சேல்ஸ்மேன் இல்லாத கடை!‘வியாபாரத்தில் உஷாராக இருக்க வேண்டும். கொஞ்சம் அசந்தாலும் ஏமாற்றி விடுவார்கள்’ என்றெல்லாம் பலரும் பயமுறுத்துவதுண்டு. ஆனால், சென்னையில் கடைக்காரரே இல்லாமல் நம்பிக்கையை மட்டுமே மூலதனமாகக் கொண்டு ஒரு கடை இயங்கி வருகிறது. அதுவும், லாபகரமாக! ‘டிரஸ்ட் ஷாப்’ என்றே பெயரிடப்பட்டிருக்கும் அந்தக் கடையை ஆராயக் கிளம்பினோம்!சென்னையின் சாந்தோம் கடற்கரையை ஒட்டி ராணி மெய்யம்மை டவர்ஸ் எனும் காஸ்ட்லி அபார்ட்மென்டின் உள்ளே இருக்கிறது இந்த டிரஸ்ட் ஷாப். கடை என்றால் பெரிய இடமோ, ரேக்குகளோ கல்லாப்பெட்டியோ இல்லை. ஒரே ஒரு ஃப்ரிட்ஜ். அதற்குள் ரெடிமேட் இட்லி மாவு, சப்பாத்தி, பரோட்டா போன்ற உணவுப் பொருட்கள் உள்ளன. ஃப்ரிட்ஜ் கதவில் ஒரு உண்டியல் இணைக்கப்பட்டிருக்கிறது. நாம் எடுக்கும் பொருளின் விலையைப் பார்த்து, அந்தத் தொகையை நாமே உண்டியலுக்குள் போட்டுவிட வேண்டியதுதான்.

கிட்டத்தட்ட ஏ.டி.எம் போல இந்த ஃப்ரிட்ஜ் தினம் ஒருமுறை நிறைக்கப்படுகிறது. உண்டியல் க்ளியர் செய்யப்படுகிறது. இப்படி ஒரு கடையை உருவாக்கியது, ‘ஐ.டி ஃபிரஷ் ஃபுட்ஸ்’ எனும் நிறுவனம்.  கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட நாசர், முஸ்தஃபா, ஜாஃபர், சம்சு மற்றும் நவ்ஷாத் என்ற ஐந்து உறவுக்கார இளைஞர்கள் இணைந்து 2006ல் பெங்களூருவில் துவங்கிய நிறுவனம் இது. இதன் தென்னக இயக்குனரான முஜிப் ரகுமான் மற்ற விளக்கங்களைச் சொல்கிறார்...

‘‘ஆரம்பத்தில் இதன் உரிமையாளர்களில் நாசர் மட்டும்தான் பெங்களூருவில் ஒரு சின்ன மளிகைக் கடையை வைத்து நடத்திக்கொண்டிருந்தார். அதனோடு ஒரு சிறு இடம் எடுத்து ஒரு கிரைண்டரை மட்டும் வைத்துக்கொண்டு, ருசியான இட்லி மற்றும் தோசை மாவு அரைத்து விற்றார். வியாபாரம் சூடு பிடிக்கவே, ‘அதையே பாக்கெட்டுகளாக அடைத்து விநியோகித்தால் என்ன’ என்று யோசனை வந்தது. அப்போது ஐ.டி படித்து நல்ல வேலையில் இருந்த முஸ்தஃபாவும் அவரோடு இணைந்துகொண்டார். ‘ஐ.டி ஃபிரஷ் ஃபுட்’ எனும் பெயரிலேயே இதை ஒரு பிராண்டாக உருவாக்கி பிஸினஸைத் துவக்கினார்கள்.

ஆரம்பத்தில் பெங்களூருவில் இருந்த சில கடைகளுக்கு மட்டும் விநியோகித்தார்கள். இப்போது பெங்களூருவைத் தாண்டி மற்ற தென்னிந்திய நகரங்களுக்கும் இது விரிவடைந்திருக்கிறது. எங்கள் பொருட்களில் நம்பிக்கை வைத்து வாங்கும் நுகர்வோர்களுக்கு மேலும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் சில வருடங்களுக்கு முன் ‘டிரஸ்ட் ஷாப்’ என்ற இந்த ஐடியா உருவாக்கப்பட்டது. நகரங்களில் உள்ள பெரிய அபார்ட்மென்ட்கள், கார்ப்பரேட் அலுவலகங்கள் போன்றவைதான் எங்களின் இலக்கு.

அங்கே ஒரு ஃப்ரிட்ஜைக் கொண்டு போய் வைத்துவிடுவோம். அதில் இட்லி மாவு, ரெடிமேட் பரோட்டா உட்பட திடீர் உணவுக்குத் தேவையான எங்கள் தயாரிப்புகளை அடுக்கி வைப்போம். தேவைப்படுகிறவர்கள் எடுத்துக் கொண்டு, அதிலேயே இருக்கும் உண்டியலுக்குள் பணத்தைப் போட்டு விடலாம். ஒருவேளை அப்போது அவர்களிடம் பணம் இல்லை என்றாலோ குறைவாக பணம் இருந்தாலோ பொருட்களை மட்டும் எடுத்துச் செல்லலாம்.

அதன்பின் அந்தப் பக்கம் வரும்போது காசை உண்டியலில் போட்டால் போதும். நடு ராத்திரி வேளையிலும் பசியைப் போக்க இப்படி ஒரு கடை இருக்கிறதே என்ற நன்றி உணர்வைத்தான் கஸ்டமர்களிடம் பார்க்க முடிகிறதே தவிர, இதுவரை யாரும் உண்டியலில் பணம் போடாமல் ஏமாற்றியதும் இல்லை. எங்களுக்கு நஷ்டம் வந்ததும் இல்லை!’’ என்கிறார் அவர் பாஸிட்டிவாக!

பெங்களூருவில் இருபதுக்கும் மேற்பட்ட டிரஸ்ட் ஷாப்களை இவர்கள் வைத்திருக்கிறார்கள். விரைவில் அதே அளவுக்கு இங்கேயும் திறக்கப் போகிறார்களாம். இவங்க இவ்வளவு சொல்றதைப் பார்த்தா, ஒருவேளை நம்ம ஊரு நல்ல ஊருதானோ! தேவைப்படுகிறவர்கள் உண்டியலுக்குள் பணத்தைப் போட்டு விடலாம். எடுத்துக்கொண்டு, அதிலேயே இருக்கும்

- டி.ரஞ்சித்
படங்கள்: ஆர்.சி.எஸ்