நான் மறைகளை தமிழில் அருளிய நம்மாழ்வார்-நம்மாழ்வார் அவதார வைகாசி உற்சவம் (25.5.2021)



வைணவ மரபில் ஆழ்வார் என்றால் “நம்மாழ்வார்''தான். எல்லா ஆழ்வார்களுக்கும் சரீரமாக விளங்குவதாலும், ஆசாரிய ஸ்தானத்தில் இருப்பதாலும் இவரை “நம்மாழ்வார்” என்கிறோம்.

நம்மாழ்வாரிலே எல்லா ஆழ்வாரும் அடக்கம். நம்மாழ்வார் அவயவி. மற்ற ஆழ்வார்கள் நம்மாழ்வாருக்கு அங்கங்கள் என்பது வைணவ மரபு.    திருக்குருகூரிலே வேளாளர் குடியில் பிறந்தவர் காரியார். 
இவருடைய வாழ்க்கைத் துணைவியார் உடைய நங்கை.தான தர்மங்களை வாரி வழங்கிய இத்தம்பதியினர்க்கு வெகுகாலம் பிள்ளையில்லாத குறை இருந்தது.இருவரும் திருக்குறுங்குடி திவ்ய தேசத்திற்குச்  சென்று, நம்பியை தரிசித்து, தங்கள் பிரார்த்தனையைத் தெரிவித்தனர்.  அன்று இரவு கோயிலிலேயே தங்கினர். அவர்கள் கனவில் பெருமாள் எழுந்தருளினார்.  விரைவில் அவர்களுக்கு புத்திரப்பேறு உண்டாகும் என்றும், அந்தக் குழந்தையால் இந்த வையகத்தின் சமய மாண்பு புகழ் பெறும் என்றும் திருவாய் சோதி மலர்ந்து கூறி மறைந்தார்.

மறுநாள், அவர்கள் மனமகிழ்ச்சியோடு நீராடி, திருக்கோயில் கருவறையில் திவ்வியமாகக் காட்சியளித்த இறைவனைச் சேவித்தனர். அங்கே கொடுக்கப்பட்ட தீர்த்தப் பிரசாதத்தோடு அமுதமாக வழங்கப்பட்ட பால் பாயசத்தையும் அருந்தினர்.விரைவில் அழகான ஆண் மகவொன்று பிறந்தது. பிரமாதி ஆண்டு வைகாசித் திங்கள் பன்னிரண்டாம் நாள் வளர்பிறையில், பௌர்ணமியில் வெள்ளிக்கிழமை விசாக நட்சத்திரம், கடக லக்கினத்தில்
அவதரித்தார் ஆழ்வார்.

மனமகிழ்ச்சியில் இருந்த பெற்றோருக்கு நாள் செல்லச் செல்ல மிகுந்த வருத்தமும் உண்டாகிக் கொண்டே வந்தது.காரணம், பிள்ளை சராசரிப்பிள்ளையாக இல்லை. பாலுண்பதில்லை, அழுவதில்லை, மொத்தத்தில் உணர்வற்ற நிலை. காலம் கடந்து பிறந்த பிள்ளை இப்படி இருக்கிறதே என்ற வருத்தத்தில், வரம் கொடுத்தவனிடமே முறையிடுவோம் என்று எண்ணிய தம்பதியினர், நேராக ஆழ்வார் திருநகரி ஆதிப்பிரான்
சந்நிதிக்குச்சென்றனர்.    

இறைவன் திருமுன் கிடத்தி மனமுருக அந்த மாலவனை வேண்டினர். எந்தப் பிறவிக்கும் ஓர் காரண காரியம் இருக்கும்.  ஆனால், அதைத் தீர்மானிப்பது சர்வேஸ்வரனான இறைவன் அல்லவா!ஆழ்வாரின் ஞானத் தமிழ் அருந்த காத்துக்கிடக்கும் அவன் எண்ணத்தை, சாதாரண மனநிலையில் இருந்த காரி மற்றும் உடைய நங்கை தம்பதிகளால் அறிய முடியவில்லை. ஆனால், பெருமாளும், குழந்தையாகக் கிடந்த ஆழ்வாரும் என்ன மாயமொழியில் பேசிக்கொண்டார்களோ தெரியவில்லை. அங்கே தெய்வச் சந்நதி முன் ஓர் திருவிளையாடல் அரங்கேறியது.ஜடமாக விழுந்து கிடந்த குழந்தை திடீரென தவழ ஆரம்பித்தது.

ஆச்சரியமான ஆச்சர்யம் பெற்றோர்களுக்கு. இனி இக்குழந்தையை நாம் பெற்றோம் என குதூகலித்தனர். அந்த மகிழ்ச்சி கொஞ்ச நேரம்தான்.திருக்கோயில் பிராகாரத்தை வலம் வந்த குழந்தை அங்கே ஓர் புளிய மரப்பொந்தில் சென்று அமர்ந்து கொண்டது.அவ்வளவுதான்... அப்படியே யோகத்தில் ஆழ்ந்தது குழந்தை. எதிரில் பெற்றவர்களும் மற்றவர்களும், நிற்பதோ, பார்ப்பதோ, தொடுவதோ, தொட்டு அசைத்து அழைப்பதோ தெரியவில்லை. இறைவனின் உளக்கருத்தினை அறியமுடியாத பெற்றோர்கள் மனதை தேற்றிக்கொண்டு வீடு திரும்பினர்.

ஆண்டுகள் கடந்தன. ஆழ்வாரின் விழி திறக்கவில்லை. வாயிலிருந்து மொழி பிறக்கவில்லை. ஆனால், ஒளி நாளுக்கு நாள் வளர்ந்தது.திருக்குருகூருக்குப் பக்கத்துக்கு ஊர் திருக்கோளூர். அங்கே அவதரித்த மதுகவியாழ்வார் திருக்குருகூர் வந்தார். புளிய மரத்தடியில் ஜோதி வடிவாய் சுடர் விட்டு கொண்டிருந்த ஆழ்வாரின் யோக நிலையைக்  கண்டார். அவர் அதுவரை கற்ற வேதங்கள், பதினாறு வயது பாலகனை ‘‘இனி சற்குரு இவர்தான்” என்று அடையாளம் காட்டியது.

ஓர் சிறிய கல்லை எடுத்து அவர் முன் போட்டார்.  சட்டென்று அந்த ஞானதீபம் அசைந்தது. ஆழ்வார் கண் மலர்ந்தார். ஆயிரம் தாமரைப் பூக்கள் ஒன்றாக மலர்ந்த மலர்ச்சியும் குளுமையும், சூரிய ஒளியை விட அதிக வீட்சண்யம் உடைய ஒளியையும் தரிசித்த மதுரகவியார், “செத்தத்தின் வயிற்றில் சிறியது பிறந்தால், எத்தைத்தின்று எங்கே கிடக்கும்?” என்று மெதுவாகக் கேட்டார்.அடுத்த நொடி அந்த இனிமையான குரலினை உலகம் கேட்டது. வகுளாபரணரான ஆழ்வார் சோதிவாய் மெல்லத் திறந்து “அத்தைத் தின்று அங்கே கிடக்கும்” என்றார்.

கூட இருந்தவர்களுக்கு எதுவும் விளங்கவில்லை. கேட்டவர்க்கும், சொன்னவர்க்கும், இவற்றையெல்லாம் தூண்டிவிட்ட எம்பெருமானுக்கும் தெரிந்த விஷயத்தை இவர்களால் அறிய முடியுமா என்ன?  சித் எனப்படும் ஜீவாத்மா, அசித் எனப்படும் (உயிரற்ற) உடம்பில் புகுந்ததால் இரண்டும் இயங்குகின்றது.

அதன் பலனாக அது ஈஸ்வரனை அடைய வேண்டும். மாறாக, சித்தும் அசித்தும் இணைந்து இயங்கி சிற்றின்ப போகங்களிலே காலம் கழிக்கிறது. சித்தானது வேறு உடம்பைத் தேடி அங்கேயும் இதே உலக இன்பங்களை நுகர்கிறது. சரீர ஆத்ம சம்பந்தத்தை இத்தனை அழகாகவும், அது உண்மையில் எந்த நிலையில் இருக்கிறது என்பதையும் அற்புதமாக இந்த கேள்வி பதிலின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.

அடுத்த கணம் வயதில் மூத்தவரான மதுரகவிகள், ஞானத்தில் மூத்தவரான நம்மாழ்வாரின் திருவடிகளில் வீழ்ந்தார்.“அடியேனை ஏற்றருள வேண்டும்” என்று பிரார்த்தித்தார்.    இப்படிப்பட்ட சீடருக்காகவன்றோ வேறு யார் தொடர்பும் இல்லாமல், இத்தனை காலம் காத்திருந்தார் அவர்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ஆழ்வார் செந்தமிழால் எம்பெருமானைப் பாட ஆரம்பித்தார்.  அவற்றை மதுரகவியாழ்வார் ஓலைப்படுத்திக் கொண்டே வந்தார்.விஷ்வக்சேனர் அம்சமாகத் தோன்றிய நம்மாழ்வார் அருளிய பிரபந்தங்கள் நான்கு. திருவிருத்தம் - 100 பாசுரங்கள், திரு ஆசிரியம் - 7 பாசுரங்கள், பெரிய திருவந்தாதி - 87 பாசுரங்கள், திருவாய் மொழி - 1102. மொத்தம்: 1296 பாசுரங்கள்.

ஆழ்வார் நான்கு பிரபந்தங்களை அருளி விட்டு திருநாடு அலங்கரித்தார்.ஆழ்வார் திருமேனியை திருபுளியிலிருந்து கொண்டு வந்து பக்கத்தில் திருப்பள்ளி படுத்தி, அதன் மேல் ஆழ்வார் அர்ச்சா திருமேனியை எழுந்தருளப் பண்ணி, திருக்கோயில் கட்டி உற்சவம் செய்தவர் மதுரகவியாழ்வார். இப்பொழுது அங்கு உள்ள ஆழ்வார் சந்நதியே நம்மாழ்வாரின் திருவரசு ஆகும்.

பொலிக பொலிக பொலிக!  
போயிற்று வல் உயிர்ச் சாபம்
நலியும் நரகமும் நைந்த  
நமனுக்கு இங்கு யாது ஒன்றும் இல்லை
கலியும் கெடும் கண்டுகொண்மின்  
கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்
மலியப் புகுந்து இசைபாடி  
ஆடி உழிதரக் கண்டோம்

என்று கலியிருளை, தமது கனித்தமிழ் பாசுரங்களால் போக்க வந்த நம்மாழ்வாருக்கு, வைகாசி மாதத்தில், உற்சவாதிகள் எல்லா சந்நதிகளிலும், ராமானுஜ கூடங்களிலும், திவ்ய தேசங்களிலும் விசேஷமாக நடைபெறும்.

சுவாமி நம்மாழ்வார் திருஅவதார தினத்தை முன்னிட்டு ஆழ்வார் திருநகரியில் நடைபெறும்  வைகாசி பிரம்மோற்சவம்  சிறப்பான ஒன்றாகும்.  பத்து நாள் உற்சவம் .வைகாசி மாதம் புனர்பூசம்  தொடங்கி, விசாக நட்சத்திரத்தில்  நிறைவடைகின்றது. தினமும் ஒரு வாகனத்தில் சுவாமி நம்மாழ்வார் எழுந்தருள்வார்.

முதல் திருநாள் காலை கொடியேற்றம், இரவு வெள்ளி இந்திர விமானம், இரண்டாம் திருநாள்  இரவு புஷ்பப் பல்லக்கு, மூன்றாம் திருநாள் இரவு தங்கப் புன்னை மர வாகனம், நான்காம் திருநாள் இரவு தங்கத் திருப்புளி வாகனம். இந்த உற்சவத்தில் 5ம் நாள் உற்சவத்தில் ஒன்பது கருட சேவை காணக் கண்கொள்ளாக் காட்சியாகும்.

இந்த உற்சவத்தின் எதிரொலியாகத்தான் திருவாலி திருநகரி 11 கருடசேவை உற்சவம், 120 வருடங்களுக்கு முன் தை  அமாவாசைக்கு மறுநாள் ஏற்பாடு செய்யப்பட்டு நடந்து வருகிறது,ஆறாம் திருநாள் மாலை தண்டியல் புறப்பாடு, இரவு வெள்ளி யானை வாகனம், ஏழாம் திருநாள் காலை உடையவர் சந்நதிக்கு எழுந்தருளி சேர்த்தி திருமஞ்சனம், இரவு வெள்ளி சந்திர பிரபை.

எட்டாம் திருநாள் காலை அப்பன் சந்நதிக்கு எழுந்தருளி ஆழ்வார்  தவழ்ந்த கிருஷ்ணன் திருக்கோலம், இரவு தங்கக்குதிரை வாகனம். ஒன்பதாம் திருநாள் காலை கோரதம், இரவு பல்லக்கில் தாழ்ந்த கிருஷ்ணன் திருக்கோலம். வைகாசி விசாகம் காலை பத்தாம் திருநாளன்று தாமிரபரணி நதியில் தீர்த்தவாரி, இரவு வெட்டிவேர் சப்பரம் வெள்ளி தோளுக்கினியான். பின்னர் பதினொன்றாம் நாள் ஆழ்வார் ஆஸ்தானம் எழுந்தருளுகின்றார். பின்னர் நான்கு நாட்கள் விடாயாற்று என்று சிறப்பாக நடைபெறுகின்றது. ஆழ்வாரை மனதில் நினைக்க அனைத்து நலன்களும் கிடைக்கும்.