நக்கீரர் எனும் நல்லவர்



நக்கீரர் எனும் மொழி அரசனின் பொருள் பொதிந்த நூல்களிலிருந்து சிறு துளியேனும் தரவேண்டும் என்ற நோக்கமே இக்கட்டுரை எழுதக் காரணம்.
“நக்கீரர்” என்றவுடனே நமக்கெல்லாம் குற்றம் கண்டுபிடிப்பவர் என்ற மனநிலையே உள்ளது. நம்மிலே பேசும்போது அதிலுள்ள குறைகள் ஏதேனும் சுட்டிக்காட்டப்பட்டால் போதும். உடனே, “ஆஹா... வந்துட்டார்யா நக்கீரர்” என நகைப்பதே பழக்கமாகி விட்டது. “இவரு பெரிய நக்கீரரு” என்பது ஒரு சுடு சொல்லாகவே பயன்படுகிறது.

சிவபெருமானோடு நேரடியாக குதர்க்கவாதம் புரிந்ததோடு மட்டுமின்றி, தான் அறியாத அம்மை பார்வதிதேவியின் கூந்தல் மணம் பற்றியும் ஆணவமாக கருத்துக் கூறியமையால் அவர் தற்காலம் வரை குற்றவாளிக் கூண்டிலே நிற்கிறார். உண்மைதான். ஆனால்,  தமிழ் மட்டுமே கற்ற புலவராக, ஞானம் பெறாதவராக வாழ்ந்த காலத்தில் செய்த தவறு அது. அரசவைப் புலவர் என்றால் சற்று கர்வம் இருக்கத்தானே செய்யும்? என்ன செய்ய? நக்கீரருக்கும் சற்றே கர்வம் இருந்ததுதான்.

அதற்காக அவரை நாம் புறக்கணிக்கலாமோ? அறியாமல் செய்த பிழையை ஈசன் மன்னித்த பிறகு அவர் இயற்றிய நூல்கள் ஏராளம். பெரிய புலவர் என்ற மாயை அழிந்தபின் அவர் இயற்றியவை எல்லாம் ஞான நூல்கள். இறைவனை நேரடியாக கண்ட பிறகு எழுதியவை எல்லாமே காலம் கடந்து நிற்கும் தகுதி பெற்றுவிடும். அப்படி நக்கீரர் எழுதிய நூல்களே கீழ்க்கண்ட பட்டியல்...

1. திருமுருகாற்றுப்படை
2. திருக்கண்ணப்பதேவர் திருமறம்.
3. போற்றித் திருகலிவெண்பா
4. கார் எட்டு
5. கோபப் பிரசாதம்
6. பெருந்தேவபாணி
7. திருவெழு கூற்றிருக்கை
8. திருவலஞ்சுழி மும்மணிக்கோவை
9. திரு ஈங்கோய் மலை எழுபது
10. கயிலை பாதி காளத்தி பாதி அந்தாதி.

மேற்கண்ட பத்தும் நம் சொத்துக்கள். கொத்துக் கொத்தாக வழிகாட்டுதல்கள். இந்த முத்துக்களை மாலையாக்கி நாம் படிக்கலாம். எண்ணற்ற எளிய வெண்பாக்கள் மூலம் நாமெல்லாம் எப்படி நல்ல மனநிலையைப் பெற முடியும் என்பதை இனி காணலாம். வெண்பாக்களை பொருள்படக் கண்டால் அவர் நமக்குக் காட்டிய அருள்வழி என்ன? என்பது புரியும்.

மன்னர் வணங்கும் தகுதி பெற்ற தலைமை புலவராக, பாண்டிநாட்டுத் தமிழ்ச் சங்கத்தை இவர் அலங்கரித்த போதும், தருமி என்றொரு ஏழை அந்தணர் தனக்குத் திருமணம் நடக்க வேண்டி, வேண்டியபோது, அவருக்கு உதவும் பொருட்டு ஈசன் நடத்திய திருவிளையாடல் நீங்கள் எல்லோரும் அறிந்த ஒன்று. அதன் பின் தொடர்ந்து வாழ்க்கையில் நடந்தவற்றை எழுதியதே அதிகம்.

தன்னுடைய அகந்தையினால் சிவபெருமானிடம் குட்டுப் பெற்று, குஷ்டநோய் தாக்கிய பின்பு அந்த பெருமானிடம் இறைஞ்சி, இறைஞ்சி பேறு பெற்றதையே அவரும் தவறாது ஆவணப் படுத்தியதே மேற்கண்ட நூல்கள். அரசவைப் புலவராக எண்ணற்ற நூல்களை அவர் எழுதியிருக்கக் கூடும். அவையெல்லாம் தற்சமயம் இல்லை. தன் அறிவினால் ஆற்றிய தமிழ் தொண்டுகளை விட சிவபெருமானைக் கண்ணாற மூன்றாவது கண்ணைக் கண்ட பின்பு எழுதப்பட்டவை எல்லாம் ஞான நூல்கள். பத்தில் ஒரு முத்தான “கயிலை பாதி காளத்தி பாதி” எனும் முத்தினை இரசிக்கலாமா?

அடைந்துய்மின் அம்மானை உம் ஆவி தன்னைகுடைந்துண்ண எண்ணிய வெங்கூற்றம் - குடைந்துநும்கண்ணுளே பார்க்கும் பொழுது கயிலாயத்தண்ணலே கண்டீர் அரண்.

தொழுநோய் என்பது மனிதனின் உடலைச் சிறிது சிறிதாக குடைந்து உண்ணும் குணமுடைய நோய். சாலையோரங்களில் பரவலாக இவர்களை நாம் காணமுடியும். பெரும்பாலும் கை, கால் விரல்களில் ஆரம்பித்து மெல்ல மெல்ல விரல்களே இல்லாமல் செய்துவிடும். தன் கண் எதிரே கை விரல்கள் அழிவதைக் காண்பதால் அதை எமன் என அழைக்கின்றார். நக்கீரர் சுவாமிகள் தொழுநோயை அனுபவித்தவர் அதனால்தான் அனுபவத்தை மிகச் சரியாகக் கூறுகிறார்.

“அடைந்துய்மின் அம்மானை” தெய்வமே சரண் என சதா சர்வகாலமும் போற்றி தொழுதிருக்க வேண்டும். உங்கள் கண்ணில் வீற்றிருக்கும் ஆத்மாவை நீங்கள் பார்க்கும் போது கயிலாயத்து அண்ணலாகிய சிவபெருமானே அரணாக விளங்குவார் என்பது திண்ணம் என நம் மனக்கண் முன் நிறுத்துகிறார். “அனுபவித்தவன் சொல் தவறாது” என்பதும் நிரூபணமாகிறது.

சிவனடியார்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்யாதவர்கள் நிலை பற்றி கீழ்க்கண்ட வெண்பாமூலம் வேதனைப் படுகிறார்கள்.பிறப்புடையர், கற்றோர், பெருஞ்செல்வர் மற்றும் சிறப்புடையர் ஆனாலுஞ் சீ... சீ... இறப்பில்கடியார் நறுஞ்சோலைக் காளத்தி யாள்வார் அடியாரைப் பேணா தவர்.இப்பாடலில் முதலில் காணும் “பிறப்புடையர்” என்றால் பிறக்கும் போதே இளவரசராக மன்னராக, ராணியாக, கோடீஸ்வரராக பிறப்பவர்கள் என பொருள் கொள்ளலாம்.

அருள்மிகு காளத்தி நாதர், அருள்மிகு ஞானப் பூங்கோதையின் அடியவர்களுக்கு உதவாதவர்கள், அரவணைக்கத் தவறியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைச் சீ... சீ... என கீழ்த்தரமாகக் கூறுகின்றார். இது திட்டுவதுபோல் இருந்தாலும் “அடியாருக்கு உதவுங்கள்” என்ற வழிகாட்டுதலை நமக்குத் தருகிறார்கள்.

காளத்தி நாதருக்கு வேண்டும் பணிவிடைகள் செய்தால் கிட்டும் பலன் பற்றி கீழ்க்கண்ட பாடல் மூலம் விவரிக்கின்றார்கள்.வாளா பொழுது கழிக்கின்றார் மானுடவர்கேளார் சொல் அந்தோ கிறிபட்டார் - கீளாடைஅண்ணற் கணுக்கராய்க் காளத்தி யுள்நின்றகண்ணப்ப ராவர் கதை.எல்லா மனிதர்களுமே வெட்டியாகப் பொழுதினைக் கழிக்கின்றனர்.

“ந, ம, சி, வா, ய” என்னும் ஐந்தெழுத்துதனைக் கேளாதவர்கள், ஓதாதவர்கள், நெஞ்சழுத்தாதவர்கள் அய்யோ! (கிறி - கிறுக்கு) கிறுக்கர்கள் ஆனார்களே என வருந்துகிறார். அதற்கு உபாயமாக ஒருவேளை புலித்தோலை கீழ் ஆடையாக அணிந்திருக்கும் அண்ணலுக்கு பணிவிடை செய்தால், கண்ணப்பர் போல் நாமும் ஆக முடியுமே! என்ற சீரிய வழிகாட்டு தலை கைகாட்டிபோல் காட்டுகிறார்.

காளத்திநாதனை தான் இளமையிலேயே காணாமல் போனேனே என வருந்தியதால், நீங்களாவது இதையெல்லாம் செய்யுங்கள் என வலியுறுத்துகிறார்.
நம்பால் மதித்துறையும் காளத்தி நண்ணாதேவம்பால் மலர்தூய் வணங்காதே - நம்பாநின்சீலங்கள் ஏத்தாதே தீவினையேன் யானிருந்தேன்காலங்கள்  போயின கழிந்து.இன்றும் நம் கண்முன்னே காளஹஸ்தியை ஆட்சி செய்யும் குடுமித்தேவரைக் கண்டு வணங்கி மலர் தூவி சொல் மாலையால் போற்றாமல் கெட்டவனைப் போல் வாழ்நாளை பாழாக்கி விட்டேன் நீங்களாவது போற்றிப் புகழ்ந்து அவரது அருள் பெறுங்கள் என கூறுகிறார்கள்.

பிறவாமை வேண்டும் - பிறந்திடின் உன் கழல்மறவாமை வேண்டும்என்ற காரைக்காலம்மையின் வேண்டுதலை நிறைவேற்றும் மருந்தினைக்
கீழ்க்கண்ட பாடலால் விளக்குகிறார்.

வாயிலே வைக்கும் அளவில் மருந்தாகித்
தீய பிறவி நோய் தீர்க்குமே - தூயவே
கம் பெருமா தேவியொடு மன்னு கயிலாயத்
தெம் பெருமான் ஓரஞ்செழுத்து.

கயிலைநாதரின் “ந,ம,சி,வ,ய” என்ற ஐந்தெழுத்தை வாயால் சொல்லிய மாத்திரமே “வாசி” என்னும் காற்று வித்தை மூலம் வாய்க்குள் வைக்க வேண்டும் அப்படி செய்யும்போது குண்டலினி சக்தியாக அது பெருக்கெடுத்து அடுத்த பிறவியை தவிர்த்து இந்த பிறவியிலேயே வீடு பேறு தரும் என்று எளிய வெண்பா மூலம் விளக்கேற்றி வைக்கிறார்கள்.

கணக்கிட்டுக் கொண்டிருந்து காலனார் நம்மை
வணங்கி வலைபடாமுன்னம் - பிணக்கின்றிக்
காலத்தால் நெஞ்சே கயிலாயம் மேவியநற்
சூலத்தான் பாதம் தொழு.

எமன் நம்முடைய வாழ்நாளை விநாடியும் தாமதமின்றி கணக்கிட்டுக் கொண்டிருக்கின்றார். மேலும் அவர் நம்மை இறுதி நாட்களில் வாட்டி, வதைத்து படுக்கையில் தள்ளி நம் உயிரைப் பறித்து எடுத்துச் சென்று ஈசனிடம் சமர்ப்பித்து தன் கடமையைச் செய்கிறார். அதற்கு முன்பாக அவர் பாதத்தை இறுகப் பற்றி அஞ்செழுத்தை நெஞ்சழுத்தி மேன்மை பெற்று சுகமாக வாழ இலகு வழி காட்டுகின்றார்.

“பொன்முகலி” எனும் ஐந்தெழுத்து நதியின் சிறப்பைக் கீழ்கண்ட பாடலால் காண்க.

அறியாம லேனும் அறிந்தேனுஞ் செய்து
செறிகின்ற தீவினைகள் எல்லாம் - நெறி நின்று
நன்முகில் சேர் காளத்திநாதன் அடிபணிந்து
பொன்முகலி ஆடுதலும் போம்.

காளஹஸ்தி கோயிலுக்குச் செல்லும் முன் பொன்முகலி ஆற்றைக் கடந்து தான் நாம் செல்ல முடியும். தற்காலம் நாகரீகத்தின் வளர்ச்சியாக பொன்முகலி நதியினை பாழாக்கியதால் பெருஞ்சாக்கடையாக ஓடுகின்றது. நக்கீரர் கால பொன்முகலி தூய நதிபோலும். நம் வாழ்க்கையில் தெரிந்தோ, தெரியாமலோ செய்த சகல குற்றங்களையும் போக்க வேண்டுமென்றால் அருள்மிகு காளத்திநாதரையும், அருள்மிகு ஞானப் பூங்கோதையையும் வணங்கிய பின்பு பொன்முகலி ஆற்றில் நீராடினால் எல்லாம் கரைந்து போய் விடும் என்று எவ்வளவு அழகாக சிறு வெண்பாவால் வெளிப்படுத்துகிறார் பாருங்கள்.

மற்றும் பல பிதற்றவேண்டாம் மடநெஞ்சே
கற்றைச் சடை அண்ணல் காளத்தி -
நெற்றிக்கண்ஆரா அமுதின் திருநாமம் அஞ்செழுத்தும்
சோராமல் எப்பொழுதுஞ் சொல்.

“கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி”யின் கடைசி வெண்பா இது. இறுதியாக ஆனால், உறுதியாக ஒரு கருத்தினை நக்கீரர் சுவாமிகள் உபதேசிக்கின்றனர் சும்மா அது, இது என ஏதாவது குதர்க்கமாகச் சிந்தித்து, உழன்று வாழ்க்கையை வீணாக்காதீர்கள். வீடு பேறு கிட்டுமோ, கிட்டாதோ என்று யோசிக்காமல் சோர்ந்துபோய் விடாமல் “நமசிவாய” மந்திரத்தைச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும் என விடை தருகிறார்கள்.நக்கீரர் வாழ்வில் நடந்த சம்பவங்கள் வெறும் சொல் அல்ல. உண்மையாக நடந்தவை என்பதை வெண்பாக்களால் அறியலாம்.

அயப்பாக்கம் பா. ஜெயக்குமார்