வங்கியிலே காசு வாழ்க்கையோ லேசு!



குறளி குரல்

திருவள்ளுவர் பொருளீட்டுவதற்கு எதிரானவர் அல்ல. நிறையப் பொருளீட்ட வேண்டும், ஒருவன் வளமாக வாழ வேண்டும் என்றே அவர் கருதினார். ஆனால், பொருளீட்டுவதற்காக ஒருவன் மேற்கொள்ளும் முறை நியாயமானதாக இருக்கவேண்டும் என்பது மட்டுமே அவர்
வகுத்துள்ள சட்டம்.
 
தொடர்ந்து கடின உழைப்பின் மூலம் அதிகப் பொருள் ஈட்டுபவர்களை ஊக்குவிக்கிறது வள்ளுவம். நிறையப் பொருள் ஈட்ட வேண்டும் என்பதற்கு வள்ளுவர் சொல்லும் காரணம் என்ன தெரியுமா?

`பொருளல்லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்ல தில்லை பொருள்!’

ஒருபொருளாக மதிக்கத் தகாதவர் களையும்கூட, மதிக்கத் தக்கவராக ஆக்குவது செல்வம்தான். இப்படிச் செய்யவல்லது பொருளைப்போல வேறு எதுவுமில்லை. எத்தனை பெருமைகள் ஒருவனுக்கு இருந்தாலும் பணம் இல்லையானால் அவனை யாரும் மதிப்பதில்லை. பணம் பந்தியிலே. குணம் குப்பையிலே. மதிக்கப்படாதவர்களும் அவர்களிடம் பொருள் சேர்ந்தபோது மதிக்கப்படும் நிலை உலகில் நிலவுவதை விவேக சிந்தாமணி அழகான ஒரு பாடல் மூலம் சித்திரிக்கிறது:

`பொன்னொடு மணியுண்டானால்
புலையனும் கிளைஞன் என்று
தன்னையும் புகழ்ந்து கொண்டு
சாதியின் மணமும் செய்வர்
மன்னராய் இருந்த பேர்கள்
வகைகெட்டுப் போவா ராகில்
பின்னையும் ஆரோ என்று
பேசுவர் ஏசுவாரே!’

செல்வந்தர்களிடையே கலப்புத் திருமணங்கள் மிக இயல்பாய் நடைபெறுகின்றன. காரணம் பணம் இருந்துவிட்டால் சாதியை யாரும் பொருட்படுத்துவதில்லை. ஆனால், பெரும் மன்னராய் இருந்தாலும் அவரிடம் பணம் இல்லாத நிலை தோன்றினால் அவரை யார் என மக்கள் கேட்பார்கள், ஏசுவார்கள். இந்த உலக இயல்பைத் தான் விவேக சிந்தாமணி விவேகத்துடன் விளக்குகிறது.

`இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு!’
 
பொருளில்லாதவரை நல்லவராக இருந்தாலும் எல்லோரும் ஏளனம் செய்வார்கள். தீயவராக இருந்தாலும் பொருள் இருப்பவர்களுக்குச் சிறப்புச் செய்வதே உலக இயல்பு. இந்த உலக இயல்பைப் புரிந்துகொள்வதே யதார்த்த அறிவு.

`நிறைபொருள் உடையவர் நிந்தை சொல்லினும்
முறையுறு வழக்கென மொழிந்து
போற்றுவர்
வறுமை மிக்குடையவர் வழங்கும் வாய்மொழி
அறமொழி ஆகினும் அதனை
எள்ளுவர்’

- என்கிறது விவேக சிந்தாமணி. பொருள் இல்லாதவனை மனைவி மட்டுமல்ல, பெற்ற தாயும்கூட ஏற்றுக்கொள்ள மாட்டாள் என்கிறார் அவ்வையார். நல்வழிகாட்டும் அந்த நேரிசை வெண்பா, அவ்வையாரின் நல்வழி என்ற நூலில் உள்ளது.

`கல்லானே யாயிடினும் கைப்பொருள் ஒன்றுண்டாயின்
எல்லோரும் சென்றங்கு எதிர்கொள்வர் - இல்லானை
இல்லாளும் தான்வேண்டாள் ஈன்றெடுத்த தாய் வேண்டாள்
செல்லா தவன்வாயிற் சொல்.’

`புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை’ என்றொரு திரைப்பாடல். அன்னை’ என்ற திரைப்படத்தில் கவிஞர் கண்ணதாசன் எழுதி, சந்திரபாபு பாடி நடித்த பாடல். அதில் வரும் இரண்டு வரிகள் சிந்தனையைத் தூண்டுபவை:

`பணம்படைத்த வீட்டினிலே வந்ததெல்லாம் சொந்தம்
பணமில்லாத மனிதருக்கு சொந்தமெல்லாம் துன்பம்!’

குமரகுருபரர் தாம் எழுதிய நீதி நெறி விளக்கம் என்ற நூலில் பொருள் வைத்திருப்பவனின் சிறப்பை விளக்குகிறார்.  இனிய சொல்லும் அடக்கமும் உடையவனாய் இருந்தாலும் ஏழையானால் அவனைக் கடுஞ்சொல் கூறி ஏசும் உலகம். ஆனால், கையில் காசு வைத்துள்ளவன் கடுஞ்சொல் சொன்னாலும்கூட, அவன் கீழ் அடிமை வேலை செய்யவும் தயாராய் இருப்பார்கள் அனைவரும்! என்னே இந்த உலகின் இயல்பு என வியக்கிறார் அவர்.

`இன்சொல்லன் தாழ்நடையன் ஆயினும் ஒன்று இல்லானேல்
வன்சொல்லின் அல்லது வாய்திறவா - என்சொலினும்
கைத்துடையான் கால்கீழ் ஒதுங்கும் கடல் ஞாலம்
பித்துடைய அல்ல பிற.’

ஈட்டி எட்டிய மட்டில்தான் பாயும். பணம் பாதாளம் வரை பாயும்! எனவே `திரைகடல் ஓடியும் திரவியம் தேடு!’ என்று கொன்றை வேந்தனில் அவ்வையார் சொன்னது அனுபவ பூர்வமான வாக்கியம்தானே? புலமையை மட்டுமே சொத்தாகப் பெற்ற அவ்வையார் பல மன்னர்களின் ஆதரவில்தானே வாழ்ந்தார்? சங்க காலத்தில் பல மன்னர்களே புலவர்களாக இருந்ததைப் பார்க்கிறோம்.

அவர்களை மக்கள் கூடுதலாகத்தானே மதித்திருப்பார்கள்? புலமைக்கு ஓரளவுக்குத்தான் மக்களிடையே மதிப்பு. ஆனால், செல்வத்தோடு கூடிய புலமை இருக்குமானால், மக்கள் செல்வத்தை மதிப்பதால் அந்தப் புலமைக்கும் கூடுதலாக கெளரவம் கிடைத்து விடுகிறது! எனவே உலகோரின் மதிப்பைப் பெற நீயும் செல்வந்தனாகு என்கிறார் வள்ளுவர்.

`பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று!’
 
செல்வம் என்பது அணையாத ஒரு விளக்கு. அது எவனிடம் இருக்கிறதோ அவன் சென்ற திசையிலெல்லாம் அது பகைமையாகிய இருளைப் போக்கிவிடும். செல்வந்தர்களைப் பகைத்துக்கொள்ள யாரும் விரும்ப மாட்டார்கள்.

`அறனீனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்.’

தீயவழியில் அல்லாமல் நியாயமான வழியில் ஈட்டிய பொருள் ஒருவனுக்கு அறத்தைத் தந்து இன்பத்தையும் கொடுக்கும். லஞ்சம் வாங்கிப் பொருள் சேர் என்று வள்ளுவம் ஒருபோதும் சொல்லவில்லை. நியாயமற்ற வழியில் பொருள் சேர்ப்பதை வள்ளுவம் வன்மையாய்க் கண்டிக்கிறது. ஆனால், `ஓவர்டைம்’ என நேரம் கடந்தும் வேலை செய்து பொருள் ஈட்டுவதை வள்ளுவம் ஆதரிக்கிறது! நேரான வழியில் கடினமாக உழைப்பது ஒன்றே செல்வம் சேர்க்கும் முறை என்கிறது வள்ளுவம்.

`அருளொடும் அன்பொடும் வாராப்
பொருளாக்கம்
புல்லார் புரள விடல்.’
 
அருளோடும் அன்போடும் வராத பொருளை ஒருவன் ஏற்றுக் கொள்ளக் கூடாது. அதை அப்போதே தீயது என்று நீக்கி விடவேண்டும். லஞ்சம் வாங்காதே என்பதுதானே இந்தக் குறள் சொல்லும் நீதி? தனிமனிதர்கள் மட்டுமல்ல, அரசாங்கம் எப்படிப் பொருள் சேர்க்க வேண்டும் என்பதைப் பற்றிக்கூட வள்ளுவர் விதி வகுக்கிறார்.

`உறுபொருளும் உல்கு பொருளுந்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்!’

உரிமையுள்ளவர் இல்லாமையால் தானே வந்து சேர்ந்த பொருளும், சுங்கமாக வந்த வரிப் பொருளும், பகைவரிடமிருந்து கவர்ந்த பொருளும் அரசனுக்குரியவை. அதாவது, அரசாங்கத்திற்கு உரியவை. இவ்வழிகளில் அல்லாது கடினமான வரிகளைப் போட்டு அதன் மூலம் அரசு பண வசூல் செய்வது தகாது.
 
கையில் வேலோடு நின்று மிரட்டி வழிப்பறி செய்யும் கொள்ளைக்காரனுக்கும் அரசனுக்கும் வேறுபாடு வேண்டாமா? ஆணைகள் மூலம் கடும் விரியை விதித்து அரசன் வரிவசூல் செய்வானானால் அவன் கொள்ளைக்காரன்தான் என்று வேறோர் இடத்தில் வள்ளுவர் அறிவுறுத்துகிறார்.

‘வேலொடு நின்றான் இடுவென்றது போலும்
கோலொடு நின்றான் இரவு’
- என்கிறார்.

`அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு.’

அன்பு பெற்றெடுத்த குழந்தையே அருள். இந்த அருள் என்னும் குழந்தை, செல்வம் என்னும் செவிலித் தாயால் வளரும். அருள் உடையவர்கள் தாங்கள் பெற்ற செல்வத்தை வாரி வழங்குவார்கள். இவர்களை உலகம் விரும்பும். நேசிக்கும். ஒரு தொழில் தொடங்க விருப்பம். எப்படித் தொடங்குவது? கடன் வாங்கித் தொழில் தொடங்கலாமா? தொழில் தொடங்குவதற்கும் சில விதிகளைச் சொல்கிறது வள்ளுவம்.

`குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
உண்டாக்கச் செய்வான் வினை.’

தன் கையில் பொருள் வைத்துக்கொண்டு செயல் ஒன்றினைத் தொடங்குவது என்பது, கவலையில்லாமல் குன்றின்மேல் ஏறி நின்று அடிவாரத்தில் நடக்கும் யானைப் போரைக் கண்டு ரசிப்பதற்கு ஒப்பாகும். எனவே தொழில் தொடங்குபவர்கள் திருப்பிக் கட்ட முடியாத பெருங்கடனை வாங்கித் தொழிலைத் தொடங்குவது நல்லதல்ல.

செய்க பொருளை, செறுநர் செருக்க
கற்றும்
எஃகதனில் கூரியது இல்!’

ஒருவன் பொருளைச் சம்பாதிக்க வேண்டும். பகைவரின் கர்வத்தை அடக்கும் வாள், செல்வத்தைத் தவிர வேறொன்றில்லை. பகைவர்களை வெல்ல விரும்புகிறீர்களா? அவர்களின் ஆணவத்தை அடியோடு அகற்ற விரும்புகிறீர்களா? அவர்களை ஒன்றுமே செய்ய வேண்டாம். நீங்கள் நல்வழியில் நிறையப் பொருளீட்டுங்கள், அதுபோதும். பகைவர்களின் செருக்கு தானாய் அடங்கிவிடும்.

ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க் கெண்பொருள்
ஏனை இரண்டும் ஒருங்கு!’

நல்ல வழியில் பொருளீட்டியவனுக்கு அறமும் இன்பமும் தானே வந்து அமையும் எனவும் உறுதி கூறுகிறார் வள்ளுவர். அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு போலிச் சீட்டுக் கம்பெனிகள் பலவற்றில் பணம் போட்டு ஏமாந்தவர்கள் பலர் உண்டு. நியாயமான வட்டி போதும் என எண்ணி அஞ்சலகம் உள்ளிட்ட அரசு அமைப்புகளில் பணத்தைச் சேமித்திருந்தால் இப்படி முதலுக்கே மோசம் நேருமா? புதிய ஆத்திசூடியில் பணத்தினைப் பெருக்கு’ என எழுதினார் மகாகவி பாரதியார்.

ஆனால், அப்படி எழுதிய அவரால் பணத்தைப் பெருக்க முடியவில்லை. பெரும்புகழ் படைத்த அந்த மகாகவியை மக்கள் பொருளாதார ரீதியாக ஆதரிக்க முன்வரவில்லை. வறுமையிலேயே தானும் வாடி தன் மனைவி செல்லம்மாவையும் வாட வைத்து, வறுமை தீராமலே மறைந்தார். இந்தத் தமிழ்ச் சமுதாயம் அந்த மகாகவியைப் பொருளாதார ரீதியாக ஆதரிக்கத் தவறிவிட்டது.

ஆனால், வறுமையில் வாடியதால்தான் அவரால் அத்தனை உணர்வுபூர்வமாக ஏழைகளைப் பற்றி எழுத முடிந்தது என்று சிலர் இன்று எழுதியும் பேசியும் வருவது எத்தனை பெரிய பிசகு! இப்போது சிரமத்தில் இருக்கும் எழுத்தாளர்களையும் மறந்தும்கூடப் பொருளாதார ரீதியாக ஆதரித்து விடாதீர்கள் என்பதல்லவா அந்த வாதத்திற்குப் பொருள்!
 
உண்மை என்ன? பாரதியார் மட்டும் இன்னும் கொஞ்சம் வசதியோடு இருந்திருந்தால் தகுந்த மருத்துவம் பார்த்துக் கொண்டு, கூடுதல் காலம் வாழ்ந்திருந்து, இன்னும் நிறையத் தமிழுக்குத் தொண்டாற்றியிருப்பார் என்பதுதானே நிஜம்? வறுமையை அனுபவித்தால்தான் நல்ல கவிதையை எழுதமுடியும் என்ற வாதம் உண்மையானால் செல்வ வளத்தில் திளைத்த தாகூர் நோபல் பரிசுபெறும் தகுதியுடைய கவிதைகளை எழுதியது எப்படி? நாம் செய்யும் தவறுகளை நாம் நியாயப்படுத்தக் கூடாது.

பாரதியார் தரப்பில் செய்த தவறைத் தமிழ்ச் சமுதாயம் உணராததால் தான் தொடர்ந்து புதுமைப்பித்தன், விந்தன் உள்ளிட்ட பல படைப்பாளிகள் வறுமையில் ஆழ்ந்தார்கள். சரஸ்வதி கடாட்சம் உள்ளவர்களுக்கு லட்சுமி கடாட்சம் இராது என்று இதற்கு ஒரு சப்பைக்கட்டு வேறு! சரஸ்வதி கடாட்சம் உள்ளவர்களைத் தேடிப் பிடித்து அவர்களுக்கு லட்சுமி கடாட்சம் ஏற்படுத்தித் தருவதைத் தமிழ்ச் சமுதாயம் இனியாகிலும் தன் கடமையாய்க் கொள்ள வேண்டும்.

எழுத்தாலும் பேச்சாலும் தமிழை வளர்க்கும் தமிழ் எழுத்தாளர்களையும் தமிழ்ப் பேச்சாளர்களையும் பொருளாதாரக் கவலை இல்லாத அளவு பராமரித்தால்தானே அவர்கள் குடும்பக் கவலையின்றித் தமிழ்த் தொண்டாற்ற இயலும்? திரையரங்குகளில் கட்டணம் செலுத்திப் பார்க்க வேண்டிய திரைப்படங்களை எந்தச் செலவுமில்லாமல் திருட்டு வி.சி.டி. மூலம் இல்லத்திலேயே பார்ப்பதை எதிர்த்துத் திரைக் கலைஞர்கள் உரத்துக் குரல் கொடுக்கிறார்கள். நியாயம்தான்.

அதேபோல, எழுத்தையே நம்பி வாழும் எழுத்தாளர்களின் புத்தகங்களை விலை கொடுத்து வாங்கிப் படிக்காமல், அடுத்தவர்களிடம் ஓசியில் வாங்கிப் படிப்பதும் தவறுதான் என்பதை நாம் உணர்கிறோமா? சமரசம் செய்துகொள்ளாமல் உயர்ந்த இலக்கியத்தையே தொடர்ந்து படைத்துவந்த அண்மைக்காலப் படைப்பாளிகளான  தீபம் நா. பார்த்தசாரதி, வல்லிக்கண்ணன், கு. அழகிரிசாமி போன்றோர் எழுத்தை மட்டுமே நம்பி வாழ்ந்த எழுத்தாளர்கள் பொருளாதார ரீதியாக எவ்வளவு சிரமப்பட்டார்கள் என்பதை வரலாறுதான் சொல்கிறதே? 

அதுசரி, நிறையப் பொருள் சம்பாதியுங்கள் என அறிவுறுத்திய வள்ளுவர் இன்று இருந்தால், அன்றைய திருக்குறளுக்கு இணையான அறநெறிக் கருத்துகளை இன்று எழுதுவாரானால், அவர் தன் வாழ்வில் ஏழையாக இருப்பாரா, செல்வந்தராக இருப்பாரா?

(குறள் உரைக்கும்)

திருப்பூர் கிருஷ்ணன்