குட்டிச்சுவர் சிந்தனைகள்



ஆல்தோட்ட பூபதி

ஓவியங்கள்: அரஸ்


எளிதாய் கிடைக்கும் எதற்குமே மதிப்பு இருக்காது என்றால், அதில் முதன்மையானது காதல் என்று சொல்லலாம். கெஞ்சிக் கிடைத்தால்தான் அது காதல்; கேட்டவுடன் கிடைத்தால் அது கைமாத்து. காதெல்லாம் தாகத்துல தவிச்சுக் கிடக்கறப்ப கிடைக்கிற தண்ணி மாதிரி இருக்கணும்; பசி இல்லாத நேரத்துல கேட்காம கிடைக்கிற பன்னீர் மாதிரி இருக்கக்கூடாது. இந்தக் காலத்தில் எளிதாய் காதலன், காதலிகள் கிடைத்து விடுகிறார்கள்; காதல் கிடைப்பதுதான் அரிதாகி வருகிறது.



காதல் தொட்டவுடன் ஷாக்கடிக்கும் கரன்ட் இல்லை; அது கடைசி வரை நெஞ்சுக்குள்ள நெருப்பாய் எரியும் ஒரு உணர்வு. அதற்கு திரி கொளுத்தி தீ வைக்கும் விரல்களைத் தேடித்தான் எடுக்கணும். கண்டவுடன் காதல், முதல் வாரம் பீச் மணல்ல நிற்கணும், ரெண்டாவது வாரம் மண்டப மேடையில நிற்கணும் என்பதுதான் இப்பவெல்லாம் காதல். ஆனால் உண்மைக் காதலோட வெற்றி கல்யாணமெல்லாம் இல்ல... அது கடைசி வரை மறக்க முடியாத, நினைத்தவுடன் சிரிக்கின்ற/இனிக்கின்ற/வலிக்கின்ற நினைவுகளைத் தந்திருக்கணும்!


திகாரிகள்: நள்ளிரவுல டிபன் வாங்கப் போவியா?
மக்கள்: இல்லீங்க, போக மாட்டேன்!
அதிகாரிகள்: நள்ளிரவுல காய்கறி வாங்கப் போவியா?
மக்கள்: அது எப்படிங்க?
அதிகாரிகள்: நள்ளிரவுல நகை வாங்கப் போவியா?
மக்கள்: நான் பகல்லயே போகமாட்டேன்!
அதிகாரிகள்: நள்ளிரவுல துணிமணி வாங்கப் போவியா?
மக்கள்: ச்சேச்சே, போக மாட்டேன்!
அதிகாரிகள்: நள்ளிரவுல மொபைலுக்கு ரீசார்ஜ் பண்ணப் போவியா?
மக்கள்: அட, இல்லங்க... போகமாட்டேன்!
அதிகாரிகள்: நள்ளிரவுல உன் வண்டிக்கு பெட்ரோல், டீசல் போடப் போவியா?
மக்கள்: போக மாட்டேன்!
அதிகாரிகள்: அப்புறம் எதுக்குயா, யாருமே பெட்ரோல் டீசல் போடப் போகாத நள்ளிரவுல  விலைய ஏத்துனா மட்டும் ஓவரா கூவுறீங்க? நாட்டுல அரசாங்கம், பெரிய பெரிய கம்பெனிக்காக நடக்குதா? இல்ல ஒத்தை வோட்டு வச்சிருக்கிற உன்னை மாதிரி ஆளுக்காக நடக்குதா? சுதந்திரம் கூடத்தான் நள்ளிரவுல அறிவிச்சாங்க, நீங்க அப்படியே அதை பயன்படுத்திட்டீங்களா? சொல்ற விலைக்கு பெட்ரோல், டீசல் அடிச்சுட்டு போவியா! அதை விட்டுட்டு...

நங்கள் படித்த பள்ளிக்கூடத்திற்கு எப்போது கடைசியாகப் போனீர்கள்? படிக்கும்போது பள்ளிக்குச் சென்றதை விடுங்கள், படிப்பு முடித்த இத்தனை வருடங்களில் கடைசியாக நீங்கள் படித்த பள்ளிக்கு எப்போது போனீர்கள்? நீங்கள் அமர்ந்திருந்த மரத்தடிகள், சுவாசித்த வகுப்பறைகள், விளையாடிய மைதானங்கள், நடந்த வராண்டாக்கள், பதறிய மணியோசைகள், பார்த்த முதல் கம்ப்யூட்டர், வாங்கிய பரிசுகள், வகுப்பறை வசவுகள், தொடங்கிய இடத்திலேயே முடிந்தாலும் இதயத் துடிப்பை எகிற வைத்த காதல்கள், எதையும் எதிர்பார்க்காத நட்புகள் என எத்தனை எத்தனை நினைவுகள்... எல்லாம் அங்கேயே தங்கி இருக்கின்றன.

ஏதோ ஒரு மின் மயானத்தில் நெருப்பில் வேகும் வரை நெஞ்சை விட்டு நீங்காத நினைவுகள் பலவற்றைப் பிரசவித்தது பள்ளிக்கூடம்.  வாட்டர் கேனில் மிஞ்சிய தண்ணீரை, வீட்டுக்கு போகும் முன் ஆசை ஆசையாய் ஊற்றிய செடிகள் எல்லாம் இன்று மரங்களாய் மாறி நிற்கும் அதிசயத்தை ரசித்திருக்கிறீர்களா? பள்ளி வளாகத்தில் ஏதேனும் ஒரு முறையாவது சிறு விபத்தில் உங்கள் ரத்தம் சிந்தியிருக்கும்; அந்த இடத்தை மீண்டும் கவனித்து இருக்கிறீர்களா? ஒவ்வொரு நாள் பிரேயரிலும் நீங்கள் நின்ற இடத்தில் மீண்டும் ஒரு முறை நின்று பார்த்திருக்கிறீர்களா?

பரிசு கிடைத்ததோ இல்லையோ... ஆனால், பார்வையாளர்கள் இடத்தில் நிற்கும் உங்கள் பெற்றோரை, உங்களுக்குப் பிடித்தமானவர்களைப் பார்த்துக்கொண்டே ஓட்டப்பந்தயத்தில் ஓடிய மைதானத்தில் மீண்டும் ஒரு முறை நடந்து பார்த்திருக்கிறீர்களா?  நாடக வசனங்களை மூன்று மாதம் மனப்பாடம் செய்திருந்தாலும், சரியாக ஆண்டு விழா மேடையில் ஏறி முன்னால் இருக்கும் மக்கள் வெள்ளத்தைப் பார்த்ததும் எல்லாம் மறந்து, வார்த்தைகளை மென்று விழுங்கிய நினைவுகள் பள்ளியின் வாசல் போகும்போதே நினைவுக்கு வரும்.

வகுப்பிலேயே அழகான மாணவியை, உங்கள் நண்பர்களோடு காதலித்த அந்த தத்துப்பித்து நாட்கள் எல்லாம் உங்கள் வகுப்பறை சுவரைத் தொட்டவுடன் நினைவுக்கு வரும். அத்தனை பெரிய பள்ளி வளாகத்தில் நீங்கள் எப்போதும் ஒரே இடத்தில், உங்களுக்கென்ற தனியிடத்தில் சாப்பிடுவீர்களே, அந்த இடத்தில் மீண்டும் ஒரு முறை நின்று இருக்கிறீர்களா? முழு ஆண்டுத் தேர்வு முடிந்தவுடன் பேனாவைத் திறந்து மொத்த இங்க்கையும் அடுத்தவர் சட்டையில் அடித்து விளையாடியபோது, சிந்திய பேனா மையை மனக்கண்ணால் காண்பீர்கள்.

மத்தியான இடைவெளியில் மாங்கா கீற்று விற்ற ஆயாக்கள், ஐஸ் வண்டிக்காரர்கள் எனப் பலரும் மறைந்திருக்கலாம், ஆனாலும் அவர்கள் விரித்த கடைகள் உங்கள் கண் முன்னே விரியும். ஒரு முறை உங்கள் பள்ளிக்கு மீண்டும் செல்லுங்கள்.  ஆட்டோ ஹாரன்கள், பள்ளி விட்ட பின் பள்ளிக்கூட வாசலில் எழும்பும் புழுதி, சத்துணவுக்கூடத்து சாம்பார் வாசனை, பிடித்த மாணவியின் யூனிபார்ம், வகுப்பாசிரியையிடம் போட்டுக் கொடுப்புகள், வகுப்பறைக்கு வெளியே முட்டி தொழுகைகள், முடிக்கப்படாத பேச்சுகள், அவிழ்க்கப்படாத கிசுகிசுக்கள் எனப் பள்ளிக்கூடங்கள் நம்முடைய பல நிகழ்வுகளை சுமந்திருக்கின்றன.

நாம் திரும்பி வருவோம், வந்து பெறுவோம் என இன்னமும் காத்திருக்கின்றன. பள்ளிக்குச் செல்லுங்கள், நினைவுகள் அள்ளி வர மீண்டும் உங்கள் பள்ளிக்குச் செல்லுங்கள். உங்கள் காதல் கடிதம் கிழித்து எறியப்பட்ட இடத்தில் நின்று கொஞ்சம் சிரித்து வரலாம். உங்கள் நண்பனுக்காய் ஒரு பெண்ணிடம் தூது போன இடத்தில் கொஞ்சம் நின்று வரலாம். நீங்கள் அமர்ந்திருந்த அதே பெஞ்சில் மீண்டும் உங்கள் ஆன்மாவை விட்டு வரலாம். பள்ளிக்கூட வாழ்வின் பல சர்க்கரை தருணங்களை மீண்டும் உங்கள் நெஞ்சில் நட்டு வரலாம். மாணவனாய் மீண்டு வராவிட்டாலும், சந்தோஷமானவனாய் திரும்பி வரலாம்.