சிபி சக்கரவர்த்திக்கு வழிகாட்டிய சுவேத வராகர்



சோழ மன்னர்கள் இறை உணர்வு மிக்கவராக விளங்கினார்கள். தங்களுக்கு என்று மாட மாளிகைகள் கூட கோபுரங்கள் அமைத்துக் கொள்வதை விட மக்கள் மனதில் கொலுவிருக்கவே விரும்பினர். அதற்குச் சான்றாக இன்றும் பறை சாற்றும் உலகிற் சிறந்த கோயில்களை மறக்க இயலாது.

சோழ வம்ச வழியில் வந்தவன் ‘சிபி சக்கரவர்த்தி’ இவர் ஒரு சமயம் வேட்டையாட விரும்பினார். தன் பரிவாரங்களை அழைத்துக் கொண்டு காட்டிற்குச் சென்றார். விதியின் விசித்திரம் எட்டடி பாய்ச்சலில் முன்னே அடி போட்டு வந்தது. மன்னர் வேட்டைக்கு எந்த விலங்கும் கண்ணில் தென்படவில்லை சோர்வு அடைந்தார். சுற்றித் திரிந்த கால விரயமே தவிர மனதின் களைப்போ சினத்தை அடைய வைத்தது. மனதில் உற்சாகம் குன்றி மரநிழலில் ஒதுங்கி நின்றார்.

சோர்வு நீக்குமாறு எதிரே கொழுத்த பன்றியைத் கண்டார். ஆஹா... ஆஹா எத்தனை பெரிய அழகிய கண்கள். தம்மை நோக்கி என் மீது அம்பு எய்துவயா? எங்கே என்னைக் கொல்? பார்ப்போமென சவால் விட்டு அமர்ந்திருந்தது.மன்னன் மனதில் உன்னை விட்டேனா பார். என் அம்பை தொடுத்தார். இமை நொடிக்கும் நிமிடம் சட்டென பாய்ந்து ஓடியது. இதென்ன விளையாட்டு உற்சாகம் பெருகுதே! இதோ தொடர்கிறேன் உன்னை என பின் தொடர்ந்தார். பன்றியோ இங்கும் அங்கும் போக்கு காட்டி ஓடியது.

இராமாயணத்தில் பொன்மானான மாரீசன் இராமனுக்கு ஆட்டம் காட்டி வா....வா என அழைத்து சென்றது போலவே சிபி சக்கரவர்த்தியும் கொழுத்த பன்றியின் பின்னே அடிபோட்டு நடந்தார்.தரையில், புல்வெளியில் ஓடித் தாவிய பன்றி திடீரென்று குன்றின் மீது நாலுகால் பாய்ச்சலில் ஏறியது. மன்னருக்கு மூச்சு முட்டியது. வேகம் தளர்ந்தது. உடனே மலை மீது ஏற முடியாமல் ஓய்வெடுக்க அமர்ந்தார்.சிறிதும் ஆயாசம் இன்றி மன்னரின் பார்வையில் படும்படி அமர்ந்து அவரையே எதிர் நோக்கியது பன்றி.விடாது கருப்பு போல தன்னைப் போக்கு காட்டிய பன்றி எதைச் சாதிக்கப் போகிறது. எதுவென்றாலும் கொல்லாமல் விடக்கூடாது என எழுந்தான் மன்னன்.

உத்வேகத்துடன் குறிவைத்து தகர்க்க விரும்பினார். ஆனால் குன்றின் மீது ஓடியது. மன்னர் தன் பரிவாரங்களுடன் ஏறினார். நொடியில் மறைந்தது. தேடினார் நாற்புறமும்... கண்களை அகல வீசி நோக்கினார். ஒரு புதருக்கு அருகில் அமர்ந்து இருப்பதைக் கண்டார். மன்னர் தன்னை நோக்கி வருவதைக் கண்டு புதருக்குள் மறைந்தது. சக்கரவர்த்தி என்று பெத்த பேரு பெற்றவன் சிறு பன்றியை வீழ்த்த முடியவில்லையே.

கேவலம் தன் சுய மதிப்பீட்டில் தன்னையே வருத்திக் கொண்டார். இறைவன் திருவிளையாடலை யார் அறிவார்? புதருக்கு அருகிலிருந்து மரத்தடியில் அமர்ந்து தியானம் முற்று பெற்ற கண் விழித்த முனிவரைக் கண்டான். மன்னர் அவரிடம் சென்று மாமுனியே! இப்புறம் கொழுத்த பன்றி ஒன்று வந்து புதரில் மறைந்தது. நீவீர் கண்டீரா? எனக்‌ கேட்டான்.தவம் புரிந்த மாமுனிவர் மார்க்கண்டேய முனிவர் மன்னரின் திருமுகத்தை நோக்கி நீங்கள்யார்? என்றார்.

நான் சோழ நாட்டின் மன்னன் சிபி சக்கரவர்த்தி வேட்டையாட வந்தேன். சிறிய பன்றி தென்பட்டது. அதை வேட்டையாட எண்ணினேன். போக்குக்காட்டி குன்றின் மீது ஏறி மறைந்தது. தங்களைக் கண்டேன் என்று நடந்ததை மொழிந்தார்.ஆச்சரியத்துடன்! மார்க்கண்டேய முனிவர் இதுகாறும் உனக்காகத்தான் காத்திருக்கிறேன் மன்னவனே! முதலில் அதோ தெரிகிறதே புற்று அதற்கு நீ அபிஷேகம் செய்ய வேண்டும் உடனே செய் என கூறினார்.

மன்னரும் மறுக்காமல் புற்றுக்கு அபிஷேகம் செய்தார். புற்று மண் கரைந்து கொண்டே சென்றது. மண்மூடித்திறந்த விக்ரகத்தைக் கண்டான். புழுதியில் கிடந்த எம்பெருமானைத் தீண்டியதும். அடுத்த கணமே இறையருள் கிட்டியது.அரசரை நோக்கிய மார்க்கண்டேய முனிவர் இந்த இடத்தில் நீவீர் கைங்கரியம் செய்ய வேண்டும். புற்றிலிருந்து தோன்றிய நம்பெருமாள் புண்டரீகாட்சனுக்கு விமானத்துடன் கோவில் கட்ட வேண்டுமெனக் கேட்டார்.

சிபி மன்னரும் மனமகிழ்ந்த விரைவில் கோவில் எழுப்புவதாக உறுதியளித்தார். இச்செய்தி கேட்டு முனிவர் உள்ளம் அமைதியடையவில்லை மாறாக சிந்தனையில் ஆழ்ந்தார். நெற்றியில் ஏற்பட்ட சுருக்கங்கள் அவர் எத்தகைய சூழலில் புதைந்து உள்ளார் என்பதைத் தெளிவு படுத்தியது.

முனிவரின் குழப்பத்தை தீர்க்க எண்ணிய மன்னன் முனிவரே தங்களின் சிந்தனை எது என்றாலும் கூறுங்கள். அதனைத் தீர்க்க முயற்சி செய்கிறேன். தயங்காமல் கேளுங்கள் என்றார். சற்று சங்கடங்கள் தளர்ந்தன.

‘‘கருணை மனம் படைத்த மன்னரே! நீ கோயில் கட்டுவதில் எவ்விதமான இடர்பாடும் இல்லை. ஆனால், எம்பெருமானுக்கு கோயில் எழுப்பினால் அதனை வணங்குவதற்கு பக்தர்கள் வேண்டும் அல்லவா? இது காடு பக்தர்கள் எங்கிருந்து வருவார்கள். குன்றிலிருக்கும் புண்டரீகாசனுக்கு  பூசையை நாள் தோறும்  யார் செய்வார்கள்.’’‘‘முனிவரே! உண்மையே! தாங்கள் எண்ணுவதிலும் வருத்தமடை வதும் பொருத்தமே.’’
‘‘அதை நீக்க இயலுமெனில் நீ வடதிசை பகுதியிலுள்ள 3,700 மக்களை அழைத்து வந்து குடியேற்றம் செய்’’ என்கிற வழியைக் கூறினார்.

சிபி சக்கரவர்த்தியும் முனிவரின் கருத்தை ஏற்றுக் கொண்டு அவ்வாறு செய்ய ஒப்புக் கொண்டார். வடநாட்டிலிருந்து, 3700 வைணவ பக்தர்களை அழைத்து வந்து குடியேற்றினார்.மார்க்கண்டேயர் எண்ணிக்கை சரியாக உள்ளதா? என சரி பார்த்தார். ‘‘ஒரு நபர் குறைந்தது 3699 பேர் மட்டும் இருந்தனர். மன்னர் 3700 பேர் எண்ணியே அழைத்து வந்தேனே!  எவ்வாறு குறைவு ஏற்பட்டது என யோசித்த சமயம், ‘‘எம்பெருமான் புண்டரீகட்சன் தோன்றினார். என்னையும் சேர்த்தே எண்ணி கணக்கு வைத்தீர். எனவே, நான் மக்களுடன் கூட இருக்கவே விரும்புகிறேன்’’ என்று மகிழ்வுடன் புன்னகை பூத்தார்.

சிபி சக்கரவர்த்தி குன்றின் மீது கோயிலைக் கட்டி எம் பெருமானை எழுந்தருளச் செய்தார். இவ்விடம் திரு வெள்ளறை என்று அழைக்கப் பட்டது. பங்கயச் செல்வி தாயார் தவமிருந்து புண்டரீகாட்சனைத் திருமணம் செய்து கொண்டார். இத்தலத்தில் கருவறையில் பூதேவி, ஸ்ரீதேவி, இந்திரன், சந்திரன், கருடன், ஆதிசேடன் உடன் வீற்றிருக்கிறார். எங்கள்  ஆழ்வான் என்று அழைக்கப்படும் உய்யக் கொண்டாரின் திரு அவதாரத் தலம் இதுவே. இங்குள்ள மணிகர்ணிகா தீர்த்தம் பாவத்தைப் போக்கும்.சுவேதகிரி என்றும் அழைக்கப்படும் இத்தலம் பெருமை வாய்ந்ததாகும். திருமங்கை ஆழ்வார், பெரியாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது.

பொன்முகரியன்