பிரசாதங்கள்



-சந்திரலேகா ராமமூர்த்தி

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரா! நவம்பர் மாதம் 5ம் தேதி கந்தர் சஷ்டி விழா கோலாகலமாகக் கொண்டாடப்படவிருக்கிறது. அச்சமயம் பல்வேறு முருகன் தலங்களுக்குச் சென்று எம்பெருமானை தரிசித்து நற்பயன்களைப் பெறுவது நமது மரபு. அவ்வாறு திருத்தலங்களுக்குப் பயணம் மேற்கொள்ள இயலாதவர்கள் தத்தமது வீட்டு பூஜையறையிலேயே அந்தத் திருத்தலத்து முருகனையெல்லாம் மானசீகமாக வரவழைத்து, தரிசித்துக் கொண்டாடுவதும் வழக்கம்.

அப்படிக் கொண்டாடும்போது அந்தப் பேரழகனுக்குப் பல்வேறு வகையான நிவேதனங்களைப் படைத்து (மானசீகமாக அல்ல, நிஜமாகவே!) அவனருள் பெறலாம். அந்தக் ‘குறமகள் மனமகிழ் கோ’வுக்குப் பிடித்தமான நிவேதனங்களை இங்கே பார்க்கலாம்.

தேனும், தினை மாவும்

என்னென்ன தேவை?

பதப்படுத்திய தினை மாவு - 1 கப்,
தேன் - தேவைக்கு,
நெய் - 1 டேபிள்ஸ்பூன்,
முந்திரி, காய்ந்த திராட்சை - தலா 10.

எப்படிச் செய்வது?

பதப்படுத்திய தினை மாவை சலிக்கவும். கடாயில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு மாவை வறுத்து தனியாக வைக்கவும். பின்பு மீதி நெய்யில் முந்திரி, காய்ந்த திராட்சையை வறுத்து, தினை மாவுடன் கலந்து, தேனையும் சேர்த்து கலந்து, படைத்து பரிமாறவும். குறிப்பு : சிலர் அனைத்தையும் வறுக்காமல் கலந்து படைத்து பரிமாறுவார்கள். கந்த சஷ்டி முருகனுக்கு தேனும் தினை மாவும்தான் முதல் பிரசாதம். பதப்படுத்திய மாவு எல்லா கடைகளிலும் கிடைக்கும்.

பழநி பஞ்சாமிர்தம்

என்னென்ன தேவை?

வாழைப்பழம் அல்லது மலை வாழைப்பழம் - 6,
நறுக்கிய பேரீச்சை - 12-15,
காய்ந்த திராட்சை - தேவைக்கு,
தேன் - 1/2 கப்,
நெய் - 1/2 கப்,
நாட்டுச்சர்க்கரை - 100 கிராம்,
பனங்கற்கண்டு - சிறிது.

எப்படிச் செய்வது?

வாயகன்ற ஒரு பாத்திரத்தில் வாழைப்பழம், பேரீச்சை, காய்ந்த திராட்சை, தேன், நெய், நாட்டுச் சர்க்கரை, பனங்கற்கண்டு போட்டு பிசைந்து பஞ்சாமிர்தமாக தயார் செய்து முருகனுக்குப் படைத்து, பரிமாறவும். குறிப்பு : பழநி முருகனுக்கு பஞ்சாமிர்தம் பிரதான நிவேதனம். வட இந்தியர்கள் 2 வாழைப்பழம், 1 கப் காய்ச்சாத பால், கோதுமை மாவு, ஏலக்காய்த்தூள், காய்ந்த திராட்சை, முந்திரி, நெய், தேன், ஜாதிக்காய் தூள், சிறிது தேங்காய்த் துருவல் எனக் கலந்து தயாரிப்பார்கள்.

சாமை வெஜிடபிள் உப்புமா

என்னென்ன தேவை?

சாமை - 1 கப்,
பொடியாக நறுக்கிய (கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், உருளைக்கிழங்கு),
பச்சைப் பட்டாணி - 1 ெபரிய கப்,
பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - 2-3,
இஞ்சி - 1 டீஸ்பூன், உப்பு, எண்ணெய், நெய் - தேவைக்கு,
விரும்பினால் பெருங்காயம் - சிறிது.

தாளிக்க...

எண்ணெய் - 1½ டேபிள் ஸ்பூன்,
கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை - தேவைக்கு, முந்திரி - 10,
உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 1 டீஸ்பூன்.

அலங்கரிக்க...

கொத்தமல்லித்தழை - சிறிது,
எலுமிச்சைச்சாறு - 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

வெறும் கடாயில் சாமையை லேசாக வறுத்து ஊறவைத்து வடித்து உலர்த்தவும். மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் மற்றும் தாளிப்பதற்காக வைத்திருக்கும் அனைத்தையும் சேர்த்து தாளித்து, இத்துடன் பச்சைமிளகாய், இஞ்சி, நறுக்கிய காய்கறிகள் சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு இதில் 3 கப் தண்ணீர் சேர்த்து, ஊறவைத்த சாமை, உப்பு சேர்த்து, மூடிபோட்டு மிதமான தீயில் வேகவிட்டு, கட்டியில்லாமல் கிளறி, வெந்ததும் நெய், கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். எலுமிச்சைச்சாறு பிழிந்து பரிமாறவும். குறிப்பு: விரும்பினால் வேறு சிறுதானியங்கள் கலந்தும் செய்யலாம்.

பஜ்ரா - கம்பு மாவு உருண்டை

என்னென்ன தேவை?

கம்பு மாவு - 1 கப்,
வறுத்த சம்பா கோதுமை ரவை - 1/4 கப்,
துருவிய வெல்லம் அல்லது பனைவெல்லம் - 1½ கப்,
தேங்காய்த் துருவல் - 1 கப்,
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்,
நெய் - 4 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

கடாயில் சிறிது நெய்விட்டு சம்பா ரவையை வறுத்து பொடிக்கவும். அதேபோல் கம்பு மாவையும் லேசாக வறுக்கவும். இரண்டு மாவையும் கலந்து, தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். ஒரு பாத்திரத்தில் துருவிய வெல்லம், 1/4 கப் தண்ணீர் சேர்த்து பாகாக காய்ச்சவும். பாகு தேன் மாதிரி வரும்போது, கலந்து வைத்திருக்கும் மாவுக் கலவையில் சேர்க்கவும். பின்பு நெய்யை உருக்கி இந்தக் கலவையில் சிறிது சிறிதாக சேர்த்து கலக்கவும். லட்டு பிடிக்கும் பதத்திற்கு வந்ததும், நெய் ஊற்றுவதை நிறுத்தி விட்டு, கையில் நெய்யை தடவிக் கொண்டு லட்டுகளாகப் பிடிக்கவும். தேங்காய் இருப்பதால் நட்ஸ் தேவையில்லை.

சிவப்பு அரிசி புட்டு

என்னென்ன தேவை?

சிவப்பு அரிசி அல்லது சிவப்பு புட்டு அரிசி - 2 கப்,
பொடித்த நாட்டுச் சர்க்கரை அல்லது பனைவெல்லம் - தேவைக்கு,
முழு தேங்காய் - 1 (துருவியது),
வாழைப்பழம் - தேவைக்கு,
உப்பு - ஒரு சிட்டிகை.

எப்படிச் செய்வது?

சிவப்பு புட்டு அரிசியை, தண்ணீரில் இரண்டு மணி நேரம் ஊறவைத்து, உலர்த்தி புட்டு மாவு பதத்திற்கு அரைக்கவும். பின்பு மாவை லேசாக வறுத்து, உப்பு, தண்ணீர் சேர்த்து, சிறிது ஈரப்பதத்தோடு பிசையவும். பின் புட்டுக்குழாயில் முதலில் சிறிது தேங்காய்த் துருவல், பின்பு சிறிது மாவு, இப்படி ஒவ்ெவான்றாக சேர்த்து நிரப்பி ஆவியில் வேகவைத்து எடுக்கவும். பின்பு நாட்டுச் சர்க்கரை தூவி, பழத்துடன் பரிமாறவும்.

சிறுதானிய ஷீரா

என்னென்ன தேவை?

கலந்த சிறுதானியங்கள் (தினை, சாமை, ராகி, கம்பு) - 1 பெரிய கப்,
துருவிய பனைவெல்லம் அல்லது கருப்பட்டி - 1¼ கப்,
பால் - 1½ கப்,
பாதாம், முந்திரி, காய்ந்த திராட்சை - தலா 10,
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்,
உப்பு - 1 சிட்டிகை,
நெய் - 3-4 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

வாயகன்ற ஒரு கடாயில் சிறுதானியத்தை லேசாக வறுத்து ஆறவைக்கவும். ஆறியதும் தண்ணீரில் 2 மணி நேரம் ஊறவைத்து வடித்து உலர்த்தி, மிக்சியில் கரகரப்பாகப் பொடித்து, உப்பு சேர்த்து கலந்து வைக்கவும். மற்றொரு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு, பாதாம், முந்திரி, காய்ந்த திராட்சை இவற்றை வறுத்து தனியாக வைக்கவும். மீதியுள்ள நெய்யில் அரைத்த சிறுதானியப் பொடியை போட்டு மிதமான தீயில், நன்கு வாசனை வரும்வரை வறுத்து, ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கி விடவும்.

ஒரு பாத்திரத்தில் பாலை கொதிக்க வைத்து, அதில் வறுத்த மாவை சிறிது சிறிதாகக் கொட்டி கிளறவும். நன்கு வெந்ததும் துருவிய பனைவெல்லத்தை சேர்த்து கிளறவும். சிறிது நெய் ஊற்றி, வறுத்த பருப்புகள் சேர்த்து கலந்து இறக்கி பரிமாறவும். குறிப்பு: முந்திரி, திராட்சைக்கு பதில் தேங்காயைப் பல் பல்லாக நறுக்கி நெய்யில் வறுத்தும் செய்யலாம்.