தெளிவு பெறுஓம்



அக்னி நட்சத்திரம் என்பது அறிவியல் நிகழ்வா, ஆன்மிக நிகழ்வா?

- அயன்புரம் த.சத்தியநாராயணன்

ஆன்மிகம் இல்லாத அறிவியல் இவ்வுலகில் இல்லை. அறிவியலின் அடிப்படை ஆதாரமே ஆன்மிகம்தான். இந்தக் கூற்றினை மெய்ப்படுத்தும் நிகழ்வுகளில் ஒன்றுதான் அக்னி நட்சத்திரம் என்பதும். சூரிய வெப்பம் அதிகமாக இருக்கும் காலத்தை அக்னி நட்சத்திரம் என்று குறிப்பிட்டுச் சொன்னார்கள் நம் முன்னோர்கள். கார்த்திகை, உத்திரம், உத்திராடம் இந்த மூன்றும் சூரியனுக்கு உரிய நட்சத்திரங்கள். ‘அக்னிர்ந: பாது க்ருத்திகா என்கிறது வேதம்’.

அதாவது கார்த்திகை நட்சத்திரத்திற்கு உரிய தேவதை ‘அக்னி’. அதனால் இந்த நட்சத்திரத்தில் சூரியன் சஞ்சரிக்கும் நேரமானது அக்னி நட்சத்திரம் என்று பெயர் பெற்றது. கார்த்திகை நட்சத்திரம் துவங்குவதற்கு இரண்டு பாதங்கள் முன்பாக அதாவது பரணி நட்சத்திரம் மூன்றாம் பாதத்திற்குள் சூரியன் நுழையும் காலம் முதல் கார்த்திகை முடிந்து இரண்டு பாதம் வரை அதாவது ரோகிணி நட்சத்திரம் இரண்டாம் பாதம் வரை சூரியன் சஞ்சரிக்கும் கால அளவினை அக்னி நட்சத்திர காலம் என்று அழைப்பார்கள்.

இந்த சமயத்தில் சூரிய வெப்பம் அதிகமாக இருக்கும். பேச்சு வழக்கில் கத்திரி வெயில் கொளுத்துகிறது என்று சொல்வதைக் கேட்டிருப்போம். வெயில் அதிகமாக இருக்கும் என்பதால்தான் இந்த நேரத்தில் பள்ளிகளுக்குக் கூட விடுமுறை அளிக்கிறார்கள். வெப்பத்தின் தாக்கத்தால் உறவினர்களுக்கு சிரமம் உண்டாகலாம் என்ற ஒரு காரணத்தினால்தான் அந்நாட்களில் சுபநிகழ்ச்சிகள் செய்வதைப் பெரியவர்கள் தவிர்த்து வந்தார்களே அன்றி வேறு எந்த காரணமும் இல்லை.

தற்காலத்தில் சென்னை முதலான பெருநகரங்களில் குளிர்சாதன வசதியுடன் கூடிய திருமண மண்டபங்கள் அதிக அளவில் இருப்பதால் திருமணங்கள் முதலான சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கத்திரி வெயிலின் தாக்கம் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. அக்னி நட்சத்திர காலத்தில் சுபநிகழ்ச்சிகளைச் செய்யக்கூடாது என்று ஜோதிட சாஸ்திரம் சொல்லவில்லை.

உஷ்ணத்தின் தாக்கத்தினை பொருட்படுத்தாதவர்கள்,  வெயிலை சமாளிக்கும் திறன் படைத்தவர்கள், அதாவது குளிர்சாதன வசதியைப் பயன்படுத்திக் கொள்பவர்கள் அக்னி நட்சத்திர காலத்தில் திருமணம், நிச்சயதார்த்தம், மஞ்சள்நீர் முதலான சுபநிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதில் எந்தத் தவறும் இல்லை. அதே நேரத்தில் கிரகப் பிரவேசம், மனை கோலுதல் முதலான வீடுகட்டுதல் சம்பந்தப்பட்ட சுபநிகழ்ச்சிகளை அக்னி நட்சத்திர காலத்தில் செய்வது இல்லை.

?இறைவனுக்கு சமஸ்கிருதத்தில்தான் அர்ச்சனை செய்ய வேண்டுமா? தமிழில் அர்ச்சனை செய்தால் தவறா?
 - வண்ணை கணேசன்,பொன்னியம்மன்மேடு.

நிச்சயமாக தவறில்லை. ஜாதி, மதம், இனம், மொழி பேதங்கள் அனைத்தையும் கடந்தவனே கடவுள். ஆண்டவனைப் பொறுத்தவரை எல்லா மொழியும் ஒன்றுதான். நீங்கள் எந்த மொழியில் அர்ச்சனை செய்தாலும் இறைவன் ஏற்றுக்கொள்வான். தேவாரம், திருவாசகம், திருப்பள்ளி
யெழுச்சி, திருப்பாவை, திருவெம்பாவை உள்ளிட்ட நாலாயிர திவ்யபிரபந்தம், அபிராமி அந்தாதி, திருவருட்பா ஆகிய அனைத்தும் தமிழ்மொழியில் அமைந்தவையே. தமிழ்தான் என்றில்லை, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அந்தந்த பிராந்திய மொழிகளிலும் இறைவழிபாட்டிற்கு உரிய பாடல்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன.

ஆக மொழியை வைத்து இறைவனை வணங்கும் முறையை வேறுபடுத்திப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. அதே நேரத்தில் சமஸ்கிருதம் என்ற மொழியை தேவபாஷை என்று பெரியவர்கள் சொல்லி வைத்திருப்பதிலும் காரணம் இருக்கத்தான் செய்கிறது. வேதமந்திரங்கள் சமஸ்கிருத மொழியில் அமைந்திருப்பதும் இதன் அடிப்படை காரணமாக இருக்கலாம்.

ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினியர் கம்ப்யூட்டரில் ஒரு புரோகிராம் எழுதவேண்டும் என்றால் அதற்கு ஆங்கில மொழி அறிவு மட்டும் போதாது., கம்ப்யூட்டருக்கு உரிய மொழிகள் ஆன ஜாவா, சி, சி++  முதலான லேங்குவேஜ்களை கற்றறிந்திருக்க வேண்டும். கம்ப்யூட்டரில் புரோகிராம் செய்வதற்கு என்று தனியாக மொழி இருப்பது போல கடவுளிடம் பிரார்த்தனையைச் செலுத்துவதற்கு என்று தனியாக சமஸ்கிருதம் என்ற ஒரு மொழியை வேதகாலம் முதலாகவே பின்பற்றி வருகிறார்கள்.

கம்ப்யூட்டர் புரோகிராம்க்கு உரிய மொழியை எல்லோரும் கற்றுக்கொள்வது போல் ஜாதி, மதம், இனம் பேதம் பாராது அனைவரும் சமஸ்கிருத மொழியைக் கற்றுக்கொள்வதும் நல்லது. அந்தணர் என்ற பிரிவினர் மட்டும்தான் சமஸ்கிருத மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று எந்த சாஸ்திரமும் சொல்லவில்லை. அந்தணன் என்ற தகுதியைப் பெறுவதற்காகச் செய்யப்படும் பிரம்மோபதேசத்தின் போது உபதேசிக்கப்படும் காயத்ரி மந்திரத்தை இந்த உலகத்திற்கு அருளியது க்ஷத்திரிய வம்சத்தில் தோன்றிய விஸ்வாமித்திர மகரிஷி ஆவார்.

இராமாயணத்தை சமஸ்கிருத மொழியில் அருளிய வால்மீகி ஒரு வேடுவன். மஹாபாரதத்தை நமக்குத் தந்த வியாச மகரிஷி ஒரு மீனவப் பெண்ணின் மகன். புராண காலத்து உண்மைகளை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், வரலாற்று உண்மைகளையாவது ஏற்றுக் கொள்ளலாமே. சாகுந்தலம், ரகுவம்சம், மேகதூதம், குமாரசம்பவம் முதலான சமஸ்கிருத காவியங்களைப் படைத்த கவியரசன் காளிதாசன் இடையர் வம்சத்தில் தோன்றியவன். இரண்டாம் சந்திரகுப்தனின் காலம் இந்தியாவின் பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த இரண்டாம் சந்திரகுப்தனின் அவையை அலங்கரித்த அஷ்டதிக்கஜங்களில் முக்கியமானவர் காளிதாசன். இந்த அரசனையே போஜராஜன் என்றும் அழைக்கிறார்கள். இந்த போஜராஜன் சமஸ்கிருத மொழியில் காவியங்களைப் படைத்தவன். ஹர்ஷவர்த்தனன் என்ற அரசன் சமஸ்கிருத மொழியில் புலமை பெற்றவன் என்பதற்கு இன்றளவும் சான்றுகள் உள்ளன.

போஜராஜனும், ஹர்ஷவர்த்தனரும் க்ஷத்திரிய வம்சத்தைச் சேர்ந்தவர்கள். உண்மைநிலை இவ்வாறு இருக்க சமஸ்கிருத மொழி ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் உரியது என்று கருதுவது முற்றிலும் தவறு. இன்றும் நம் பள்ளியில் அனைத்துத் தரப்பு மாணவர்களும் சமஸ்கிருத மொழியில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வருவதே சமஸ்கிருத மொழி என்பது உலக மக்கள் எல்லோருக்கும் பொதுவானது என்பதற்கான சான்று. இறைவழிபாட்டிற்கு தமிழ், சமஸ்கிருதம் என்ற மொழி பேதம் ஏதும் இல்லை.  

?அனுபவம் மூலம்தான் இறைவனை அடையமுடியும் என்றார்கள் ஆன்றோர்கள். அப்படி என்றால் நேரில் அவர் வரமாட்டாரா?
 - கே. பிரபாவதி,மேலகிருஷ்ணன்புதூர்.

கவியரசர் கண்ணதாசன் இதுகுறித்து அற்புதமாக விளக்கியிருக்கிறாரே.. அவர் ஆண்டவனுடன் உரையாடுவது போல் எழுதியுள்ள கவிதையில் இவ்வாறு சொல்கிறார்.. “அனுவித்துத்தான் அறிவதென்றால் ஆண்டவனே நீ எதற்கு என்றேன்.. அதற்கு ஆண்டவன் மெல்ல அருகினில் வந்து அந்த அனுபவமே நான்தான் என்றான்” என்று தனது கவிதையில் தெளிவாகச் சொல்லியிருப்பார். ‘தெய்வாம் மானுஷ்ய ரூபேண’ என்பார்கள்.

அதாவது மனிதர்களின் வடிவினில் இறைவன் வருவார் என்பது அதன் பொருள். இந்த கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் தன்னலம் கருதாது பொதுநலத்திற்காக உழைக்கும் மருத்துவத்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட அத்தனை முன்களப் பணியாளர்களும் இறைவனின் ஸ்வரூபம்தான். இறைவன் மனித வடிவத்தில் வந்து நிற்பான் என்பதையும் அனுபவத்தின் மூலமாக அறிந்துகொள்ள முடியும்.

?அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற குணங்களில் இன்றைய நிலையில் மிச்சம் மீதி என்ன?
- ஆர்.ஜே. கலியாணி,செல்வமருதூர்.

உங்களுடைய ஆதங்கம் புரிகிறது. இருந்தபோதிலும் எங்கோ அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருப்பவர்களை வைத்து மட்டும் இக்கால பெண்களை குறை கூடக்கூடாது. இன்றைய சூழலிலும் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகிய அடிப்படை குணங்கள் பெண்களிடத்தில் நிறைந்துதான் உள்ளது. தைரியம் மற்றும் பெண்ணுரிமை ஆகியவை உடன் இணைந்திருக்கிறது என்று நாம் அதை புரிந்துகொள்ள வேண்டும். இன்றைய நவீன யுகத்தைச் சேர்ந்த பெண்களின் நடை, உடை, பாவனை ஆகியவற்றைக் கண்டு உங்கள் மனதில் சந்தேகம் உதித்திருக்கிறது.

இந்திய நகரங்களில் ஆங்காங்கே ஒரு சில பெண்கள் அரைகுறை ஆடையில் அலைந்தாலும், பெரும்பான்மையானவர்கள் இன்னமும் நம் பாரம்பரிய உடைகளையே அணிகின்றனர். தென்னிந்தியாவில் புடவையும், வடஇந்தியாவில் பைஜாமா, குர்த்தாவும் பெருமளவில் இடம்பிடித்திருப்பதை கண்கூடாகக் காண்கிறோம். திரைப்படக் கதாபாத்திரங்கள் உடுத்தும் அரைகுறை ஆடைகளை இன்றைய தலைமுறையினர் வெண்திரையில் வேண்டுமானால் ரசிக்கலாம்.

ஆனால், அதே போன்ற ஆடையைத் தாங்களும் உடுத்த பெரும்பாலானோர் விரும்புவதில்லை. எவரேனும் அதே போன்ற ஆடையை அணிந்து வந்தாலும் அதனைக் கண்டு முகம் சுளிக்கிறோமே.. அங்கேதான் நீங்கள் குறிப்பிடும் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகிய குணங்கள் தலைநிமிர்கிறது. நைட்டியும், சுடிதாரும் இந்தியப் பெண்களால் பெரிதும் விரும்பப்படுகிறது என்றால் அதற்குக் காரணம் அவை முழுமையான ஆடைகளாக மானம் காப்பதினால்தானே அன்றி கலாச்சாரத்திற்கு எதிரானது என்று எண்ணக்கூடாது. கல்யாணம் என்றவுடன் கண்டாங்கி சேலையும் காஞ்சிப்பட்டும்தானே எல்லோருடைய தேர்வுமாக இருக்கிறது!

அடுத்ததாக இக்காலப் பெண்களின் உணவு முறையையும் பார்ப்போம். நம் வீட்டுச் சமையலறையில் பீசாவும், பர்கரும் தயாரிக்கப்படுவதில்லை. சாம்பாரின் நறுமணமும், கமகமக்கும் மசாலா வாசனையும்தான் நம் நாவினில் உமிழ்நீரைக் சுரக்கச் செய்கிறது. வெறும் பார்வைக்கு அழகாகத் தோன்றும் பேக்கரி உணவுகளை பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை.

நொறுக்குத் தீனியாக அவர்கள் உட்கொள்ளும் சமோசாவிலும் வேகவைத்த உருளைக்கிழங்கும், வெங்காயமும்தானே உள்ளிருக்கிறது. இதனை கலாச்சார சீர்கேடாகக் கருத முடியுமா..? நமது இல்லத்தில் நடைபெறும் விருந்து உபச்சாரங்களில் நமது பாரம்பரிய உணவினைத்தானே இன்றளவும் பெண்கள் சமைத்துப் பரிமாறுகிறார்கள்..! கூட்டு, பொரியல், சாம்பார், ரசம், மோர் என்ற வரிசையில் சாப்பிடுகிறோமே.. இதற்குக் காரணம் ருசி மட்டுமல்ல..

இக்காலப் பெண்கள் பாரம்பரிய உணவு வகைகளைக் கூட நவீன யுகத்திற்கு ஏற்றவாறு சமைக்க விரும்புகிறார்கள் என்பதே ஆகும். பெண்ணை தெய்வமாக மதிக்கும் பழக்கத்தினை வேறு எந்த நாட்டிலாவது காண முடியுமா..? எங்கோ நடக்கும் ஒரு சில பலாத்காரச் சம்பவங்களை மட்டும் நாம் கணக்கில் கொள்ளக் கூடாது. தாய்த் திருநாடு, தாய்மொழி என வசிப்பிடத்தையும் பேச்சுமொழியையும் கூட தாய்க்கு சமமாக எண்ணிப் போற்றுகிறோம். ஒருவனுக்கு ஒருத்தி என்பதே நம் கலாச்சாரத்தின் அடிப்படை ஆதாரம்.

ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, இந்த அடிப்படையில் வாழ் பவர்களுக்கு மட்டுமே நமது சமுதாயம் உரிய மரியாதையை அளிக்கிறது. ஒருவனுக்கு ஒருத்தி என்ற கலாச்சாரத்தை மீறுபவர்கள் எவ்வளவு பெரிய வசதி படைத்தவர்களாக இருந்தாலும் அவர்களை இந்த சமூகம் அங்கீகரிப்பதில்லை. பொது இடங்களிலும், பேருந்து நெரிசலிலும் பெண்களிடம் தவறாக நடந்து கொள்பவர்களை சுற்றியுள்ளோர் சும்மா விட்டுவிடுவார்களா?

அந்த உணர்ச்சியே நம் கலாச்சாரத்தின் மாண்பினை இன்றளவும் கட்டிக் காக்கிறது. அதற்கு அடிப்படை காரணம் பெண்கள் இன்றளவும் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகிய குணங்களைக் கொண்டு வாழ்வதே என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை. ஆக இன்றளவும் பெண்களின் இந்த அடிப்படை குணங்கள் போற்றத்தக்க முறையிலேயேதான் காப்பாற்றப்பட்டு வருகிறது என்பதே அடியேனின் தாழ்மையான கருத்து.

திருக்கோவிலூர் K.B.ஹரிபிரசாத்