ப்ரிஸ்க்ரிப்ஷன் இனி கேபிட்டல் லெட்டரில்தான் எழுத வேண்டும்!



‘‘நான் கொடுத்த லவ் லெட் டரை அந்த மெடிக்கல் ஸ்டோர் பொண்ணுகிட்ட கொடுத்தீங்களா?’’ ‘‘கொடுத்தேன் டாக்டர். வழக்கம் போல நாலு பாராசிட்டமால் மாத்திரையைக் கொடுத்து அனுப்பிட்டாங்க!’’ - டாக்டர்களின் கையெழுத்தைக் கலாய்த்து இதுபோல் லட்சம் ஜோக்குகளாவது வந்திருக்கும். இனி, அந்தக் கதையே கிடையாது என்கிறது தமிழ்நாடு மருத்துவ கவுன்சில்.



சமீபத்தில் ‘டாக்டர்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய விதிகள்’ எனச் சிலவற்றை இது வகுத்திருக்கிறது. அதில் முக்கியமாக, டாக்டர்கள் இனி தெளிவான கேபிட்டல் லெட்டரில்தான் மருந்துகளை எழுதிக் கொடுக்க வேண்டும். ப்ரிஸ்க்ரிப்ஷன் எது, இ.சி.ஜி எது எனத் தெரியாதபடி கிறுக்கக் கூடாது!

கடந்த ஆண்டு இந்திய மருத்துவ கவுன்சில் கொண்டு வந்த சில விதிகளை பல மாநிலங்கள் ஏற்கனவே பின்பற்றத் துவங்கிவிட்டன. அதன் தொடர்ச்சியாக தமிழகமும் இதை நடைமுறைப்படுத்தியுள்ளது. இதில் மாறுவது கையெழுத்து மட்டுமல்ல...

* டாக்டர்கள் தங்கள் மருந்துச் சீட்டுகளில் மருந்துகளின் பிராண்ட் பெயரைக் குறிப்பிடாமல் ஜெனரிக் நேம் எனும் மருத்துவப் பெயரில்தான் எழுதவேண்டும்...
* மருந்தின் அளவு, எப்படி சாப்பிட வேண்டும், எவ்வளவு நாள் சாப்பிட வேண்டும் என்பதையும் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.
* டாக்டரின் பெயர், படிப்பு, பதிவு எண், முகவரி, மருத்துவமனை பெயர், தொலைபேசி எண் போன்ற பல்வேறு தகவல்கள் மருந்துச் சீட்டில் இருக்க வேண்டும்...
* மருந்துச் சீட்டில் மருந்துக்கடைக்காரர் எழுதவும் இடம் இருக்க வேண்டும். ‘எப்போது மருந்து விற்கப்பட்டது’ என்பதை அவர் தனது கடை விவரங்களோடு குறிப்பிட வேண்டும். - இப்படி இன்னும் சில விதிகளையும் வகுத்திருக்கிறது மருத்துவ கவுன்சில். இதனால் ஒரே மருந்தை பல பெயர்களில் அதிக விலைக்கு விற்கும் கொள்ளையைத் தவிர்க்கலாம்;

ஒரு மருந்துச் சீட்டை வைத்துக்கொண்டு விதவிதமான நோய்களுக்கு கை வைத்தியம் பார்ப்பதைத் தடுக்கலாம்; போலி டாக்டர்களை இனம் காணலாம்; அதிமுக்கியமாக, கையெழுத்துப் புரியாமல் மருந்துகள் மாறிப் போகும் ஆபத்தைத் தவிர்க்கலாம் என்று சொல்லப்படுகிறது. நிஜமாகவே இந்த விதிகள் வேலை செய்யுமா?

‘‘சான்ஸே இல்லை. வேரோடிப் போன நோய்க்கு இலைகளில் மருந்து தெளிப்பது போன்றதுதான் இந்த நடவடிக்கை!’’ என அதிரடியாகப் பேசுகிறார் ‘சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்க’த்தின் தலைவரும் மருத்துவருமான ரவீந்திரநாத். ‘‘உண்மையிலேயே மாற்றம் வேண்டுமானால், மருத்துவத் துறை தனியார்மயமாவதை மத்திய அரசும், அதன் பிரிவுகளான மருத்துவக் கவுன்சில்களும் தடுக்க வேண்டும். தனியார் மயத்தால் ஏற்பட்ட முக்கியமான பிரச்னைகளில் ஒன்று, மருந்துகள் டிரேட் நேம் அல்லது பிராண்ட் நேம்களில்... அதாவது பன்னாட்டுக் கம்பெனிகளின் பெயர்களில் விற்கப்படுவது.

டிரேட் நேம்களில் மருந்து விற்கப்படுவதைத் தடை செய்தாலே மருத்துவ உலகின் பிரச்னைகளில் 99 சதவீதம் தீர்ந்துவிடும். ஆனால், நம் அரசு தொடர்ந்து பன்னாட்டுக் கம்பெனிகளின் நலனுக்காகவும் அவை கொடுக்கும் கொள்ளை லாபங்களுக்காகவும் தொடர்ந்து பாடுபடுவதால், கவுன்சிலின் இந்த விதிகள் டாக்டர்களைப் பெரிதும் கட்டுப்படுத்தாது என்றே நினைக்கிறேன்!

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அரசு சார்பிலான மருத்துவம்தான் முன்னணியில் இருக்க வேண்டும். ஆனால், கடந்த நிதி ஆண்டில், பொதுமருத்துவத்துக்கான பட்ஜெட்டில் சுமார் 16 ஆயிரம் கோடி ரூபாயை அரசு குறைத்திருக்கிறது. காரணம், தனியார் மருத்துவத்துக்கு வழிவிடுவதுதான்.



அரசே மக்களுக்குத் தேவையான மருந்துகளைத் தயாரித்து வந்த இந்துஸ்தான் ஆண்டிபயாடிக்ஸ் என்ற மருந்து உற்பத்தி கம்பெனியை மூடியிருக்கிறார்கள். இப்படி இருக்க, மருந்துகளை கேபிட்டல் எழுத்துக்களில் எழுதுவதால் மட்டுமே எப்படி மருந்துக்கொள்ளை முடிவுக்கு வரும்?’’ என்கிறார் அவர்.

‘‘மருந்துகளை ஜெனரிக் பெயரில்தான் எழுத வேண்டும் என்ற விதி இதை மாற்றாதா?’’ - இதற்கும் விரிவான பதில் வைத்திருக்கிறார் மருத்துவர் ரவீந்திரநாத். ‘‘மருந்துப் பெயர்களில் பிராண்ட் பெயர், ஜெனரிக் பெயர் என இரண்டையும் தாண்டி ஃபார்மகாலஜிகல் (pharmacological) பெயர் என இன்னொன்றும் உள்ளது. பிராண்ட் பெயர் என்றால் உங்களுக்கே தெரியும்... பன்னாட்டு மருந்துக் கம்பெனிகள் விற்பனைக்காக வைத்திருக்கும் கவர்ச்சிப் பெயர்கள் அவை.

ஜெனரிக் பெயர் என்பதும் கிட்டத்தட்ட விற்பனைப் பெயர்தான். ஒரு நிறுவனம் மட்டுமே தயாரித்து வந்த குறிப்பிட்ட மருந்து, அதற்கான காப்புரிமை முடிந்த பிறகு பல்வேறு நிறுவனங்களாலும் தயாரிக்கப்படும். பிராண்ட் பெயரில் உள்ள மருந்தைவிட ஜெனரிக் பெயரில் உள்ள மருந்துகளின் விலை ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தாலும் மலிவான விலையெல்லாம் இல்லை.

அடுத்து, ஃபார்மகாலஜிகல் பெயர். இதனை ‘மருந்தியல் பெயர்’ எனலாம். அதாவது, ஒரு மருந்தின் மூலக்கூறை அடிப்படையாகக் கொண்ட பாராசிட்டமால், அமாக்‌ஸிலின் போன்ற பெயர்கள். ஒரு மருந்தை ஃபார்மகாலஜிகல் பெயரில் குறிப்பிடும்போதுதான் மருந்தின் பெயரால் அடிக்கப்படும் கொள்ளையை முழுவதுமாக நிறுத்த முடியும். ஆனால், கவுன்சில் இந்தப் பெயரைக் குறிப்பிடாததை வைத்தே இந்த விதிகள் பலனற்றவை என்பது புரிந்துவிடும்!’’ என்கிறார் அவர் ஆணித்தரமாக!

ஒரு மருந்தை ஃபார்மகாலஜிகல் பெயரில் குறிப்பிடும்போதுதான் மருந்தின் பெயரால் அடிக்கப்படும் கொள்ளையை முழுவதுமாக நிறுத்த முடியும்.

எல்லோரும் பின்பற்றணும்!
‘‘இந்த விதிகளை எல்லா மருத்துவர்களும் பின்பற்றினால்தான் குழப்பங்கள் தீரும்!’’ என்கிறார் சென்னை மயிலாப்பூரில் பார்மஸி வைத்திருக்கும் ரங்கநாதன். ‘‘மருந்தியல் படித்தவர்கள் பெயரில் லைசென்ஸ் எடுத்துவிட்டு, வெறும் உதவியாளர்களை மட்டும் வைத்து மருந்துக் கடைகளை நடத்தும்போதுதான் புரியாத கையெழுத்து குழப்பத்தை விளைவிக்கிறது. மற்றபடி கையெழுத்தால் பிரச்னை இல்லை. ஜெனரிக் பெயர்களில் மருந்துச் சீட்டை எழுதுவதால் கடைக்காரர்களுக்கு லாபம் குறைவுதான்.

ஆனாலும், டாக்டர்கள் அதிகம் பரிந்துரைக்கும் மருந்து எதுவோ, அதனை அதிக அளவில் வாங்கி வைப்பதுதான் கடைக்காரர்களின் கடமை. யாரோ ஓரிருவர் விதிகளுக்கு உட்பட்டு ஜெனரிக் மருந்துகளை எழுத, மற்றவர்கள் பழையபடியே தொடர்ந்தால் கடைக்காரர்கள் ஒன்றும் செய்ய முடியாது!’’ என்கிறார் அவர்!

ஜெனரிக் மருந்துகளே குறைவு!

‘‘ஜெனரிக் வகை மருந்துகளே இந்தியாவில் குறைவு... அதில் தரமான மருந்துகள் அதைவிடக் குறைவு... அவற்றை மட்டும்தான் எழுதவேண்டும் என்றால் எப்படி?’’ என மருத்துவர்கள் தரப்பு கருத்தை வலிமையாக எடுத்து வைக்கிறார், டாக்டர் காசி. ‘மக்கள் நல்வாழ்விற்கான மருத்துவர் அரங்கம்’ எனும் அமைப்பின் பொதுச்செயலாளர் இவர்.

‘‘மாநில அளவில் பொதுத்துறைகளால் உற்பத்தி செய்யும் ஜெனரிக் மருந்துக் கம்பெனிகள் தொடர்ந்து மூடப்பட்டு வருகின்றன. எனவே, அரசு மருந்துக்கடைகளிலேயே இன்று பிராண்டட் மருந்துகள்தான் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நிலையில் மூலக்கூறு அடிப்படையிலான ஜெனரிக் மருந்துகளைத்தான் எழுதவேண்டும் என்ற கோரிக்கை எந்த அளவுக்கு சாத்தியம் என்பது தெரியவில்லை.

ஏற்கனவே, அரசு மருத்துவமனைகளில் பெரும்பாலும் ஜெனரிக் மருந்துகளைத்தான் எழுதிக் கொடுக்கிறார்கள். இருக்கும் மிகச் சில ஜெனரிக் மருந்துகளில் எதை டாக்டர் எழுதியிருக்கிறார் என்பது முதல் எழுத்தைப் பார்த்ததுமே தெரிந்துவிடும். ஆக, தெளிவான கையெழுத்து அரசு டாக்டர்களுக்கு தேவையா என்பதே கேள்விக்குறி. பெரிய க்யூவில் பேஷன்ட்கள் நிற்கும்போது, நிறுத்தி நிதானமாக எழுத முடியுமா?

அடுத்து பெரிய மருத்துவமனைகளில் இன்று பிரின்ட் செய்யப்பட்ட மருந்துச் சீட்டுகளே தரப்பட்டுவிடுவதால் அங்கும் கையெழுத்து பிரச்னை இல்லை. சின்ன அளவில் செயல்படும் தனியார் கிளினிக்குகளுக்கு வேண்டுமானால் இந்த விதி பயன்படலாம். காரணம், அவர்கள்தான் பிராண்டட் மருந்துகளை கிறுக்கல் கையெழுத்தில் எழுதி குழப்பத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகம்!’’ என்கிறார் அவர்.

வேரோடிப் போன நோய்க்கு இலைகளில் மருந்து தெளிப்பது போன்றதுதான் இந்த நடவடிக்கை!

- டி.ரஞ்சித்
படம்: ஆர்.சி.எஸ்