வரம் தரும் வைகாசி விசாகத்தில் தமிழ் தரும் முருகனை வணங்குவோம்-வைகாசி விசாகம் 25-5-2021



அழகுத் தமிழ் முருகனுக்கு அற்புத விழாக்கள் நடக்கும் தமிழ் மாதங்கள் நான்கு. வைகாசி மாதத்தில் விசாகம் , கார்த்திகை மாதத்தின் கார்த்திகை, தை மாதத்தில் பூசம், பங்குனி மாதத்தின் உத்திரம் முருகக் கடவுளுக்கு உகந்த அற்புதமான நாட்களாகும். இவை ஒவ்வொன்றுக்கும் தனி சிறப்பு உண்டு.
விசாகமும் முருகனும்வேத ஜோதிட சாத்திரத்தில் அஸ்வினி முதல் ரேவதி வரை உள்ள 27 நட்சத்திரங்கள்  உள்ளன. இதில்  விசாக நட்சத்திரம் ஞானத்திற்குரிய நட்சத்திரம்.

குருபகவானின் ஆதிக்கத்தில் வரும் நட்சத்திரம். மேலும் 27 நட்சத்திரங்களில் 16 வது நட்சத்திரமாக இந்த விசாக நட்சத்திரம் வருகிறது. இந்த நட்சத்திரத்தில் அவதரித்த முருகப்பெருமானை வழிபடுவதன் மூலம் பதினாறு பேறுகளையும் சிறப்புறப்  பெறலாம். விசாக நட்சத்திரம் அமைந்த ராசி விருச்சிக ராசி ஆகும். இந்த ராசிக்கு உரிய கிரகம் செவ்வாய் கிரகம். செவ்வாய் கிரகத்துக்குரிய தெய்வம் முருகன்! இந்த ஆண்டு வைகாசி விசாகம் குருவின் அருள் நிறைந்த செவ்வாய்க்கிழமை வருவது சிறப்பு.  

வரம் பெற்ற பெரியோர்கள் முருகனின் அருள் பெற்றவர்கள் எண்ணிக்கை கணக்கில் அடங்காது. அதில் முதலில் நமது நினைவுக்கு வருபவர் அவ்வையார். ஒரு  சிறுவனாக வந்து, ‘‘சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?” என்று அவ்வையின் ஞானத்தை சோதித்து  , அருள் செய்தவன் முருகன். அகத்தியர் முருகனின் அருள் பெற்றவர்களில் முதன்மையானவர். அவர் பொதிகை மலையில் முருகப்பெருமானிடம் உபதேசம் பெற்று அகத்தியம் என்ற இலக்கண நூலை எழுதித் தந்தார்.

பத்துப்பாட்டு என வழங்கப்படும் நூல்களுள் முதலில் வைத்து எண்ணப்படுவது திருமுருகாற்றுப்படை. பன்னிரு திருமுறை பகுப்பில் இது பதினோராவது திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளது. கடைச் சங்கப் புலவரான நக்கீரர் திருப்பரங்குன்றத்தில் பூதங்களிடம் சிக்கித் தவித்த போது, முருகப் பெருமான் அவரைக்  காப்பாற்றி அருள, அப்போது முருகன் மீது பாடிய ஆற்றுப்படை நூல் தான் திருமுருகாற்றுப்படை, முருகனை வணங்கி பிரார்த்தனை செய்தால், “என் துன்பங்கள்  அகன்றது போலவே, உங்களது துன்பங்களும் அகலும்” என்பது அவர் வாழ்க்கை காட்டும் செய்தி.

முருகனை நினைக்கும் பொழுது நம்முடைய நினைவுக்கு வருகின்ற மிக முக்கியமான நூல் திருப்புகழ். திருப்புகழைப் பாடிய அருணகிரிநாதரின் வழிபடு கடவுள் முருகப் பெருமான். முருகப் பெருமானின் திருவருளால் தான் அவர் திருப்புகழ் ,கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தரனுபூதி ,திருவகுப்பு ,சேவல் விருத்தம் மயில் விருத்தம்),வேல் விருத்தம், திருவெழுகூற்றிருக்கை போன்ற நூல்களைப் பாடி அருளினார். முருக பக்தர்களுக்கு, அருணகிரிநாதர் எழுதிய ‘‘திருப்புகழ்” தேவாரத்திற்கு இணையாகவும், ‘‘கந்தர் அலங்காரம்” திருவாசகத்திற்கு இணையாகவும் மற்றும் ‘‘கந்தர் அனுபூதி” திருமந்திரத்திற்கு இணையாகவும் போற்றப்படுகின்றது.

இன்று பட்டிதொட்டிகளில் எல்லாம் ஏராளமான மக்கள் பாராயணம் செய்து, பற்பல நன்மைகளை அடையச் செய்யும் நூலான கந்த சஷ்டி கவசத்தை அருளிய தேவராய சுவாமிகள் முருகனின் பெரும் பக்தர் முருகனுக்குரிய ஆறெழுத்து மந்திரத்தின் பொருளை சூத்திர வடிவில்  நுட்பமாகச்  சொல்லும்  நூல், படிப்போரை கவசம் போலக்  காக்கிறது.

வடலூர் வள்ளல் பெருமான் சிறுவனாக இருக்கும்போது அவருடைய தியானத்தில் தோன்றி ஞானம் தந்தவன் முருகன்.இவருடைய அற்புதமான ஒரு பாடல் ஒன்று.

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமைபெறும் நினது புகழ் பேசவேண்டும்;

பொய்மை பேசாதிருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும்;
மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்;
மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும்;
உனை மறவாதிருக்க வேண்டும்;
மதி வேண்டும்; நின்கருணை நிதி வேண்டும்;

நோயற்ற வாழ்வு நான் வாழ வேண்டும்;
தருமமிகு சென்னையிற் கந்தகோட்டத்துள்
வளர்தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே

கந்த கோட்டத்தில் வழங்கும் கந்தப்பெருமானிடம் இவர் கேட்கும் ஒவ்வொரு வரங்களும் நம்முடைய வாழ்க்கைக்கு தேவையான வரங்கள்.
இராமேஸ்வரம் அருகே பாம்பன் என்கின்ற ஊரில் பலகாலம் வாழ்ந்தவர் யாழ்ப்பாண சைவ மரபில் தோன்றிய குமரகுருதாச சுவாமிகள். இவர் பாடிய சண்முக கவசம் மிகச் சிறந்த நூல். இவரை பாம்பன் சுவாமிகள் என்று அழைப்பார்கள்.  

அண்மைக்காலத்தில் முருகப் பெருமான் மீது மிகுந்த பக்தியோடு இந்த தமிழ்நாடு முழுக்க பட்டிதொட்டியெல்லாம் சென்று சமய உண்மைகளையும் இதிகாச புராணத்தில் நுட்பத்தையும் பரப்பியவர் திருமுருக கிருபானந்த வாரியார். அவர் எப்பொழுதும் திருப்புகழைப்பாடித்தான் தன் சொற்பொழிவைத் துவங்குவார். கந்தர் அனுபூதி பாடித்தான் சொற்பொழிவை நிறைவு செய்வார். முருகன் மீது அகலாத  பக்தி கொண்ட வாரியார் ஸ்வாமிகள்  தமிழையும் சமயத்தையும் பரப்பிய வித்தகர்.

திருப்புகழ் பாடல்களுக்கு  விரிவான விரிவுரைகளை பல்லாயிரம் பக்கங்களில் எழுதியவர். கலைமகள் ஆசிரியர் கி.வா.ஜெகந்நாதன் அவர்கள் முருகப்பெருமானை பற்றி ஆற்றிய உரைகள் அற்புதமானவை. இதுதவிர இன்னும் பெரியோர்கள் பலர் இருக்கின்றனர். அவர்களைப் பற்றி அடுத்
தடுத்த கட்டுரைகளில் நாம் காணலாம்.

விசாகத்தில் வணங்கினால் என்ன பலன்?

வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து முருகனை வணங்கினால் ஞானமும், கல்வியும் பெருகும். எதிரிகள் பயம் அகலும், தீராத நோய்கள் தீரும். பகை விலகி பாசம் பெருகும். வெற்றிகள் சேரும். குலம் தழைக்கும்; பிள்ளை வரத்திற்காக தவம் இருப்பவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும்.

எப்படி இருப்பது விரதம்?

விசாகம் அன்று அதிகாலையில் எழுந்து குளித்து, முருகனின் தோத்திரங்களை சொல்லிக்கொண்டே, பூஜை அறையை சுத்தம் செய்து கோலமிட்டு  முருகப்பெருமான் படத்தின் முன்பு  விளக்கேற்றி வழிபட வேண்டும். கந்தர் சஷ்டி கவசம் பாராயணம் செய்யலாம் . திருப்புகழைப் படிக்க வேண்டும். ஆறெழுத்து மந்திரங்களான “ஓம் சரவணபவ” என்ற மந்திரத்தை நாள் முழுவதும் உச்சரிக்க வேண்டும். முருகப் பெருமானுக்கு அரளி, செம்பருத்தி போன்ற செந்நிற மலர்களால் அர்ச்சனை  செய்ய வேண்டும்.

அபிஷேகம் செய்யுங்கள்

முருகன் அபிஷேகப்பிரியன். ஒவ்வொரு அபிஷேகத்திற்கும் ஒரு பலன் பெரியோர்களால் சொல்லப்பட்டிருக்கிறது. பால் அபிஷேகம் செய்தால் ஆயுள் கூடும். பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தால் காரிய வெற்றி கிடைக்கும். சந்தன அபிஷேகம் செய்தால் சரும நோய்கள் நீங்கும். பன்னீர் அபிஷேகம் செய்து வழிபட்டால் செல்வம் சேரும். காரியங்கள் அனைத்தும் கைகூடும். தேன் அபிஷேகம் செய்து பார்த்தால், செவிக்கினிய குரல் கிடைக்கும். பச்சரிசி மாவில் அபிஷேகம் செய்தால் பட்ட கடன்கள் தீரும். திருநீரால் அபிஷேகம் செய்தால் புகழ் கிடைக்கும்.

முருகனுக்கு வேறு பெயர்கள்

தமிழ்க்கடவுள் முருகனுக்கு பல பெயர்கள் உள்ளன. அந்த பெயர்கள் ஒவ்வொன்றிற்கும் அற்புதமான அர்த்தங்களும் உண்டு. சங்க இலக்கியத்தில் அவரை “சேயோன்” என்றும் குறிப்பிட்டு உள்ளார்கள். மாயோன் மேய காடுறை உலகமும்சேயோன் மேய மைவரை உலகமும் என்பது தொல்காப்பியம். முருகன் என்றால் அழகன். வடக்கே  சுப்பிரமணியர் மற்றும் ஸ்கந்தன் என்றும் அழைக்கப்படுகிறார்.

ஒவ்வொருவர் மனதிலும் வசிப்பதால் குகன் என்ற திருநாமம் உண்டு., சரவணப் பொய்கையில் அவதரித்ததால் சரவணன். சிவனுக்கு பிரணவ  உபதேசம் செய்ததால் “சிவகுருநாதன்” ஸ்வாமிநாதன். ஞானமே வடிவானவர் என்பதால் ஞானஸ்கந்தர். விசாக நட்சத்திரத்தில் பிறந்ததால் விசாகன் என்றும் அழைக்கப்படுகின்றார். கார்த்திகைப் பெண்கள் வளர்த்ததால் “கார்த்திகேயன்”. சிவன் சக்திக்கு இடையில் முருகன் அமர்ந்த திருக்கோலத்தை சோமாஸ்கந்தன் என்று அழைக்கப்படுகிறார்.

வைகாசி விசாகம் எல்லா முருகன் கோயில்களிலும் கொண்டாடப்படுகிறது. முருகனின் ஆறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், பழனி, திருச்செந்தூர், சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை ஆகிய இடங்களில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த கொரோனா ஊரடங்கில் இல்லத்திலிருந்தே விரதத்தை மேற்கொண்டு முருகப் பெருமானை வழிபடுவோம்.

விருச்சிகன்