நியூஸ் வே
* ‘கபாலி’யை முடித்துவிட்டு வரும் பா.ரஞ்சித்திற்காகக் காத்திருக்கிறார் சூர்யா. அவரது ஒன்லைனில் மெய் மறந்துவிட்டார்!
* பெண்ணுரிமைப் போராளிகள் பெண்களையும் விட்டுவைக்க மாட்டார்கள் என்பதற்கு சமீபத்திய உதாரணம், பாலிவுட் நடிகை லிஸா ஹெய்டன். ‘‘திருமணமானால் நான் என் கணவருக்கும் குழந்தைகளுக்கும் சமைத்துப் போடுவேன். என்னுடைய கேரியர்தான் முக்கியம் என பெண்ணியம் பேச மாட்டேன்’’ என சமீபத்தில் அவர் சொன்னதற்கு பெண்கள் மத்தியில் கொந்தளிப்பு எழுந்திருக்கிறது.

* இந்திய கிரிக்கெட்டின் நம்பிக்கை நாயகன் விராட் கோஹ்லி இப்போது பிசினஸ்மேன் அவதாரம் எடுத்திருக்கிறார். ‘யுனிவர்சல் ஸ்போர்ட்ஸ்பிஸ்’ நிறுவனரான அஞ்சனா ரெட்டியுடன் இணைந்து ‘Wrogn’ என்ற பிரத்யேக ஆடை நிறுவனத்தை துவக்கியுள்ளார். ஐதராபாத்தில் முதல் ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுக்க 100 ஷோரூம்கள் திறக்க திட்டமாம். ‘‘டிரஸ் தரும் தன்னம்பிக்கையை வேறு எதுவும் ஒருவருக்குத் தருவதில்லை’’ என்கிறார் கோஹ்லி.
* ‘அரண்மனை 2’, ‘நாயகி’ படங்களைத் தொடர்ந்து ‘மோகினி’யிலும் த்ரிஷா பேயாக நடிக்கிறார். ‘மதுர’ மாதேஷ் இயக்கும் இப்படத்தின் ஷூட்டிங் லண்டனில் தொடங்கியிருக்கிறது.
* அனேகமாக ‘இந்தியன்2’வில் கமல், ஷங்கர் இணைவார்கள் என்றே தெரிகிறது. அதற்கான முடிவெடுப்புக் கூட்டம் லண்டனில் நடக்கிறதாம். அதில் பட்ஜெட், சம்பளம், தயாரிப்புக் காலம் எல்லாம் முடிவாகிவிடும்.
* பாரதிய ஜனதா தலைவர் அமித் ஷா, சமீபத்தில் பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதிக்குப் போனார். அங்கு ஜோகியாபூர் என்ற கிராமத்தில் ஒரு தலித் வீட்டில் அவர் ராகுல் காந்தி ஸ்டைலில் சாப்பிட்டது பலரையும் புருவம் உயர்த்த வைத்தது. கையோடு எடுத்துச் சென்ற மினரல் வாட்டரில் எல்லா பாத்திரங்களையும் கழுவி அவருக்குப் பரிமாறினார்கள். ‘‘இது தேர்தலுக்காக நடத்தப்படும் டிராமா’’ என்றிருக்கிறார் மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ்.

* சிம்பு வெயிட் போட்டுவிட்டதை நண்பர்கள் பலரும் சொல்லியிருக்கிறார்கள். ‘‘ ‘ட்ரிப்பிள் ஏ’ படத்துக்காக (‘அன்பானவன், அறிவானவன், அடக்கமானவன்’) வெயிட் ஏத்தி வச்சிருக்கேன். அது முடிஞ்சதும் குறைச்சிடுவேன் ப்ரோ!’’ எனச் சொல்லிவிட்டாராம்!
* ‘‘தேசிய விருது வாங்கணும்னு லட்சியம் எதுவும் இல்ல. மக்கள் என் படத்தைப் பாராட்டுறாங்க. ரசிகர்களும் ‘ஹன்ஸ்... ஹன்ஸ்’னு உருகுறாங்க. அதையே பெரிய விருதா நினைக்கறேன்’’ என மெல்ட் ஆகிறார் ஹன்சிகா.
* தனது 90வது பிறந்த நாளை முன்னிட்டு ‘வேனிடி ஃபேர்’ இதழுக்கு பிரத்யேகமாக போஸ் கொடுத்திருக்கிறார் பிரிட்டிஷ் மகாராணி இரண்டாம் எலிசபெத். குடும்பத்தினருடன் எடுத்த குரூப் போட்டோக்கள் ஒருபுறம் இருக்க, அவர் செல்லமாக வளர்க்கும் கோர்ஜி இன நாய்கள் நான்குடன் எடுத்த புகைப்படமே அட்டையில் இடம்பெற்றுள்ளது. 67 ஆண்டுகளாக இந்த இன நாய்களை அவர் வளர்க்கிறார். இதில் 14 தலைமுறைகளை அவர் பார்த்துவிட்டாராம்!
* அனுஷ்காவும், ராய்லட்சுமியும் இதுவரை சேர்ந்து நடித்ததில்லை என்றாலும் இருவரும் கர்நாடகாவில் பிறந்தவர்கள். சமீபத்தில் ஒரு பார்ட்டியில் அனுஷ்காவை சந்தித்த ராய்லட்சுமி இதைச் சொல்லி மகிழ... அப்புறமென்ன? செல்ஃபிக்கள் சிறகடித்தன!.
* சாய் பல்லவியோடு ஜோடியாக நடிக்க அத்தனை தமிழ் சினிமா ஹீரோக்களும் ஆசைப்பட, சீட்டு ஜி.வி பிரகாஷுக்கு விழுந்திருக்கிறது!
* ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகராக அமராவதி உருவாகிறது. இந்த நகரைக் கட்டமைக்க நிலம் தந்து உதவிய அத்தனை குடும்பங்களுக்கும் ஒரு சர்ப்ரைஸ் பரிசு கொடுத்திருக்கிறார், மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு. அமராவதியைச் சேர்ந்த மாணவர்கள், இந்தியாவின் எந்த மூலையில் என்ன படித்தாலும், அவர்களின் கல்விக் கட்டணத்தை அரசு செலுத்தப் போகிறது. இதற்காக 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியிருக்கிறார் நாயுடு.
* கல்லூரியில் படித்து வந்தார் லட்சுமி மேனன். இப்போது பல படங்கள் கமிட் ஆகிவிட்டதால் பிரியவே மனமில்லாமல் கல்லூரியிலிருந்து விலகி விட்டார். இனி அஞ்சல்வழியில் மட்டுமே படிப்பாம்!

* சமீப காலத்தில் நிறைய லொகேஷன்களில் படமாக்கப்படும் படம் ‘இருமுகன்’தான். வெளிநாடுகள் மற்றும் லடாக் உட்பட இந்தியாவின் பல பகுதிகளில் ஷூட்டிங் நடக்கிறது.
* ‘காக்கா முட்டை’ மணிகண்டன், விஜய்சேதுபதி நடிக்கும் ‘ஆண்டவன் கட்டளை’யை உடனே எடுத்து முடித்துவிட்டார். இதில் சேதுபதிக்கு சந்தோஷம்.
* மலையாள நடிகர் சுரேஷ் கோபி இப்போது மத்திய அமைச்சர் கனவு காண்கிறார். சமீபத்தில் மாநிலங்களவை உறுப்பினராக அவரை நியமித்தபோது, ‘‘கேரள சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா ஒரே ஒரு இடம் ஜெயித்தால்கூட உங்களுக்கு மத்திய அமைச்சர் பதவி உறுதி’’ என சொல்லப்பட்டதாம். ஒரே ஒருவர் இப்போது அங்கு பாரதிய ஜனதா எம்.எல்.ஏ ஆகிவிட்டார். அவர் புண்ணியத்தில் சுரேஷ் கோபி அமைச்சர் ஆகலாம்.
* விஜய் நடிக்கும் புதுப்படத்திற்கு ‘எங்க வீட்டுப் பிள்ளை’ என எம்.ஜி.ஆர் டைட்டிலை வைக்கிறார்கள். இதற்கு முறையான அனுமதியும் பெறப்போகிறார்களாம்!
* நடிகை ஏஞ்சலினா ஜோலி பேராசிரியர் அவதாரம் எடுத்திருக்கிறார். புகழ்பெற்ற லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் அவரை வருகைதரு பேராசிரியையாக நியமித்திருக்கிறது. பெண்ணுரிமை மற்றும் பெண்களுக்குப் பாதுகாப்பான வாழ்வு தொடர்பாக அவர் வகுப்புகள் எடுக்கப் போகிறார்.
* ‘ஆணழகன்’, ‘கந்தசாமி’, ‘அவ்வை சண்முகி’யில் பிரசாந்த், விக்ரம், கமல் பெண் வேடங்களில் வந்தனர். இப்போது ரொம்ப நாள் கழித்து பெண் வேடத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். அந்தப் படமே ‘ரெமோ’! ‘அவ்வை சண்முகி’ படத்தில் பெண் வேடத்திற்கு வித்தியாசமான குரலில் வாய்ஸ் கொடுப்பார் கமல். அதை மாதிரி இதில் சிவகார்த்தியும் பெண் வாய்ஸில் பேசியிருக்கிறார்.
* ப்ரியாமணி - முஸ்தபா ராஜ் திருமண நிச்சயதார்த்தம் எளிமையான முறையில் பெங்களூருவில் நடந்தது. ‘‘எங்க அப்பாவோட மூத்த சகோதரர் இறந்துட்டார். அதனாலேயே சிம்பிள் நிச்சயதார்த்தம்’’ என்கிற ப்ரியாமணி, திருமணத்திற்குப் பிறகும் நடிப்பைத் தொடர்வாராம்!
* கார்த்தி நடிக்கும் ‘காஸ்மோரா’வில் நயன்தாரா-திவ்யா காம்பினேஷன் சீன்கள் உண்டு. ‘‘எங்க ரெண்டு பேர்ல யாருக்கு முக்கியத்துவம் அதிகம்னு படத்தைப் பார்த்து தெரிஞ்சுக்குங்க. ஆனா, ஒரு சீக்ரெட்... கார்த்தி சார் நிறைய கெட்டப்ல வர்றார்!’’ என்கிறார் திவ்யா.
* செல்வராகவனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ ஒரு ஷெட்யூல் ஷூட் முடிந்து விட்டதால், பிரேக்கில் பெங்களூரு பறந்துவிட்டார் நந்திதா ஸ்வேதா. தமிழில் அவர் ஏற்கனவே முடித்துவிட்ட படங்களின் ரிலீஸ் இன்னும் தள்ளிப்போவதால் பொண்ணுக்கு ஏகப்பட்ட ஃபீலிங்!
* மீண்டும் மேற்கு வங்க முதல்வர் ஆகியிருக்கும் மம்தா பானர்ஜி விரைவில் வாடிகன் போகிறார். அன்னை தெரசாவுக்கு ‘புனிதர்’ பட்டம் வழங்கும் விழாவில் பங்கேற்க அவரை அழைத்திருக்கிறது, தெரசா உருவாக்கிய ‘மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி’ அமைப்பு.
* கே.வி.ஆனந்த் இயக்கத்தில் டி.ஆர்., விஜய்சேதுபதி நடிக்கும் படத்தின் ஷூட் ஜூலையில் தொடங்குகிறது. கும்பகோணத்தில் ‘றெக்க’ படத்தை முடித்துவிட்டு இதில் கலந்துகொள்கிறார் விஜய்சேதுபதி. ‘‘ஹீரோயினும், வில்லனும் இன்னும் முடிவாகவில்லை!’’ என்கிறார் கே.வி.ஆனந்த்.
* அருணாசலப் பிரதேசத்துக்கு சொந்தம் கொண்டாடும் சீனா, அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு வழக்கமான விசா வழங்குவதில்லை. இந்த வழக்கத்தை மாற்றி, மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜுவுக்கு விசா தந்துள்ளது சீனா. ஏற்கனவே ஒருமுறை விசா மறுக்கப்பட்டவர் கிரண்.
* கேரள மாநிலத்தின் போதை மற்றும் மது ஒழிப்புப் பிரசாரத்தின் தூதராக நியமிக்கப்பட்டிருக்கிறார் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர்! கேரளா ப்ளாஸ்டர்ஸ் ஃபுட்பால் கிளப்பின் உரிமையாளர்களில் ஒருவரான சச்சின், முதல்வர் பினராயி விஜயனை சந்தித்தபோது இந்த வேண்டுகோளை வைத்தார் முதல்வர்! உடனடியாக, ஓகே சொல்லிவிட்டார் சச்சின்.
|