தம்பதியர் கருத்து வேற்றுமை நீக்கும் மோகினி ஏகாதசி விரதம்-மோகினி ஏகாதசி 22 & 23-5-2021



கணவன் மனைவி கருத்து வேறுபாடுகளால் பல குடும்பங்கள் கஷ்டப்படுகின்றன. அவர்கள் சுமுகமாக இருக்க ஏதேனும் வழி இருக்கிறதா? பிரிந்துபோன கணவன் மனைவி உறவின் விரிசல் நீங்கி, திரும்பவும் ஒன்று சேருவதற்கு ஏதேனும் பிராயச்சித்தம் இருக்கிறதா? தெரிந்தோ தெரியாமலோ பாவங்களைச் செய்தவர்கள், அதிலிருந்து மீண்டு ஒரு புது வாழ்வு துவங்குவதற்கு என்ன பிராயச்சித்தம் செய்ய வேண்டும்? இதற்கெல்லாம் உண்மையிலேயே பிராயச்சித்தம் சொல்லப்பட்டிருக்கிறதா? எங்கு சொல்லப்பட்டிருக்கிறது? என்கிறகேள்விக்கு பதிலாக விளங்குகின்றது வைகாசி மாதம் வளர்பிறையில் வருகின்ற மோகினி ஏகாதசி.

மோஹினி ஏகாதசி, இந்த மாதம் 22-23 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை அன்று வருகிறது. இந்த ஏகாதசி குறித்து இராமாயணத்திலும், மகாபாரதத்திலும், ஏகாதசி மஹாத்மியத்திலும் சில செய்திகள் கூறப்பட்டிருக்கின்றன. சீதையை  இராமர் பிரிந்தபோது, வருத்தம் தாளாது துடிக்கிறார். தான் மறுபடியும் சீதையைச் சேருவதற்கு என்ன வழி என்று தன்னுடைய குலகுருவான வசிஷ்டரிடம் கேட்கிறார்.

வசிஷ்டரும், ‘‘ராமா! வருகின்ற வைகாசி மாதம், வளர்பிறை ஏகாதசி விரதம் இருந்தால், உன்னுடைய எண்ணம் நிறைவேறும். பிரிந்த சீதை உன்னிடம் வந்து சேருவாள் என்று கூற, சாட்சாத் விஷ்ணுவான  ராமபிரானே,  முறையாக, வைகாசி ஏகாதசி விரதத்தை இருந்தார் என்ற சிறப்பு இந்த ஏகாதசிக்கு உண்டு. அடுத்து கிருஷ்ணாவதாரத்தில் தர்மபுத்திரருக்கு பல நல்ல மொழிகளைச் சொன்ன கிருஷ்ண பகவான், இந்த வைகாசி வளர்பிறை ஏகாதசி சிறப்பைப் பற்றியும் கூறுகின்றார்.

இந்த ஏகாதசிக்கு மோகினி ஏகாதசி என்று பெயர். இந்த ஏகாதசியில் பெருமையைவிளக்கும் கதை ஒன்று உண்டு. சரஸ்வதி நதிக்கரையில் பத்ராவதி நகர் என்று ஒரு நகரம் உண்டு. அங்கே தனபாலன் என்கின்ற ஒரு வணிகர் வாழ்ந்து வந்தார். அவர் மிகச் சிறந்த திருமால் பக்தனாகத் திகழ்ந்தார். தன்னுடைய செல்வத்தின் பெரும்பகுதியை, “உலகில் ஏய்ந்த  பெருஞ்  செல்வத்தராய் திருமால் அடியார்களை பூஜிக்க நோற்றார்களே” என்கின்ற ஆழ்வாரின் வாக்குக்கு ஏற்ப, பல ஆலயங்களைக் கட்டினார்.

திருமடங்களை ஏற்படுத்தினார். திருமால் அடியார்களுக்கு பல உதவிகள் புரிந்தார். அதனால் அவர்  புகழ் எங்கும் பரவியது. அவருக்கு ஐந்து பிள்ளைகள் பிறந்தனர். அவர்களில் கடைசி பிள்ளையாகப் பிறந்தவன் மற்ற பிள்ளைகளில் இருந்து மாறுபட்டு மிக மோசமானவனாக மாறினான். தான தர்மங்களை தடுத்தான்.

தந்தையின் செல்வத்தை கேவலமான விஷயங்களுக்கு வாரி இறைத்தான். எத்தனை முயன்றும் அவனைத் தந்தையால் திருத்த முடியவில்லை. அதனால் அவனுக்குப் பணம் கொடுப்பதை தந்தையார் நிறுத்த, அவன் திருட ஆரம்பித்தான். தந்தையார் அவனை வீட்டைவிட்டு வெளியேற்றினார். அதற்குப் பிறகு அவன் இன்னும் மோசமானவனாக மாறி, பெரும் கொள்ளைகளில், ஈடுபட ஆரம்பித்தான்.

நாட்டின் காவலர்கள் அவனைப் பிடித்து அரசனிடம் ஒப்படைக்க, அரசன் அவனுக்கு மரண தண்டனை வழங்கும்போது, அவனுடைய தந்தையின் பெருமை அவரிடம் சொல்லப்பட்டது. ஒரு உத்தம புருஷனுக்கு இப்படி ஒருவன் மகனாகப்  பிறந்து விட்டான் என்று வருந்திய அரசன், அவனை நாடு கடத்த உத்தரவிட்டான். அதைப் பற்றியும் அவன் கவலைப்படவில்லை. காட்டுக்குச் சென்று விலங்குகளை வேட்டையாடியும், வழிப்பறி செய்தும் வாழ்ந்து வந்தான். இப்படியே அவன் காலம் சென்றது. நாளாக நாளாக அவன் செய்த தீவினை அவனுக்கே திரும்பவந்து துன்புறுத்த ஆரம்பித்தது. அவன் உடல் தளர்ந்தது. நோய்வாய்ப்பட்டான். அவனால் இயங்க முடியாத நிலை ஏற்பட்டது.

ஒருநாள் அவன் கௌண்டின்ய முனிவர் என்கிற முனிவர் ஆசிரமத்துக்கு முன் அமர்ந்திருந்தான். கௌண்டின்ய முனிவர் கங்கையில் நீராடிவிட்டு, நாராயண மந்திரத்தை ஜெபித்துக் கொண்டே வருகின்ற பொழுது, அவர் ஈர ஆடையிலிருந்து, சில துளி கங்கை நீர் இவன் மீது பட்டது. அந்த நீரின் புனிதத்தால் ஒரு மனமாற்றம் ஏற்பட்டது. தான் செய்த தவறுகள் குறித்து அவன் வருந்த ஆரம்பித்தான். நேராக அந்த கௌண்டின்ய முனிவர் திருவடியில் விழுந்து வணங்கி கதறினான். தன்னுடைய பாவங்களுக்கு என்ன பிராயச்சித்தம் செய்ய வேண்டும் என்று கேட்டான்.

அவனுடைய முழுக் கதையையும் அறிந்து கொண்ட கௌண்டின்ய முனிவர், ‘‘ஒருவன் மனதாரத்  திருந்தி விட்டால் அவன் பாவங்களைப் போக்கிக் கொள்ளவும் வழி உண்டு’’ என்று சொல்லி, வைகாசி மாதம் வளர்பிறை ஏகாதசி விரதத்தை அவனுக்குக்  கற்பித்தார். மிக எளிமையான அந்த விரதத்தை அவன் உயிர் உள்ளவரை பின்பற்றினான். நிறைவாக பாவம் நீங்கி விஷ்ணுவின் பாத மலர் அடைந்தான்.

செய்த பாவங்களுக்கு வருந்தி இந்த ஏகாதசி விரதம் இருந்தால், பாவம் தீரும் என்பது ஏகாதசியின் தத்துவம்.  இந்த ஏகாதசி விரதத்தை மிக எளிமையாக இருக்கலாம். வழக்கமான ஏகாதசி போல், அன்று, பூரணமாக விரதமிருந்து, திருமாலை வணங்கி, திருமால் கோயிலுக்குச் சென்று, விளக்கு போட்டு, அர்ச்சனை செய்து,  இரவு முழுக்க கண்விழித்து, புராண, இதிகாச, ஆழ்வார்களின் பிரபந்தங்களைப்  பாடி, மறுநாள் காலையில் துவாதசி பாரணை முடிக்க, மோகினி ஏகாதசியின் முழுப்பயனும் கிடைக்கும்.