குருவாய் அருளும் குமரன்



திண்ணியம்

சோழர்கள் காலத்தில் கோயில்கள் புத்துரு பெற்றன. அந்தக் கோயில்களில் பிரதிஷ்டை செய்யப்படுவதற்காக சிவலிங்கம், முருகன், வள்ளி - தெய்வானை போன்ற சிலைகள் உருவாக்கி எடுத்துச் செல்வது வழக்கமாக இருந்தது. ஒருசமயம், அத்தகைய சிலைகளை வண்டியில் ஏற்றி பக்தர்கள் இழுத்துச் சென்றார்கள். அதுவரை அதுபோன்ற சிலைகளை எந்த இடையூறும் இன்றி அதுநாள் வரை கொண்டு சென்றவர்கள்தான் அவர்கள். ஆனால், அன்றைய தினம் அவர்களுக்கு சோதனை.

ஆமாம், திடீரென வழியிலேயே வண்டியின் அச்சாணி முறிந்தது. நிலைகுலைந்து விழுந்த வண்டியிலிருந்து சிலைகள் சரிந்து தரையில் நின்றன. பதறிப்போன பணியாளர்கள் ஓடோடி வந்து கீழே விழுந்த சிலைகளை அவசர அவசரமாகத் தூக்க முனைந்தார்கள். அது அரச கட்டளையாயிற்றே! சிலைகளை உரிய இடத்தில் சேர்ப்பிக்காவிட்டால் அது ராஜ கோபத்துக்கு ஆளாக்கி அவர்களை தண்டிக்கவும் செய்யுமே!
 
ஆனால், அவர்களுடைய முயற்சிகளையெல்லாம் அந்தச் சிலைகள் எள்ளி நகையாடின. ஆமாம், ஒரு சிறிதளவுகூட அவற்றை நிலத்திலிருந்து அசைக்கவும் முடியவில்லை. தனித்தனியே முயற்சிப்பதை விட அனைவருமாக ஒன்று சேர்ந்து முயற்சித்தால் சிலைகளை எளிதாகப் பெயர்த்து எடுத்துவிடலாம் என்று முடிவு செய்து ஒரே சிலையை அவர்கள் அனைவருமாகத் தூக்க முயற்சித்தும் அதுவும் பலனளிக்காமல் போய்விட்டது. விவரம் மன்னருக்குத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்பிட்ட அந்த இடத்தில் ஏதோ இறை சாந்நித்தியம் இருப்பதை அனைவரும் உணர்ந்தார்கள். ஆகவே அந்த இடத்தில் அந்தச் சிலைகளை வைத்து ஒரு கோயில் நிர்மாணிப்பது என்று தீர்மானமாகியது. அந்தப் புண்ணியத் தலம்தான் திண்ணியம். திருச்சியில் இருந்து லால்குடி வழியாக சென்றால் 32 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது இந்த கிராமம். இங்கே எழுந்தருளியிருப்பதுதான் சுப்பிரமணிய சுவாமி கோயில். எளிய முறையில் காட்சியளித்தாலும் இந்தக் கோயிலுக்கு பல சிறப்புகள் உண்டு.

பிற கோயில்களில் காணப்படாத சிறப்பாக இங்கே முருகன், வள்ளி- தெய்வானை மூவரும் தனித்தனியே மயில் வாகனத்தில் உள்ளனர். இத்தலத்திலுள்ள ஈசனின் திருநாமம் கோடீஸ்வரர். அன்னையின் திருநாமம் பிருகந்நாயகி. இது சிவாலயமாக இருந்தாலும் பிரதான வாயிலில் முதலில் முருகனே தரிசனம் தருகிறார்.

இங்கு ஒரே இடத்தில் நின்று கொண்டு முருகன், சிவன் இருவரையும் ஒரே நேரத்தில் வழிபடலாம். சிவாலயங்களில் முருகன் சந்நதி இருந்தாலும் சிவபெருமானை வணங்கிய பிறகே முருகனை தரிசிக்கும் வகையில் அமைப்பிருக்கும். ஆனால், இங்கு மட்டுமே ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் நின்றபடி இருவரையும் தரிசிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இது இன்னொரு சிறப்பு.

குரு தட்சிணாமூர்த்தி தென்திசை நோக்கி வீற்றிருப்பது பொதுவாக எல்லா கோயில்களிலும் நாம் காணும் காட்சி. இங்கே முருகனே தென்திசை நோக்கி குருவாக தரிசனம் தருகிறார். ஆதலால் இவரை வணங்கும் பக்தர்கள் சிறந்த கல்வி ஞானம் பெறுகிறார்கள். இவ்வூரின் ஒவ்வொரு வீட்டிலும் மிகச் சிறந்த கல்வியாளர்கள் இருப்பதே இதற்குச் சான்று என்று பெருமையாக சொல்லிக் கொள்கிறார்கள்.

இத்தலத்தில் முருகனுடைய வலது கரம், அபயம் காட்டுகிறது. பக்தர்களை காக்கும் கரமாக விளங்குகிறது. அதேசமயம் இடது கரம் வரத ஹஸ்தமாக இல்லாமல் அரிஷ ஹஸ்தமாக உள்ளது. அதாவது, பக்தர்களுடைய கஷ்டங்களை தான் வாங்கிக் கொள்ளும்கையாக உள்பக்கமாக அணைந்தபடி உள்ளது. பிற பத்துக் கரங்களும் பக்கத்துக்கு ஐந்தாக அமைந்து, பக்தர்களின் துயர்களை யெல்லாம் களைகின்றன.

இதனால் இந்தக் கோயிலுக்கு வருபவர்களுக்கு திருமணத்தடை நீங்குதல், குழந்தை பாக்கியம், கல்வி ஞானம் உள்ளிட்ட பலன்கள் கிடைக்கிறது என்கிறார்கள் பக்தர்கள். வண்டியிலிருந்து முருகன் சிலை கீழே சரிந்து நிலை கொண்டுவிட்டதால் இந்தக் கோயிலுக்கு வந்து வழிபடுவோர் விரைவிலேயே சொந்த வீடு, நிலம் வாங்குவார்கள் என்றும் நம்பப்படுகிறது.

- ஆர்.வித்யா