பிரசாதங்கள்



நட்ஸ் பேரீச்சம் பழம் ரோல்ஸ்

முதலாவது செய்முறை

என்னென்ன தேவை?
பேரீச்சம் பழம் - 12, முழு நட்ஸ் பாதாம்,
முந்திரி - 12, சாக்லெட் பார் - 1.

எப்படிச் செய்வது? 

பேரீச்சம் பழத்தை மத்தியில் கீறி ஒரு பாதாம் அல்லது முந்திரி வைத்து நிரப்பி வைக்கவும்.பொடிப்பதற்கு: சிறிது முந்திரி, வால் நட்ஸ், வெள்ளரி விதை அல்லது தோல் எடுத்த பாதாம், பிஸ்தாவை பொடிக்கவும்.

இப்போது சாக்லெட்டை டபிள் பாய்லரில் போட்டு அதாவது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து அதன் உள்ளே வேறு ஒரு பாத்திரத்தில் சாக்லெட்டை மிதமான தீயில் உருக்க வேண்டும். பின் இறக்கி மேலே சொன்னது போல் கீறி நிரப்பிய பேரீச்சம் பழத்தை சாக்லெட் சாஸில் ரோல் செய்து பின் பொடித்த நட்ஸில் மீண்டும் ரோல் செய்து குளிர்சாதன பெட்டியில் சிறிது நேரம் வைத்து எடுத்து பேரீச்சம் பழ ரோல்ஸை பரிமாறவும்.

இரண்டாவது செய்முறை

மேல் கொடுத்தது போல் சாக்லெட் சாஸ் செய்யவும் டபிள் பாய்லரில், பேரீச்சம் பழத்தை ஊறவைத்து கொள்ளவும். இப்போது பேரீச்சம் பழத்தை மசித்துக் கொள்ளவும். இந்த மசித்த பேரீச்சம் பழத்தை சாக்லெட் சாஸ்சுடன் சேர்த்து கிளறி உருட்டும் பதம் வந்ததும் இறக்கி விருப்பமான வடிவத்தில் உருட்டி பொடித்த நட்ஸ்களில் மீண்டும் ரோல் செய்து குளிரவைத்து பரிமாறவும். அல்லது அப்படியே பரிமாறவும். மிகவும் சத்தானது.

தேனும் தினைமாவும் முருகனுக்கு

என்னென்ன தேவை?

தினை - 2 கப், தேன் - தேவைக்கு, முந்திரி, உலர்ந்த திராட்சை, கற்கண்டு, ஏலக்காய் பொடி.
(குறிப்பு: பெரிய காதி கிராமோத்யோக் பவன் கடைகளில் தினை கிடைக்கும்.)

எப்படிச் செய்வது?

தினையை லேசாக வறுத்து மாவாக பொடித்துக் கொள்ளவும். இத்துடன் மேலே கொடுத்திருக்கும் யாவற்றையும் சேர்த்து கலந்து முருகனுக்கு படைக்கலாம்.
(குறிப்பு: சிலர் தினையை வறுக்காமல் செய்வார்கள்.)

வாழைப்பழ அல்வா

என்னென்ன தேவை?

வாழைப்பழம் - 6, சர்க்கரை - 150 கிராம், வறுத்த முந்திரிப் பருப்பு - 20, ஏலக்காய் தூள் - சிறிது, நெய் - 100 மிலி, கேசரிப் பவுடர் - ஒரு சிட்டிகை

எப்படிச் செய்வது?

வாழைப்பழத்தை தோல் உரித்து சிறு துண்டுகள் போட்டு, சிறிது நெய்யில் வதக்கி நன்றாக மசிக்கவும். இதில் சர்க்கரை, ஏலக்காய் தூள், கேசரிப் பவுடர் சேர்த்து நெய் விட்டு, முந்திரிப் பருப்பு போட்டு நன்றாக மீண்டும் கிளறி அல்வா பதம் வந்ததும் இறக்கவும். ஆறியதும் துண்டுகள் போடவும். (குறிப்பு: விசேஷ நாட்களில், போகி, பொங்கல் என்று வாழைப்பழம் மீந்து விட்டால் சுலபமாக இந்த அல்வா செய்து பரிமாறலாம்.)

தைப்பூசம் முருகப் பெருமானுக்கு பழநி பஞ்சாமிர்தம்


என்னென்ன தேவை?

வாழைப்பழம் - 8-6, பேரீச்சை - 10, தேன் - தேவைக்கு, திராட்சை உலர்ந்தது, பசும் நெய் - சிறிது, கற்கண்டு - தேவைக்கு, நாட்டுச்
சர்க்கரை - 100 கிராம், ஏலக்காய் முழுதாக - சிறிது

எப்படிச் செய்வது?

வாய கன்ற ஒரு பாத்திரத்தில் வாழைப்பழத்தை உரித்து நறுக்கி போடவும். விதை நீக்கி பொடித்த பேரீச்சம் பழத்தையும் போடவும். இத்துடன் மேல் கொடுத்துள்ள யாவற்றையும் சேர்த்து பிசைந்து கலந்து முருகனுக்கு பஞ்சாமிர்தம் தயார் செய்யவும்.

எள் மிட்டாய்


என்னென்ன தேவை?

கறுப்பு அல்லது வெள்ளை எள் - 300 கிராம், மண்டை வெல்லம் - 200 கிராம், பொடித்த வேர்க்கடலை (உடைத்தது) - 50 கிராம், கரைத்த கார்ன் பவுடர் - சிறிது, விருப்பமான அச்சு.

எப்படிச் செய்வது?

நல்ல தரமான எள்ளைக் கழுவி வடித்து சுத்தம் செய்து, ஒரு துணியின் மேல் நன்றாக காய வைக்கவும் (Fan அடியில்). பின் வெறும் இரும்புச்சட்டியில் வறுத்து வைத்துக் கொள்ளவும்.

பின் கடாயை அடுப்பில் வைத்து தேவையான தண்ணீர் ஊற்றி அதில் வெல்லத்தைத் தட்டிப் போட்டு மிதமான தீயில் கொதிக்க விடவும். இது கொதித்து வந்ததும் இறக்கி வடிக்கவும்.
பின் மீண்டும் பாகை அடுப்பில் வைத்து கம்பிப் பாகு பதத்திற்கு காய்ச்சி இறக்கி அதில் எள், வேர்க்கடலை சேர்த்து கிளறி ஒரு அச்சில் அல்லது விருப்பமான மூடியில் கார்ன் பவுடர் தடவி அதில் எள் பாகை ஊற்றவும். பின்ஆறியதும் எடுத்து வைக்கவும்.

(குறிப்பு: அச்சில் ஊற்றலாம் அல்லது உருண்டையாக பிடிக்கலாம்.)

வடைப் பருப்பு வடை

என்னென்ன தேவை?

வடைப் பருப்பு - 2 கப், பொடித்த இஞ்சி - சிறிது, பச்சை மிளகாய் - சிறிது. உலர்ந்த மிளகாய் - 6, கறிவேப்பிலை - சிறிது, உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப, பெருங்காயம் தேவைப்பட்டால். மல்லித்தூள் - சிறிது பொடித்தது, லவங்கம் - 4.

எப்படிச் செய்வது?

வடைப் பருப்பு என்பது  கடலை பருப்பு போல் உள்ள ஒரு பருப்பு. கோவை, ஈரோடு, சேலம் ஆகிய இடங்களில் கிடைக்கிறது. இப்போது சென்னை யிலும் கிடைக்கிறது. இந்தப் பருப்பை 2 மணி நேரம் ஊற வைத்து இத்துடன் காய்ந்த மிளகாய், உப்பு, பெருங்காயம், லவங்கம் சேர்த்து கெட்டியாக கரகரப்பாக அரைக்கவும்.  இத்துடன் மல்லி, கறிவேப்பிலை, இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து பிசைந்து வடையாக தட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும். இந்த வடைப் பருப்பு வடை நல்ல மணமாகவும் ருசியாகவும் இருக்கும்.(குறிப்பு: வடைப் பருப்பு கிடைக்காதவர்கள் கடலைப் பருப்பில் செய்யலாம்.)

தொகுப்பு: ஆர்.வைதேகி
 படங்கள்: ஆர்.கோபால்

சந்திரலேகா ராமமூர்த்தி