ஆத்தி மரத்துக்கும் தாழம்பூவுக்கும் என்ன தொடர்பு?



தலவிருட்சங்கள் தரும் பலன்கள் - ஆத்தி மரம்

இன்றைக்கும் தமிழ் நாட்டில் ஆர்க்காடு, ஆலங்காடு, வேற்காடு, களக்காடு என காடுகள் பெயரில் ஊர்கள் உள்ளன. இவற்றில் ஆர் என்பது ஆத்தியை குறிக்கும் சொல்லாகும். ஆத்தி மலர் மாலையை அணிந்த சோழ மன்னனை ஆரங்கண்ணி சோழன் என்று சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த காலத்தில் ஆத்தி மரம் நிறைந்த பகுதிதான் இன்றைக்கு ஆர்க்காடு என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

ஆர்ப்பாக்கம் என்ற பெயரில் ஒரு ஊரும்உள்ளது. பழமை வாய்ந்த சோழர்களின் தலைநகராகவும், பாடல் பெற்ற திருத்தலமாகவும் விளங்கும் திருவாரூர் ஆதி காலத்தில் ஆத்தி மரங்கள் அதிகம் இருந்தமையால்தான் ஆரூர் எனப்பட்டது.

காட்டு அத்தி என்று அழைக்கப்படும் ஆத்தி மரத்துக்கும் மருத்துவத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. கல்லீரல் வீக்கம் நோயை நம்மால் உடனடியாக உணரமுடியாது. இதுபோன்ற நோய்களில் இருந்தும், தகாத உடலுறவால் ஏற்படும் நோய், வெட்டை நோய், பித்தம், வாதம் போன்ற நோய்களை குணப்படுத்தும் மூலிகை மரமாக விளங்குவது ஆத்தி மரம்.

இலக்கியங்களில் பாடப்பெற்ற மரங்களில் ஆத்தி மரத்துக்கும் தனி இடம் உண்டு. இந்த மரம் இந்தியா மற்றும் இலங்கையில் அதிகமாக காணப்படுகிறது. இது ஒரு பசுமையான மரம்.
சுமார் 4 மீட்டர் உயரத்துக்கு வளரக்கூடியது. இலைகள் அரை வட்ட வடிவத்துடன் ஒன்றை ஒன்று இணைத்தது போன்று காணப்படும். டிசம்பர் முதல் மார்ச் மாதம் வரை பூக்கும். மலர்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும். காய்கள் இளம் பச்சை நிறம் கொண்டு கனியாகும்போது பழுப்பு நிறமாகிவிடும்.

தமிழகத்தில் ஆத்தி மரம் மலை அத்தி, அரசமந்தம், பேயத்தி என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த மரத்தின் இலை, காய், கனி, பட்டை,

வேர் என அனைத்து பாகமும் மருத்துவ குணம் வாய்ந்தது. மரத்தின் பட்டையில் இருந்து நார் எடுக்கலாம். வீடுகளில் அலங்கார மரமாகவும் வளர்க்கிறார்கள். ஆத்தி மரத்தின் வேர், பட்டையை இடித்து தண்ணீரில் போட்டு காய்ச்சி குடித்து வந்தால்

கல்லீரலில் ஏற்பட்டு இருக்கும் வீக்கம் வலி இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகும். நல்ல பசியை உண்டாக்கும். குடற்புழு மடிந்து போகும். ஆத்திக் கனியை தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்துவிட்டு பிறகு அந்த தண்ணீரால் வாய்க்கொப்பளித்தால் நாக்கில் ஏற்படும் புண், தொண்டை நோய் குணமாகும். பித்தம், வாதம் சம்பந்தப்பட்ட நோய்களும் குணமாகிவிடும். சிறுநீரக நோய்களுக்கும், புற்று நோய்களுக்கும் ஆத்தி மரம் மருந்தாகப் பயன்படுகிறது.

இம்மரத்தின் பட்டையை சீதபேதி, காய்ச்சல், தோல் நோய்களுக்கும், உடல் வீக்கத்துக்கும், சர்க்கரை நோயாளிகளுக்கும், பெண்களுக்கு ஏற்படும் ரத்தப்போக்கை நிறுத்தவும், இந்திரிய கோளாறுகளுக்கும், தகாத உடலுறவால் ஏற்படும் வெட்டை நோய்களுக்கும், குஷ்ட ரோக தடிப்புகளுக்கும் மருந்தாகக் கொடுக்கிறார்கள். பேதி, மாந்தம்,
இருமலுக்கு நல்ல மருந்து. நச்சை நீக்குகிறது.

காய் சிறுநீர் பெருக்கியாக நோயாளிகளுக்கு பயன்படுகிறது. மலர் சீதபேதியை கட்டுப்படுத்தி குடற் புழுக்களை கொல்கிறது. விதை விஷக்கடிக்கும், புண்களுக்கும் மருந்தாகிறது. பட்டையை தண்ணீரில் போட்டு காய்ச்சி அந்நீரால் குளித்து வந்தால் உடலில் உள்ள படை நீங்கிவிடும்.

இப்படி பல்வேறு மருத்துவ குணத்துடன் மூலிகை மரமாக இருக்கும் ஆத்தி மரம் நம் தமிழகத்தில் சில சிவன் கோயில்களில் தலவிருட்சமாக இறைவனோடு சேர்த்து வணங்கப்படுகிறது. இந்த மரத்துக்கும் தாழம்பூவுக்கும் தொடர்பு இருக்கிறது என்கிறார்கள்.

இறைவனின் முடியை படைப்புக் கடவுளான பிரம்மன் பார்த்ததாக பொய்ச்சாட்சியம் அளித்த தாழம்பூவை ‘எந்த ஒரு கோயிலிலும் தனக்கு நடைபெறும் பூஜையில் பயன்படுத்த மாட்டார்கள் என்று இறைவன் சபித்துவிட்டார். பிரம்மாவுக்காக பொய் சொன்னதால் ஏற்பட்ட பாவத்தைப்போக்க, தாழம்பூ திருச்செங்காட்டங் குடியில் ஆத்தி மரமாக முளைத்து இறைவனுக்கும், பக்தர்களுக்கும் நிழல் தந்து தன் பாவத்தை போக்கிக்கொள்வதாக கூறப்படுகிறது.

 அதேபோல் அவ்வையார், ஆத்தி சூடி அமர்ந்த தேவனே என்று பாடி சிவபெருமானை வணங்கியிருக்கிறார். சிவபெருமானைப்பற்றி ஆர்புனை சடையோன் என்று புட்ப விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஆர் என்பது ஆத்தியாகும். எனவே ஆத்தி மரத்துக்கும் சிவபெருமானுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

திருமுறையில் பாடல் பெற்ற திருத்தலங்களான திருவாரூர் மாவட்டம் திருச்செங்காட்டான்குடி, திருச்செற்றேமம், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருவாப்பாடி பாலுகந்தேஸ்வரர், பெரம்பலூர் மாவட்டம் நாகமங்கலம் சோகேஸ்வரர், பெரியநாயகியம்மை ஆகிய திருக்கோயில்களில் ஆத்தி மரம் தலவிருட்சமாக வணங்கப்படுகிறது.

திருவாரூர் மாவட்டம் திருச்செங்காட்டான்குடி கிராமம் முன்பொரு காலத்தில் ஆத்தி மரங்கள் அதிகம் வளர்ந்திருந்த வனப்பகுதியாகவே இருந்தது. காடுபோல் வளர்ந்திருந்த ஆத்தி மரத்தடியில் ஒரு நாள் சிவபெருமான் அந்த கிராம மக்களுக்கு காட்சி அளித்து அருள்பாலித்ததாகவும் கூறப்படுகிறது. அதன்பிறகே இந்த வனப்பகுதியில் கோயில் எழுப்பப்பட்டது. இதனால்தான் இந்தத் தலத்தில் உள்ள இறைவனை ஆதிவனந்தர் என்றும் பக்தர்கள் அழைக்கிறார்கள்.

திருச்செங்காட்டன்குடியில் குடிகொண்டிருக்கும் இறைவனைப்பற்றி,
“பைங்கோட்டு மலர்ப்புன்னைப் பறவைகாள் பயப்பூச்
சங்காட்டந் தவிர்த்தென்னைத் தவிராநோய்தந்தானே
செங்காட்டங் கடிமேய சிறுத்தொண்டன் பணி செய்ய
வெங்காட்டுள் அனல்ஏந்தி விளையாடும்  பெருமானே!’’ 
- என்று திருஞானசம்பந்தர் பாடுகிறார்.

விநாயகரால் சம்ஹாரம் செய்யப்பட்ட கஜமுகாசுரனின் செங்குருதி இப்பகுதியில் ஆறாக ஓடியதாம். எனவே இத்தலம் ‘திருச்செங்காட்டங்குடி’ என்று அழைக்கப்படுகிறது. ‘ரத்தாரண்யக்ஷேத்ரம்’ என்பது இத்தலத்தின் வடமொழிப் பெயர்.இத்தல மூலவர் சுயம்பு மூர்த்தி. இந்த உத்திராபசுபதீஸ்வரர் நெற்றியில் காயத்துடனே இப்போதும் காட்சி தருகிறார்.

 கோயில் பிராகாரத்தில் புஜங்கலலித மூர்த்தி, கஜசம்ஹார மூர்த்தி, ஊர்த்துவதாண்டவர், காலசம்ஹாரமூர்த்தி, கங்காளமூர்த்தி, பிட்சாடனார், திரிபுரசம்ஹார மூர்த்தி, பைரவர் என வரிசையாக எட்டு சம்ஹார மூர்த்திகள் காட்சி தருவது விசேஷமாகும். இக்கோயிலில் அட்ட வீரட்ட தலங்களிலுள்ள சுவாமிகளையும் இங்கு தரிசிக்கலாம்.

சிவன் சந்நதி கோஷ்டத்தில் உள்ள துர்க்கை எட்டு கைகளில் ஆயுதம் ஏந்தி காட்சி தருகிறாள். இவள் ஒரு கையில் வில்லுடன் காட்சி தருவது சிறப்பு. சிறுதொண்டரை கைலாயத்திற்கு அழைத்துச் சென்ற சிற்பம் இக்கோயிலில் உள்ளது. பிராகாரத்தில் அர்த்தநாரீஸ்வரர், பிரம்மா, நால்வர், சங்கநிதி, பதும நிதியுடன் நாகர், இரட்டை பைரவர் இருக்கின்றனர். நவக்கிரக மண்டபத்தில் சூரியன் மட்டும் உயர்ந்த பீடத்தில் காட்சி தருகிறார். மூலவர் கணபதீஸ்வரருக்கு வலப்புறத்தில் தனி விமானத்துடன் கூடிய சந்நதியில் உத்திராபசுபதீஸ்வரர் இருக்கிறார்.

இவரது பெயரிலேயே தலமும் அழைக்கப்படுகிறது. கைகளில் உடுக்கை, திருவோடு, திரிசூலத்துடன் இவர் காட்சி தருகிறார்.முன்பொரு காலத்தில் பரஞ்ஜோதி என்பவர், பல்லவ மன்னரின் போர்ப்படை தளபதியாக இருந்தார்.

சிவபக்தரான இவர், சிவன் அருளால் பல்வேறு போர்களிலும் வெற்றி பெற்றார். பரஞ்ஜோதியாரின் பக்தியையும், சிவத்தொண்டையும் தெரிந்துகொண்ட மன்னன், அவருக்கு ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால் அது சிவனுக்கே நேரும் அசம்பாவிதமாக கருதினான். இதனால் அவரை சிவத்தொண்டு செய்துவரும்படி மன்னன் வேண்டிக்கொண்டான். மன்னரின் வேண்டுகோளை அவரும் ஏற்றுக்கொண்டார்.

இதற்கிடையே பரஞ்ஜோதி மங்கை நல்லாள் என்பவரை மணந்து, சீராளன் என்னும் மகனைப் பெற்றார். தினமும் சிவத்தொண்டர்களுக்கு உணவு படைத்த பிறகே, தான் உண்பதை வழக்கமாக கொண்டிருந்த இத்தம்பதியினர், சிவனடியார்கள் கேட்பதை இல்லை என்று சொல்லாமல் படைத்து வந்தனர்.

ஒரு நாள் சிறுத்தொண்டர் வீட்டுக்கு சிவபெருமானே,  அடியார் வேடத்தில் வந்தார். அவரை வரவேற்ற தம்பதியர் அவரை உபசரித்தனர். ஆனால், அவரோ, சிறுத்தொண்டரின் மகனை சமைத்து படைத்தால் மட்டுமே, உணவு சாப்பிட வருவதாக கூறினார். அவரும் ஏற்றுக்கொண்டு மகனை அறுத்து, சமைத்தார். சாப்பிடும் முன்பு அடியார், சிறுத்தொண்டரின் மகனையும் சாப்பிடுவதற்காக அழைத்து வரும்படி கூறினார்.

சிவனடியாரின் கட்டளையைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்த சிறுத்தொண்டரும், மனைவியும் வெளியில் நின்று மகனை அழைக்க, அவன் ஓடி வந்தான்! மகிழ்ந்த தம்பதியர் வீட்டிற்குள் சென்றபோது, அடியவர் வடிவில் வந்த சிவன், அம்பிகையுடன் காட்சி தந்து, நால்வருக்கும் முக்தி அளித்து அருள்புரிந்தார். இவரே இங்கு உத்திராபசுபதீஸ்வரராக காட்சி தருகிறார். இவரது சந்நதி எதிரில் காட்டாத்தி மரமும், சிறுத்தொண்டர் குடும்பத்தினரும் காட்சி தருகின்றனர்.

இப்பகுதியை ஆட்சி செய்த மன்னர் ஒருவருக்கு குழந்தை இல்லை. சிவபக்தரான அவர் குழந்தைக்காக சிவனை வேண்டி யாகம் நடத்தினார். சிவன் அசரீரியாக அம்பிகையே அவருக்கு மகளாக பிறப்பாள் என்றார்.

ஒரு நாள் வேட்டையாடச் சென்றபோது மன்னர் 4 பெண் குழந்தைகளைக் கண்டார். அந்தக் குழந்தைகளை நல்ல முறையில் மன்னர் வளர்த்து வந்தார். அவர்கள் பிறப்பிலேயே சிவபக்தைகளாக திகழ்ந்தனர். தகுந்த பருவத்தில் அவர்களை மணந்து கொள்ளும்படி சிவனிடம் வேண்டினார். சிவனும் மணந்துகொண்டார். இந்த அம்பிகைகள் நால்வரும் இப்பகுதியில் உள்ள நான்கு தலங்களில் அருட்காட்சி தருகின்றனர்.

இத்தலத்தில் அம்பிகை வாய்த்த திருகுழல் நாயகியாகவும், திருப்புகலூரில் கருந்தாழ்குழலியம்மை, கணபதீச்சரத்தில் சரிவார் குழலியம்மை, திருமருகல் தலத்தில் வண்டார் குழலியம்மையாகவும் பக்தர்களுக்கு காட்சி தருகிறாள்.

 அம்பிகையர் நால்வருக்கும், ‘சூலிகாம்பாள்’ என்ற பொதுப் பெயரும் உள்ளது. ஒரு முறை இந்த பகுதியில் வசித்த அம்மனின் பக்தையான ஏழைப்பெண் ஒருத்தி கர்ப்பமுற்றாள். ஒரு நாள் இரவில் அவளது தாயார், ஆற்றைக் கடந்து வெளியில் சென்றுவிட்டாள்.

அன்றிரவு பலத்த மழை பெய்தது. இதனால் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அவளால் கரையைக் கடந்து வீடு திரும்பமுடியவில்லை. அப்போது அம்பிகையே அவளது தாயார் வடிவில் சென்று அந்தப் பெண்ணுக்கு பிரசவம் பார்த்தாள். எனவே இந்த நான்கு தலங்களிலுள்ள அம்பிகைக்கும் ‘சூலிகாம்பாள்’ என்ற பெயரும் உண்டு. ‘சூல்’ என்றால் ‘கரு’வைக் குறிக்கும்.அன்று இரவு பிரசவம் பார்த்துவிட்டு இரவில் தாமதமாக கோயிலுக்குச் சென்றார்.

இதனால் அம்பிகை கோயிலுக்குள் செல்ல முடியாமல் வெளியே நின்றுவிட்டாள். எனவே இந்த நான்கு தலங்களிலும் அம்பாள் சந்நதி வெளியேதான் அமைந்துள்ளது. இந்தத் தலங்களில் உள்ள அன்னைக்கு அர்த்தஜாம பூஜையின்போது மட்டும் சம்பா அரிசி, மிளகு, சீரகம், உப்பு, நெய் கலந்த சாத நைவேத்தியம் படைக்கப்படுகிறது. செய்த தவறுக்கு பிராயச்சித்தம் வேண்டு பவர்கள் இங்கு சுவாமியிடம் வேண்டிக் கொள்கிறார்கள். தோஷம், மனக்குழப்பங்கள் நீங்கவும் இங்கு வணங்கலாம்.

கர்ப்பிணிகள் அம்பிகையிடம் வேண்டிக்கொண்டால் சுகப்பிரசவம் நடக்கும். சிறுத்தொண்டருக்கு காட்சி தந்த சிவனுக்கு, இப்பகுதியை ஆண்ட மன்னன் சிலை வடிக்க முடிவு செய்தார். ஆனால், பலமுறை முயன்றும் சிலை சரியாக அமையவில்லை. அப்போது அங்கு வந்த சிவனடியார் ஒருவர் தாகத்திற்கு நீர் கேட்டார். சிற்பிகள் சிலை அமையாத கோபத்தில், சிலை செய்ய வைத்திருந்த உலோகக் கலவையை கொடுத்துவிட்டனர். அதை அருந்திய அடியார், அப்படியே சிலையாக மாறினார்.

சிவனே, சிலையாக அமைந்ததை உணர்ந்த மன்னர் அச்சிலையை இங்குபிரதிஷ்டை செய்தார். அப்போது அச்சிலையின்நெற்றியில் சிறிய புடைப்பு இருந்தது. அதனை சிற்பிகள் தட்டவே காயம் ஏற்பட்டு, ரத்தம் வழிந்தது.

பின்பு பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ வைக்கவே ரத்தம் நின்றது. தற்போதும் நெற்றியில் காயத்துடனே உத்திராபசுபதீஸ்வரர் காட்சி தருகிறார். சாயரட்சை பூஜையில் இவருக்கு பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ சாத்தப்படுகிறது. சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இத்தலத்துக்குச் சென்று இறைவனை வணங்கிவரலாம்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் மரமாக ஆத்தி மரம் உள்ளது. ஆகவே அவர்கள் இத்தலத்து ஈசனை வணங்கி வாழ்வாங்கு வாழலாம்.  இத்திருத்தலம், நன்னிலத்திலிருந்து வடகிழக்கே 15 கி.மீ. தொலைவில் உள்ளது. திருவாரூர்- திருமருகல் வழித்தடத்தில் நேரடி பேருந்து வசதி உள்ளது. திருப்புகலூர் வந்தும் எளிதில் திருங்செங்காட்டங்குடியை அடையலாம்.

சண்டேசுர நாயனார் வெண் மணலைச் சிவலிங்கமாகப் பிடித்து நாள்தோறும் ஆத்தி மரத்தடி யில் பூஜை செய்து வந்த தலம் இது. சேய்நலூரில் வாழ்ந்த சண்டேசுர நாயனார் தனது வீட்டில் இருந்து தினமும் ஆடு, மாடுகளை மேய்த்து ஆத்தியின் கீழ் ஆலமர் செல்வனுக்கு பசு மாடுகளிடம் இருந்து பாலைக் கறந்து தினமும் அபிஷேகம் செய்து வந்தார்.

இதன் காரணமாக இறைவனின் அனுக்கிரகத்தை பெற்று தொண்டர்களுக்கும் அதிபனாக இறைவன் உண்ட கலமும், உடுப்பனவும், சூடுவனவும் தந்தருளப் பெற்றார். இத்தலத்தின் இறைவன் அருள் பெற்ற காரணத்தால் சண்டீசர் என்ற பெயரும் இவருக்குக் கிட்டியது. இறைவனுக்கு தீபாராதனை நடைபெற்ற பிறகு சண்டீசருக்கும் நடைபெறுவது வழக்கம்.

மணியாற்றங் கரையில் பக்தர்களுக்கு அருள்
பாலித்து வரும் பாலுகந்தநாதரை,
‘கடலகம் ஏழினோடும் பவனமும் கலந்த விண்ணும்
கடலகத்து உயிரும்பாரும் ஒள்ளழல் ஆகிநின்று
தடமலர்க் கந்தமாலை தண்மதி பகலுமாகி
மடலவிழ் கொன்றைசூடி மன்னுமாப் பாடியாரே’
- என்று திருநாவுக்கரசர் பாடலைப் பாடி
திரு ஆய்ப்பாடி திருத்தலத்து இறைவனை
வணங்கிடுவோம்.

(விருட்சம் வளரும்)

தி.பெருமாள் மலர்மதி