தாவரங்களின் என்சைக்ளோபீடியா!



‘‘தமிழ்நாட்டுல ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட தாவரங்கள் இருக்கு. ஆனா,  ஒரு கல்லூரி மாணவன்கிட்ட கேட்டால்கூட ஐந்து மரங்களின் பெயர்களைத் தாண்டி சொல்லத் தெரியல. வாசல்ல பல வருஷங்களா இருக்கறது என்ன மரம்னு தெரியாம வாழறவங்க நிறைய பேரு. அரைக்கீரைக்கும் முளைக்கீரைக்கும் வித்தியாசம் தெரியாம வாங்கி சமைக்கறாங்க பெண்கள். இயற்கையை விட்டு விலகி வெகு தூரம் வந்துட்டோம். அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, மாமா, சித்தப்பா மாதிரி மரங்களும் நமக்கு உறவு.



நம்ம உறவுகளை நாம தெரிஞ்சுக்க வேணாமா? எல்லா தாவரங்களையும், அவை பற்றிய தகவல்களையும் மக்களுக்குப் புரியும்படி தொகுக்கணும்னு குறிக்கோள் வச்சேன். அதன் முதல்படிதான் தாவரங்களைப்பத்தின இத்தனை நூல்கள்!’’ - லட்சியம் சிதறாமல் சிரித்தபடி பேசுகிறார் இரா.பஞ்சவர்ணம். அனைத்துத் தாவரங்கள் பற்றிய ஏ டூ இசட் தகவல்களைத் தொகுத்து வரும் மனிதர்!

தமிழ்நாட்டு தாவரக் களஞ்சியம் ஒன்றை உருவாக்கியிருக்கும் இவருக்கு தாவர என்சைக்ளோபீடியா என்ற பெயரைத் தாராளமாகக் கொடுக்கலாம். இவர் பேசினாலும் எழுதினாலும் தாவரத் தகவல்கள் கொட்டுகின்றன! அரச மரத்துக்கென்றே தனியாக ஒரு நூல் எழுதியிருக்கிறார்.

‘‘அதுல தாவர விளக்கம் ெதாடங்கி, அரச மரத்தை தல மரமாகக் கொண்ட கோயில்கள், ஊர்ப் பெயர்களில் அரச மரம்னு எல்லா தகவலையும் கொடுத்திருக்கேன். அதைப் படிச்சா அரச மரத்தைப் பத்தின ஒரு முழுமை உங்களுக்குக் கிடைக்கும். இதே மாதிரி ஒவ்வொரு தாவரத்தைப் பற்றியும் தனித்தனி புத்தகங்கள் கொண்டு வருவேன்!’’ என நம்பிக்கை விதைக்கும் பஞ்சவர்ணம், பண்ருட்டி நகராட்சியின் முன்னாள் சேர்மன். சிறந்த நிர்வாகத்துக்காக பல்வேறு பாராட்டுகளைப் பெற்றவர்.

‘‘எனக்கு சொந்த ஊரே பண்ருட்டிதான். விவசாயக் குடும்பம். பெருந்தலைவர் காமராசர் மேல ஏற்பட்ட ஈர்ப்பால அரசியலுக்கு வந்தேன். 1996ல த.மா.கா சார்பா நகராட்சி சேர்மன் ஆனேன். நகர் முழுக்க மரங்கள் நடலாம்னு திட்டம் போட்டு, சுமார் நாற்பதாயிரம் மரங்கள் வச்சோம். ஆனா, மக்கள் சரியா பராமரிக்கல. அதனால, ஒரு ஐடியா பண்ணினேன். ஒவ்வொரு வீட்டுலயும் அந்த வீட்டுக் குழந்தையின் நட்சத்திரத்துக்கு ஏத்தபடி எந்த மரத்தை நட்டால் நல்லதுன்னு ஜோதிடப்படி விவரிச்சு, அதையே நட்டோம். குழந்தைகளே தண்ணீர் ஊத்தி வளர்த்தாங்க. அந்த சமயத்துலதான் தாவரங்களப் பத்தி நான் கத்துக்க ஆரம்பிச்சேன்.



2006க்குப் பிறகு அரசியல்ல ஆர்வமில்லாம போச்சு. தாவரங்களே என் வாழ்வை ஆக்கிரமிச்சுச்சு. கொஞ்சம் கொஞ்சமா என் கம்ப்யூட்டர் டேட்டா பேஸ்ல ஒரு தாவரக் களஞ்சியமே உருவாச்சு. இப்போ, இந்தியாவுல உள்ள பதினைஞ்சாயிரம் தாவரங்களைப் பத்தின முழு விவரங்களும் என் டேட்டாவுல இருக்கு. இதுல தமிழ்நாட்டுல மட்டும் 5,767 தாவரங்கள்.

இதை வச்சு, ‘தாவரத் தகவல் மையம்’னு (www.plantinfocentre.com) ஒரு வலைத்தளத்தையும் நடத்திட்டு வர்றேன்!’’ என்கிற பஞ்சவர்ணம், நட்சத்திரங்கள், திசைகள், ராசிகள் மற்றும் நவக்கிரகங்களோடு தாவரங்களுக்கு இருக்கும் தொடர்புகளை வைத்து ‘பிரபஞ்சமும் தாவரங்களும்’ என்றொரு நூலையும் எழுதியிருக்கிறார்.

‘‘சித்த மருத்துவத்தில் மருந்தா இருக்கற தாவரங்கள் பத்தி சங்க இலக்கியங்கள்ல தேடினப்போ ஆச்சரியமாகிப் போச்சு. ஆங்கிலத்துலதான் ஒரு தாவரத்திற்கும் இன்னொரு தாவரத்திற்கும் வித்தியாசம் காண இரட்டைப் பெயர்ல பெயர் சூட்டு இருக்கும். இந்த முறை கூட 1753ம் வருஷம்தான் லத்தீன் மொழியில இருந்து வந்துச்சு. ஆனா, நம்மவங்க ரெண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாடியே ெரட்டைப் பெயர்ல தாவரங்களக் குறிப்பிட்டு சொல்லியிருக்காங்க. குறிஞ்சிப் பாட்டுல ெமாத்தம் 112 தாவரங்கள் வருது. இதுல 36 தாவரங்களுக்கு ரெட்டைப் பெயர் அடைமொழியோடு குறிப்புகள் இருக்கு.

அதைப் பதிவு செஞ்சு ‘குறிஞ்சிப்பாட்டுத் தாவரங்கள்’னு ஒரு நூல் கொண்டு வந்தேன். இப்போ அதை அண்ணாமலைப் பல்கலைக்கழக எம்.ஃபில். மாணவர்களுக்குப் புத்தகமா பரிந்துரை செஞ்சிருக்காங்க. அடுத்து, ‘தொல்காப்பியரின் தொல்காப்பியத் தாவரங்கள்’னு தொகுத்தேன். அதுல 58 தாவரங்கள் வந்தது. அடுத்து, ‘திருமூலரின் திருமந்திரத் தாவரங்கள்’ புத்தகம். அப்புறம்தான் தனியா ஒரு தாவரத்தை எடுத்துக்கிட்டு அதைப் பத்தின ஏ டூ இசட் தகவல்களத் தொகுத்தேன்.

அரச மரத்தைத் தொடர்ந்து, இப்போகரும்பு, பனை மரங்களப் பத்தின புத்தகங்கள் வர இருக்கு. இதுல, பனை மரம் ரொம்ப ஸ்பெஷல். ஆண் பனை, பெண் பனை எப்படியிருக்கும்? அதிலிருந்து வரும் பொருட்களின் பட்டியல், மருத்துவப் பயன்கள்னு நிறைய தகவல்கள அடுக்கியிருக்கேன்!’’ என்கிறவர், உற்சாகம் பொங்கத் தொடர்கிறார். ‘‘இந்த நூல்கள் எழுதின சமயம் ஒரு சிறுதானிய கடைக்குப் போயிருந்தேன். அங்க, வெறும் 25 ரூபாய் மதிப்புள்ள தானியங்களை பாக்கெட்ல அடைச்சு 140 ரூபாய்க்கு வித்துட்டு இருந்தாங்க.

பொதுவா சிறுதானியங்கள் நீர் ஆதாரம் இல்லாத மானாவாரியில, செயற்கை உரம் பயன்படுத்தாமல் விளையுறது. அதை இயற்கைனு வார்த்தை ஜாலம் காட்டி அதிக விலைக்கு வணிகம் செய்யிறது கொடுமை! அதனால சிறுதானிய தாவரங்களையும் மக்கள் தெரிஞ்சுக்கணும்னு நினைச்சேன். உடனே தகவல்கள் சேகரிச்சு, ‘சிறுதானிய தாவரங்கள்’னு ஒரு விழிப்புணர்வு நூலும் எழுதினேன். அதில், தாவரங்கள மட்டும் சொன்னா போதாதுனு அதன் உணவு வகைகள், அதுல சேமியா, அவல், சூப், நூடுல்ஸ் தயாரிக்கிற முறைகள்னு எல்லாத்தையும் சொல்லியிருக்கேன்.

சிறுதானியங்கள எப்படி சாப்பிடணும்னு ஒரு முறை இருக்கு. வரகு அரிசியில பொங்கல் செஞ்சு சாப்பிட்டு சுயநினைவு இழந்த ஒருத்தரைப் பத்தி மருத்துவர் சொன்ன தகவலையும், அதுக்கான காரணத்தையும் கூட அந்தப் புத்தகத்தில் பகிர்ந்திருக்கேன்!’’ என்கிற பஞ்சவர்ணம், இப்போது இன்னும் பதினோரு தாவர நூல்களை எழுதி வருகிறார். இவ்வளவு எழுத சக்தி கொடுப்பது எந்தத் தாவரமோ!

- பேராச்சி கண்ணன்
படங்கள்: புதூர் சரவணன்