும் மாண்டதையும், சூரனின் குமாரன் இரணியன்கடலில் ஒளிந்து கொண்டதையும், தான் தப்பி மனைவி மக்களுடன் காட்டினில் திரிவதையும், சிவனை ஆராதித்து அருள் பெற்றதையும் எடுத்துக் கூறினான். அதைக் கேட்ட அகத்தியர், ‘சிவனார் திருவுள்ளம் அப்படியே ஆகட்டும்’’ என்றார். அவனுக்கு ஷடாக்ஷர மந்திரத்தை உபதேசித்து, தீக்ஷை கொடுத்து தமக்குப் பணியாளனாக வைத்துக் கொண்டார். அவருக்குப் பணி செய்வதில் இடும்பனும் இடும்பியும் மன நிறைவு கண்டனர்.

ஒரு சமயம் அகத்தியர் இடும்பனிடம் ‘‘அன்பனே! முன்னாளில் நான் திருக்கயிலையில் இருக்கும்போது சிவபெருமான் பூர்ச்சவனத்தில் உள்ள இரண்டு மலைகளைக் காட்டி, இவை சிவகிரி - சக்திகிரி எனப்படும். இவற்றைச் சிவமாகவும் சக்தியாகவும் நீ பூஜை செய் என்றார். நாமும் அப்படியே பூஜித்து வந்தோம்.

இப்போது பொதிகை மலை நமது வசிக்குமிடமாகி விட்டதால், கயிலை மலைக்குச் செல்ல முடிவதில்லை. சிவனார் ஆணைப்படி நாம் பூஜித்து வந்த அந்த மலைகளை இங்கே கொண்டு வந்து வைத்து பூஜிக்க விரும்புகிறோம். அவற்றைப் பெயர்த்து இங்கே கொண்டு வருக’’ என்றார்.

இடும்பன் குருவார்த்தையை மீறாதவன். ஆகையால் உடனே அவரிடம் விடை பெற்றுக் கொண்டு இமயமலைச் சாரலில் உள்ள பூர்ச்சவனத்தை அடைந்தான். அங்கு வெண்மை, செம்மை நிறங்களுடன் விளங்கும் சிவசக்தி வடிவான குன்றுகளைக் கண்டான். பிரம்மனைத் துதித்தான். பிரம்மதண்டம் தோன்றியது.

பிறகு அட்டமாநாகங்களைத் துதித்தான். பிரம்மன் அருளால் அங்கே நாகங்கள் தோன்றின. பின்னர் அங்கிருந்த மலைகலைப் பெயர்த்தது, நாகங்களைக் கொண்டு அவற்றைக் கட்டி, பிரம்மதண்டத்தின் இருமுனைகளிலும் அவற்றைத் தொங்கவிட்டான். பிரம்மதண்டத்தைத் தோளில் வைத்துக் கொண்டு அகத்தியரை வணங்கித் தென்னாடை நோக்கி விரைந்தான்.

இப்போது பழநி இருக்கும் இடத்திற்கு வந்து கொண்டிருந்த போது முருகப்பெருமான் அவன் கொண்டு வரும் மலைகளை அவ்விடத்தில் நிலைப்படுத்தி அதன் மீது கோயில் கொள்ள விரும்பினார். அதனால் அவனுக்கு வழிநடையால் அயர்ச்சி தோன்றும்படிச் செய்தார். அயர்ச்சியால் அவனுக்கு உறக்கம் வந்தது. அவ்விடத்திலேயே அந்த மலைகளை வைத்துவிட்டுச் சற்று நேரம் ஓய்வெடுத்துக் கொள்ளப்படுத்தான். படுத்ததுமே அவனை உறக்கம் ஆட்கொண்டு விட்டது.

முருகன் அழகிய குழந்தையாக உருவெடுத்தான். சிவகிரி மீதிருந்த குரா மரத்தடியில் போய் நின்று கொண்டான். கண் விழித்து எழுந்த இடும்பன், தான் நெடுநேரம் தூங்கிவிட்டதை எண்ணி வருந்தினான். மலைகளைத் தூக்க முயன்றான். முடியவில்லை. ‘‘இதுவரை லேசாக இருந்த மலைகள் இப்படி கனக்கிறதே, கனமானாலும் பரவாயில்லை, தூக்கவே முடியவில்லையே? என்ன காரணம்? என்று திகைத்தான். தன் வடிவைச் சுருக்கிக் கொண்டான். மலை மீது சென்று கவனமாக ஆராய்ந்தான்.

மலை மீது குராமரத்தடியில் குழந்தையொன்று நிற்பதைக் கண்டான். இக்குழந்தையா மலை கனப்பதற்குக் காரணம் என யோசித்தான். ‘‘குழந்தையே இறங்கி ஓடி விடு’’ என அச்சுறுத்தினான். அந்தக்குழந்தை அசரவில்லை. இருவருக்கும் வாய்ச்சண்டை தோன்றி வளர்ந்து கைச்சண்டையாகத் தொடர்ந்தது. குழந்தை அடித்த அடியில் இடும்பன் மாண்டு விழுந்தான். இடும்பன் இட்ட ஓலத்தைக் கேட்டு இடும்பி ஓடிவந்தாள். முருகனைத்தொழுது அவனுக்கு உயிர்ப்பிச்சை அளிக்கும்படி வேண்டினாள்.

முருகன் தன் சுயவடிவைக் காட்டினான். இடும்பிக்கு அருள்புரிந்து இடும்பனை உயிர்ப்பித்தான். இடும்பனும் இடும்பியும் முருகனை வணங்கினர். முருகன்  இடும்பனிடம் ‘இடும்பனே! இந்த மலைகள் இங்கேயே இருக்கட்டும். நாம் இந்த சிவகிரி மீது சிவகிரிவேலவனாக தண்டாயுதபாணியாக இருக்க விரும்புகிறோம்; நீ உனக்கு வேண்டிய வரங்களைக் கேள்’’ என்றார்.

இடும்பன் ஐயனே! என்னப் பணி கொள்வாய். உனக்குக் குற்றேவல் செய்து வாழ்வதே எனக்குப் பெருமை’’ என்றாலும், எனது குருவான அகத்தியருக்கு என்ன பதில் சொல்வது’’ என்றான்.
முருகன், ‘இடும்பனே! உனது குரு பக்தி உயர்ந்ததாக இருக்கிறது. அகத்தியரிடம் நாம் உரிய பதிலை அளிப்போம்‘‘ என்றார்.

அதற்குள் அகத்தியர் செய்தி அறிந்து அங்கு வந்து சேர்ந்தார். அவருடன் சீடர்களும் பலவகை சித்தர்களும் வந்து கூடினர். அவர்கள் முருகனைப் பலவாறு போற்றித் துதித்தனர். அகத்தியர்.
‘‘பெருமானே! இடும்பனை ஏவலனாக ஏற்றருள்க’’ என்றார்.முருகன் புன்னகைத்து, அப்படியே ஆகட்டும். இனி உன்னைப் போல் நமக்குப் பூஜை பொருட்களைக் காவடியாகக் கட்டிக் கொண்டு
நம்மைப் பூஜிக்க வரும் அன்பர்களுக்கு எமது திருவருள் கூடும்’’ என்றார்.

‘‘காவடி எடுத்து வருபவர்கள் மத்தியில் என்றும் இருப்பாய். உன்னை காவடியான் என்றே அழைப்பர் எனும் வரங்களைத் தந்தார். பிறகு முருகன் சிவகிரி மீது கோயில் கொண்டான். இடும்பன் அவனுக்கு அடிமைத் திறம் பூண்டு காவலனாக இருந்து வருகிறான். பழநியில் முருகன் தண்டாயுதபாணியாக எழுந்தருளியுள்ள மலைக்கு எதிரில் ஒரு சிறிய குன்று உள்ளது. புராணத்தில் சக்திகீ என்று அழைக்கப்படும் இம்மலை நடைமுறையில் இடும்பன் மலை என அழைக்கப்படுகிறது.

இது 1,066அடி உயரமுள்ளது. அதன் அருகில் இடும்பன் குளம் உள்ளது. இக்குளத்தில் நீராடி, இடும்பனை வழிபட்டபின்னே பழநிமலை வேலவரைத் தரிசிக்கும் வழக்கம் உள்ளது. இம்மலையின் உச்சியில் இடும்பனுக்கு ஆலயம் உள்ளது. இடும்பனின் 13 அடி உயர சிலையை இங்கு தரிசிக்கலாம்.மேலும், பழநிமலை ஏறும் பாதியில் இடும்பனுக்குச் சிற்றாலயம் உள்ளது. அதில் கிழக்கு நோக்கி யவாறு இடும்பன் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறான். மலையேறும் அன்பர்கள் இவரை வணங்கிய பின்பே முருகனை தரிசிக்கச் செல்கின்றனர்.

காவடிகளின் அமைப்பும் அழகும் தொடக்கத்தில் மக்கள் சுமைகளைத் தூக்கிச் செல்லப் பயன்படுத்திய காவடிகள் அளவாலும் அமைப்பாலும் எளிய நிலையில் இருந்தன. அவை உறுதியான கல்மூங்கிலால் ஆன தண்டையும், அதன் இரு முனைகளில் பனைநார் கொண்டு தயாரிக்கப்பட்ட உரிகளையுமே கொண்டிருந்தன.

அன்பர்கள் மலைமுகடுகளில் வாழும் தெய்வங்களைப் பூஜிப்பதற்கான பூஜைப் பொருட்களைக் காவடியாக கட்டிக்கொண்டு செல்லும்போது அக்காவடிகள் தெய்வீகத்தன்மை கொண்டவையாகப் பரிணமித்தன. தெய்வங்களுக்கு உரியது என்பதால் அவை அழகுபடுத்தப்பட்டன. மயில் தோகைகள், மாவிலைகள், தர்ப்பைப்புல் முதலியவற்றைக் கட்டி, விபூதி குங்குமமிட்டு அழகுபடுத்தப்பட்டன. காலம் செல்லச்செல்ல அதன் அமைப்பும் அழகும் வளர்ந்து புதிய பரிமாணங்களை அடைந்தன.

புஷ்பக் காவடிகள்

 புஷ்பக்காவடிகள் என்பவை தொடக்க நிலைக் காவடிகளின் வடிவத்தைக் கொண்டதாகும். இதில் காவடித் தண்டாக மூங்கிலையே பயன்படுத்துகின்றனர். இருபுறங்களிலும் பனையோலை அல்லது மூங்கிலால் முடையப்பட்ட பூக்குடலைகள் தொங்கவிடப்பட்டிருக்கும். அதுபோல் பிரம்ம தண்டையும் உயர்ந்த மரத்தில் கடைந்தெடுத்துப் பூண்கள் இட்டு, அதில் மயில், சேவல், ஓம், முருகன் போன்ற வடிவங்களையும் அமைத்து அழகூட்டுகின்றனர்.

திருத்தணிக்கு நேர்ந்து கொண்டு ஆண்டுதோறும் புஷ்பகாவடிகள் எடுக்கும் குடும்பங்கள் அனேகம் உள்ளன. இந்தக் குடும்பங்களில் மேலே சொன்னவாறு கலைநயத்துடன் செய்யப்பட்ட புஷ்பக் காவடிகள் உள்ளன. ஆடிக்கிருத்திகையன்று, காவடிக்குப் பூஜை செய்து, காவடி எடுக்கும் இவர்கள் கோயிலுக்குச் சென்று மீண்டதும் காவடிகளை உறையிட்டுப் பத்திரப்படுத்தி வைத்துவிடுவர்.

பண்டியல் காவடிகள்

அடுத்த வகையான காவடிகள் வில் வடிவக் காவடிகள். இதில் இருபக்கமும் முகப்பு எனப்படும் பலகைகள் இருக்கும். பலகைகளின் கீழ்ப்புறம் கால்களும் மேற்புறம் அரைவட்டமாகவும் இருக்கும். காவடித்தண்டின் இருமுனைகளிலும் இந்த முகப்புப் பலகைகளின் மையத்தை வைத்துப் பொருத்துவர்.

இரண்டு பலகைகளுடன் அரைவட்ட வடிவில் அமைந்த பிரம்பு அல்லது மூங்கிலை மூன்று அல்லது ஐந்து சிம்புகளால் இணைப்பர். அதன் மீது துணியை விரித்துக் கட்டுகின்றனர். இந்தத் துணிவிரிப்பு காவடிக்கு அழகூட்டுவதுடன், அதைத் தூக்கிச் செல்பவர்களுக்கு நிழல் தரும் அமைப்பாகவும் உள்ளது. எளிய நிலையில் உள்ளவர்கள் காவித்துணிகளையே மேல் விரிப்பாகப் பயன்படுத்துகின்றனர்.

 வசதிமிக்கவர்கள் வாய்ப்புகளுக்கேற்ப பூவேலைகள் செய்யப்பட்ட பட்டு விரிப்புகளைப் பயன்படுத்துவார்கள். விரிப்புகளின் ஓரத்தில் மணிச்சரங்கள், குஞ்சலங்கள், ஜாலர்கள் ஆகியவற்றை இணைத்து மேலும் அழகூட்டுவர். காவடியின் மேல் விரிப்பாகத் துணிகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக அரைவட்டப் பகுதியில் வாழை மட்டை களை வைத்துக் கட்டி அதன் மீது தென்னங்குருத்துகளைக் கொண்டு அலங்கரித்துக் காவடி எடுக்கின்றனர். சுவாமி மலையில் இத்தகைய காவடிகள் அதிக அளவில் எடுக்கப்படுகின்றன.

கேரளமக்களிடமும் குருத்தோலைகளால் அலங்கரிக்கப்பட்ட காவடிகளை எடுக்கும் வழக்கம் அதிக அளவில் உள்ளது. காவடியில் முன்னும் பின்னுமாக உள்ள இரு பலகைகளின் இருபுறங்களிலும் மயில் தோகைக் கற்றைகளைக் கட்டுவர். இந்த நான்கு மயில் தோகைக் கட்டுகளும் காவடிக்கு அழகூட்டு கின்றன. இத்துடன் மலர் மாலைகளும் தொங்கவிடப்படும். காவடித்தண்டின் இருமுனைகளிலும் பலகைகளையொட்டி சிறு கலசங்களில் பால், தயிர், தேன், பன்னீர் முதலிய அபிஷேகப் பொருட்களைக் காவித்துணியில் பொதித்து கட்டி வைப்பர்.

இப்பொருட்களைக் கொண்டே முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்வர். காவடித் தண்டை தோளில் நிற்பதற்கு ஏற்ப வழவழப்பாகவும் உருளை வடிவிலும் அமைக்கின்றனர். இருபுறமும் அமையும் முகப்பு பலகைகளில் விநாயகர், வள்ளி, தெய்வானை உடனாய முருகன், பால சுப்ரமணியர், முதலான தெய்வத்திருவுருவங்களுடன் யாளி, குதிரை, கிளி, மகரம் முதலான உருவங்களையும் கொடிமலர்களையும் செதுக்கி அமைக்கின்றனர்.

இத்தகைய காவடிகள் அற்புதக் கலைப்படைப்பாகத் திகழ்கின்றன. செட்டிநாட்டு மக்கள் பக்கப்பலகைகளின் மீது வெள்ளித்தகட்டிலும், செம்புத் தகட்டிலும் கலைவேலைப்பாடுகளுடன் கூடிய தெய்வ வடிவங்களைச் செய்து பொதித்துள்ளனர். மேலே விரிக்கும் துணியிலும் ஜரிகை வேலைப்பாடுகள், பட்டுக் குஞ்சங்கள், வண்ணவண்ணப்பூ வேலைகள் செய்துள்ளனர்.  காலங்கள் தோறும் காவடிகள் கலையழகைப் பெற்றுக் கொண்டே இருக்கின்றன.

இளநீர்க் காவடி

காவடிகளில் இளநீர்க் காவடி மட்டும் பழமை மாறாத தோற்றம் கொண்டது. கம்பு அல்லது பனைமட்டையைக் காவடித் தண்டாகக் கொண்டு இருபுறங்களிலும் இளநீர்க் காய்களைக் குலைகளாகக் கட்டிக்கொண்டு மேளதாளங்களின்றி வேல், வேல், வேல், வேல் என்று முழங்கிக் கொண்டு வருகின்றனர்.

வைகாசி விசாகத் திருநாளில் இத்தகைய காவடிகள் ஏராளமாய் வருகின்றன. இவ்விளநீர் முருகன் அபிடேகத்திற்குப் பயன்படுகிறது. திருச்செந்தூர் முருகனுக்கு இளநீர்க் காவடிகள் அதிகம் செலுத்தப்படுகின்றன. போரில் வெற்றிபெற்று ஜெயந்திநாதனாக இருக்கும் முருகனின் உடலும் உள்ளமும் குளிரும்பொருட்டு இளநீர்க் காவடி செலுத்தப்படுவதாகக் கூறுகின்றனர்.

அபிஷேகக் காவடி


ஆதியில் மனிதன் போற்றி வழிபட்ட தெய்வங்கள் யாவும் மலையின் உச்சியில் வீற்றிருந்தன. சிவபெருமான் பனிமலையான கையிலயங்கிரியின் உச்சியில் வீற்றிருக்கிறான். கொற்றவை மலைக்கிழத்தி என்று அழைக்கப்படுகிறாள்.

முருகன், திருமால் முதலியோரும் மலைகளில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். தமிழகத்தின் வடவெல்லையான திருவேங்கடம் நெடியொன் குன்றம் என்றே அழைக்கப்படுகிறது. முருகன் குன்றுதோறும் வீற்றிருக்கும் தெய்வமாகப் பேசப்படுகிறான்.

இவ்விதம் மலையுச்சியில் வீற்றிருக்கும் தெய்வங்களை வழிபடும் பொருட்டுச் செல்லும் அன்பர்கள் அத்தெய்வங்களின் பூசைக்குத் தேவையான பொருட்களை எளிதில் சுமந்து செல்லும் பொருட்டுக் காவடியில் கட்டி எடுத்துச் செல்கின்றனர்.

 குறிப்பாக தண்ணீரை எடுத்துச் செல்கின்றனர். மலைகளின் மீது சுனைகள் இருந்தபோதிலும் சுனைகளில் உள்ள நீர் விலங்குகள் வாய் வைத்தாகவும், நெடுநாள் தேங்கி பாசி கொண்டதாகவும் இருக்கும். அவற்றைப் புதியவர்கள் அருந்தினால் வயிற்றுப் போக்கு, ஜுரம் முதலிய துன்பங்கள் உண்டாகும்.

அருவி நீர் மட்டுமே அருந்துவதற்குப் பயனாகும். அது மலை முகடுகளில் கிடைக்காது. அதனால் தெய்வங்களுக்கு நீராட்ட வேண்டிய தண்ணீரை எடுத்துச் செல்கின்றனர். தோல்பைகளில் நீரை எடுத்துச் செல்வது வழக்கம்.

இவையே தீர்த்தக் காவடிகள் எனப்பட்டன. பின்னாளில் அபிஷேகம் செய்வதற்குரிய தண்ணீரை மட்டுமல்லாது தேன், பன்னீர், பழங்கள், வாசனைப் பொடிகள் முதலியவற்றைத் தத்தம் சக்திகேற்ப எடுத்துச் சென்று தெய்வங்களை நீராட்டி மகிழ்வித்துத் தானும் மகிழ்ந்தனர்.

மலை மீது நிற்கும் தெய்வமான சிவபெருமானும், முருகனும் அபிஷேகப் பிரியர்களாக இருக்கின்றனர். அவர்களுக்கு தேன், பன்னீர் முதலியவற்றைக் காவடியாகக் கட்டிக் கொண்டு சென்று அபிஷேகம் செய்து மகிழ்கின்றனர்.

பழநிமலைமுருகன் அபிஷேகத்தை விரும்பும் அற்புதன். அவனுக்கு நாள் முழுவதும் அபிஷேகம் நடைபெறுகிறது. அன்பர்கள் அபிஷேகம் செய்வதற்குரிய பலவிதமான பொருட்களை காவடியில் கட்டிக்கொண்டு வரும் பொருட்களை பட்டியலிட்டுக் காட்டுகிறது. பழநி சந்நதிமுறை எனும் நூலில் இடம்பெற்றுள்ள பாடல்.

வடிமதுக் காவடிகள் சர்க்கரைக் காவடிகள் மாங்கனிக் காவடிகள் நெய் வார்த்த காவடிகள் பல தீர்த்தக் காவடிகள் பால் வைத்த காவடிகள் பொடிவைத்த காவடிகள் சந்தனக் காவடிகள்
கற்பூரக் காவடிகள் சீர் புஷ்பக்காவடிகள் இளநீர் பன்னீர்க் காவடிகள் புனுகுக் காவடிகள் வருவோர் முடியெலாங் காவடிகள் தோளெலாங்காவடிகள் முதுகெலாங் காவடிகளாய்
முக்காத வழிகள் எட்போடிட விடமின்றி முக்கியமலைமீதிலேறும் படியெலாங்காவடிகள்காவடிகளாக இப்பாரெலாம் பூஜை கொண்டாய் பழமறைகள் சொல்லாய சிவதொழுமலர்கள்அனுகூல பழநிமலை வடிவேலனே! என்பதாகும்.

இதன் மூலம் மது, சர்க்கரை, தேன், மாம்பழங்கள், நெய், நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஓடிக்கொண்டிருக்கும் கங்கை, யமுனை, நர்மதை, காவிரி முதலான புண்யதீர்த்தங்கள், விபூதி, சந்தனம், பச்சைக்கற்பூரம், கற்பூரம், பூக்கள், இளநீர், மலர்கள், பன்னீர், புனுகு, ஜவ்வாது, கோரோஜனை எனப் பலவிதமான பொருட்களைப் பெருமானுக்குக் காவடியாகக்கட்டி வந்ததை
அறிய முடிகிறது.

-பூசை அருணவசந்தன்