தாய்ப்பால் மறப்போமோ, தாய்மொழிதான் வெறுப்போமோ!



மன இருள் அகற்றும் ஞானஒளி

-ஆழ்வார்க்கடியான் மை.பா.நாராயணன்

சமீபத்தில் இறைவனின் ேபரருளால் இலங்கை செல்லும் பாக்கியம் பெற்றேன். தலைநகர் கொழும்புவில் இரண்டு நாட்கள் சமயம், சமூகம் சார்ந்த சொற்பொழிவுகள். போருக்குப் பிறகு அந்த மண்ணில் அமைதி திரும்பி மக்கள் அமைதியாக இருப்பதே பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. உண்மையான தமிழ் உணர்வும், பக்தியும், பொது வாழ்க்கையில் அவர்கள் கடைபிடிக்கிற ஒழுக்கமும் என்னை வியப்பில்
ஆழ்த்தின.

பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் இலங்கைக்குச் சென்ற நம்மூர் தமிழர்கள் கொழும்பு நகரில் சமயத்தையும், சைவத்தையும், பக்தியையும் வளர்த்து பாதுகாத்து வருகிறார்கள். இவையெல்லாவற்றையும்விட அவர்கள் தமிழ் மொழிக்கு கொடுக்கும் முக்கியத்துவம், பிரமிக்க வைக்கிறது. இலங்கையில் பத்தாம் வகுப்புவரை தமிழ் கட்டாயப் பாடம். சமயம் குறித்து அவர்கள் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

திருமணவிழா என்றால் தமிழர் உடையான வேட்டி அணிந்து செல்வதுதான் பெருமை. தேவாரத்தையும், திருவாசகத்தையும் இரண்டு கண்களாக போற்றுகிறார்கள். இப்படி அவர்களின் தமிழர் பண்பாட்டு நடவடிக்கைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். எத்தனையோ இன்னல் களுக்கு மத்தியிலும் அவர்களின் தமிழ் மொழிப்பற்று கொஞ்சம்கூட குறையவில்லை.

கொழும்பு பயணத்தில் கம்பவாரிதியும் மேன்மையாளருமான இலங்கை ஜெயராஜை சந்திக்கிற அற்புத வாய்ப்பு கிடைத்தது. அவர் நாடி நரம்புகளில் கம்பராமாயணமும், தேவாரமும், திருவாசகமும், திருக்குறளும் எப்போதும் ஜீவநதியாய் ஓடிக்கொண்டிருக்கின்றன. அற்புதமான கோயில் ஒன்றை கட்டியிருக்கிறார். சிவன், விஷ்ணு தவிர, சரஸ்வதி, லக்ஷ்மி, துர்க்கை என்று முப்பெரும் தேவியரும் அங்கே அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இது ஒருபுறம் இருக்கட்டும் நம்மூரில் என்ன நிலைமை? பையன், தமிழ் படிக்க வேண்டும் என நினைத்தாலும் அவனுடைய பெற்றோர் அதை ஊக்குவிப்பதில்லை. ‘தமிழ் சோறு போடாது’ என்கிற எண்ணம் எட்டுக் கோடி பேர் வாழ்கிற தமிழ்நாட்டில் நிலவுகிறது. இப்படி நாம் தமிழுக்கு கொடுக்காத ஏற்றத்தை அந்த சின்னஞ் சிறிய தீவில் கொடுக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது மனம் தமிழ்நாட்டை நினைத்து வெதும்பி, இலங்கையை நினைத்து பெருமைப்படுகிறது.  அவர்களைப்போலவே அந்த உணர்வைப் பெறவேண்டிய அத்தியாவசியத் தேவையில் நாம் இருக்கிறோம்.

வெளிப்படையான உண்மை என்ன தெரியுமா? எல்லா மொழியையும் படிக்க வேண்டும். ஆற்றல், தகுதி, திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் பூமிப்பந்தில் எங்கு வேண்டுமானாலும் வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். கவிஞர் வைரமுத்து சொல்வதைப் போல உலகம் உன் மேசையின் மீது துப்பப்பட்டிருக்கிறது. இது இன்றைய தேவை; இல்லாவிட்டால் பிழைக்க முடியாத சூழ்நிலை.

ஆனால், எல்லா மொழியையும் படித்து தேர்ச்சி பெற்ற பிறகு தமிழ் மொழியை ஆங்கிலத்தில் எழுதி படிக்கிற அவலச் சூழ்நிலையை ஏற்படுத்திக் கொண்டிருப்பதில் என்ன பெரிய சாதனையை செய்திருக்கிறோம்? அனைத்து மொழியைக் கற்றாலும் அன்னை மொழியை நேசிக்க வேண்டாமா? தாய் மொழியை மறப்பது என்பது தாயையும் தாய்ப்பாலையும் மறப்பதற்குச் சமம்.

நம் திருக்குறளிலும் திவ்யப் பிரபந்தத்திலும் தேவாரத்திலும் சொல்ல ப்படாத கருத்துகள் ஏதேனும் உண்டா? அன்பு, கருணை, மனிதநேயம், வைராக்கியம், வீரம், விவேகம் என்று தொடாத உளவியல் துறைகள்தான் உண்டா?

திவ்யப் பிரபந்தத்தில் ஒரு பாசுரம்:
அன்பாவாய், ஆர் அமுதம் ஆவாய்,
அடியேனுக்கு இன்பு ஆவாய், எல்லாமும் நீ
ஆவாய்;
பொன் - பாவை கேள்வா!
கிளர் ஒளி என் கேசவனே! கேடு இன்றி
ஆள்வாய்க்கு அடியேன் நான் - ஆள்

- திருமழிசை ஆழ்வாரின் நான்முகன் திருவந்தாதியில் இடம் பெற்ற அற்புதமான பாசுரம். இதன் பொருள்: அன்பானவனே, ஆராவமுதனே, அடியேனுக்கு இன்பம் அளித்தவனே, எல்லாமுமாய் இருப்பவனே, திருமகள் நாயகனே, பேரொளியை உடைய பெருமானே, ஒரு குறையுமில்லாமல் என்னை ஆள்கிறாய்,  உனக்கு விரும்பி நான் அடிமைப்பட்டு இருக்கிறேன்.

ஆண்டவனுக்கு ஒப்புதல் வாக்குமூலம் தந்திருக்கிறார் திருமழிசை ஆழ்வார். இந்தத் தமிழை இந்தப் பேரின்பத்தை தென்றல் தாலாட்டும் இந்த அற்புத சுகத்தை நாம் எங்கே போய் தேடிப்பெற முடியும்? இதே இன்ப வெள்ளத்தை நம் கண்முன்னே கொண்டு நிறுத்துகிறார் தமிழிலும், ஞானத்திலும், பக்தியிலும் உச்சம் தொட்ட திருஞானசம்பந்தப் பெருமான்.

சீர்காழியில் நடந்த அற்புதம் அது. ஞானசம்பந்தர் சின்னஞ்சிறிய பாலகன். அவருடைய தந்தை சிவபாத இருதயர், தோணியப்பர் கோயில் குளத்தில் குளித்துக் கொண்டிருக்கிறார். கரையில் ஞானசம்பந்தப் பெருமான் நம்மையெல்லாம் கரையேற்றுவதற்காக முருகனாக, செந்தில் வேலவனின் மறுபிறப்பாக, தந்தைக்காகக் காத்திருக்கிறார்.

தந்தையார் நீராடிவிட்டு கரையேறுகிறபோது சம்பந்தப் பெருமானின் வாயில் பால் துளிகள் ஒட்டியிருக்கின்றன.  தந்தையார் கோபமாகப் பார்த்து ‘யாருடைய எச்சில் பால் இது?’ என்று கேட்க, உடனே சம்பந்தப் பெருமான்  வானத்தைக் காட்டுகிறார். அப்பொழுது பிறந்த இந்த அற்புதமான தேவாரப் பதிகத்தை யாரால் மறக்க முடியும்? இசையோடு கூடிய தமிழில் புதிய சொற்கள், புதியவகை பண் என்று சம்பந்தர் தமிழுக்கு கொடுத்த தங்கப் புதையல்கள் எண்ணிலடங்கா.
தேவாரப் பாடல்:

தோடுடைய செவியன் விடையேறி ஓர் தூவெண்
மதிசூடிக்
காடுடைய சுடலைப் பூசி என் உள்ளம்
கவர்கள்வன்
ஏடுடைய மலராள் முனைநாள் பணிந்து ஏத்த
அருள் செய்த
பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன்
அன்றே.
பொருள்: தாமரை மலரில் அமர்ந்த பிரமன் வணங்கிப் பாடிட அவனுக்கு அருளை வழங்கியவன் சிவபெருமான். பெருமைமிக்க சீர்காழியில் தங்கியவன். ஒற்றைச் செவியில் தோடு அணிந்தவன் காளையை வாகனமாகக் கொண்டவன். பிறை நிலவைச் சூடியவன். அந்த பெம்மான்தான் என் உள்ளம் கவர்கள்வன். எனக்கு அருள்செல்வன்.

இந்த தேவாரப் பதிகம் அநேகமாக எல்லோருக்கும் தெரிந்ததுதான். இதில் விசேஷம் என்னவென்றால் முதன் முதலாக பராசக்தியோடு கூடிய பரமசிவனை மிகமிக நெருக்கமாக நம் மக்களுக்கு காட்டியவர் ஞானசம்பந்தப் பெருமான். பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன், இந்தத் தாயும் தந்தையும்தான் எனக்கு அருளாசி வழங்கினார்கள், பராசக்திதான் எனக்கு பால் கொடுத்தாள் என்று ஞானசம்பந்தப் பெருமான் பாடலாகச் சொன்னதும் பரவசப்பட்டுப் போன தந்தையார் இவன் தெய்வக் குழந்தை என்று தலைமேல் வைத்து கூத்தாடினார்.

‘அவனவன் எதை எதையோ திருடிக்கொண்டு போகிறான். ஆனால், இறைவன் என்னுடைய இதயத்தை திருடிக்கொண்டு போகிறான், என் உள்ளம் கவர் கள்வன்’ என்று இறைவனிடம் தான் மட்டுமல்லாமல் நம்மையும் தஞ்சம் புக வைக்கிறார் சம்பந்தப் பெருமான். அவருக்கு முன்பாக தமிழில் புதிய சொற்களையும் பண்கலந்த பாட்டாக யாரும் கேள்விப்பட்டது இல்லை. பதினாறு ஆண்டுகள்தான் வாழ்ந்தார் திருஞானசம்பந்தர். அதற்குள்ளாக அவர் கொடுத்துவிட்டுப்போன விலை மதிக்க முடியாத விஷயங்கள் ஒன்றா, இரண்டா! தமிழ் மீதும், இறைவன் மீதும் திருஞானசம்பந்தரும் மற்றும் அவரைப் போன்றவர்களும் கொண்ட பற்றும் பாசமும் அளவிட முடியாதவை. எல்லோரிடமும் எல்லாம் இருக்கிறது ஆனால், நேசித்தல் குறைந்து வருகிறது. சக மனிதனை நேசியுங்கள். வள்ளல் பெருமானின் அழகிய அற்புதமான பாடல்:

அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே!
அன்பெனும் குடில்புகும் அரசே!
அன்பெனும் வலைக்கு உட்படும் பரம்பொருளே!
அன்பெனும் கரத்தமர் அமுதே!
அன்பெனும் குடத்துள் அடங்கிடும் கடலே!
அன்பெனும் உயிர் ஒளிர் அறிவே!
அன்பெனும் அணுவுள் அமைந்த பேரொளியே
அன்புருவாம் பரசிவமே!

இறைவனிடம் அன்பு வைக்கத்தான் மனம் நினைக்கிறது. ஆனால், சஞ்சலப்படுகிறது. காமமும் கோபமும் இறைவனிடம் செல்ல முடியாவண்ணம் தடுக்கின்றன என்று ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் சீடர் ஒருவர் கவலையோடு தெரிவித்தார். சீடரின் கவலையான கேள்விக்கு மிகவும் வாஞ்சையுடனும் அன்புடனும் பரமஹம்சர் இவ்வாறு பதில் தந்தார்: காமம் கோபம் முதலிய ஆறு பகைவர்களின் போக்கையும் இறைவனிடம் திருப்பி விடு.

ஆன்மாவுடன் கலந்து ஆனந்தம் அடை. இறைவனை அடையும் வழியில் நம்மைத் தடுப்பவர்களிடம் கோபம் கொள். அவரை அடைய வேண்டும் என்ற பேராசை கொள். ‘எனது’ என்று கூறவேண்டுமானால் கடவுளையே அதற்கு அடிப்படையாகக் கொள். உதாரணமாக ‘எனது ராமன், எனது கிருஷ்ணன்’ என்று சொல். அகங்காரம் கொள்ள வேண்டுமானால் வீபீஷணனைப்போல் ‘நான் ராமனை வணங்கியுள்ளேன்’ என்று சொல்.

மனமாற்றத்திற்கு எப்பேற்பட்ட அற்புதமான ஓர் மடைமாற்றம்! அன்பாக இருப்போம். தாயை நேசிப்போம் தமிழை நேசிப்போம். கொழம்பு நகரில் நிலவும் தமிழ் உணர்விற்கு தலை வணங்குவோம். திருமழிசை ஆழ்வாரும், திருஞானசம்பந்தரும் நமக்குக் கிடைத்திருப்பதுபோல வேறு யாருக்குக் கிடைத்திருக்கிறார்கள்! அவர்களை ஒரு பொக்கிஷமாகப் போற்றிப் பாதுகாத்து, பராமரித்து, நேசம் செலுத்த தமிழ் உணர்வை கொஞ்சமும் கைவிடாது வாழ்வோம்.