கவலையெல்லாம் நீக்கி அருள்வார் கந்தசுவாமி



செய்யூர்

சேய் என்றால் குழந்தை என்று பொருள்.  முருகனுக்குரிய பெயர்களுள் சேய் என்பதும் ஒன்று. செய்யூரில் எழுந்தருளியுள்ள கந்தசுவாமியை குழந்தையாக பாவித்து அந்தகக்கவி வீரராகவ முதலியார் ‘சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ்’ என்ற நூலை எழுதினார். சேயூர் என்ற பெயர் நாளடைவில் மருவி செய்யூர் என்று ஆனது. சூரபத்மன் சிவபெருமானை வேண்டி தவம் இயற்றி, ‘தங்களால்கூட எனக்கு மரணம் நிகழக்கூடாது’ எனும் வரத்தைக் கேட்டுப் பெற்றான். இப்படி சாகாவரம் கிடைக்கப் பெற்ற சூரபத்மன் தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்தி மகிழ்ந்தான். திருமால், பிரம்மன், இந்திரன் முதலானோர் சிவபெருமானை சந்தித்து இதுகுறித்து முறையிட்டனர்.

சிவபெருமான் தன் நெற்றிக்கண்ணிலிருந்து ஆறு தீப்பொறிகளை உருவாக்க, அவை சரவணப் பொய்கையில் இணைந்து, ஆறுமுகங்களோடும் பன்னிரண்டு கரங்களோடும் முருகப்பெருமான் அவதாரமாக நிகழ்ந்தது. முருகப்பெருமான் நிலமார்க்கத்தில் திருப்பரங்குன்றத்திலும், ஆகாயமார்க்கத்தில் திருப்போரூரிலும், கடல்மார்க்கத்தில் திருச்செந்தூரிலும் அசுரர்களுடன் போரிட்டார். சிங்கமுகாசுரனை வென்று சிங்கமாக மாற்றி அம்பிகைக்கு வாகனமாக்கினார். தாரகாசுரனை வென்று யானையாக மாற்றி அய்யனாருக்கு வாகனமாக்கினார்.

இதனால் ஆத்திரமடைந்த சூரபத்மன் பல மாயைகளை உருவாக்கி முருகப்பெருமானுக்கு எதிராகப் போர் தொடுத்தான். இறுதியாக மாமர வடிவெடுத்து கடலில் நின்றான். உமாதேவியார் வழங்கிய வேலை தியானித்து எய்தார் முருகப்பெருமான். மாமரம் இரண்டு கூறுகளாயின. அவற்றில் ஒன்று மயிலாகவும் மற்றொன்று சேவலாகவும் ஆயின. மயிலைத் தனது வாகனமாகவும், சேவலைத் தனது கொடியிலும் அமைத்துக் கொண்டார். இவ்வாறு சுரபத்மன் மாறிய நாள் சஷ்டியாகும். 

சூரபத்மன் முதலான அசுரர்களை போரில் வெற்றி கொள்ள முருகப்பெருமானுக்கு உதவிய பைரவரின் பூத வேதாள கணங்கள் முருகப்பெருமான் வள்ளி-தெய்வானையோடு வீற்றிருக்கும் திருக்கோலத்தைக் காண விரும்பி, பைரவரைக் கோரினர். அந்தக் கோரிக்கையை முருகப்பெருமானிடம் தெரிவித்து விண்ணப்பித்துக் கொண்டார் பைரவர். இதை ஏற்ற முருகப்பெருமான் பைரவரிடம், ‘யாம் சேயூர்  எனும் பதியில் தினமும் ஈசனை ஆராதிக்க உள்ளோம். பூத வேதாள கணங்கள் அப்பதிக்கு வந்தால் யாம் வள்ளி-தெய்வானை சகிதமாக காட்சியளிப்போம்’ என்று தெரிவித்தார்.

பைரவர் பூத கணங்களை அழைத்துக் கொண்டு சேயூர்வந்தார். சேயூரில் அனுதினமும் அர்த்தஜாமத்தில் கந்தசுவாமியும் இருபத்தி ஏழு பூத வேதாள கணங்களும் சோமநாதரை வழிபடுகிறார்கள் என்பது ஐதீகம். நுழைவாயில் ராஜகோபுரமின்றி அமைந்துள்ளது. கோயிலினுள் இடதுபுறத்தில் பிரதான கணபதியை தரிசிக்கலாம். பொதுவாக கணபதியின் மேற்கரத்தில் பாசம் அங்குசம் போன்ற ஆயுதங்கள் காணப்படும். ஆனால், இங்கு இடது மேற்கரத்தில் ஜபமாலையுடன் அவர் வீற்றிருக்கிறார். இவருடைய சந்நதிக்குள் ஒரு சிறிய அறை உள்ளது.

முற்காலத்தில் சித்தர் ஒருவர் அந்த அறையில் மரகதலிங்கத்தை வைத்து முறையாக வழிபட்டதாக கருதப்படுகிறது. சந்நதியின் பின்புறத்தில் இரண்டு கோமுகிகள். சிவலிங்கம் இருந்த இடத்தில் தற்போது ஒரு அணையா விளக்கு ஏற்றப்பட்டு பராமரிக்கப்படுகிறது. இந்த விளக்கை வெளிப்புறத்திலிருந்து ஒரு சிறிய துளை வழியாகக் காணமுடிகிறது. அருகில் நாககன்னிகள் சந்நதியும் அமைந்துள்ளது. 

அடுத்து இடதுபுறத்தில் பள்ளியறை உற்சவர், முத்துக்குமாரசுவாமியின் சந்நதி. நான்கு திருக்கரங்களுடன் வலது காலை மயிலின் முதுகின் மீது வைத்தபடி நிற்கிறார் சுவாமி. அடுத்ததாக மீனாட்சி அம்மன் சமேத சோமநாதர் சந்நதி. சோமநாதர் கிழக்கு நோக்கியும், மீனாட்சியம்மை தெற்கு நோக்கியும் பிரதிஷ்டையாகியுள்ளார்கள். வெளியே நந்திதேவரையும், பலிபீடத்தையும் காணலாம். இந்த சந்நதியில் துவாரபாலகர் களாக சோமநாதருக்கு வலதுபுறம் பிரம்மாவும், இடதுபுறம் விஷ்ணுவும் அமைந்திருக்கிறார்கள். 

இந்த ஒரு தலத்தில் மட்டுமே ஒரே சமயத்தில் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளையும் தரிசிக்க முடியும் என்பது கூடுதல் சிறப்பாகும். சோமநாதருக்கு நேர் எதிரே மேற்கு பார்த்தவாறு சூரியபகவான் சிவசூரியன் என்ற பெயரில் காட்சிதருகிறார். மும்மூர்த்திகளை வழிபட்டு மூலவர் கந்தசாமியை தரிசிக்கலாம். இவரை கோயில் நுழைவாயிலிலிருந்தும் தரிசிக்க இயலும்.

மூலவர் கந்தசுவாமி வள்ளி-தெய்வானை சமேதராக நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். சந்நதிக்கு வெளியே சுவீரன், சுஜனன்  இருவரும் துவாரபாலகர் களாக நிற்கிறார்கள். கருவறை வெளிப்புறத்தில் இருபுறங்களிலும் முறையே துவார கணபதியும், துவார லட்சுமியும் அருள்பாலிக்கிறார்கள். இவர்களுக்கு எதிரே குஹசூரியனும், பைரவரும் சந்நதி கொண்டிருக்கிறார்கள். மூலவர் கந்தசுவாமியின் எதிரில் உட்பிராகாரத்தில் கல்லால் ஆன வேல் ஒன்று உள்ளது. வெளியே கந்தசாமியை நோக்கியபடி அவருடைய வாகனமான மயிலும் கொடிமரமும் பலிபீடமும் அமைந்துள்ளன.
 
கோஷ்ட சிலைகளாக கருவறையைச் சுற்றி நிருத்தஸ்கந்தர், பாலஸ்கந்தர், சிவகுருநாதர், புளிந்தர் என முருகப்பெருமான் பல ரூபங்களில் கலைநயத்துடன் காணப்படுகிறார். சம்பிரதாயமான கோஷ்ட தெய்வங்களுக்கு பதில் முருகரின் திருவுருவங்கள் இவ்வாறு இடம்பெற்றிருப்பது வித்தியாசமானது. கொடிமரத்திற்கு அருகிலுள்ள மயில்மண்டபத்தில் தனித்தனி சந்நதிகளில் வள்ளியும் தேவசேனாவும் தெற்கு திசை நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்கள். மயில்மண்டபத்தை ஒட்டி சர்வ வாத்திய மண்டபம் அமைந்துள்ளது. விழாக்காலங்களில் இந்த வாத்திய மண்டபத்தில் உற்சவருக்கு அபிஷேகம் முதலானவை நடத்தப்படுகின்றன. 

எந்த ஒரு கோயிலிலும் இல்லாத தனிச்சிறப்பு இங்கு உண்டு. அது திருக்கோயிலின் வெளிச்சுற்றில் உட்புறச் சுவர்கள் முழுவதும் இருபத்தி ஏழு பூத வேதாள கணங்களின் சிற்பங்கள் தனித்தனியாக காணப்படுவதுதான். இவை பைரவரின் ஆணைக்குக் கட்டுப்பட்டு நடப்பவை. முருகப்பெருமான் திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்தபோது அவருக்குத் துணை புரிந்தவையே இந்த பூத வேதாளங்கள். இருபத்திஏழு நட்சத்திரங்களின் சொரூபமாக இருபத்தி ஏழு பூத வேதாளங்கள் இந்த திருக்கோயிலில் அமைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு பூத வேதாளத்தின் பெயரும் அதற்குரிய நட்சத்திரமும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. இவர்களில் முதலாவது பூத வேதாளம் நாகலிங்க மரத்தின் அருகிலும், இருபத்தி ஏழாவது பூத வேதாளம் வில்வமரத்தின் அருகிலும் அமைந்துள்ளன. ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமியில் தங்கள் நட்சத்திரங்களுக்கு உரிய பூத வேதாளத்திடம் தம் குறை, கோரிக்கைகளை சமர்ப்பித்தால் அந்த பூத வேதாளம் பைரவர் மூலமாக முருகப்பெருமானிடம் தெரிவித்து நமது கோரிக்கைகளை நிறைவேற்றும் என்பது ஐதீகம். 

இந்த திருக்கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த பூஜை மாலை நான்கு முப்பது மணிக்குத் தொடங்கி இரவு எட்டு மணிக்கு நிறைவடைகிறது. இதில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நட்சத்திரத்திற்கு உரிய பூத வேதாளத்தின் மீது பூக்களைத் தூவி நல்லெண்ணெய் தீபம் ஏற்றி மனதாற வழிபடுகிறார்கள். இருபத்தி ஏழு வேதாளங்களுக்கும் தனித்தனியாக தீவட்டி கொளுத்தி வைக்கப்படுகிறது.

பூத வேதாளங்களுக்கு பொரிகடலை, சாத உருண்டை, எள் மற்றும் வாழைப்பழம் நிவேதனமாகப் படைக்கப்படுகின்றன. இதன் பின்னர் ஒவ்வொரு பூத வேதாளத்திற்கும் அந்தந்த நட்சத்திரத்திற்குரிய ஸ்தோத்திரங்களைச் கூறி அர்ச்சனை செய்து கற்பூர தீபம் காட்டி நிறைவு செய்கிறார்கள். மாலை ஆறரை மணியளவில் ஸ்ரீமீனாட்சிஅம்மை சமேத சோமநாதருக்கும், பிறகு மூலவரான ஸ்ரீஹகந்தசுவாமி மற்றும் வள்ளி தெய்வானைக்கும், ஸ்ரீபைரவருக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகின்றன. நிறைவாக இரவு எட்டு மணியளவில் ஸ்ரீபைரவருக்கு மரிக்கொழுந்து சூட்டி எட்டுவிதமான மலர்களைக் கொண்டு அஷ்டபுஷ்பார்ச்சனை செய்யப்படுகிறது.

இத்தலத்தின் மற்றொரு சிறப்பம்சம், பெரியாண்டவர் பூஜையாகும். மயில் மண்டபத்தின் பின்புறத்தில் குலதெய்வ வழிபாடாக பெரியாண்டவர் பூஜை நடத்தப்படுகிறது. சிவராத்திரி மற்றும் பங்குனி உத்திர நாட்களில் பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தி பெரியாண்டவர் பூஜையை சிறப்பாகச் செய்கிறார்கள். ஞாயிறு, திங்கள், செவ்வாய், ெவள்ளி ஆகிய நாட்களில் இவ்வாறு செய்வது சிறப்பாக கருதப்படுகிறது. கொடிமரத்திற்கு பின்புறம் ஒரு உயரமான கல்தூண் காணப்படுகிறது.

இந்த கல்தூணில் திருக்கார்த்திகைக்கு முதல்நாளிலிருந்து தொடர்ந்து மூன்று நாட்களுக்கு எரியும்வகையில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. திருக்கோயிலில் ஆங்காங்கே கலைநயமிக்க புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. ஆலயத்தின் பிரதான தெற்கு நுழைவாயிலின் கிழக்குப் பகுதியில் பூரணை-புஷ்கலை சமேத ஐயனார், இடும்பன், அருணகிரிநாதர் போன்றோரின் புடைப்புச் சிற்பங்களைக் காணலாம். மேற்குப் பகுதியில் வல்லப கணபதி, வீரபத்திரர், உடன் நவவீரர்களும் காட்சி தருகிறார்கள்.

தேவர்களைக் காக்க அசுரப்படைகளை அழிக்க முருகப்பெருமான் மற்றும் பூத வேதாளகணங்களுடன் சேர்ந்து நவவீரர்கள் போரிட்டார்கள் என்பதால் அவர்களுக்கு இந்த அங்கீகாரம். மயில் மண்டபத்திற்கு அருகில் உள்ள சர்வ வாத்திய மண்டபத்  தூண்களில் மாரியம்மன், யோக நரசிம்மர், லக்ஷ்மி நரசிம்மர், ஐயப்பன் ஆகியோரை புடைப்புச்சிற்பங்களாக தரிசிக்கலாம்.

கோயிலுக்கு வெளியே தனியே நவகிரக சந்நதி அமைந்துள்ளது. அஷ்டமி மற்றும் சனிக்கிழமைகளில் கந்தசுவாமியை வணங்கி பிறகு மூன்று நல்லெண்ணெய் தீபங்கள் ஏற்றி, நவகிரகங்களை வழிபட்டால் சகல தோஷங்களும் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம். கோயிலின் மேற்குப் பகுதியில் சற்று தொலைவில் ‘செட்டிக்குளம்’ என்ற தீர்த்தத்தைக் காணலாம். முருகப்பெருமானுடைய பெயர்களில் செட்டி என்பதும் ஒன்றாகும். வன்னி மற்றும் நாகலிங்கமரங்கள் தலவிருட்சங்கள்.

இக்கோயிலில் வைகாசி விசாகம், ஆடிக்கிருத்திகை, கந்தசஷ்டி, சூரசம்ஹாரம், கார்த்திகை தீபம், தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகியன கோலாகலமாக கொண்டாடப்படுகின்றன. செய்யூர் ஸ்ரீகந்தசுவாமி திருக்கோயிலைச் சுற்றி நான்கு மாடவீதிகளிலும் நவகிரகங்களின் அம்சமாக ஒன்பது விநாயகர் சந்நதிகள் அமைந்துள்ளது, வேறு எங்கும் காணக் கிடைக்காத அதிசயமாகும்.

கந்தசுவாமி திருக்கோயில் காலை ஏழு முதல் பதினோரு மணிவரையிலும் மாலை ஆறரை முதல் இரவு எட்டரை வரையிலும், பௌர்ணமியை அடுத்த அஷ்டமி தினத்தில் மாலை நான்கு முதல் இரவு ஒன்பது மணி வரையிலும் நடை திறந்திருக்கும். ஸ்ரீகந்தசுவாமி கோயிலைச் சுற்றி, ஸ்ரீகச்சேரி விநாயகர், ஸ்ரீபெருந்தேவி தாயார் சமேத ஸ்ரீகரியமாணிக்கப் பெருமாள்,  ஸ்ரீமுத்தாரம்பிகை உடனுறை ஸ்ரீவால்மீகநாதர் திருக்கோயில்கள் அமைந்துள்ளன.

ஸ்ரீ கந்தசுவாமி திருக்கோயில் செய்யூரில் பேருந்து நிலையத்திற்கு மிக அருகில் அமைந்துள்ளது. மதுராந்தகத்திலிருந்து நேரடியாக செய்யூருக்கு பேருந்துகள் உள்ளன. சென்னையிலிருந்து கிழக்குக்கடற்கரைச் சாலை வழியாக மாமல்லபுரம், கல்பாக்கம், கூவத்தூரைத் தாண்டி எல்லையம்மன் கோயில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிகொண்டால், மூன்று கி.மீ. தொலைவில் செய்யூரை அடையலாம். ஷேர் ஆட்டோ வசதி உண்டு.

- ஆர்.வி.பதி