பக்தனிடமிருந்து நிவேதனம் பெற்று உண்ட பெருமாள்



சாப்டூர்  ஜமீன்தார்

ஜமீன் கோயில்கள்

-முத்தாலங்குறிச்சி காமராசு


சாப்டூர் - சௌந்திரராஜ பெருமாளின் திருவிளையாடலால் உருவான பெயரைக் கொண்ட திருத்தலம் இது. சாப்டூர் ஜமீன்தார்கள் தெலுங்கு நாட்டிலிருந்து வந்த கம்பளத்து நாயக்கர் வம்சத்தினர். ஜமீன்தார் ஒழிப்பு நடைமுறைக்கு வந்தும் கூட, இவர்கள் இவ்வூர் மக்களால் பெரிய ராஜா என்று அழைக்கப்படுகிறார்கள். மதுரை திருமங்கலம்-வில்லிபுத்தூர் சாலையில் 40 கிலோ மீட்டர் தொலைவில் சாப்டூர் உள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் செல்வம் கொழிக்கும் புண்ணிய பூமி இது.

அந்த காலத்திலேயே நவீன திட்டத்துடன், சாப்டூர் ஜமீன்தார்கள் கட்டிய குளம் மற்றும் அணையால் விளைநிலங்கள் பயன் பெறுகின்றன. இதை கட்டியவர் தோப்புதுரை என்ற சதுரகிரி நாகசாமி காமநாயக்கர். இவர் இந்த அணையை கட்டியதோடு, சுமார் 160 ஏக்கர் நிலத்தில் லட்சக்கணக்கான மாமரங்களை நட்டார். அவற்றைப் பராமரிக்க பணியாளர்களை நியமித்தார். எனவே இந்த தோப்பில் விளையும் பழங்கள் இன்றளவும் சாப்டூர் மாம்பழம் என்றே பிரசித்தி பெற்றுவிட்டன.

சாப்டூர் ஜமீன்தார்களின் பூர்வீகம், ஆந்திர மாநிலம் கொத்தன்பல்லரி. ஒருகாலத்தில் அங்கு பஞ்சம் தலைவிரித்தாடியது. அவர்கள் தங்களது குலதெய்வம் வல்லங்கொண்டம்மாளை, தோளில் சுமந்து கொண்டு ஆடுமாடுகளையும் இழுத்துக்கொண்டு தெற்குநோக்கி வந்தனர். அப்போது மதுரையை தலைநகராகக் கொண்டு விசுவநாத நாயக்கர் ஆட்சி புரிந்துவந்தார். மதுரையில் வந்து அழகரை வணங்கி, ‘பகவானே, நாங்கள் இப்பகுதியில் தங்க ஒரு வழிசொல்லுங்கள்’ என மனமுருக வேண்டிக்கொண்டார்கள்.

அவர்கள் கனவில் தோன்றிய இறைவன், ‘தென்திசைக்கு செல்லுங்கள். அங்கே ஒரு கருடன் வட்டமிடும் பகுதியை அடையாளம் கண்டு, அவ்விடத்தில் குடி அமருங்கள்’ என்றார். அதன்படி அங்கே குடியிருப்பை அமைத்துக்கொண்டனர். அவ்விடம் குருசடி என்றழைக்கப்பட்டது. அப்பகுதி சித்தர்கள்  உறைவிடமாகவும், சிவபக்தர்கள் தென்கைலாயமாக போற்றி திகழும் இடமான சதுரகிரியும் அடங்கியது. ஜமீன்தார் ஒழிப்புக்கு முன்புவரை இங்கு சுமார் 65 ஆயிரம் ஏக்கர் பரப்பைத் தன்னகத்தே கொண்டு திகழ்ந்தனர் சாப்டூர் ஜமீன்தார்கள்.

அங்கே விவசாயம் செய்தனர். ஆடுமாடுகளை வளர்த்தனர். மேற்குத் தொடர்ச்சி மலையில் பளிஞர் பழங்குடி மக்களுடன் பண்டமாற்று முறையில் சிறுசிறு வியாபாரமும் துவங்கினர். அவர்களில் கொட்டியம் நாகையா ராஜா, சிறந்த குதிரை வீரர். வாள்வித்தையில் வல்லவர். இவர் விசுவநாத நாயக்கர் படையில் ஒரு போர் வீரனாக பணிபுரிந்து வந்தார்.

ஒருநாள் மதுரை நாயக்கர் கடும் வயிற்றுவலியால் துடித்தார். யாராலும் அந்த வலியைத் தணிக்கவோ அவரது உபாதையைக் குறைக்கவோ இயலவில்லை. இதையறிந்த நாகையா ராஜா, தனக்குப் பழக்கமான பளிஞர் இனப் பெண் வைத்தியரிடம் விவரம் சொல்லி மருந்து வாங்கி வந்தார். அதை மன்னருக்குக் கொடுக்க, அவர் உடனே நிவாரணம் கண்டார். தான் தன் படை வீரன் மூலமாக குணமடைந்தது அறிந்து மகிழ்ந்த மன்னர், அவனை அவன் வாழ்ந்துவந்த குருசடி பகுதிக்குப் பாளையக்காரராக நியமித்தார்.

பாளையக்காரராக நியமனம் பெற்றாலும் நாகையா ராஜா தினமும் மதுரை சென்று அழகரை வணங்கி வருவதை வாடிக்கையாக வைத்திருந்தார். ஒருநாள் அவர் கனவில் அழகர் வந்தார். ‘நாளை காலையில் சற்று மேற்காக வா. அங்கு இரட்டை கருடன் வட்டமிடும் பகுதியில் நான் பூமிக்குள் இருக்கிறேன். என்னை எடுத்து கோயில் கட்டி வணங்கு’ என்று கூறினார். அதன்படி அங்கு சென்று தோண்டிப் பார்க்க, அழகு மிளிரும் அழகான பெருமாள் கிடைத்தார். அவரை நெஞ்சோடு அணைத்து, ஆனந்தக் கண்ணீர் விட்டு அங்கேயே பிரதிஷ்டை செய்து வணங்க ஆரம்பித்தார்.

அழகரைக் காண மதுரைக்கு செல்லவேண்டாம். இங்கே கிடைத்துவிட்டார். அதே மிடுக்குத் தோற்றம், முகத்தில் ஒளிரும் தேஜஸ்….. அவருக்கு சௌந்திரராஜ பெருமாள் என்று பெயரிட்டனர். சௌந்தரம் என்றாலே பொன் மிளிரும் அழகுதானே! இக்கோயிலில் சௌந்திரராஜன், தேவி-பூதேவியுடன் காட்சி தருகிறார். கோயிலினுள் நுழைந்ததும் ராமர் சந்நதி. அடுத்து கொடிமரம், ஆழ்வார் சந்நதி. கிழக்கு நோக்கித் தனித் சந்நதியில் சௌந்திரராஜ பெருமாள்  தேவி-பூதேவியுடன் கிழக்குநோக்கி அருள்பாலிக்கிறார்.

பெருமாள் கூடவே இருக்கவேண்டும் என்று ஆசைப்பட்ட காமநாயக்கர், பாளையத்தின் தலைநகராக பழையூரை மாற்றிக்கொண்டார். கிடைக்கும் நேரத்தில் பகவானை தரிசித்து வந்தார். தினசரி பூஜைக்கும் திருவிழாவுக்கும் தொய்வு ஏற்படாதவாறு செய்தார்.  ஆனாலும் மதுரை அழகரை அவர் தரிசிக்காமல் இருந்ததில்லை. காலங்கள் கடந்தபின் ராஜா அமரரானார். அவருக்கு இரண்டு வாரிசுகள். முதல்வர் நாகையா காமநாயக்கர். இவர் தமிழிலும், ஆன்மிகத்திலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

பல அறிஞர்களை கொண்டு பல நூல்களை இயற்றச் செய்து அவற்றைப் பழையூர் பெருமாள் கோயிலில் அரகேற்றியுள்ளார். இவரும் ஆறு மாதத்துக்கு ஒருமுறை மதுரை சென்று கப்பம் செலுத்தவேண்டும் என்பதால் அது தொடர்பாக மதுரை வரும்போதெல்லாம் அழகரை வழிபடுவார். இளைய ராஜா ராமசாமி காமநாயக்கர் சிறு குழந்தையாக இருந்தபோதே பெருமாள்மீது தீவிர பற்று வைத்திருந்தான். கோயிலில் பூசாரி திரைமறைவில் நைவேத்யம் செய்யும்போது, அதை பகவான் சாப்பிடுகிறார் என்றே நம்பிக்கைக் கொண்டிருந்தான்.

தானும் பகவானுக்கு உணவு ஊட்ட ஆசைப்பட்டான். ஒருநாள் கோயிலுக்கு சென்றான். சாமிக்கு நிவேதனங்களைப் படைத்துவிட்டுச் சென்றிருந்தார் பூசாரி. அவை கொஞ்சமும் குறையாதிருப்பதைக் கண்டான் இளைய ராஜா. உடனே ‘நம்ம தெய்வம் சாப்பிடாமல் இருக்கிறாரே!’ என மனம் நொந்து போனான். ஆகவே இறைவன் முன்நின்று ‘நைவேத்யம் சாப்பிடுவீர்களா, மாட்டீர்களா?’ என்று தொடர்ந்து கேட்டான். பதிலில்லை.

இதனால் கோபம் கொண்ட சிறுவன், சாமி சந்நிதானத்தில் விழுந்து உருண்டு அழுது, ‘எப்படியாது சாப்பிட்டால்தான் நான் இங்கிருந்து செல்வேன்,’ என்று அடம் பிடித்தான். மனமுருகிய பகவான் அவன்முன் தோன்றி, நிவேதனத்தைத் தானும் சாப்பிட்டு அவனுக்கும் ஊட்டிவிட்டார்! இளையராஜாவுக்குப் பேரானந்தம்.

தனது தாயிடம் வந்து நடந்ததை கூறினான். அவள் நம்பவில்லை. மதுரை சென்றுவிட்டு வந்த பெரிய ராஜாவிடம் கூறினான். அவரும் நம்பவில்லை. அவன் தொடர்ந்து வற்புறுத்திக் கூறவே, ‘சரி, வா. எந்த சாமி வந்து சாப்பிட்டார், காட்டு’ என்று கேட்டபடி மகனைக் கோயிலுக்கு இழுத்து வந்தார். ஆர்வத்தோடு, இளைய ராஜா, ‘சாப்பிட வாங்க பகவானே…’ எனக் கூவினார். பலமுறை கோரியும் பகவான் வரவில்லை. உடனே கோயில் வாசலில் விழுந்து புரண்டு அழ ஆரம்பித்துவிட்டான்.
 
பகவானால் தாங்க முடியவில்லை. உடனே அவர்கள்முன் தோன்றி நைவேத்யத்தைத் தானும் சாப்பிட்டு, சிறுவனுக்கும் ஊட்டிவிட்டார். அனைவரும் பிரமித்து உறைந்துபோயினர்! பகவானை நெக்குருகி வணங்கி நின்றனர். பகவான் சாப்பிட்ட ஊர். அதனால் சாப்டூர் என்று அந்தத் தலம் அழைக்கப்பட்டது. அடுத்து சாப்டூரைத் தலைமையிடமாக கொண்டு சற்று மேல்பகுதியில் அரண்மனை கட்டி வாழ ஆரம்பித்தனர் பாளையக்காரர்கள்.

அதற்குமுன் அங்கு  பிள்ளையார் கோயில் ஒன்றைக் கட்டி, அவருக்கு தில்லை விநாயகர் என்று பெயரிட்டனர். தற்போதும் அரண்மனையில் தினமும் பூஜை நடைபெறுகிறது. பூசாரி வராவிட்டாலும் ஜமீன்தார்களே பூஜை செய்வார்கள். அதோடு, முதலில் இங்குவந்து பூஜை செய்துவிட்டுதான் ஊரில் அனைத்துக் குடும்பங்களிலும் நல்ல நிகழ்ச்சிகள் நடைபெறும்.

அரண்மனைக்குள் நுழைந்ததும் பிள்ளையார் கோயில்தான் நம்மை வரவேற்கிறது. அரண்மனை, இரண்டு மாடி கட்டிடம். பிரமாண்டமாக விளங்குகிறது. உள்வளாகத்திலுள்ள மண்டபம்தான் ஜமீன்தார்களின் ராஜ தர்பார். அரண்மனை மீது ஏறிச்செல்ல இருபுறங்களிலும் ஏணிப்படி உள்ளது. சுவர்கள் முழுவதும் முன்னோர்கள் மற்றும் பிற ஜமீன்தாரர்களுடன் இவர்கள் கொண்டிருந்த நட்பின் சாட்சியாக பல புகைப்படங்கள் நிறைந்திருக்கின்றன.

பெரிய ராஜா என்றழைக்கப்படும் சதுரகிரி  நாகசாமி காமநாயக்கர் தனியாக ஒரு அரண்மனை கட்டி வாழ்ந்து வருகிறார். இங்கு மூலிகைகளை வளர்த்து மக்களுக்கு அவற்றை மருந்தாகக் கொடுத்து வருகிறார். இவர் காவி வேஷ்டி கட்டிய சித்தராகவே வாழ்ந்து வருகிறார். இவர் காலத்துக்கு முன்புவரை தன் வாரிசு திருமணத்தை, தந்தை பார்த்ததே இல்லை. ஒவ்வொரு காலகட்டத்திலும், தந்தை இறந்தபிறகே, மகன் பட்டம் கட்டுவார். ஆனால் கடந்த தலைமுறையிலிருந்துதான் தந்தையின் முன்னிலையில் மகன் திருமணம் நடைபெறுகிறது!

தற்போதும், உள்ளூரில் நடைபெறும் திருமணத்திற்கு சதுரகிரி நாகசாமி காமநாயக்கரை கூப்பிட்டு தாலி எடுத்துக் கொடுக்கச்சொல்லிதான் திருமணம் நடத்துகிறார்கள். அந்த அளவுக்கு இந்த ஜமீன் வாரிசுகள் மீது மக்கள் ஈடுபாட்டுடன் உள்ளார்கள். அதேவேளையில் பழையூர் பெருமாள் கோயிலை ஜமீன்தார்கள் கொண்டாடவும் தவறுவதில்லை.

மதுரையில் அழகர் தன் தங்கை மீனாட்சியை பார்க்கச் சென்றபோது கோள்சொன்ன பெருமாளால் திருமணத்துக்குச் செல்லாமல் திரும்பி வந்துவிடுவார் என்பது ஐதீகம். இதனால் அங்கு பெருமாள் மீனாட்சி அம்மனுக்கு சித்திரைதிருவிழாவில் சீர் செய்வதில்லை. இது பெரும் குறையாக சாப்டூர் ஜமீன்தார்களுக்கு தெரிந்தது. எனவே தங்கள் ஊரில் அழகராகவே வீற்றிருக்கும் சௌந்திரராஜ பெருமாள் தங்கைக்கு சீர் கொண்டுவர ஒரு திருவிழாவையே ஏற்படுத்தினார்கள்.

அந்த திருவிழாவிற்காக பகவான் சௌந்திரராஜ பெருமாள் ஸ்ரீதேவி-பூதேவியுடன், சாப்டூர் அரண்மனை நோக்கி வந்து, அங்குள்ள சிவன்-சக்திக்கு சீர்வரிசை கொடுப்பார். இவ்விழாவைக்காண கூட்டம் கூட்டமாக மக்கள் சாப்டூரில் கூடுவார்கள். தற்போதைய ஜமீன்தார் பெரிய ராஜா பரிவட்டம் கட்டி அங்கே அழைத்து வரப்படுவார். மண்டபத்தில் கைலாசநாதரும், சௌந்திரராஜ பெருமானும் அமர்ந்து அருள்பாலிப்பார்கள்.

இக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியில் சொர்க்கவாசல் திறப்பு விழா, கிருஷ்ணஜெயந்தி,  நவராத்திரி, கார்த்திகை சொக்க பானை கொளுத்துதல், புரட்டாசி சனிக் கிழமை என அனைத்து வைபவங்களும் மிகச்சிறப்பாக நடைபெறும். இதையெல்லாம் ஜமீன்தார் வாரிசுகள் முன்னின்று நடத்துவார்கள்.

(தொடரும்) 
படங்கள்: கார்த்திக், அபிஷ்விக்னேஷ்