உதவி



வி.அங்கப்பன்

‘‘என்னப்பா நீ..? குடும்பம்னா சண்டை இருக்கத்தான் செய்யும். அதுக்காக..? அடிக்கடி வீட்டை விட்டு அனுப்புறதா? நீங்கதான் ஒருத்தருக்கொருத்தர் அட்ஜஸ்ட் பண்ணிப் போகணும். நீயும் குடிக்கிறத குறைச்சிக்கணும். இரு... நான் நேரில் வர்றேன்!’’ என்று போனை அணைத்த ஆறுமுகம், கூட இருந்த நண்பரையும் கூட்டிக்கொண்டு அந்த வீட்டிற்கு விரைந்தார்.



அவர்களை சமாதானப்படுத்திவிட்டு திரும்பி வரும்போது ஆறுமுகத்தை அவரின் நண்பர் வாயாரப் புகழ்ந்தார். ‘‘உங்களுக்கு அவங்க சொந்த பந்தம் கூட இல்ல. ஆனாலும் ஓடிப் போய் உதவுறீங்களே... இதுதான் நல்ல மனசு!’’ ஆறுமுகம் பரிதாபமாகச் சிரித்தார். ‘‘அட போய்யா, நான் கல்யாண புரோக்கர் வேலையை விட்டதே இவனாலதான். குடிச்சிட்டான்னா போதும்... ‘இவளை நீங்கதானே எனக்கு கட்டி வச்சீங்க? ‘அமைதி, அடக்கம்’னு என்னல்லாம் அள்ளி விட்டீங்க...

இப்ப அவ பேசுற பேச்சை ஒரு நாளு கேட்டுப் பாருங்க’னு என் வீட்ல கொண்டாந்து விட்டுட்டுப் போயிடுறான். ஒவ்வொருத்தனும் இப்படி பொண்டாட்டி மேல உள்ள கோவத்தை கல்யாண புரோக்கர் மேல காட்ட ஆரம்பிச்சா என்னாகும்? அந்த பயத்துலயே நான் தொழிலை விட்டுட்டேன். வெளில தெரிஞ்சா, இதையே பலபேர் ஃபாலோ பண்ணுவாங்களோனுதான் சொல்றதில்லை!’’ என்றார் அவர் கலக்கமாக!