மகான்களின் தரிசனம் மனதைக் கொள்ளை கொண்டது



ஐரோப்பிய தேவாலயங்களிலும், நமது புனித தாவரமான துளசி, பாஸிலிகா என்ற பெயரில் வளர்க்கப்பட்டு, வணங்கப்பட்டு வரும் தகவலைப் படித்ததும் இன்ப அதிர்ச்சிக்கு ஆளாகிப் போனேன்.
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

வளமிகு வாழ்வை அள்ளித் தரும் மகாவஜ்ரேஸ்வரியை வழிபட ஆசை என்னுள் தோன்றியது. மனித உணர்ச்சியின் சூட்சுமங்களை விளக்கிய ஸ்ரீஸ்ரீரவிசங்கர் குருஜியின் ஆன்மிகக் கட்டுரையில் மனம் கட்டுண்டு களித்தது. தாங்கள் வழங்கிய 2015 காலண்டரில் மகான்களின் தரிசனம் மனதை கொள்ளை கொண்டது.
- எஸ்.சுந்தர், திருநெல்வேலி.

நீண்ட ஆயுள், ஆரோக்கியம் அருளும் ஸ்ரீசூர்ய கவச ஸ்தோத்திரம் பயனுடையதாக இருந்தது. மகோன்னத வளமருள்வாள் ஐஸ்வர்ய மகாலட்சுமி என்ற கட்டுரையைப் படித்தேன், அகமகிழ்ந்தேன். பனிரெண்டு அன்னையர் படங்களைப் பார்த்ததும் மனமும் முகமும் மலர்ந்தேன்.
- பொ.உமாதேவி, பு.புளியம்பட்டி.

தலவிருட்சங்கள் தரும் பலன்கள் பகுதியில் சிறுநீரகக் கோளாறுகளை சீராக்கும் கடம்பமரம் பற்றியும் அதன் பயன்கள் குறித்தும், நாவுக்கரசர், ஞானசம்பந்தர் முதலான நாயன்மார்களின் பாடல்களில் அவை இடம்பெற்றுள்ள முறைகளையும் பற்றி படித்தறிந்து பயனடைந்தேன்.
- அ.கிருஷ்ணகுமார், ஈரோடு.

திருச்சிக்கு அருகேயுள்ள திருநெடுங்குளத்தில் அமைந்திருக்கும் அந்த அற்புத சிவாலயத்தின் (இடர்களைவான் திருநெடுங்குளத்து ஈசன் கட்டுரை) ஆன்மிக சிறப்புகளை தெளிவாக்கியிருந்தது.
- வி.மோனிஷா ப்ரியங்கா, திருச்சி.

அட்டைப்படத்தில் ஐஸ்வர்ய மகாலட்சுமி படத்தை வெளியிட்டு வருடம் முழுதும் ஐஸ்வர்யம் பொங்க வழிவகுத்து விட்டீர்கள். தலையங்கத்தில் அமைதி, நிதானம் பற்றி எடுத்துரைத்தது மனதிற்கு நிம்மதி ஏற்படச் செய்தது. புத்தாண்டு பலன்களைப் படித்து பரிகாரங்கள் செய்தோம்.
- இரா.கல்யாணசுந்தரம், வேளச்சேரி.

இலக்கியமாக கொஞ்சம் பொங்கல் சுவைப்போம் கட்டுரை சங்க இலக்கியங்களில் தைத்திருநாள் எவ்வாறு சிறப்பிக்கப்பட்டன என்பதையும், சோழர் காலத்து கல்வெட்டில் புதியீடு என்ற சொல் தை மாத முதல் அறுவடையைக் குறிக்கும் வகையில் இடம் பெற்றிருந்தது என்பதையும் இப்போதுதான் அறிந்தேன்.
- ரமேஷ், புதுச்சேரி.

ஆன்மிகத்திலேயே தங்களை ஐக்கியமாக்கிக் கொண்ட பெரிய மகான்களின் மாத(ந்தோறும்) தரிசன காலண்டர் இதுவரை இப்படி யாரும் தராதது. தனிப்பட்ட வகையில் பூஜை அறையிலேயே மாட்டி தினமும் வழிபடச் செய்தது மகத்தான தொண்டு. வருடம் முழுவதும் நாங்கள் சகல ஐஸ்வர்யங்களுடன் திகழ அட்டையில் அந்த மகாலட்சுமியை வெளிக்காட்டி அவளின் அரும் பணிகளையும், வழிபடும் முறைகளையும் எடுத்துச் சொல்லியிருப்பது நாங்கள் செய்திட்ட கொடுப்பினை. மஹாவஜ்ரேஸ்வரியின் ஓவியத்தை ஸி.ஏ.ராமச்சந்திரன் அவர்கள் வஜ்ரமாகவே தீட்டிவிட்டார். பாலகுமாரனின் வர்ணனை, ம.செ.யின் ஓவியம் இரண்டும் மகா(பா)ரதம் வலம் வருவது போலல்லவா உள்ளது!
- சிம்மவாஹினி, வியாசர்பாடி.

திருமூலரின் திருமந்திரம் தேனாக இனிக்கிறது. இறைவனை துதிக்கும் மூன்று வகைகளுக்கும் முத்தான விளக்கங்கள். அருமை. பாராட்டுகள்.
- ரம்யா கிருஷ்ணன், நெல்லூர்.

ஆருத்ரா தரிசன நேரத்தில் அருமையான நடராஜர் தலங்கள். பொருத்தமான துணுக்குகள். பக்தித் தமிழ் என்று சொல்லச் சொல்ல இனிக்கிறது. ஆன்மிகம் பலன் ஆன்மிகம் பலன்தான்.
- சரோஜா, பெங்களூரு.

பழநி மகிமை படிக்கப் படிக்கப் பரவசமாய் இருக்குதையா. வாஸ்து குறிப்புகள் எளிமையாகவும் அருமையாகவும் உள்ளது. பாஸ்கருக்கு பாராட்டுகள். தெளிவு பெறுஓம் படித்து தெளிவு பெற்ஓம். அரசர்கள் வளர்த்த ஆன்மிகத்தில் புத்தஜாதகக் கதை அருமையிலும் அருமை.
- பத்மினி, சிங்கப்பெருமாள் கோவில்.

என்னசொல்லுது எதிர்காலம் கே.பி.வித்யாதரன் சொல்வதைத்தான் சொல்லுது. அதிலென்ன சந்தேகம். துல்லியமான குறிப்புகள். அம்சமான பதில்கள். விவரமான விளக்கங்கள். நன்றி.
- ராதா, மும்பை.

திடீர் விருந்தாளிகள் வந்தவுடனே தங்கள் இதழில் வெளியிட்டிருந்த பைனாப்பிள் போளியையும், மிளகு வடையையும் செய்து கொடுத்தேன். மனம் நிறைய பாராட்டி வாய் நிறைய வாழ்த்தினார்கள். தங்கள் இதழுக்கு நன்றி.
- பிரமீளா, திருச்சி.