தை அமாவாசை



தை அமாவாசை சிறப்பு கோயில்கள்!

 20.1.2015

ஒரு வருடத்தை இரண்டு அயனங்களாகப் பிரித்துள்ளனர். தை முதல் ஆனி வரை உள்ள ஆறு மாதம் உத்தராயண காலம் என்றும், ஆடி முதல் மார்கழி வரை உள்ள காலம் தட்சணாயன காலம் என்றும் அழைப்பர்.

 உத்தராயண கால ஆரம்ப மாதமாக தை மாதம் வருவதால் தை அமாவாசையும், தட்சணாயன கால ஆரம்ப மாதமாக ஆடி மாதம் வருவதால், ஆடி மாதத்தில் வரும் அமாவாசைத் திதி பிதுர் வழிபாட்டிற்கு புண்ணியமான தினம் என சாஸ்திர நூல்கள் கூறுகின்றன. சூரியனின் வடக்கு திசை பயணம் துவங்கும் உத்தராயண காலத்தின் துவக்கமான தை மாதம், மிகவும் புனிதமானது. அந்த மாதத்தில் வரும் அமாவாசையில், கடற்கரை தலங்களுக்குச் சென்று, முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வணங்குதல் மானிடராக பிறந்த ஒவ்வொருவரினது ஆன்மிகக் கடமையாகும்.

எந்த ஒரு பரிகாரமாக இருந்தாலும் அமாவாசையன்று செய்தால் அதற்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். ராகு-கேது பரிகாரம், சர்ப்பதோஷம், சனி, செவ்வாய் கிரகங்களால் ஏற்படக்கூடிய பிரச்னைகள், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் இந்த மாதிரியான வற்றிற்கு அமாவாசை திதியன்று பரிகாரம் செய்வது நல்லது.தை மாதத்தில் மகர ராசியில் சஞ்சரிக்கும் சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரு நேர் கோட்டில் (0 பாகையில்) அமையும் தினமே தை அமாவாசை திதியாக அனுஷ்டிக்கப் பெறுகின்றது.

வானவியல் கணிப்பின் படி பூமியை சந்திரன் வலம் சுற்றி வருவதும் பூமியும் சந்திரனும் இணைந்து சூரியனை வலமாக சுற்றி வருவதும் நிரூபிக்கப் பெற்ற உண்மைகள். சூரிய பகவான் ஆண்மை, ஆற்றல், வீரம் என்பவற்றை எல்லாம் எமக்குத் தரவல்லவர். சந்திரன் நமது மனதுக்கு அதிபதியானவர். இதனால் மகிழ்ச்சி, தெளிவான தெளிந்த அறிவு, இன்பம், உற்சாகம் எல்லாம் தரவல்லவர். சூரியனைப் “பிதுர் காரகன்’’ என்றும், சந்திரனை “மாதுர் காரகன்’’ என்றும் சோதிடம் கூறுகின்றது.

அதனால் சூரியனும், சந்திரனும் பிதா, மாதாவாக வழிபடும் தெய்வங்களாகக் கருதப்படுகிறார்கள். இத்தகைய பெருமைகளை எல்லாம் தருகின்ற சூரிய, சந்திரனை தந்தை, தாய் இழந்த வர்கள் அமாவாசை, பூரண தினங்களில் வழிபடுகின்றனர்.

அமாவாசை தினத்தில் தந்தையை இழந்தவர்களும், பவுர்ணமி தினத்தில் அன்னையை இழந்தவர்களும் வழிபடுவது புராதன காலம் தொட்டு பின் பற்றிவரும் ஒரு வழக்கமாகும். அமாவாசை திதி, மாதா மாதம் நிகழ்ந் தாலும் அவற்றுள் தை மாததிலும், ஆடி மாதத்தில் வரும் அமாவாசை திதிக்கு அதிக சிறப்பு உண்டு.

தை மாதம் முருகனையும், அம்பாளையும் பூஜித்துக் கொண்டாடும் மாதம் என்றாலும், தை அமாவாசை அன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்தால், அவர்களின் அருளாசியால் எண்ணற்ற நன்மைகள் ஏற்படும்.பித்ருக்களுக்கான கடனைச் சரியாக நிறைவேற்றுவதால் பல நன்மைகள் உண்டாகும். பித்ருக்களுக்கு திதி தருவது, பிண்டம் இடுவது, வழிபாடு செய்வது ஆகிய கடன் நிறைவேற்றப்பட வேண்டும் என்கிறது சாஸ்திரம்.

 இக்கடனை அடைத்துவிட்டால் பிள்ளைகளின் வாழ்க்கை கலங்காதிருக்கும். மென்மேலும் சிறக்கும். பித்ரு கடனை நிறைவேற்றினால் நன்மைகள் வளரும் என்று சிவபெருமான் ராமபிரானிடம் கூறி இருக்கிறார். ராமசந்திர மூர்த்தி, தசரத சக்கரவர்த்திக்கும், ஜடாயுவுக்கும் எள்ளால் தர்ப்பணம் செய்து பிதுர் பூஜை செய்தார்.

அப்போது, சிவபெருமான் ராமரின் முன் தோன்றி, முன்னோருக்குத் தர்ப்பணம் செய்ததால் அனைத்துப் பாவங்களும் நீங்கி, எல்லா நன்மைகளும் தேடி வரும் என்றார் என்கிறது புராணச் செய்தி.தை அமாவாசையன்று பித்ருக்கள் பூலோகம் செல்ல யமதர்மன் அனுமதி தருவார். யம தூதர்கள் பித்ருக்களை சூரியனின் வாகனத்தில் பூலோகத்திற்கு அழைத்து வருவார்கள். பித்ருக்களும் அவரவர் சந்ததியினர் இல்லத்திற்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

அப்போது பித்ருக்கள், தங்கள் பிள்ளைகளையும் உறவினர்களையும் பார்க்க மிகுந்த பாசத்துடனும், பசியோடும் வருவார்களாம். அதனால், தை அமாவாசை அன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டியது அவசியம். இந்தத் தர்ப்பணமானது பித்ருக்களைக் குளிரச் செய்து குடும்பத்தில் துர் சம்பவங்கள் நடக்காமல் காக்கும். பித்ருக்களின் சாபத்திற்கு ஆளாகிவிட்டால் தெய்வத்தால்கூடக் கருணை காட்ட முடியாது. உதவி செய்ய முடியாது என்கிறது கருட புராணம்.

தை அமாவாசை அன்று ஆண்டின் பிற அமாவாசை நாட்களில் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் தர இயலாதவர்கள் ஆறு, கடல் போன்ற புனித நீர்நிலைகளில் நீராடி மூதாதையர்களுக்குப் படையல் செய்து திதி செய்வர். ராமேஸ்வரம், திருச்செந்தூர், முக்கடல் கூடும் கன்னியாகுமரி மற்றும் காவிரியின் முக்கூடல் தலமான பவானி இங்கெல்லாம் இத்தர்ப்பணத்தை அளிக்க மக்கள் கூடுவர்.

ராமேஸ்வரத்தில் பிரபலமான அருள்மிகு ராமநாத சுவாமி மற்றும் அம்பாள் ஆகியோரின் திருவுருவச்சிலைகள் தை அமாவாசையன்று அக்னி தீர்த்தத்திற்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டுப் புனித நீராடல் நடைபெறும். இதே நாளில் தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடுவர். ராமேஸ்வரம் கடற்கரையில் தங்களின் மூதாதையருக்குத் தர்ப்பணம் செய்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் கோயிலில் தை அமாவாசை தினத்தன்று லட்சதீபம் ஏற்றப்படுகிறது. அன்றைய தினம் அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்மன் கோயில் முழுவதும் ஒளிச்சுடர்களாகவே காணப்படும். இந்நாளில் பல்லாயிரக்கணக்கானோர் சுற்றுவட்டாரங்களில் இருந்து வந்து மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கோயிலின் பிராகாரங்கள் உள்ளிட்ட பகுதிகளில் தீபங்களை ஏற்றிவைத்து வழிபடுவார்கள்.

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் மற்றும் ராமேஸ்வரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர். இதற்காக மதுரை, திருவில்லிபுத்தூர் உள்ளிட்ட இடங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோயிலில் அமாவாசை, பவுர்ணமி, நவராத்திரி, மகா சிவராத்திரி, பிரதோஷம் ஆகிய நாட்கள் விசேஷமானவை. தை அமாவாசை தினத் தன்று சுந்தர மகாலிங்கம் சுவாமியை தரிசிக்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர்.

தை  அமாவாசைக்கு முதல் நாள் மாலை 6 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு பூஜையும், தொடர்ந்து சுந்தரமூர்த்தி, சந்தன மகாலிங்கம், பிலாவடி கருப்பசாமிக்கு விசேஷ வழிபாடு பூஜையும் நடைபெறும். பகல் 12 மணியளவில் சுந்தர மகாலிங்க சுவாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர், தேன், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 21 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். அபிஷேகத்திற்குப் பின் சுவாமி அலங்கரிக்கப்பட்டு இரவு 7 மணி வரை சிறப்பு பூஜை, ஆராதனை போன்றவை நடைபெறும்.

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படும். காலை 5 முதல் 6 மணி வரை ஸ்படிக லிங்க பூஜையும், 8 மணிக்கு ராமர் பஞ்சமூர்த்திகளுடன் கோயிலில் இருந்து புறப்பாடாகி அக்னி தீர்த்தக்கடலில் தீர்த்தவாரி உற்சவமும் நடைபெறும். அன்று பகல் முழுவதும் நடை திறந்து இருக்கும்.

இரவு 8 மணிக்கு ராமர் பஞ்சமூர்த்திகளுடன் வெள்ளி ரதத்தில் புறப்பாடாகி வீதியுலா நடக்கும். திருவள்ளூர் வீரராகவர் கோயிலில் மாதம் தோறும் அமாவாசை தினத்தில் இறந்த முன்னோர்களுக்கு திதி கொடுக்க பக்தர்கள் வருவார்கள். மகாளய, தை அமாவாசையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

தை அமாவாசை தினத்தில்  வீரராகவர் கோயிலுக்கு ஏராளமான வாகனங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்த வண்ணம் இருப்பர். இரவு கோயிலில் தங்கி, இன்று அதிகாலை கோயில் குளத்தின் கரையில் வாழை இலை போட்டு முன்னோர்களுக்கு பிடித்தமான உணவுகளை படைத்து, பிண்டங்களை குளத்தில் கரைத்து வழிபடுவர். திருவாரூர் விளமல் பதஞ்சலி மனோகரர் திருக்கோயிலில், தை அமாவாசையன்று அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. இங்கு பதஞ்சலி மனோகரர், கிழக்கு நோக்கியும், அம்மன் மதுரபாஷிணி தெற்கு நோக்கியும், அருள்பாலிக்கின்றனர்.

இத்திருத்தலம் திருவாரூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து தஞ்சாவூர் ரோட்டில் 2 கி.மீ. தூரத்தில் உள்ளது. இங்கு ஈசன் மண்ணால் ஆன சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தீப வழிபாடு நடக்கும் போது, அந்த ஒளி லிங்கத்திருமேனியில் பிரதிபலித்து, லிங்கமே தீப ஜோதியாக ஒளிர்வதை தரிசிக்கலாம். பொதுவாக சிவாலயங்களில் ஐப்பசி பவுர்ணமியன்று தான் அன்னாபிஷேகம் செய்வர். இங்கு எல்லா அமாவாசை நாட்களிலும் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.

பித்ருக்களுக்கு முறையாக திதி, தர்ப்பணம் செய்யாதவர்கள் தை அமாவாசையன்று, திருவாரூர் கமலாலய தீர்த்தத்திலுள்ள பிதுர் கட்டத்திலும், இங்குள்ள அக்னி தீர்த்தத்திலும் நீராடுகின்றனர். பின், சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்து, மோட்ச தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். இதனால் முன்னோர்கள் மகிழ்ச்சியடைந்து, தலைமுறை சிறக்க ஆசீர்வதிப்பர். விபத்தில் அகால மரணமடைந்தவர்களுக்காகவும், இறக்கும் தருவாயில் துன்புறுவோருக்காகவும் இங்கு மோட்ச தீபம் ஏற்றி வழிபடுகின்றனர்.

திருமங்கை ஆழ்வார் கார்த்திகை மாதம் கார்த்திகை நாள் அன்று நம்பெருமாள் திருமுன்பு பரமபக்தி தலையெடுத்து கேட்கவே மிகவும் இனிமையான திருநெடுந்தாண்டகம் என்னும் பிரபந்தத்தை  பாடியருளி பிறகு தயங்கி நின்றார். இதைக் கண்ட பெருமாள், ‘‘என்ன ஆழ்வீர் தயங்கி நிற்கிறீர்? என்ன வேண்டும், கேளும்’ என்று கூற, ஆழ்வார், “நீர் நம்மாழ்வார் பாடியருளிய திருவாய்மொழியானது வேதத்துக்கு சமம் என்று அங்கீகரித்து, மார்கழி சுக்லபக்ஷ ஏகாதசி தொடங்கி பத்து நாட்கள் வேதகோஷம் கேட்கும் பொழுது, திருவாய்மொழியையும் கேட்டருள வேண்டும்’’ என்று பிரார்த்தித்தார். பெருமாளும் அதற்கு இசைந்தார்.

இதற்காக நம்பெருமாள் நம்மாழ்வாரை ஆழ்வார் திருநகரியிலிருந்து திருவரங்கம் எழுந்தருளச் செய்து கொண்டு வர ஸ்ரீபாதம் தாங்குவோரிடம் ஆணையிட அவர்களும் அடுத்த நொடியே ஆழ்வார் திருநகரிக்கு புறப்பட, நம்பெருமாளை ஆஸ்தானத்திற்கு எழுந்தருளச் செய்ய ஆள் இல்லாமல் போய்விட்டது. அர்ச்சகர் மூலமாய் திருக்கைத்தலத்தில் எழுந்தருளினார் பெருமாள்.

கார்த்திகையில் கார்த்திகை நம்பெருமாள் கைத்தல சேவை இன்றளவும் பிரசித்தமாக நடைபெறுகிறது. அவ்வாறு நம்மாழ்வார் எழுந்தருளி பத்து நாள் அத்யயன உற்சவமும் முடிந்து, ஆழ்வாரை மறுபடியும் ஆழ்வார் திருநகரி வரை எழச்செய்து கொண்டு அங்கிருந்து ஸ்ரீபாதம் தாங்குவோரும் திருமங்கை ஆழ்வாரும் விடைபெற்றுக்கொண்டு திருவரங்கம் வந்து சேர்ந்தது தை அமாவாசை நாளில். அன்று நம்பெருமாளும் திருமஞ்சனக்காவேரியில் மஞ்சள் குளி உற்சவம் கண்டருளினார்.

இன்று வரை தை அமாவாசைக்கு நம்பெருமாள் மஞ்சள் குளி விழா பிரசித்தம். அத்யயன உற்சவத்தை சிறப்பாக நடத்தி கொடுத்த திருமங்கை ஆழ்வாரை பார்த்து நம்பெருமாள் “நீர் உம்மூரில் இந்த உற்சவத்தை உற்றார் உறவினரோடு சந்தோஷமாக கொண்டாடிக்கொள்ளும்’’ என்று பகுமானம் கொடுத்தருளினார்.இந்தியாவில் இரண்டே இரண்டு இடங்களில்தான் சூரியனுக்கு கோயில் உள்ளது. ஒன்று வடக்கே ஒரிசாவிலும் மற்றொன்று தெற்கே கும்பகோணம் மயிலாடுதுறை சாலையில் ஆடுதுறைக்கு அருகே அமைந்துள்ளது.

 சூரியபகவான் சாயா மற்றும் உஷா தேவியருடன் சிவசூரியன் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். சூரியனைச் சுற்றி மற்ற கிரகங்கள் அமைந்துள்ளன. சூரியனார் கோயில் எனும் இத்தலம் நவகிரகங்களுக்கென தனித்தமைந்து இருப்பதால் தோஷ நிவர்த்திக்காக ஏராளமான மக்கள் வந்து வழிபட்டு வரும் சிறப்பாலும் புகழ் வாய்ந்த தலமாகும்.

தை அமாவாசையிலிருந்து பத்து நாட்கள் சூரிய பகவானின் திருக்கல்யாண திருவிழா இங்கு நடைபெறுகிறது. சூரியன், நவகிரகங்கள் உடன் விநாயகர், விஸ்வநாதர், விசாலாட்சிக்கு சந்நதிகள் உள்ளன. கும்பகோணம் அணைக்கரை, ஆடுதுறை, மயிலாடுதுறை ஆகிய ஊர்களில் இருந்து பேருந்து வசதி உண்டு. அருகில் உள்ள ரயில் நிலையம் ஆடுதுறை மற்றும் கும்பகோணம்.

-தேவநாதன்