பிட்நா.கோகிலன்

அந்தப் பெரிய நகரத்தின் ஒரு சிறிய சந்தில் இருக்கும் மிகச்சிறிய துணிக்கடைக்குள் செல்லப்பா நுழைந்தார். இருப்பதிலேயே குறைந்த விலையில் ஒரு பேன்ட் பிட்டும், ஒரு ஷர்ட் பிட்டும் வாங்கினார், முன்னூறு ரூபாய் மதிப்பில். செல்லப்பாவின் உறவுக்காரப் பையனுக்குத் திருமணம். ஒரு வாரத்திற்கு முன்னதாகவே மாப்பிள்ளையை வீட்டிற்கு அழைத்து, வாழ்த்தி இந்த டிரஸ்ஸைக் கொடுத்து அனுப்பினார்.மாப்பிள்ளை பிரபாகர் அந்த பேன்ட் பிட்டையும், ஷர்ட் பிட்டையும் டெய்லரிடம் கொடுக்கப் போனான். ‘‘ஸார்! துணி சரியில்லை. தண்ணில போட்டதுமே வசவசனு ஆயிடும். எனக்குப் பிரச்னை இல்லை... தைத்துக் கொடுக்கிறேன். துணியோட விலையை விட தையல் கூலி ரெண்டு மடங்கு ஆகும்!’’ என்றார் டெய்லர்.பிரபாகர் அதை சும்மா வைத்திருக்க வேண்டாமென்று திருமணத்தை முன்னிட்டு அத்தைப் பையனுக்கு கொடுத்தான்.

அவன் துணியைப் பார்த்ததுமே தரத்தைக் கண்டுபிடித்து விட்டான். தைக்காமல் பீரோவில் வைத்து விட்டான். சில மாதங்களுக்குப் பிறகு சித்தப்பாவின் பிறந்த நாள் வரவே, அவருக்குக் கொடுத்தான். அந்த பேன்ட் பிட்டும், ஷர்ட் பிட்டும் இப்படி வேறு சிலரிடமும் சென்றன. செல்லப்பா தன் ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். அதை விழாவாக செய்தார். அப்போது அவருக்கே அந்த பேன்ட் பிட்டும், ஷர்ட் பிட்டும் பரிசாக வந்து சேர்ந்தன.