அபிராமி அந்தாதி சக்தி தத்துவம்-81 முக்கால ஞானம்!



அபிராமி பட்டர் அபிராமியை உபாசித்து அமாவாசையை பௌர்ணமியாக்கி சரபோஜி மன்னரால் முப்பது வேலி நிலம் அளித்து சிறப்பு செய்யப்பட்டது என்பதிலிருந்து தன் வாழ்வினாலேயே அடியவர்களுக்கான சின்னங்களுள் ஒன்றாகிய ‘‘வையத்தை’’ பெற்றுள்ளார் பட்டர் என்பதை நான் அறிய முடிகிறது.

‘‘துரகம்’’ என்ற சொல் குதிரை, மனம் என்ற இரண்டு பொருளைக் கொண்டது. இந்த இரண்டு பொருளிலேயும் அபிராமி பட்டர் இச்சொல்லை பயன்படுத்தியுள்ளார். குதிரை என்ற சொல் கோயிலை பொறுத்தவரை உமையம்மைக்கு வாகனமாக கருதப்படுகிறது. இந்த வாகனத்தில் உமையம்மை அமர்ந்தால் தீயவைகளை அழிக்கும் பண்பை உடையவளாக திகழ்கின்றாள். யோகியர்களின் உள்ளமானது நன்கு வசப்படுத்தபட்டபோது குதிரை என்ற கலைச் சொல்லால் குறிப்பிடப்படுகிறது.

வாஜீ என்ற சொல் வடமொழியில் குதிரையை குறிக்கும். அதை முதன்மைபடுத்தி செய்யப்படுகின்ற யாகம் வாஜபேயம் எனப்படுகிறது. இந்த யாகத்தை செய்ததன் அடையாளமாக, அரசன் அந்தணனை சிறப்பிக்கும் கால் குதிரை ஒன்றை அளித்து போற்றுவான். அவ்வாறு அளிக்கப்படும் குதிரை சில அரசர்குரிய அடையாளங்களுடன் திகழும். அந்தணர்கள் வேள்வி செய்வதே சிறப்பாக கருதப்படுகிறது. அதன் தலையாய பண்பை இக்குதிரை உணர்த்தியது.

பண்டைய காலத்தில் குதிரை வாகனத்தை கொண்டு செய்தி அனுப்புவார்கள். அச்செய்தியானது மங்களம், அல்லது ஆபத்து இது இரண்டில் எதை வேண்டுமானாலும் தெரிவிக்கும். அதன் அடையாளமாகவும் சூட்டுகிறார் பட்டர்.உமையம்மை வழிபாட்டை பொறுத்தவரை பார்வேட்டை என்ற குதிரைமேல் சென்று அம்பு போடும் திருவிழாவானது இன்றளவும் வழக்கத்தில் உள்ளது.

இப்படி அம்பு போடுதல் என்பது வேறு எந்த வாகனத்திலும் இல்லாமல் குதிரையே சூட்டப்படுகிறது. இது மன்னனுக்கு மக்களுக்கு வெற்றியை தரும். இதையே ‘‘தளர்வரிய மனம்’’ - 69 என்றும் மண்டலி - 77 என்ற தேவதைக்கு குதிரையே வாகனமாக திகழ்கிறது. இந்த மண்டலி சூரிய மண்டலத்தில் இருந்து உயிர்களுக்கு உதவுகின்றாள். இதை அஸ்வம் என்ற வடசொல்லால் குறிப்பிடுவார்கள் இதற்கும் குதிரை என்றே பெயர்.

ஏழு குதிரை கொண்ட ரதத்தில் சூரியன் வலம் வருவதாக சாத்திரம் சொல்கிறது. உமையம்மை அரசியாக திகழ்கின்றபோது (மஹாராக்னி) ஆலயங்களில் உமையம்மைக்குறிய தேர்களில் நான்கு வேதமே குதிரையாக கட்டப்படுகிறது. அந்த வேதஞானத்தையே பட்டர் ‘‘துரகம்’’ என்ற
வார்த்தையால் குறித்தார். ‘‘துரகம்’’ என்பது தேர்குதிரை என்றும் ‘‘அஸ்வாரூடா’’ என்று குதிரை மேல் செல்லும் உமையம்மைக்கு பெயர். இந்த வடிவத்தில் வந்து அருள் புரியும் தேவதை காரிய சித்தியையும் முக்காலத்தையும் உணர்ந்து. உணர்த்தும் ஞானம் அதையே ‘‘துரகம்’’ என்று கேட்கிறார்.
‘‘மதகரி’’ என்பது நால்வகை படைகளுள் ஒன்று ‘‘வெண்பக டூரும் பதம் தருமே’’- 91. பட்டத்து யானையை மதகரி என்று கூறுவது வழக்கம். அரசனது வாள் மகுடம் அந்த வகையில் பட்டத்து யானை வெற்றியின் அடையாளமாக திகழ்கிறது.

அந்தணர்களை பொறுத்தவரை ஆகமங்களில் ஆலயத்தில் சிவபூஜை துவங்குவதற்கு முன் கோ பூசை, கஜ பூசை செய்ய சொல்லியிருக்கிறது. கோ பூசையானது அறத்தை வளர்க்கும் பண்புடையது. கஜபூசையானது தீமையை அழிக்கும் பேறாற்றலை வழங்குவது. ‘‘சிவ சத்திக்கு யானை வாகனமும் தனி சிறப்பாக ஆகமங்களில் சொல்லப்படுகிறது. இந்த யானை வாகனமானது மோக்ஷத்தை அளிக்கக் கூடிய பண்புடையது.

சிவன் ஆண் யானையாகவும், சத்தி பெண் யானையாகவும் இருவருக்கும் பிறந்தவன் ஒம்கார வடிவை கொண்ட யானை முகன், இந்த யானை முகனானவன் இறையருள் அனுபவத்தை வழங்கவல்லவன் சைவத்தை பொறுத்தவரை யானையானது ஆன்மாவின் சகஜமலமான ஆணவமாகிற அறியாமையை குறிப்பிடுவதாகும். அதையே ஞானவடிவான சிவபெருமான் கிழித்து ஆடையாக போர்த்தி அருள் செய்கிறார். இது ஆன்ம ஞானத்தின் குறியீடாகும். இதை அனைத்தையுமே அபிராமி பட்டர் ‘‘மதகரி’’ என்ற ஒரே வார்த்தையால் குறிப்பிடுகின்றார். யானையானது சிற்பத்தை பொறுத்தவரை வனவளத்தை குறிப்பதாகும்.

‘‘மாமகுடம்’’. ‘‘மா’’ என்பது செல்வத்தை குறிக்கும் திருமகளையும் குறிக்கும். ஒருவரிடத்து இருக்கும் செல்வமானது நீங்காது நிலைத்திருக்க அருள் புரிபவள் இலக்குமி இதையே ‘‘திருவே’’- 3 என்பதிலிருந்து அறியலாம். செல்வம் இருவகைத்து, 1. உயிர் உள்ளது, 2. உயிர் இல்லாதது.
உயிர் உள்ளது பசுக்கள், அடிமைகள், ‘‘அணங்கே அணங்குகள் நின் பரிவாரங்கள்’’- 81 என்பதனாலும் அறியலாம்.உயிர் அற்றது ‘‘தனம் தரும் கல்வி தரும்- 69’’ என்பதிலிருந்தும் அறியலாம்.

அதனாலேயே ‘‘மா’’ என்ற வார்த்தையால் குறிப்பிட்டார்.‘‘மகுடம்’’ என்பது அரசர்கள் மற்றும் தேவர்களுக்கு உறிய அடையாளங்களாகும். அரசாங்கங்களுக்கு ஆட்சிப் பொறுப்பை உணர்த்துவதாகும். தேவர்களுக்கு வல்லமையை உணர்த்துவதாகும்.அரசர்களுள் சிற்றரசர்கள் பேரரசர்கள் என இருவரை உண்டு, அதில் சிறப்பாக பேரரசரை சூட்டவே ‘‘மா மகுடம்’’ என்றார். இவைகளை கொண்டு மகுடம் என்பது ஆளுமையை குறிக்கும். பேராண்மையையும் குறிக்கும். அபிராமி பட்டர் மாமகுடம் என்ற வார்த்தையால் இந்திர பதவியை குறிக்கிறார்.

நூறு அஸ்வமேத யாகம் செய்தவருக்கும் ‘‘நிரூடபசுபந்தம்’’ என்ற யாகத்தை செய்தவருக்கும் இந்திர பதவி கிடைக்கும் என்பர் அத்தகைய சொர்க்கத்தை பெறுதலையே ‘‘மாமகுடம்’’ என்கிறார். இதை ‘‘விண்ணளிக்கும் செல்வமும்’’ - 15 என்பதனால் அறியலாம். ‘‘ஆளுகைக்கு உன் தன் அடித்தாமரைகள் உண்டு’’ - 39 என்பதனால் அறியலாம்.

அத்தகன் பால் மீளுகைக்கு உன்தன் விழியின் கடையுண்டு - 39 என்று கூறுவதனால் இறந்த பின் அடையும் சொர்க்கத்தையும் மறைமுகமாக குறிப்பிடுகின்றார். இதை மனதில் கொண்டே ‘‘மாமகுடம்’’ என்கிறார்.

படையுங், கொடியுங், குடியும் முரசும்
நடை நவில் புரவியும் களிறும் தேரும்
தாரும் முடியும் நேர்வன பிறவும்
தெரிவு கொள் செங்கோல் அரசர்குரிய - 616
- தொல்காப்பியம்.

இவை அனைத்தும் அரசர்குரியனவாம். ‘‘சிவிகை’’ - என்பது பெண்டிற்கு, இறைவனுக்கு அந்தணர்க்கு, செல்வந்தர்க்கு என நான்கு வகை அபிராமி பட்டர் வாழ்ந்த காலத்தில் இருந்திருக்கிறது. அரசகுல பெண்டிர்கள் சிவிகையை வாகனமாக பயன்படுத்தினார்கள் இச்சிவியை மூடு சிவிகை எனப்படும் இதை ஆண்கள் சுமந்து செல்வார்கள். இறைவனுக்கு சிவிகை இரண்டு விதமாக அமைக்கப்படுகிறது. பள்ளியரையில் எழுந்தருளும் சொக்கரை சிவிகையிலே சுமந்து செல்வார்கள்.

அந்தணர்கள் அரச மதிப்பை பெற்றிருந்தால் அவர்களை அழைத்துவரவும் அல்லது சிதம்பரம் போன்ற சில கோயில்களில் பூசனை புரிகின்ற அந்தணர்கள் சிவிகையிலே அமர்த்தி வீடுவரை கொண்டு விடப்படுவார்கள். செல்வந்தர்கள் சிவிகையில் செல்வது வழக்கம் இந்த நால்வகை சிவிகையும் குறிப்பாக செல்வ மிகுதி, பதவி ஒழுக்கமுடைமை, பேரறிவு சான்றான்மை, இறையருள் இதைச் சார்ந்தே பயன்படுத்தப்படுவது நோக்கதக்கது இதையே அபிராமி பட்டர் பக்தர்களின் சின்னங்களாக கூறுகிறார்.

‘‘பால் அழும் பிள்ளைக்கு நல்கின ேபர் அருள் கூர் - 9 ஞான சம்பந்தருக்கு பால் வழங்கியது. மேலும் அவருக்கு முத்து சிவிகையும் இறையருளால் கொடுக்கப்பட்டது.‘‘பெய்யும் கனம்’’ - என்ற சொல் மழையையும், பொன்மழையையும் குறித்தது. ஆகமத்தில் அனைத்து பூசனையும் முடிந்து வாழ்த்து சொல்வது வழக்கம்.கையில் காலே வர்ஷது ‘‘வான் முகில் வழாது பெய்க’’ என்று பொருள்படும் வகையில் உள்ளதையே ‘‘பெய்யும் கனகம்’’ என்கிறார். ‘‘கனகம்’’ என்பது வடசொல்லின் தமிழ் திரிவில் நீரைக்குறிக்கும்.

மேலும், ‘‘பெய்யும் கனகம்’’ என்பது திருக்கடையூரிலே கலயனார்க்காக வீட்டில் பொன் மழையை பொழிய செய்ததை உமையம்மைக்கு சூட்டிக்காட்டி அதே போல்தான் வேண்டுவதாகவும் உணரலாம். அப்படி வேண்டியதை வேண்டிய வண்ணம். அருள்புரிகின்ற பண்பையே ‘‘பெய்யும் கனகம்’’ என்கிறார்.

அபிராமி பட்டர் வித்யா உபாசகர் பண்டைய காலத்து மரபில் அந்தணர், பார்ப்பனர் என்று இருவர் இருந்தனர். இதில் அந்தணர் என்பவர் துறவு வாழ்க்கையை மேற்கொண்டவர். பார்ப்பனர் என்பவர் இல்லற வாழ்க்கையை மேற்கொண்டவர். இல்லறத்தார் அனைவருக்கும் துறவு மேற்கொண்ட அந்தணரே குருவாக கருதப்படுவார். அந்த வகையில் ஆதிசங்கரர் அந்தண துறவிக்கு அருளால் பொன் மழை பொழிய செய்ததை அனைவரும் அறிந்ததே அதையே சூட்டிக்காட்டி உமையம்மையின் அருள் சின்னமாக குறிப்பிடுகின்றார்.

செல்வம் என்பது சென்று விடும் பண்புடையது செல்வம். நிலையாமை பற்றி இலக்கியங்களும் பேசுகிறது அது இயல்பாகும். அந்த இயல்பை உமையம்மையானவள் தனது அருளினால் மிகுதியாக கொடுப்பதனால் நிலைப் பேருடையதாக ஆக்குவாள் அதனால் ‘‘பெய்யும் கனகம்’’ என்கிறார். மிகுதியான தொடர் வருவாய் (ெசல்வம்). ‘‘பெருவிலை ஆரம்’’ என்பது மிகுந்த விலையுள்ள ெசல்வந்தர்கள் மற்றும் அரசர்கள் மட்டுமே பயன்படுத்தும் கழத்தணிகளாகும். இது தங்கம், வெள்ளி, நவரத்தினம் இவற்றால் ஆக்கப் பெற்றதாகும்.

முத்தாரமும் - 53 என்று கூறுவதனால் இதைதெளிவாக உணரலாம். வீரர்களுக்கு, போரில் உதவிய அந்தணர்களுக்கு போரில் வெற்றி கண்ட மன்னன் போர் முடிந்ததும் அளிக்கும் மிகுதியான கௌரவம் மிக்க பெருஞ் செல்வத்தோடு கொடுக்கப்படும் கழத்தணியாகும். இதையே ‘‘பெருவிலை ஆரம்’’ என்கிறார்.

‘‘பெரு’’ என்பது பெருதற்கரிய பேறுகளில் ஒன்று விலை என்பது மதிப்பிடமுடியாதது என்று எதிர் மறையாக குறிக்கும்.மதிப்பிட முடியாத அடைய தக்கனவற்றில் ஒன்று கழுத்தணியான மங்களநாண்.‘‘காமேச பத்த மாங்கல்ய ஸூத்ர சோபித கந்தராயை நமஹ’’.

- என்கிறது ஸஹஸ்ர நாமம் இது மங்களத்தை குறித்தது. இது உமையம்மையின் அருட் சின்னமாகும். இதை பெண்களுக்கான தீர்க்க சுமங்கலி என்ற உயர் பண்பையும் ஆண்களுக்கான ஞானக் குறியீடான பூணுலையும் இங்கு குறிப்பிடுகிறார்.தான் கற்ற கல்வி, பெற்ற செல்வம், உற்ற பதவி, இவற்றை கொண்டு தன்னை அடையாளப்படுத்திக் கொள்வது உலகியல் இயல்பு. இது ஒரு காலத்தில் அழியும் தன்மை கொண்டது.

வாழும் போது வாழ்க்கைக்கு பின்னும் ஒருவன் பெறவேண்டிய அத்துனை நன்மைகளையும், உபாசனை தெய்வம் உபாசகனை நாடி வந்து கொடுக்கும். அது என்றும் அழியாது. நிலைத்து நிற்கும் பண்புடையது. அழியக்கூடிய உலகியல் செல்வத்தை விட்டு அழியாத உமையம்மையின் அருட் செல்வத்தை பெற பிரார்த்திப்போம்.

(தொடரும்)

முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்