தமிழ் அழைத்தால் தப்பாமல் வருவான்



* தமிழாய் பிறந்து தவத்தால் உயர்ந்து
தமிழாய் சிறந்து தலைமை பணிந்து
தமிழாய் வளர்ந்து உயிரில் கலந்து
தரணி புகழ்பாடும் திருமுருகா!
அழகன், அமுதன், குமரன், குருபரன்
இன்பன், இனியன் என வரிசையிட்டு
அன்பர்கள் அழைக்கும் அருட்குமரா!
பாலனே! வேலனே! சக்தியருட்சூலனே
காலனை கதறி சரணடைய
பாடம் புகட்டிய கந்தனே போற்றி!

* அறுபடை வீடுகளில்
அருளாட்சி செய்யும்
அற்புத திருவே, ஆனந்த வாழ்வே!
சரவண பொய்கை நீராடி
சந்தனம் மணக்க உறவாடி
சந்நதி தொழுதோம் உன் சேவடி!
சக்திவேல் இடர்களை தகர்த்து
சங்கடம் நீக்கியருளும் பெருவாழ்வு!
ஆறுமுகம் தொழுதால் வாழ்வில் ஏறுமுகம்
அதிசயம் நிகழ்த்தும் அமரனே போற்றி!

* வானில் மின்னும் மீன்போல்
மனதில் ஒளிரும் முருகன்!
வயோதிக வேடம் தரித்து
வள்ளி மனமலர் கொய்த குமரன்
தகப்பனுக்கு உபதேசித்த தகப்பன்சாமி
தமிழ்மூதாட்டிக்கு அருளிய குருசாமி
குன்றுதோறும் குடிகொண்ட குழந்தைசாமி
குணமும், நலமும் தரும் சிவசாமி
காவடி சுமப்பவருக்கருளும் கந்தசாமி
கவலைகள் தீர்த்துவைக்கும் கலியுகசாமி!

* ஏறுமயில் ஏறிவரும் வேலவனே!
ஏழைகளை காத்திடும் சேவற்கொடி
தலைவனே!
குறத்திமகள் மகிழும் மணவாளனே!
குறைகள் பொறுத்தருளும் குகநாதனே!
திருப்புகழால் அழைத்தால் தணிந்து
தப்பாமல் வந்து நிற்பான்!
தவம்புரியா அன்பர்க்கும் வரம் தருவான்!
தன்னிகரில்லா தெய்வமான தணிகைநாதன்
திருஆவினன்குடியில் தனித்து நின்றான்
தணிகையில் மணக்கோலத்தில் காட்சி
தந்தான்!

* ஒருவிழி மலர்ந்து மணக்க
இருவிழி மூடி தியானித்து
முக்கண் மகனை வணங்குவோம்!
நான்முகனை சிறை வைத்த
ஐங்கரன் தம்பி அற்புதனை
ஆறெழுத்தால் துதித்து அழைப்போம்!
ஏழு பிறவியில் செய்த தவத்தால்
எட்டுக்குடி முருகன் அருள்பெற்றோம்!
நவமணி சிலையான சித்தர்
பத்தும்புகும் பிறப்பறுத் தருள்வான்!

* ஷண்மதம் என் மதமாக -நீ
சம்மதம் சொல்லிடு மனமே!
உன்னத வேள்வி உள்ளத்தில் உண்மை
சொன்ன சொல் காப்பது பக்தியாம்!
அலைவீசும் கடலோரம் சிலையான முருகா
அலையும் மனதை சிலையாக்க அருள்வாய்!
சிங்காரவேலன் நற்சிந்தனை தருவான்
சென்னிமலை முருகன் செந்தமிழ் கவசமானான்!
மரகதமயில் அகவலோசை கேட்கிறது
சிறுவாபுரியில் நம்பிக்கைஒளி தெரிகிறது!

* குறிஞ்சி நில நாயகனருளால்
குலம் தழைக்கும் குன்றா வளம் பெருகும்!
நெறிஞ்சிமுள்ளாம் மனக்கவலை மாற்றி
குறிஞ்சிமலராக வாழ்வு புகழ் பெறும்!
சூரனை வாகைசூடிய சிவகாமிசெல்வன்
சுற்றமும் நட்பும் துணையெனச் செய்வான்!
மாரன் மலரம்பு விழியால் வள்ளிக்கொடியை
மணந்தவன் மகிழ்ந்து மங்கலம் தருவான்!
தென்றல் சுகமும், தேனின் சுவையும்
இரண்டறக்கலந்து இன்பம் தருவான்!

* நாகதேவதை கருணை சித்திக்கும்
சுப்ரமண்யர் அருளால் தோஷம் விலகிடும்
மேகமாய் சூழ்ந்த பிணிகள் மறைந்திடும்
தாகம் தீர்க்கும் தணிகைவேல் கருணைமழை!
முன்னோர் செய்த தவத்தால் -நாமும்
மூப்பிலா தமிழையும்,  முருகனையும்
பெற்றோம்!
விண்ணும் மண்ணும் வியக்கும்
வெற்றி வேலவன் புகழுக்கு ஈடில்லை!
கண்ணிருந்தும் குருடராய் இருப்பதேனோ
கண்கண்ட தெய்வம் முருகன் சத்தியம்!

* பாட்டுப்பாடி காவடி ஆட்டமாடி
பக்தர் கூட்டம் அறுபடை வீடு தேடி ஓடுது!
பாலும்தேனும், தினைமாவும் கொடுத்து
பாலமுருகனை பக்தியுடன் வணங்குது!
அரோகரா கோஷம் விண்ணதிர ஒலிக்குது
ஏரகன் அருள்கண்டு கண்கள் பனிக்குது!
வேலும் மயிலும் துணையாய் தொடர
நாளும் கோளும் நன்மையே செய்யும்
மாலவன் மருகன் நல்லாசியுண்டு
மகிழ்ச்சி, அமைதி மனையில் உண்டு!

* அன்பர் மனதில் அணையா தீபமாய்
அருட்பிரகாச வள்ளலாய் ஒளிரும் ஜோதியே!
காந்தமென பக்தர்களை கவர்ந்திழுக்க
கந்தகோட்டம் உறையும் கந்தவேலே!
கார்த்திகை பெண்கள் கொஞ்சிய கார்த்திகேயா
வல்லக்கோட்டையில் வாஞ்சைதரும் கதிர்வேலா!
வணங்குகிறோம் மயிலேறி வா முருகா!
வாடாத அன்புமலர் தந்தருள் முருகா!
வான்மழையால் பயிர்கள் சிறந்து பூமி செழித்து
வறுமைநீங்கி வளங்கள் பெருக அருள் முருகா!

- விஷ்ணுதாசன்