இது நம்ம ஆளு விமர்சனம்



சிம்புவின் மூன்றாவது காதலாவது வெற்றியடைந்து கல்யாணம் ஆகுமா என்பதே ‘இது நம்ம ஆளு’! ஐ.டி.யில் வேலை பார்க்கும் சிம்பு விற்கும், திருவையாறில் இருக்கும் நயன்தாராவிற்கும் திருமணம் செய்ய முயற்சிகள் நடக்கிறது. பெண் பார்க்கப் போன இடத்தில் நயன்தாரா சிம்பு வின் பழைய காதலைக் கிளறிப் பார்க்க, ஒர்க் அவுட் ஆகாது எனத் திரும்புகிறார் சிம்பு. கடைசியில் நயன்தாரா கல்யாணத்திற்கு ஓகே சொல்ல, அந்த ‘நிச்சயம்’ திருமணம் வரைக்கும் வந்ததா என்பதே மீதிக் கதை(!).



சிம்பு - நயன்தாரா ஜோடி மட்டும் போதும் என வைத்துக்கொண்டு, தன் அதிகபட்ச திறமையால் விளையாடியிருக்கிறார் டைரக்டர் பாண்டிராஜ். சொந்தப் பட ஷூட்டிங்குக்கே வராத சிம்புவை ைவத்துக்கொண்டு இவ்வளவு தூரம் காண்பிக்க முடிந்ததே பெரிய விஷயம் டைரக்டர் சார்! சிம்பு, நயன்தாரா இருவரும் ஆதிகாலத்தில் காதலித்தார்கள் என்ற ஊரறிந்த சங்கதியை வைத்துக்கொண்டு தலை வலிக்காமல் டயலாக் எழுதி சிரிக்க வைத்ததற்கே உங்களுக்கு பொக்கே!

ஐ.டி பையனாக சிம்புவின் லுக், நடை, உடை எல்லாமே பக்கா! எளிமையில் இளமை மிளிரும் வசனங்களுக்கு பாண்டிராஜ் பொறுப்பேற்கிறார். நயன்தாரா சிம்புவின் போன் நம்பரை ‘வம்பு’ எனப் பதிவது குறும்பு. சுவாரஸ்யமே என்றாலும் ஆளாளுக்கு நிறைய பேசுவதால் வசனங்களின் நெரிசல் சற்று அதிகமாகிறது. ஒரு படத்தை எப்படியெல்லாம் சுலபமாகச் செய்ய முடியும் என்பதற்கு இந்தப் படம்தான் உதாரணம்.

சூரி பேசுவது எல்லாமே கவுன்டர் டயலாக்தான். முதல் காட்சியிலிருந்து கடைசி வரை அதேதான். ஆனால், அந்த சூரியும் இல்லாவிட்டால்... நினைக்கவே பயமாக இருக்கிறது. எதற்கெடுத்தாலும் ‘செருப்பால் அடிப்பேன்’ என நயன்தாரா சொல்வதும், அதை சிம்பு, ‘டீ சாப்பிடப் போகலாம், வர்றீங்களா’ என்பது மாதிரி கேட்டுக்கொண்டே நிற்பதும் ஹீரோயிஸத்திற்கு விடை கொடுப்பு! படத்தின் கேரக்டர்கள் மறந்து போய், படமே சிம்பு-நயனின் பழைய காதலின் புதுப்பித்தலில் நகர்கிறது.

அந்த அளவுக்கு டைரக்டரும் கதையை நம்பாமல் அவர்களை மட்டுமே நம்புகிறார். அந்த நம்பிக்கையும் கெட்டுவிட்டதை கடைசி காட்சியில், ‘ஒரு வழியா உங்களை வச்சு நானும் ஒரு படத்தை எடுத்துட்டேன்’ என பாண்டிராஜே சொல்லிவிடுகிறார்! நயன்தாராவும் இந்தளவு நடித்தால் போதும் எனத் தீர்மானித்துவிட்டார். ஒரு காட்சியில் மிளிரும் அவர், அடுத்த காட்சியில் டமால் என தரை இறங்குகிறார். அவரால்தான் படத்தின் தாமதமே மறைக்கப்படுகிறது.

ஆண்ட்ரியாவிடம் ‘நீங்கள் சிரித்தால் அழகு’ எனச் சொல்லிவிட்டார்கள் போல... சிரித்துக்கொண்டே இருக்கிறார். அவ்வப்போது அவர் எட்டிப் பார்த்தாலும் பெரிய வித்தியாசம் காட்டவில்லை. குறளரசனின் இசையில் பாடல்கள் சொல்லும்படி வரவில்லை. அப்பாவின் பாடல்களை அடிக்கடி போட்டுக் கேளுங்கள் பாஸ். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்! ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியெம் பளிச் ஒளிப்பதிவில் அழகு காட்டுகிறார்.

உப்பு பெறாத விஷயத்திற்கு சண்டை போட்டுக்கொண்டு சம்பந்திகள் தங்கள் மகன், மகள்களுக்கு இவ்வளவு தூரமா பிரச்னை கொடுப்பார்கள்? கொஞ்ச நேரமே வந்து போகும் அந்த டிடெக்டிவ் கேரக்டருக்கு சந்தானம் எதுக்குப்பா? கொஞ்சமும் ஆர்வம் காட்டாத ஹீரோ, பழகிய கதை என இருந்தாலும் இயக்கத்தால் மட்டுமே சமாளிக்கிறது, ‘இது நம்ம ஆளு’!

- குங்குமம் விமர்சனக் குழு