ஆபத்து களையும் சகாயன்(doubt)



திருப்பழனம்

ஆராவமுதனான நாராயணன், பாற்கடல் ஈந்த அமிர்தத்தை அள்ளி எடுத்து சகல தேவர்களுக்கும், மகரிஷிகளுக்கும் ஈந்தான். கௌசிக மகரிஷி, மாந்தர்களுக்கும் உதவுமே என தாம் பெற்ற அமிர்தத்தை கைமேற்கனியாகப் பெற்று பூவுலகுக்கு நகர்ந்தார். அசுரர்கள், அவரிடமிருந்த அமிர்தத்தை பறிப்பாரோ என்றெண்ணிய ஈசன், ஐயனாரையும், மாகாளியையும் துணைக்கு உடன் அனுப்பினார்.

அமிர்தம் ஏந்தி வந்த மகரிஷி, சிருங்காரமாக ஒளிரும் கதலிவனம் என்ற அந்த பூலோகத் தலத்தில் தம் திருவடி பதித்தார். மக்கள் கூடி நின்று வணங்கி வரவேற்றனர். மாமுனிவர் குடில் அமைத்தவுடன் அகமகிழ்ந்து தொண்டு புரிந்தனர். சதாகாலமும் சதாசிவனை நினைத்தவர் ஓரிடத்தில் மகாதேவனை இருத்த பேருவகை கொண்டார். ஈசனின் லிங்கத் திருமேனிக்குள் அமிர்தத்தை அரூபமாக அடக்கி, அருகே வருவோரை ஆற்றுப்படுத்த பெருங்கருணை கொண்டார்.

அமிர்தத் திரட்சியை ஒன்றாக்கி வில்வ தளங்களால் அர்ச்சிக்க, வில்வத்தின் வாசம் மகேசனை ஈர்த்தது. முக்கண் நாயகனான ஈசன் மூவிலைகளுக்குள் அருவமாகப் பரவினார். சட்டென்று புறத்திலும் நெடும் பனையாக வளர்ந்தார். கதலிவனத்தை கயிலைநாதன் பேரன்பால் மூழ்கடித்தார். கௌசிக முனிவர் அகத்தில் கண்ட அரனை புறத்தில் பார்த்து தன் வயம் இழந்தார். ஈசனோடு ஈசனாகக் கலந்து களிப்புற்றுத் திளைத்தார்.    

சுசரிதன் எனும் பாலகன் கௌதம நதி தீரத்தில் அமர்ந்து வேதகானம் செய்தான். கானத்தில் லயித்தவனின் வாழ்வில் வேதநாயகனான மகேசன் விளையாடல் புரியத் தொடங்கினார். பெற்றோரின் அரவணைப்பில் பாதுகாப்பான பந்தத்தில் கட்டுண்டு இருந்தவனை பிறவிக் கட்டிலிருந்து அறுத்தெறிந்து தம்மோடு இணைத்துக் கொள்ள இசைந்தார். பெற்றோர்கள் அடுத்தடுத்து சிவலோகப் பிராப்தியுற்றனர். தம் மகனின் பக்தி வலிமை தந்தையையும், தாயையும் உன்னத இடத்தில் அமர்த்தியது. ஆளில்லா அடர்ந்த கானகத்தில் தனியே விடப் பட்டவனுக்கு அனாத ரட்சகனாக இருந்தார், ஈசன். அகமும், புறமும் எந்தப்பற்றும் இல்லாது பற்றற்றவனாய் திரிந்தான் சுசரிதன்.

ஈசன் இன்னும் ஒரு படி மேலேறி மெல்லிய நூலாக இருந்த உயிர்பற்றையும் அறுத்தெறிய அவா கொண்டார். சுசரிதன், கதலிவனமான பழங்கள் மண்டிக் கிடக்கும், கௌசிக மகரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்ட புண்ணியத் தலமான திருப்பழனம் வந்தடைந்தான். அந்தி நெருங்கி இருள் கவ்வும் நேரம் அது. வழிக் களைப்பால் கண்கள் சொருக கோயிலின் வாயிலில் தன்னை மறந்து உறங்கினான். அவன் கனவில் பெரிய எருமையும் கருத்த உருவோடு எமதர்மன் பாய்ந்தோடி வந்தான்.

‘இன்றிலிருந்து ஐந்தாம் நாள் நீ மரணம் அடைவாய்’ என்று கூறி பேரிரைச்சலோடு நகர்ந்தான். சுசரிதன் விதிர்த்தெழுந்தான். உடல் நடுக்கமுற்றிருந்தது. ‘மரணம் தன்னைக் கவ்வுமோ, எண்ணற்ற பிறவிகள் எடுக்க வேண்டி வருமோ... இத்தனை நாள் பக்தியை எமன் சுருக்கிட்டு எடுத்துக் கொள்வானோ... பழனப்பிரானே’ என்று தனியாக அமர்ந்து கதறினான். சட்டென ஒரு அசரீரி ஒலித்தது. ‘திருவையாறை அடைந்து ஐயாறப்பனை சரணுற, உயிர் பிழைத்துக் கொள்வாய்’ என்றார் ஈசன்.

சுசரிதன் கண்களில் நீர் பொங்க ஆனந்தமாக திருவையாறு அடைந்தான். காலசம்ஹார மூர்த்தியாக கிளர்ந்தெழுந்த பரமன் எமனை தம் காலால் அழுத்தியிருக்கும் கோலம் கண்டு நெக்குருகினான். ஈசன் அவனுக்கு ஞானம் அளித்து ஆட்கொண்டார். எமன் நெருங்க முடியாத மிக உயர்ந்த நிலையை அளித்தார். அந்த ஆட்கொண்டேஸ்வரர் இன்றும் திருவையாறில் சந்நதி கொண்டிருக்கிறார். பழனப்பிரான், மரண பயம் அறுத்து சகாயம் செய்ததால் ‘ஆபத்சகாயேஸ்வரர்’ என்ற திருநாமம் சூடினார்.

திருப்பழனம் சிவனடியார்களால் நிறைந்திருந்தது. வெண்ணீற்றை மேனி முழுதும் பூசி விபூதி நாதனைச் சரணுற்ற அப்பூதியடிகள், அடியார்களுக்கு அன்னமும், மோரும் கொடுத்து இன்சுவை அமுது பரிமாறினார். அப்பரடிகளின் திருவடிகளை உள்ளத்தில் ஏந்தி வாக்கீசரை வாழ்நாளெல்லாம் பேசிப்பேசி களித்தவர் அவர். அவர் துணைவியாரும், புதல்வனும் அப்பூதியடிகளின் பாதையில் பயணித்தனர். முகமறியாத அப்பரை மானசீகமாக பக்தி செய்த அற்புதக் குடும்பம் அது. திருப்பழனத்திற்கு திருக்குழாமோடு வந்திருந்த திருநாவுக்கரசர் எங்கு காணினும் நாவுக்கரசரின் புகழ்பாடும் மானிடர்களும், திருநாவுக்கரசர் திருநாமம் தாங்கி நிற்கும் தண்ணீர் பந்தல்களைக் கண்டு அகமகிழ்ந்தார்.

அப்பூதியடிகளின் மாறாத பக்தியை ஊரார் மெச்சிப் பேசுவதை செவியுற்றார். நாவுக்கரசர் சாதாரணராய் நடந்து மக்கள் வரிசையில் நின்று அப்பூதியடிகளின் சேவையைக் கண்ணுற்றார். கூட்டம் அமைதியாக நகர்ந்தது. அது அப்பரடிகளின் முறை. ஞானச் சூரியன் வந்து நின்று கைநீட்டியது. உழவாரப்பணி செய்து செய்து தேய்ந்த கைகளல்லவா இது. எங்கோ மனதில் பட்டென்று மின்னல் கீற்று வெட்டியது. ஏதோ இனம் புரியாத பேரின்பப் பெருக்கு ஏற்படுகிறதே என்று கணநேரத்தில் நூறு சிந்தனைகள் எழ சட்டென்று நிமிர்ந்து முகம் பார்த்த அப்பூதி அடிகள் ஆனந்த அதிர்ச்சியடைந்தார்.

அவர் திருவடியில் வீழ்ந்தார். ‘இந்த எளியேனை காண வந்தீரே’ என விம்மினார். இன்றும் இத்தலத்தில் அப்பூதி அடிகள் அமைத்த தண்ணீர் பந்தல் உள்ளது. திருப்பழனத்தின் இன்னொரு சிகரச் சிறப்பு, சப்தஸ்தானங்களில் இத்தலமும் ஒன்று. நந்திப் பெருமானின் திருமணத்திற்காக இத்தலத்திலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட இன்சுவை கனிகள் மலையாகக் குவிந்தன. அதனால் ஒவ்வொரு வருடமும் நடக்கும் ஏழூர் திருவிழாவிற்கும் இக்கோயிலிலிருந்தும் இத்தலநாதர் பல்லக்கில் எழுந்தருள்வார். ஊர் கூடி பெருவிழாவாக அதைக் கொண்டாடும்.

திருப்பழனக் கோயில் எட்டாம் நூற்றாண்டில் முதல் ஆதித்தனால் கட்டப் பெற்று, சோழச் சக்ரவர்த்திகள் கலை நுணுக்கத்தால் மிக அழகான கற்றளியாக உருவெடுத்தது. ராஜராஜசோழன் இக்கோயிலுக்குக் கொடுத்த நிலநிவந்தங்களும், மூன்றாம் குலோத்துங்கன் கொடுத்த செல்வங்களும் கல்வெட்டில் பதித்திருக்கின்றனர். திருப்பழனத்திற்கு மகாலட்சுமியும், பெருமாளும் திருப்பயணம் மேற்கொண்டதால் வடமொழியில் ‘ஸ்ரீபிரஸ்தானபுரி’ என்றழைக்கிறார்கள்.

சம்பந்தர், அப்பரடிகள், சுந்தரர் என்று மூவராலும் பாடல் பெற்ற தலம். கிழக்கு நோக்கிய நெடிதுயர்ந்த ராஜகோபுரம். உள்ளே நகர்ந்து, பலிபீடம் கடந்தால், முன்பக்கம் வாகன மண்டபம் உள்ளது. ராஜ கணபதி கம்பீரமாக வீற்றிருக்கிறார். கோயில் வாயிலுக்கும் கருவறைக்கும் மிக நீண்ட தொலைவுள்ளது. வடபுறம் நடராஜர் சபையும், அருகேயே பைரவரும், நவகிரகங்களும் கண்டு அர்த்த மண்டபம் கடந்து கருவறை முன்பு நிற்க, ஆபத்சகாயேஸ்வரர் அப்படியே ஆட்கொள்கிறார்.

அமிர்த லிங்கமல்லவா, மனமும், உடலும் சட்டென்று குளுமை கொள்கின்றன. அப்பர், ‘‘பழனம் பழனம் என்பீராகில் பயின்றெழுந்த பழவினை நோய்பாற்றலாமே’’ என்று தனித் திருந்தாண்டகத்தில் தெளிவாகக் கூறுகிறார். வாழ்வினில் வரும் ஆபத்தைக் களைவதில் அசகாயச் சூரன் இப்பிரான். பேராபத்து வரும் கணம், பழனப்பிரானை வேண்ட முதல்வனாய் வந்து நிற்கும் முக்தி நாயகன்.

நேர்த்தியான நீண்ட உட்பிராகாரம். தட்சிணாமூர்த்தியின் மூர்த்தம் முன்பு மனம் கரைகிறது. அருகே சனகாதியருக்குப் பதிலாக சப்த ரிஷிகள் வரிசையாக அமர்ந்து தவத்தில் ஆழும் கோலம் காணக் கிடைக்காதது. குருவின் அருகேயே, பசு லிங்கத்திற்கு பால் சொரியும் புடைப்புச் சிற்பமும், பசுவின் அருகே முனிவர் கண் மூடி அமர்ந்து தவம் புரியும் காட்சியும் ஆச்சரியப்படுத்தும்.

குருவின் அண்மையில் அப்பூதியடிகள் நின்ற வண்ணம் கைகூப்பி நிற்கும் விதம் பார்க்க நெகிழ்ச்சியூட்டும். அஷ்டதிக் பாலகர்களும் திருமாலோடு சூழ்ந்து நின்று ஈசனை வணங்கியதற்கு ஆதாரமாக, பிராகார கோஷ்டத்தில் ஆங்காங்கு அஷ்டதிக் பாலகர்களையும் நின்ற வண்ணம் இருக்கும் பிற சிலைகளையும் பார்க்கலாம். வேணுகோபாலன் கால் மாற்றி அழகாய் சாய்ந்து, அரைக் கண் மூடிய நிலையில் குழல் ஊதும் சிலையைக் காண நமக்குள்ளும் வேணுகானம் பாயும்.

உட்பிராகாரத்திற்குள்ளேயே அம்பாள் கல்யாணி திருமண கோலத்தில் காட்சி தருகிறாள். அதுவும் ஆவுடையாரின் மீது நின்ற கோலம் பார்ப்பதற்கு அபூர்வமானது. ஆனால், தனிச் சந்நதியிலும் இத்தலத்தின் மூலநாயகி வீற்றிருக்கிறாள். தலவிருட்சம் வில்வ மரம், கோயிலுக்குள்ளேயே உள்ளது. கோயிலின் வெளிப்பிராகாரத்தில் தனிச் சந்நதியில் பிரஹன்நாயகி எனும் பெரிய நாயகி முகத்தில் பொங்கும் புன்னகையோடு நின்ற கோலத்தில் நல்லன வழங்கக் காத்திருக்கிறாள்.

ஆபத்து என்று ஓடோடி வருவோரை ‘அஞ்சேல்’ என அபயக்கரம் காட்டி நிற்கிறாள் பெரிய நாயகி. அம்பாள் சந்நதிக்கு அருகேயே முருகப் பெருமானின் சந்நதியுள்ளது, ஆறுமுகத்தான் ஒரே கல்லில் வடித்த மயில் வாகனத்தின் மீதமர்ந்து அமர்ந்திருக்கும் மூர்த்தியைப் பார்க்க, விழி பக்தியால் விரிகிறது. அவ்வளவு நுண்மையான சிற்பம். அருகேயே வள்ளி & தேவசேனா சமேதராகவும் அருட் காட்சி தருகிறார். கோயிலின் வாயிலில் உள்ள அமிர்த தீர்த்தத்தைப் பார்க்கும்போது கண்கள் கலங்குகின்றன.

தூர்ந்துபோய், வெறும் குப்பைகள்  கொட்டி கிடக்கின்றன. மிகப் புராதனமான பெரிய கோயிலாக இருந்தாலும் பிரதோஷ நாட்களில் கூட ஓரிருவர் மட்டுமே வந்து போகும் நிலையை அறியும்போது நெஞ்சு பதை பதைக்கிறது. திங்களூருக்கு மிக அருகே இத்தலம் இருப்பதால், அங்கே வரும் பக்தர்கள் திருப்பழனத்தின் கோபுரம் தம் கண்களில் பட்டால் மட்டும் வந்து போகிறார்கள். ஏழூர் திருவிழாவின் போது மட்டும் கூட்டம் கூடுகிறது.

கோயிலில் இன்னும் பல பகுதிகள் சீர் செய்யப்பட வேண்டியிருக்கிறது. யுகாந்திரமாக இருந்து வரும் இந்த அருட் பெட்டகமும், கலைப் பொக்கிஷமும் கண்டு கொள்ளப்படாமல் போய்விடுமோ எனும் பயமும், தாபமும் மனதைக் கவ்வுகிறது. ஆனால், ஆபத்சகாயேஸ்வரர் தன்னைப் பற்றிய கவலை யில்லாது பிறர் ஆபத்தை களைந்து கருணை ததும்பி நிற்கிறார், நம் வாழ்வைக் கனிய வைக்கிறார். தஞ்சாவூரிலிருந்து திருவையாறை அடைந்து அங்கிருந்து கும்பகோணம் செல்லும் பாதையில் 6 கி.மீ. தொலைவில் திருப்பழனம் உள்ளது.

- கிருஷ்ண வம்ஸி
படங்கள்: சி.எஸ்.ஆறுமுகம்