நியாயத்துக்காக களத்தில் நிற்கிறோம்!மதுவிலக்கை படிப்படியாக அமல் படுத்துவதாகச் சொல்லி, டாஸ்மாக் திறந்திருக்கும் நேரத்தைக் குறைத்ததோடு, 500 கடைகளை மூடவும் உத்தரவு போட்டிருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. ஆனால் இதே விஷயத்துக்கான போராட்டங்களில் பங்கேற்றதற்காக மாரிமுத்துவுக்கு நடந்தது என்ன தெரியுமா?மதுரவாயல் போலீஸ் ஸ்டேஷனில் இரண்டு வழக்குகள்... கோயம்பேடு  ஸ்டேஷனில் ஒன்று... சேத்துப்பட்டில் ஒன்று... எல்லாம் சேர்த்து 15 செக்‌ஷனுக்கு மேல் வரும். பச்சையப்பன் கல்லூரி அருகே நடந்த டாஸ்மாக் போராட்டத்தில் 38 நாள் சிறை... போராட்டக் களத்திலும், ஸ்டேஷனிலும், சிறைச்சாலையிலும் பட்ட அடிகள் உள்காயங்களாக இன்னும் நெறி கட்டி வலிக்கின்றன. சமீபத்தில் மதுரவாயலில் டாஸ்மாக் கடைக்கு எதிராகப் போராடிய மக்களைக் கண்மூடித்தனமாகத் தாக்கிய போலீஸைக் கண்டித்து போஸ்டர் ஒட்டியபோது மீண்டும் போலீஸ் பிடித்து அடித்ததில் காலில் பலத்த உள்காயம்.

ஆனாலும் மாரிமுத்துவின் தீவிரம் குறையவில்லை. பிரசாரம், போராட்டம் என்று பரபரப்பாகக் கழிகிறது பொழுது. டாஸ்மாக் கொடுமைக்கு எதிராக, கல்விக் கொள்ளைக்கு எதிராக, தனியார்மயத்துக்கு எதிராக, ஜாதிய வன்கொடுமைக்கு எதிராக... தினமொரு களத்தில் நிற்கிறார். மாரிமுத்துவுக்கு வயது 19. பேச்சிலும், செயலிலும் தொனிக்கும் தேர்ந்த பக்குவம் வியப்பூட்டுகிறது. வயதுக்கு தொடர்பற்ற ஆளுமைத்தன்மை... குழப்பமில்லாத தத்துவத் தெளிவு... அரை மணி நேரம் தொடர்ந்து பேசினால் எவரையும் வென்றெடுத்து விடுவார்.

மதுரவாயல் அரசு மேல்நிலைப் பள்ளியில் இந்த வருடம்தான் +2 முடித்திருக்கிறார் மாரிமுத்து. 971 மதிப்பெண்கள். தேர்வு முடிவு வந்தபோது மாரிமுத்து இருந்தது, எழும்பூர் சிறார் சீர்திருத்தப்பள்ளியில். போலீஸுக்கு எதிராக போஸ்டர் ஒட்டிய வழக்கு. அடிக்கடி சிறை செல்வதால் வாடகை வீட்டின் உரிமையாளர் வீட்டைக் காலி செய்யச் சொல்லி விட்டார். ஒரு திருமண மண்டபத்தின் சிறு அறையில் அப்பா, அம்மா, தம்பி, தங்கையோடு தங்கியிருக்கிறார். வீடெங்கும் நிறைந்து கிடக்கின்றன புத்தகங்கள்.‘‘சொந்த ஊர் விழுப்புரம் பக்கத்துல முட்டத்தூர். எங்க பெரியப்பாதான் என்னை வளர்த்தார். ஒருநாள் போதையில மண்ணெண்ணெய் ஊத்தி கொளுத்திக்கிட்டு இறந்துட்டார். என் கண் முன்னாடியே நடந்த சம்பவம்... அப்படியே மனசுக்குள்ள நிக்குது. அண்மையில என் நண்பனோட அப்பா, குடிச்சுக் குடிச்சு நோய்வாய்ப்பட்டு இறந்துட்டார்.

என்னோட உயிர் நண்பன்... அவனோட அப்பாவையும் மது குடிச்சிடுச்சு! எத்தனை குடும்பங்கள்... எத்தனை இழப்புகள்... சாராயம் விக்கிறவங்களை புடிச்சு தண்டனை கொடுக்க வேண்டிய அரசாங்கமே சாராயக்கடை நடத்துறது உலகத்துல வேறெந்த நாட்டுலயாவது உண்டா? எத்தனை குடும்பங்கள் அழிஞ்சிருக்கு... எத்தனை குடும்பங்கள் தவிச்சு நிக்குது!

இந்தக் கொடுமையை எதிர்த்துப் போராடினா, லத்தியோட வந்து நிக்குது போலீஸ். எதுக்காகப் போராடினாலும் பதில் சொல்ல போலீஸ்தான் வருது. மக்கள்தான் ஜனநாயகத்தோட தலைவர்கள். அவங்களோட நலனுக்காகத்தான் எல்லா கட்டமைப்புகளும்... முற்று முழுதா மனித குலத்தையே அழிக்கிற, சிந்திக்க விடாம தடுக்கிற இந்த அவலத்துக்கு எதிரா மக்கள் களத்துக்கு வர்றாங்க. தங்களோட அதிகாரத்தை அவங்க பயன்படுத்துவாங்க. அந்தச் சூழலைத்தான் நாங்க உருவாக்கிக்கிட்டிருக்கோம்...’’ - உணர்ச்சிப் பிழம்பாகப் பேசுகிறார் மாரிமுத்து.

மாரிமுத்துவின் அப்பா, துணி வியாபாரியாக இருந்தவர். இப்போது வேலையில்லை. அம்மாதான் எல்லாம். பகலில் சித்தாள் வேலை. இரவில் காவலாளி. மூன்று பிள்ளைகளையும் படிக்க வைக்க தன்னையே கரைத்துக் கொண்டிருக்கிறார். ‘‘பள்ளியில அடிக்கடி போராட்டம் நடக்கும்.  ஆனந்த், மணின்னு ரெண்டு மாணவர்கள் முன்னாடி நிப்பாங்க. மெல்ல மெல்ல ஒரு ஈர்ப்பு என்னை அவங்ககிட்ட கொண்டு போய் சேத்துச்சு. புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்புல சேந்தேன். அமைப்பு நடத்துற போராட்டங்கள், பயிலரங்குகளுக்கு எல்லாம் போக ஆரம்பிச்சே–்ன். மாணவர்களும் என்கூட வரத் தொடங்கினாங்க.

ஒரு கட்டத்துல போலீஸோட பார்வை எங்க பள்ளிமேல படத் தொடங்குச்சு. ஸ்கூலுக்கு அம்மாவை அழைச்சுட்டு வரச் சொன்னாங்க.  ‘இனிமே இதுக்கெல்லாம் போகமாட்டேன்னு அம்மா மேல சத்தியம் பண்ணு’ன்னு சொன்னார் ஹெட் மாஸ்டர். நான் 10ம் வகுப்புல தேறமாட்டேன்னு எல்லாரும் எதிர்பார்த்தாங்க. 409 மார்க் வாங்கினேன். சமூக அறிவியல்ல 96 மார்க். நாங்க 11ம் வகுப்பு சேர்ந்த நேரத்துல ‘பப்ளிக் பிரைவேட் பார்ட்னர்ஷிப்’ங்கிற பேர்ல அரசுப்பள்ளிகளை தனியாருக்குக் கொடுக்கிற திட்டத்தைக் கொண்டு வந்தாங்க.

அதை எதிர்த்து மாணவர்களைத் திரட்டிப் போராடினோம். இன்ஸ்பெக்டரே பள்ளிக்கு வந்து, ‘குண்டர் சட்டத்துல தூக்கி உள்ளே போட்டுருவேன்’னு மிரட்டினார். எங்களுக்காக என போலீஸ் சிறார் மன்றம் அமைச்சாங்க. பேஸ்கட் பால் மைதானம், டாய்லெட்னு நிறைய திட்டங்கள் கொண்டு வந்தாங்க. அப்பப்போ அம்மாவையும் கூப்பிட்டு மிரட்டுவாங்க. ஆனா, ‘போராட்டத்துக்கு போகாதே’ன்னு அம்மா ஒருநாளும் சொன்னதில்லை. ‘முன்னாடி நிக்காதே... பின்னாடி நில்லு’ன்னு சொல்வாங்க. அம்மா ராத்திரி பகலா கஷ்டப்படுறது பொறுக்காம நானும் பகுதி நேர வேலைக்குப் போறதுண்டு. விடுமுறை நாட்கள்ல முழுநேரமா கட்டிட வேலைக்குப் போவேன்.  

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியோட பள்ளிக்கிளை செயலாளரா நியமிச்சாங்க. ‘மக்கள் அதிகாரம்’ அமைப்பு தொடங்கப்பட்ட பிறகு அதிலயும் இணைஞ்சு செயல்பட்டேன். ஒரு போராட்டம் மக்கள் போராட்டமா மாறணும்னா மாணவர்கள் களத்துல இறங்கணும். அதனாலதான் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 1000 பேர் மதுவுக்கு எதிரா களத்துக்கு வந்தாங்க. அதுக்காக காவல் நிலையத்திலயும், சிறையிலயும் பல கொடுமைகளுக்கு உள்ளானோம். போலீஸ் ஸ்டேஷன்லயும், நீதிமன்றத்திலயும், சிறையிலயும் பயப்படாம உரிமைக்காக குரல் கொடுத்தோம். சிறையில சட்டையைக் கழட்டலேங்கிறதுக்காக எங்களை மிகக் கொடூரமா அடிச்சாங்க.

நாங்க சிறையில இருந்தப்போ, 8வது படிக்கிற ஆகாஷ் தலைமையில மதுரவாயல் பள்ளி மாணவர்களும், பூந்தமல்லி பள்ளி மாணவர்களும் எங்களை விடுதலை செய்யச் சொல்லி மறியல் செஞ்சிருக்காங்க. விதை இப்ப விருட்சமா வேர் விட்டு நிக்குது. 38 நாள் சிறையில இருந்துட்டு வெளியில வந்தப்போ +2 காலாண்டு தேர்வு நடந்துக்கிட்டிருந்துச்சு. என்னைத் தேர்வு எழுத விடலே. ஊடகங்கள் தலையிட்டு பேசின பிறகு ஸ்கூலுக்குள்ள அனுமதிச்சாங்க. அப்புறமும் சரியா படிக்கற சூழல் அமையலே! பொதுத் தேர்வுக்கு கடைசி ஒரு வாரம்தான் படிச்சேன். 971 மார்க்... நானே எதிர்பார்க்கலே.

இப்போ போராட்டம், சிறை எல்லாம் பழகிடுச்சு. வீட்டுக்கு வரலேன்னா, ‘சிறைக்குப் போயிட்டானா’ன்னு மத்த தோழர்கள்கிட்ட அம்மா விசாரிக்கும். மக்கள்கிட்ட இருந்துதான் எங்க போராட்ட வடிவங்களை நாங்க தேர்வு பண்றோம். நியாயமான கோரிக்கைகளை முன்வச்சு களத்துல நிக்கிறோம். வன்முறை மூலமா எங்களை ஒடுக்க நினைக்குது அரசு. வரலாற்று அனுபவங்கள் மூலமா அதை நாங்கள் எதிர்கொள்வோம்.

மாற்றத்தை நோக்கிய பயணத்தில என் பங்களிப்பு இறுதி வரைக்கும் இருக்கும்...’’ அனுபவமிக்க சமூகப் போராளியின் குரலாக ஒலிக்கிறது மாரிமுத்துவின் குரல். உணர்ச்சி தகிக்கப் பேசுகிற தன் மகனை புன்னகையோடு பார்த்துக் கொண்டிருக்கிறார் தாய் சல்ஷா. அவரின் பார்வையில் பெருமிதம் ததும்புகிறது!

அரசாங்கமே சாராயக்கடை நடத்துறது  உலகத்துல வேறெந்த நாட்டுலயாவது உண்டா? இந்தக் கொடுமையை எதிர்த்துப் போராடினா, பதில் சொல்ல போலீஸ்தான் வருது.

- வெ.நீலகண்டன்
படங்கள்: ஆர்.சந்திரசேகர்