ரகசிய வீதிகள்
அட்டகாசத் தொடர்
சுபா ஓவியம் : அரஸ்
ஜார்ஜ் கண் திறந்துவிட்டான் என்று மருத்துவமனையிலிருந்து அழைப்பு வந்ததும், இன்ஸ்பெக்டர் துரை அரசன் பரபரவென்று சில வேலைகள் செய்தார். ‘‘ஜார்ஜைப் பத்தி கெடைச்ச எல்லாத் தகவலையும் எடுத்துக்கிட்டு நீயும் என்கூட வா...’’ என்று சப்-இன்ஸ்பெக்டரிடம் சொன்னார். ‘‘யோவ், அவன் திரும்ப எப்ப பேசுவானோ தெரியாது...

அவன் சொல்றதை எல்லாம் பதிவு பண்ணி எடுத்திட்டு வரணும். டிஜிட்டல் ரெக்கார்டர் இருக்கா..?’’ என்று கான்ஸ்டபிளிடம் விசாரித்தார். ‘‘இல்ல சார்... தேவைன்னு கோரிக்கை எழுதி வாங்கிரலாம் சார்!’’ இன்ஸ்பெக்டர் துரை அரசன் அவரை முறைத்த முறைப்பிலேயே, தன் யோசனை கேவலமாயிருக்கிறது என்று கான்ஸ்டபிள் புரிந்துகொண்டார். “என் போன்லயே ரெக்கார்ட் பண்ண முடியும் சார்...” என்று சப்-இன்ஸ்பெக்டர் சொன்னதும், துரை அரசன் முகத்தில் புன்னகை விரிந்தது.
அரசாங்க மருத்துவமனை. ஜார்ஜின் அறைக்குக் காவல் இருந்த கான்ஸ்டபிள், போனில் வெகு பணிவாகப் பேசினார். “இல்லீங்கய்யா... டாக்டர், நர்ஸ் யாரும் உள்ள இல்லீங்கய்யா... சரிங்கய்யா!” என்றபடி அந்த அறைக்குள் நுழைந்தார். கட்டிலில் கண்மூடிப் படுத்திருந்த ஜார்ஜை நெருங்கினார். பதினைந்துக்கும் மேற்பட்ட தையல்கள் போடப்பட்டு, அவன் கழுத்தில் மடிப்பு மடிப்பாக வெள்ளைத்துணி சுற்றப்பட்டிருந்தது. மூச்சு விடுவதற்கு வசதியாக ஆக்ஸிஜன் முகமூடி பொருத்தப்பட்டிருந்தது.
உள்ளே வந்த கான்ஸ்டபிள், ஜார்ஜின் கன்னத்தில் நான்கு விரல்களால் மெல்லத் தட்டினார். ஜார்ஜ் கண்களைத் திறந்து பார்த்தான். “உனக்குத்தான் போன்...” என்று தான் கொண்டுவந்த போனை ஜார்ஜின் காதில் வைத்தார். எதிர் முனையில் இருந்தவர் பேசப் பேச, கண்களை மூடிக்கொண்டு, “ம்ம்... ஓகே... சரி...” என்ற வார்த்தைகளை மட்டுமே குரலெழாமல் உதிர்த்தான் ஜார்ஜ்.
அவன் கண்களைத் திறந்து, பேசி முடித்துவிட்டதாக சைகை செய்ததும், கான்ஸ்டபிள் போனை விலக்கினார். “அய்யா... இல்லய்யா... நைட்டு வேற ஒருத்தர் வருவாரு. அது ஒண்ணும் பிரச்னை இல்ல... ‘நாளைக்கு வர முடியாது, அதனால நைட் டியூட்டியும் நானே பாக்கறேன்’னு கேட்டுக்கறேன்... கட் பண்ணிடட்டுமா அய்யா..?” மறுமுனை அனுமதித்ததும், கான்ஸ்டபிள் போன் தொடர்பைத் துண்டித்தார். விஜய்யின் வீடு.
லேப்டாப்பில் எதையோ தட்டிக்கொண்டிருந்த விஜய்யின் எதிரில் காபியைக் கொண்டுவந்து வைத்தாள் மரகதம். அவன் தலையை ஆறுதலாக வருடிக்கொடுத்தாள். “வேலைக்குப் போற நாள்ல மூஞ்சில தண்ணியடிச்சு எழுப்பற வரைக்கும் தூங்கிட்டு இருப்ப! இப்ப லீவுலதானே இருக்க... நிம்மதியாத் தூங்க வேண்டியதுதானே..? காலைல அஞ்சு மணிக்கே எழுந்து உலாத்த ஆரம்பிக்கற..?”
“ஞாயித்துக்கெழமைகூட ஆபீஸ் போய்ப் பழகினவன்மா நான்... சும்மா உக்காரச் சொன்னா, உயிர் போகுது!” “கால்ல சுடுதண்ணிய ஊத்திக்கிட்டது போல ஓடிட்டிருந்த... இப்ப உனக்குன்னு நேரம் கெடைச்சிருக்கு... உனக்குப் பிடிச்ச புஸ்தகம் படி... சினிமா பாரு... கேமராவை எடுத்துட்டுப் போய் ஆசைப்பட்டதை படம் பிடி! ஏன், எனக்குக்கூட கிச்சன்ல ஹெல்ப் பண்ணலாமே நீ..? கல்யாணத்துக்கு முன்னால சமையலும் கத்துக்கிட்டா மாதிரி இருக்கும்...” என்று கண்ணடித்தாள், மரகதம்.
ஆனால், அவளுடைய நகைச்சுவை விஜய்யிடம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. அவன் சட்டென தலைநிமிர்ந்து “எவ்வளவும்மா சேர்த்து வெச்சிருக்க..?” என்று கேட்டான். “ஏன்டா..?” “ஒருவேளை என்னை வேலைய விட்டுத் தூக்கிட்டா, எத்தனை நாளைக்கும்மா நம்மால சமாளிக்க முடியும்..?” “டேய்! லீவுல போகச் சொன்னதுக்கே ஏன் பயப்படற..? உன்னைலாம் வேலைலேர்ந்து தூக்க உன் முதலாளிக்கு மனசு வராது. அப்படியே தூக்கினாலும், மத்த சேனல்கள்ல உன்னை அள்ளிப்பாங்க... கவலைப்படாத!”
“அடிக்கடி போலீஸ் வந்தா, யாராயிருந்தாலும் யோசிப்பாங்கம்மா! செய்யாத தப்புக்கு துரத்துதுனு நெனைக்க மாட்டாங்கம்மா...” எப்போதும் உற்சாகமாகவே பார்த்திருந்த மகனை இவ்வளவு கவலையுடன் மரகதம் பார்த்ததேயில்லை. அவளையறியாமல் கண்கள் கலங்கின. “பொட்டிக்கடை வெச்சுக்கூட பொழைச்சுக்க முடியும். என் உடம்புல தெம்பு இருக்கு... பத்து வீட்ல வேலை செஞ்சு உனக்கு சோறு போட எனக்கு வக்கிருக்கு...” என்றாள்.
“கல்யாணியை கூடப் பொறக்காத தங்கையாதான்மா நெனைச்சு நான் பழகினேன். நீ என்னை நம்பற இல்லம்மா..?” “என்னடா கேள்வி இது... நான் எப்படா உன்னை சந்தேகப்பட்டேன்..?” “நந்தினிகூட என்னை சந்தேகமாப் பாக்கறதைத் தாங்க முடியலை...” “சீச்சீ! அவளுக்கு உன்மேல சந்தேகம் இல்லடா... நந்தினி உம்மேல வெச்சிருக்கறது உயிருக்குயிரான ஆசை. பொம்பிளைங்களுக்கு அடிப்படைல இருக்கற பயம் இது.
ஒருத்தரைப் பிடிச்சிட்டா, அன்பையும், பாசத்தையும் மிச்சம் வெக்காம கொட்டறவங்க அவங்கதான..? அந்த உரிமை தனக்கு மட்டுமே வேணும்னு அவங்களுக்குப் பேராசை... அதை யாராவது தட்டிப் பறிச்சுருவாங்களோனு சதா பயம்! தனக்குச் சொந்தமானதை வேற யாரும் உரிமை கொண்டாடறதை ஒரு பொண்ணு விரும்பறதில்ல... அதனாலதான மாமியார் மருமகள் சண்டையே வருது..?”
விஜய் உலர்ந்த புன்னகையை பதிலாகக் கொடுத்தான். அவன் லேப்டாப்பில் ‘டிடிங்’ என்று ஓர் ஒலி. புதிதாக மின்னஞ்சல் வந்திருப்பதை அறிவிக்கும் ஒலி. மெயில்பாக்ஸைத் திறந்து பார்த்தான். அவனுடைய எம்.டி. கிரிதரிடமிருந்து வந்திருந்தது. மின்னஞ்சலைத் திறந்தான். வந்திருந்த செய்தி அவனை வெகுவாகக் குழப்பியது. அரசு மருத்துவமனை. இன்ஸ்பெக்டர் துரை அரசனுடன் நடந்துகொண்டே மருத்துவர் பேசினார்: “ஜார்ஜ் ரொம்ப பலவீனமா இருக்கான்! ஆக்ஸிஜன் வெக்க வேண்டியிருக்கு... கவனமாப் பாத்துக்க வேண்டியிருக்கு... நெறைய கேள்வி கேட்டு தொந்தரவு பண்ணாதீங்க...”
“அவசியமானதுதான் கேப்பேன், டாக்டர்...” “அதுக்கில்ல இன்ஸ்பெக்டர்! வேற ஒருத்தனா இருந்தா, இத்தனை ரத்தம் இழந்தப்புறம், பொழைச்சிருக்கவே வாய்ப்பில்ல. இவன் திடகாத்திரமா இருக்கான். உயிர் வாழணும்ங்கற போராட்டத்தை இவன் உடம்பு விட்டுக்கொடுக்கவே இல்லை. அதுக்காக நாம பொறுப்பில்லாம அவனை பலவீனமாக்கிடக் கூடாதில்ல..?” என்று மருத்துவர் சொன்னதும், துரை அரசன் எரிச்சலானார்.
“நான் என்ன அவன்கிட்ட அரிசி வெலை, பருப்பு வெலை பத்திக் கேக்கவா வந்திருக்கேன்..? நம்ம கோயில்ல பல நூற்றாண்டா பாதுகாத்த ஒரு நடராஜர் சிலை திருடு போயிருக்கு. அப்ப ரெண்டு, இப்ப ரெண்டுனு நாலு உயிர் போயிருக்கு... அதுல இவனுக்கு என்ன தொடர்புனு தெரிஞ்சாத்தான நாங்க மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க முடியும்..!”
மருத்துவர் தோள்களைக் குலுக்கினார். “எச்சரிக்க வேண்டியது என் கடமை...” “எனக்கும் என் லிமிட் தெரியும் டாக்டர்! நீங்க நெனைச்சா என்னை இப்படியே திருப்பி அனுப்ப முடியும்... ஆனா, செய்யல! நாம ரெண்டு பேரும் அவங்கவங்க கடமையைத்தான் செய்யறோம். எதையும் மனசுல வெச்சுக்காதீங்க...” என்று புன்னகைத்து அவரை சுலபமாக சமாதானம் செய்தார், துரை அரசன். அந்த அறை வாசலில் இருந்த கான்ஸ்டபிள் எழுந்து சல்யூட் அடித்தார்.
“நான் கூப்பிடாம யாரும் உள்ள வராமப் பாத்துக்கய்யா...” என்றார், துரை அரசன். “யெஸ் சார்!” “நீங்க வாங்க சுகுமார்...” என்று சப்-இன்ஸ்பெக்டரை அழைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தார், இன்ஸ்பெக்டர் துரை அரசன். இரண்டு மூன்று முயற்சிகளுக்குப் பிறகு ஜார்ஜ் இமைகளைத் திறந்தான். தன்னை அறிமுகம் செய்துகொண்டு, ஒவ்வொரு கேள்வியாக உதிர்த்தார், இன்ஸ்பெக்டர். ஜார்ஜ் பேசியபோது பேட்டரி தீர்ந்துபோன ரேடியோ போல் வெகு ஆழத்திலிருந்து அவன் குரல் வந்தது. பல சந்தர்ப்பங்களில் அவனுடைய உதடுகளுக்கருகில் தன் காதைக் கொண்டுபோய் வார்த்தைகளைக் கேட்டறிய வேண்டியிருந்தது.
சப்-இன்ஸ்பெக்டர் கொண்டுவந்திருந்த போன் மூலம் அவன் சொல்லச் சொல்ல அதைப் பதிவு செய்தார், இன்ஸ்பெக்டர் துரை அரசன். தன் நோட் புத்தகத்திலும் குறிப்புகள் எடுத்துக்கொண்டார். அவ்வப்போது, ஜார்ஜ் மிகவும் களைத்துக் கண்களை மூடினான். சில நிமிட இடைவெளி கொடுத்துதான் மீண்டும் பேசினான். அவன் சொன்ன வாக்கியங்களில் நடுவில் பல வார்த்தைகள் விடுபட்டிருந்தன. அவற்றையும் சேர்த்து துரை அரசன் ஒரு காகிதத்தில் தெளிவாக எழுதினார்.
“ஜார்ஜ்... நீ கொடுத்த வாக்குமூலத்தை இப்ப படிச்சுக் காட்டறேன். கரெக்டான்னு சொல்லு!” துரை அரசன் தான் எழுதியதை சற்றே உரத்த குரலில் வாய்விட்டுப் படித்தார்: “என் பேரு ஜார்ஜ். நான் அமெரிக்கக் குடிமகன். பாண்டிச்சேரியில தனியா வசிக்கிறேன்.. நீங்க விசாரிக்கற குற்றம் தொடர்பா முக்கியமான ஒரு விஷயத்தை உங்ககிட்ட பகிர்ந்துக்கறேன்..
இது எல்லாத்துக்கும் பின்னணில இருக்கறவன் விஜய். கே.ஜி டி.வில வேலை பார்க்கறவன். நான் கோயில்கள்லேர்ந்து சில சிலைகளைத் திருடி, அந்த சிலைகளை அமெரிக்கால இருக்கற சில பேருக்கு விக்கற புரோக்கர். உலகத்துல பெரிய பணக்காரங்க சில பேர் இருக்காங்க. அவங்களுக்கு பங்களா, சொத்து, சுகம் எல்லாம் சேர்ந்துரும்... அப்புறமும் நிக்காம பணம் வந்து குவியும்!
அதை வெச்சுக்கிட்டு என்ன செய்யறதுன்னு தெரியாம, தனியா தனக்குனு ஒரு மியூசியம் ஆரம்பிப்பாங்க... ஒரிஜினல் பெயின்டிங், ஒரிஜினல் சிற்பம்னு சேர்க்க ஆசைப்படுவாங்க.. அதுக்காக உலகம் பூரா வேட்டையாடுவாங்க... விலையைப் பத்தி யோசிக்காம வாங்குவாங்க! இந்தியாவைப் பொறுத்தவரைக்கும், ஓவியங்களைவிட இங்க இருக்கற புராதன சிற்பங்களுக்கும், சிலைகளுக்கும், வெளிநாட்டுல பெரிய மரியாதை உண்டு.
விஜய் அந்த மாதிரி சில சிலைகளை எனக்குக் காட்டிக் குடுத்திருக்கான். அதை எப்படி திருடணும்னு நான் திட்டமிடுவேன். கூட்டாளிங்களோட சேர்ந்து கொள்ளையடிச்சு, இந்தப் பணக்காரங்ககிட்ட பெரிய விலைக்கு வித்துடுவேன்.. விஜய்தான் அரவமணிநல்லூர் நடராஜர் பத்தியும் எனக்குச் சொன்னான். அதைக் கொள்ளையடிக்க ஒரு நாளை நான் தேர்ந்தெடுத்தேன். அன்னிக்கு கூடுதலா இன்னொரு வேலையும் எங்களை செய்யச் சொன்னான் விஜய்.
அவன்கூட வேலை செய்யற ஒரு பொண்ணுக்கும் அவனுக்கும் கள்ளத் தொடர்பு இருந்திருக்கு. ‘அதை வெச்சு அவ கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி மிரட்டிட்டு இருக்கா, அவளையும் தீர்த்துக் கட்டணும்’னு சொல்லியிருந்தான்.. நாங்க அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, அவளை வெட்டிட்டு சிலையோட தப்பிச்சிட்டோம். அப்புறம் அந்த நடராஜரை வாங்க ஒரு அமெரிக்கன் வந்தாரு... சிலையைக் கைமாத்த மகாபலிபுரம் கிட்ட சவுக்குத் தோப்பைத் தேர்ந்தெடுத்தோம். பணம் கைக்கு வந்ததும், விஜய் திடீர்னு துப்பாக்கி எடுத்தான்.
அதை வெச்சு மிரட்டி சிலையையும் பிடுங்கிட்டான். விஜய்யோட கூட்டாளி ஒருத்தன் அங்க காத்திருந்தான். அவன்கிட்ட சிலையைக் குடுத்து அனுப்பிட்டான். தடுக்கப் பார்த்த எங்காளுங்க ரெண்டு பேரையும் சுட்டுட்டான். அந்த அமெரிக்கன் உயிர் தப்பிச்சா போறும்னு ஓடிப் போயிட்டாரு... இதெல்லாம் தப்புனு நான் எதிர்த்தேன்... அந்தக் கோபத்துல என்னையும் சுட்டுட்டான்..!”
தான் திக்கித் திக்கிச் சொன்னதைத் தெளிவாக துரை அரசன் எழுதியிருப்பதை ஜார்ஜ் பாராட்டுவதுபோல் ஆமோதித்துத் தலையசைத்தான். ‘எல்லாம் சரியாக இருக்கிறது’ என்று களைப்புடன் இடது கை கட்டைவிரலை உயர்த்திக் காட்டி சைகை செய்தான். அவர் காட்டிய வாக்குமூலத்தின் கீழே கையொப்பமிட்டான். இடதுகை கட்டைவிரலையும் பதித்தான். பின்னர், கண்களை அழுந்த மூடிக்கொண்டான்.
இரவு. அந்த அறை வாசலில் காத்திருந்த கான்ஸ்டபிளின் போன் ஒலித்தது. எடுத்தார். “சொல்லுங்கய்யா...” என்றார். “ஆமாங்கய்யா... நீங்க சொன்ன மாதிரியே இன்ஸ்பெக்டர்கிட்ட ஜார்ஜ் வாக்குமூலம் கொடுத்துட்டாரு!” எதிர்முனைக் குரல் தெளிவாக உத்தரவுகள் கொடுத்தது... “இனிமே ஜார்ஜால எனக்கு உபயோகம் இல்ல! அதனால...” “புரியுதுங்கய்யா!”
எல்லாம் சரியாக இருக்கிறது’ என்று களைப்புடன் சைகை செய்தான் ஜார்ஜ். அவர் காட்டிய வாக்குமூலத்தின் கீழே கையொப்பமிட்டான்.
(தொடரும்...)
|