ஐந்து முக முருகன்



கயிலையில் ஒரு நாள் அனைத்து தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும்  கூடியிருக்க,  உடன்  ஆனைமுகனும், சண்முக நாதனும் அமர்ந்துள்ளனர். அப்போது பிரம்ம தேவன் ஈசனையும், சக்தியையும் தரிசிக்க வருகிறார். அனைவருக்கும் வணக்கம் கூறிய பிரம்மன், முருகப் பெருமானை கண்டும், காணாதது போல் நகர்ந்தார். குமரன் பாலகன்தானே என்ற அலட்சியம். உடனே முருகன் பிரம்மனை அழைத்து பிரணவத்துக்குப் பொருள் கேட்க, அவர் பதில் கூறத் தெரியாமல் விழிக்கிறார். உடனே அவரை சிறைப் பிடிக்கிறான் முருகன்.

இந்த புராண சம்பவத்தை இன்றும் நினைவு படுத்துகிறது, ஓதிமலை. பிரம்மனை சிறை வைத்து தானே படைப்புத் தொழிலை மேற்கொண்ட முருகப் பெருமான்  ஆலயமும், நான்முகன் சிறைப்பட்ட இரும்புச் சிறைச்சாலையும் இத்தலத்தில் உள்ளன. கோவை, மேட்டுப்பாளையம் அருகே புஞ்சைபுளியம்பட்டியில் இருந்து 6 கி.மீ. தொலைவில் இரும்பறை; அங்கிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் ஓதிமலை உள்ளது. அன்னூரிலிருந்தும் மேட்டுப்பாளையத்திலிருந்தும் ஓதிமலைக்கு பஸ் வசதி உண்டு.

ஓதிமலை, தமிழகத்தில் முருகப்பெருமான் குடிகொண்டுள்ள குன்றுகளில் மிகவும் உயரமானது. 70 டிகிரி கோணத்தில் செங்குத்தானது. இம்மலை தனி மலையாக உள்ளது. அடிவாரத்தில் இருந்து 1800 படிகள் அமைக்கப்பட்டுள்ளன. முருகன் ஆலயம் கற்றளியாக உள்ளது. முற்காலத்தில் செங்கற்களால் கட்டப் பெற்றிருந்த இவ்வாலயம் 1932ல் செங்கற் கலவை நீக்கி கருங்கல்லினால் அமைக்கப்பட்டது. உள்ளே நுழைந்ததும் இடும்பன் சந்நதி, பிறகு சுவாமி சந்நதி. மிகச் சிறிய அர்த்த மண்டபம்.

கருவறையில் முருகப் பெருமான் ஐந்து முகங்களுடனும், எட்டுக் கரங்களுடனும், அதிகாரத் தோரணையில் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி உள்ளார். அது ஏன் ஐந்து தலை, எட்டு முகம்? சித்தர் போகர் இம்மலையின் வடகிழக்கு பகுதியில் யாகம் நடத்தியுள்ளார். ஆதலால்தான் அந்த இடத்திலுள்ள மணல் வெண்மை நிறமாக உள்ளது என்கிறார்கள். அந்த திருமண்தான் பக்தர்களுக்கு அருட்பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. நவபாஷாண சிலை செய்வதற்காக பழனி திருத்தலத்திற்கு செல்ல வழி தெரியாமல் தவித்தார் போகர்.

அவருக்கு ஒரு முகம், நான்கு கரங்களுடன் ஓதிமலையிலிருந்து முருகன் இறங்கி வந்து, 4 கி.மீ. தொலைவில் உள்ள குமாரபாளையம் வரை உடன் வந்து வழிகாட்டினாராம்.  அதனால்தான் ஓதிமலையில் முருகன், ஐந்து முகங்கள், எட்டுக் கரங்களுடன் அருள் பாலிக்கின்றார். இந்தத் தோற்றம் இருபத்து எட்டு சிவாகமங்களிலும், குமார தந்திரத்திலும் மற்றும் சிற்ப சாஸ்திரத்திலும் விளக்கப்படாத அதிசய அற்புதத் திருமேனியாகும்.

பிரம்மனை சிறை வைத்த பின் இரும்பறைக்கு கயிலைநாதர் எழுந்தருளி, பிரம்மனை விடுதலை செய்தார். இந்த இரும்பறை ஈசன் கோயில், கைலாசநாதர் ஆலயம் என்றே வழங்கப்படுகிறது. ஈசன் கயிலையில் இருந்து தனித்து வந்ததால், பராசக்திக்கு இந்தக் கோயில் உள்ளே விக்கிரகம் இல்லை. பரிவாரத் தெய்வங்களும் இல்லை. விநாயகர், நந்தி சிற்பங்கள் உண்டு. இவையும் பிற்காலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகச் சொல்கிறார்கள். 

ஈசன் இங்கு வேத ஆகமங்களுடைய பொருளை முருகனிடம் கேட்க, அவரும் மலையின் மீது குருவாக இருந்து ஓதியதால் இத்திருக்கோயில் ‘ஓதிமலை’ என சிறப்பு பெயர் பெற்றது. இதனை அருணகிரிநாதர் திருப்புகழில், ‘ஆதி மகமாயி அம்மை தேவசிவனார் மகிழ்ந்த ஆவுடைய மாது தந்த குமரேசா’ என்று தொடங்கி, ‘ஓது மறையாக மஞ்சொல்யோக மதுவே புரிந்து ஊழி உணர்வார்கள் தங்கள் வினைதீர ஊனுமுயிராய் வளர்ந்து ஓசையுடன் வாழ்வு தந்த ஓதிமலை மீது கந்தப் பெருமாளே’ என்று பாடியுள்ளார்.

இத்திருக்கோயில் சுமார் 1800 ஆண்டுகளுக்கு முற்பட்டது. சேரமான் பெருமாள், மனுநீதிச் சோழன், வஜ்ராங்க பாண்டியன் ஆகிய மூவேந்தர்களால் எட்டு புண்ணிய நதிகளிலிருந்து புனித நீர் எடுத்து வந்து திருக்குட நன்னீராட்டு விழா செய்ததற்கான சான்று ஓலைச்சுவடிகளில் உள்ளது. ஞானமலை, ஓதிமலை, ஓதியங்கிரி, ஓதும்மலை என்றெல்லாம் அழைக்கப்படும் இம்மலை, தரைமட்டத்திலிருந்து சுமார் 1 கி.மீ. உயரத்தில் உள்ளது.

‘ஞானமலை’ என்று வழங்கப்படும் இங்கு  ஓதியங்கிரிப் பெருமானின் அருள் பெற, ‘வரம் கேட்டல்’ என்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. இல்லறம், தொழில், திருமணம், வியாபாரம், விவசாயம், இன்னும் பிற சுபகாரியங்கள் நடந்தேறிட வெள்ளை அரளி, செவ்வரளி மலர்களை இறைவன் திருமுகத்தில் வைத்து ஆசியும், அருளும் கோரும் ‘பூக்கேட்டல்’ நிகழ்ச்சி அது.

- எஸ்.வி. நடராஜன்