கவிதைக்காரர்கள் வீதி



எல்லோரையும் போலத்தான்
நானும் போய்க்கொண்டிருந்தேன்
அந்த பிரதான சாலை நெரிசலில்
பாலம் மராமத்து என
திருப்பி விடப்பட்டேன்
அதுவரை போகாத



அந்த சிறு சாலையில்
எல்லோரையும் போலத்தான்
நானும் போய்க்கொண்டிருந்தேன்
நெருக்கமான வீடுகள்
நிழல் இருந்தது
பாதையெங்கும் விளையாட்டுப் பிள்ளைகள்
தெருவோர குழாய் நீரில்
அம்மணமாய் ஆட்டம் போடும்
அராத்து சிறுவர்கள்
சீவிய மாங்காய், கொடுக்காப்புளி
சில்லரைக்கே வாங்கலாம்  
வாடகை இல்லாத வாசல் கடைகளில்
வீட்டுத் திண்ணைகளில்
தாயக்கட்டை குறைந்து
செஸ் போர்டு ஆக்கிரமித்திருக்கிறது
‘பால் ஐஸ்’, ‘கப் ஐஸ்’ என கூவியும்
பாம் பாம்  ஒலிப்பானுடன்
சைக்கிளில் விற்கப்படுகிறது
சாமானியனின் குளிர்ச்சி
சிறியதொரு வாய்க்கால் பாலம்
குதித்தும் நீந்தியும்
குதூகலமாய் விடுமுறையில் சிறுவர்கள்
வீட்டில் தொலைக்காட்சி பாருங்கள்
என விட்டு வந்த என் குழந்தைகள்
எண்ணி குற்றவுணர்வு கொண்டு
கூட்டி வந்து ஆட்டம் போட்டேன்
அந்த வாய்க்காலில்...
நானும் வயது தொலைத்தேன்!
அது சரி...
எல்லோரையும் போலத்தான்
நானும் போய்க்கொண்டிருந்தேன்
அந்த பிரதான சாலை நெரிசலில்
எங்கே போனேன்...
எதற்குப் போனேன்..?

ஆதி.சரவணன்