அனலாடீஸ்வரர் - தொட்டியம்



தமிழகத்தில்தான் அதிகமான ஆலயங்கள் அமைந்துள்ளன. நாட்டை வளப்படுத்தும் ஆறுகளும், குளங்களும், சோலைகளும், சாலைகளும் சூழ்ந்து இயற்கைக் காட்சிகளைத் தந்து இன்பம் ஊட்டின. இன்றும் வானளாவிய கோவில் கோபுரங்களும், விமானங்களும் தூரத்திலிருந்து பார்ப்போர்க்கு பக்தி உணர்ச்சியை தூண்டுகிறது. உடலுக்கு உணவைத் தரும் நிலங்கள் அமைந்திருப்பது போல், உள்ளத்தின் உணவாகிய பக்தியை ஏற்படுத்தும் பல ஆலயங்கள் அமைந்துள்ளன.

எப்போதும் வற்றாத வளமுடைய நீர்வளங்களுடைய காவிரி நதி பாயும் சோழநாடு. ‘சோழநாடு சோறுடைத்து’ என்னும் பழமொழியைப் பெற்றது. இத்தகைய பெருமைகளையுடைய சோழ நாட்டில், திருச்சி மாவட்டம் - முசிறி தாலுகாவில் காவிரி நதிக்கு வடகரையில் அமைந்துள்ள தொட்டியம் எனும் ஊரில் ஸ்ரீஅனலாடீஸ்வரர் ஆலயம் உள்ளது.

 முன்னோர்கள் அமைத்த அபிமான ஆலயங்களுள் ஒன்றாகத் தொட்டியம் அனலாடீஸ்வரர் கோயில் விளங்குகிறது. இக் கோயிலுக்கு பிரமபுரம், மத்தியாசலஷேத்திரம், திரிபுர சம்ஹார ஷேத்திரம் என வேறு பெயர்களும் உள்ளன. பிரம்மன் இத்தலத்தில் தங்கி யாகம் வளர்த்ததால் பிரம்மபுரம் என்றும், மத்தியமலையை அடுத்துள்ளதால் மத்தியாசலஷேத்திரம் என்றும், சிவபெருமான் மூன்று புரங்களையும் அழித்ததால் திரிபுர சம்ஹார ஷேத்திரம் என்றும் வரலாறு சொல்கிறது.

அனலாடீஸ்வரர் ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ஆலயத்தின் உள்ளே இரண்டு பிரகாரங்கள் அமைந்துள்ளன.  இரண்டாம் பிராகாரத்தில் முன்புறத்தில் நந்தியும் கொடிமரமும் அமைந்துள்ளன. மூலவர் அனலாடீஸ்வரர் மூலஸ்தானத்தில் லிங்க வடிவில் காட்சி தருகிறார்.

லிங்கமென்பது அருவும் உருவும் கலந்த உருவம். அருகில் சண்டிகேஸ்வரர் சந்நதி உள்ளது. அம்மன் சந்நதியில் திரிபுரசுந்தரி எனும் திருநாமத்தோடு அருள்பாலிக்கிறாள். முன்னே யாகக் குண்டம் எனும் ஈஸ்வர தீர்த்தம் உள்ளது. சுவாமி, அம்மன், விநாயகர், பஞ்சாபகேசர், சுப்ரமணியர், தண்டபாணி ஆகிய மூர்த்திகளின் கோயில்களுக்குத் தனித்தனியே விமானங்கள் உள்ளன. தலவிருட்சம் வில்வமரம். அனலாடீஸ்வரர் என்பதற்கு வடமொழியில் அக்னிநர்த்தீஸ்வரர் என அழைக்கப்படுகிறது.

பல முனிவர்களின் வேண்டுகோளை ஏற்று சிவபெருமான் திரிபுர சம்ஹாரம் செய்யும் பொருட்டு இப்பக்கம் வந்த போது, பிரம்மனான நான்முகன் செய்த யாகக் குண்டத்தில் - அக்னிக் குண்டத்தில் சிவபெருமான் நர்த்தனம் ஆடியதால் அனலாடீஸ்வரர் என்று வழங்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. அந்த யாகக் குண்டமே தற்போது அம்மனுக்கு முன்பாக ஈஸ்வரி தீர்த்தமாக அமைந்துள்ளதால் இன்றும்  அம்மனைத் தரிசிப்போருக்கு உடலுக்கும், உள்ளத்திற்கும் குளிர்ச்சியை அளித்துக்கொண்டிருக்கிறது.

சிவபெருமான் செய்த அட்டவீரட்டங்களில் திரிபுரதகனம் ஒன்று. இது திருவதிகைத் தலத்தில் நடந்ததாகக் கூறுவர். இதை ஆன்றோர்கள் பல பாடல்களில் பாடியிருக்கிறார்கள். இதன் அடையாளமாக இக்கோவிலில் திரிபுர சம்ஹார உற்சவ மூர்த்தி இடது கை வில்லை வளைப்பது போலவும், வலது கை விரல் அம்பு விடுவது போலவும் காட்சியளிக்கிறார்.

- எஸ். ப்ரதீபா