கல்யாணம் முதல் கிசுகிசு வரை!Open Talk

டோலிவுட்டின் லேட்டஸ்ட் கிசுகிசு, நாகசைதன்யா - சமந்தா ஜோடியின் காதல்தான்! தெலுங்கில் எப்படியோ... தமிழில் ரொம்பவும் மீடியா ஃப்ரெண்ட்லி சமந்தா. கான்ட்ரவர்ஸியாக கேட்டால் மட்டும் 90 பர்சன்ட் புன்னகையும்.. 10 பர்சன்ட் பதிலும் சொல்லி விடுவது சமந்தாவின் பாலிஸி. அந்த புன்னகையில் இருந்தே பதிலை எடுத்துக்கொள்வது நம் பாலிஸி! நம் புகைப்படக்காரருக்கு நிமிடத்துக்கு நூறு முகபாவனைகளோடு போஸ் கொடுத்தபடி பேசினார் சமந்தா.‘‘2016 தமிழ்ல எனக்கு ராசியான வருஷம். சின்ன இடைவெளிக்குப் பிறகு சக்சஸ் கிடைச்சதில் ஹேப்பி. சினிமாவில் என்னை விட அழகான, திறமையான பெண்கள் நிறைய பேர் இருக்காங்க. ஆனாலும் நான் இவ்ளோ பெரிய இடத்துக்கு வந்தது அதிர்ஷ்டம்னு சொல்லலாம். டாப் ஹீரோயின் ஆகுறதுக்கு முன்னாடி, நம்ம கவனம், பயணம் எல்லாம் ‘டாப்ல வரணும்’னு ஒரே எண்ணத்தோட இருக்கும்.

அங்கே வந்த பிறகு அந்த இடத்துக்குப் போட்டி போடக் கூடியவங்க எல்லாருமே தெரிவாங்க. நம்ம இடத்தை வேற யாராவது ரீப்ளேஸ் பண்ணிடுவாங்களோனு ஒரு பயம் தோணும். அது தவிர்க்க முடியாததுதானே!’’ - இயல்பாய் வந்து விழும் வார்த்தைகளில் ஜாக்கிரதை உணர்ச்சி ஏதுமில்லை. மனசு விட்டுப் பேசுவதென்றால் இதுதான்.

‘‘விஜய், சூர்யா, தனுஷ்னு ஹீரோக்களோட ரிப்பீட் பண்றீங்களே... அந்த மேஜிக் என்ன?’’
‘‘கடவுளுக்கு தேங்க்ஸ்! எல்லாமே தானாக அமைஞ்ச வாய்ப்புகள். நான்  ஒரு படத்தை கமிட் பண்றதுக்கு முன்னாடி, அதோட இயக்குநர் யார்? என்ன கதை?  இதைத்தான் முக்கியமா கேக்கறேன். ஹீரோ யார்னு கேட்டதில்ல. எனக்கான கதை அமையும்போது, ஹீரோக்கள் மறுபடி அமையுறது யதேச்சையாகிடுது. உதாரணத்துக்கு, இப்ப கன்னடத்தில் ‘லூசியா’ பண்ணின இயக்குநர் பவன்குமாரோட ‘யூ டர்ன்’ படம் பார்த்தேன். பிடிச்சிருந்தது.

அப்படி ஒரு கதையில நடிக்க ஆசைப்படுறேன். அதைத் தமிழ்ல பண்றதுக்கான பேச்சுவார்த்தை  போயிட்டிருக்கு. அதில் எந்த ஹீரோ கமிட் ஆனாலும் நான் நடிக்க முயற்சி செய்வேன். ஆனா, அந்தப்  படத்தோட ரைட்ஸ் என்கிட்ட இருக்குன்னும், நான் அதைத்  தயாரிக்கப் போறதாவும் இங்கே நியூஸ் வந்திடுச்சு. அதெல்லாம் உண்மையில்லை!’’

‘‘தெலுங்கு ரசிகர்கள்... தமிழ் ரசிகர்கள்... யாரை ரொம்ப பிடிக்கும்?’’
‘‘இது கொஞ்சம் கஷ்டமான கேள்வி. தெலுங்கு ரசிகர்கள் படம் பார்த்ததும் நம்மை தலை மேல தூக்கி வச்சுக் கொண்டாடுவாங்க. பிரமிப்பாங்க. ஆனா, தமிழ் ரசிகர்கள் அப்படியில்ல. ‘மேடம், உங்களோட ஒரு போட்டோ எடுக்கணும்’னு தெலுங்கு ரசிகர்கள் கேட்டால், ‘ஸாரி! பிஸியா இருக்கேன்’னு சொன்னால் கூட, ‘நெக்ஸ்ட் டைம் எடுத்துக்கறேன்’னு சொல்லுவாங்க. ஆனா, தமிழ் ரசிகர்கள்கிட்ட அது செல்லுபடியாகாது. அவங்களோட படம் எடுத்துக்கிட்டா அவங்க சந்தோஷத்தை பார்க்க நல்லாயிருக்கும்!”

‘‘சமூக சேவையிலேயும் ஆர்வமா இறங்கிட்டீங்க போல..?’’
‘‘என்னோட ‘பிரதிக்‌ஷா ஃபவுண்டேஷன்’ தொடங்குறதுக்கு இன்ஸ்பிரேஷனே எங்க அம்மாதான். ரொம்பவே கஷ்டமான குடும்பச் சூழல்ல இருந்து தான் நடிக்க வந்தேன். அந்த சூழல்லயும், யார் வந்து உதவி கேட்டாலும் முகமலர்ச்சியோட முடிஞ்சதைக் கொடுப்பாங்க அம்மா. கடவுள் கொடுத்த இந்த இடத்தில் இருந்துக்கிட்டு உதவி செய்யறதை ஒரு கடமையா நினைக்கறேன்.இதுவரை சுமார் 70 குழந்தைகளின் ஹார்ட்  சர்ஜரிக்கு உதவியிருக்கேன். இதை சுமையா நினைக்காம சந்தோஷமா செய்யிறதுக்குக் காரணம், எங்க அம்மாவோட குணம் எனக்கும் இருக்கறதாலதான். ஃபவுண்டேஷன் தொடங்கி இன்னும் இரண்டு வருஷம் ஆகல. அதனால டொனேஷன் கொடுக்கிறவங்களுக்கு வரிச்சலுகை கிடைக்காது. அந்தக் காரணத்துக்காகவே யார்கிட்டேயும் இதுவரை நன்கொடை கேட்கலை. முழுச் செலவையும் நானேதான் ஏற்கறேன்!’’

‘‘இப்ப ட்விட்டர்ல ‘ட்ரால்ஸ்’னு ஆரம்பிச்சு எல்லாரையும் கலாய்க்கறாங்களே..?’’
‘‘ஆமாங்க! சோஷியல் மீடியா இப்போ ரொம்ப பவர்ஃபுல். ஒரு படத்தையே ஈஸியா அழிச்சிடுறாங்க. சில ட்ரால்ஸ் வேடிக்கையா இருக்கும். சிலவற்றில் ரொம்பவே ஹர்ட் பண்றாங்க. ‘தெறி’ ரிலீஸ் ஆன அன்னிக்கு ஐதராபாத்ல இருந்தேன். சென்னையில என்ன ரெஸ்பான்ஸ்னு தெரிஞ்சுக்க நெட்ல பார்த்தப்ப அதிர்ச்சியா இருந்தது. பல பேர் காலங்காத்தால படத்தையே பார்க்காம ஏதேதோ  எழுதியிருந்தாங்க. எதனால அப்படினு புரிஞ்சுக்க முடியல!’’

‘‘தமிழ்ல அடுத்து..?’’
‘‘தெலுங்கில் நிதினுடன் நடிச்ச, ‘அ... ஆ...’ ரிலீஸ் ஆகியிருக்கு. அதோட புரொமோஷன் வொர்க்ல இருக்கேன். வெற்றிமாறன் சார்  இயக்கத்தில் ‘வடசென்னை’ பண்றேன். ‘தங்கமகன்’ படத்துக்குப் பிறகு மறுபடியும் தனுஷ் காம்பினேஷன். ஸ்லம்ல வசிக்கற பொண்ணு. ரொம்பவும் சவாலான கேரக்டர். கிளாமர் இருக்காது. எனக்கே புது எக்ஸ்பீரியன்ஸா இருக்கும்!’’

‘‘அனுஷ்கா மாதிரி ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள ரோல்கள் எப்போ பண்ணுவீங்க?’’
‘‘எனக்கு அப்படி ரோல்கள் பண்ற ஐடியா இல்ல. படத்துல மெசேஜ் இருந்தா கூட கதையோட போற போக்கில் சொல்ற மாதிரி படங்கள்தான் இப்போதைக்கு என் சாய்ஸ். ஃபெமினிஸம்... அப்புறம் அடிக்க வர்ற மாதிரி நேரடியா மெசேஜ் சொல்ற படங்கள் பண்ண மாட்டேன்!’’

ஆஃப் தி ரெக்கார்ட்!

சமந்தாவிடம் சம் ஷார்ட் கொஸ்டீன்ஸ்...


‘‘உங்களோடது லவ் மேரேஜா இருக்குமா? அரெஞ்ஜ்டு மேரேஜா?’’
‘‘லவ் மேரேஜ்’’

‘‘அரெஞ்ஜ்டு வித் லவ்வா? இல்ல லவ் மேரேஜேவா?’’
‘‘லவ்வே...’’

‘‘அவர் சினிமாவைச் சேர்ந்தவரா?’’
‘‘அது தெரியாது!’’

‘‘அவர் ஆர்.ஏ.சி.யில இருக்காரா? இல்ல கன்ஃபார்மா?’’
‘‘ட்ரெயினுக்கு கேட்கற மாதிரி கேட்குறீங்க. அதுக்கப்புறம் அவர் பேர் இந்த எழுத்தில் இருந்து ஆரம்பிக்குமானெல்லாம் கேப்பீங்க போலிருக்கே!’’

‘‘இண்டஸ்ட்ரீயில இருக்கறவரா? தொழிலதிபரா?’’
‘‘ஐயைய்ய்யோ.....’’

‘‘சரி, எப்போ கல்யாணம்?’’
‘‘அடுத்த வருஷம் இருக்கலாம்!’’

- மை.பாரதிராஜா
அட்டை மற்றும் படங்கள்: புதூர் சரவணன்